சூப்பர் சிங்கர் எனும் பட்டம் சாய் சரணுக்கு கொடுத்திருக்கிறார்கள் என்றவுடன் எனக்கு இயேசுநாதர்தான் நினைவிற்கு வந்தார். அவர் மலைப்பிரசங்கம் செய்து கொண்டு இருக்கிறார். முடிந்த பின் எல்லோருக்கும் ரொட்டிகள் வழங்கினார். உழைத்தவருக்கு மட்டுமின்றி மற்றோருக்கும் வழங்கினார். ஒரு உழைப்பாளி கேட்டானாம், ‘ஐயா! நாங்கள் உழைத்தோம் எங்களுக்குக் கூலியாக ரொட்டி வழங்குவது சரி! ஆனால் வேலை செய்யாத மற்றோருக்கும் ஏன் வழங்குகிறீர்கள்?’ என்று. அதற்கு இயேசு பதில் சொன்னாராம், ‘அப்பா! அவர்களுக்கும் பசியென்ற ஒன்று உள்ளதே!’ என்று. அதுபோல் தான் நடந்திருக்கிறது.
நடுவர்கள் ஓராண்டு பாடும் திறமையைப் பார்த்து தேர்ந்தெடுத்தது இருவரைத்தான். அதில் சாய் சரண் கிடையாது. இசை கேட்டு, ரசித்து அனுபவப்பட்ட காதுகளுக்கு சத்ய பிரகாஷின் இசை ஒரு விருந்து. ஆனால் ‘மூன்று ஆண்டு தவம்’ என்று சாய்சரண் போட்டியின் விதிகளை மீறி, ‘உந்து அட்டை’ (வைல்ட் கார்ட்) வழியாக உள்ளே நுழைகிறார். சந்தோஷும் அப்படித்தான். ஆனால் முதல் பரிசு சாய் சரணுக்கு அடுத்த பரிசு சந்தோசுக்கு. கடைசி இரண்டு கொசுறுப் பரிசுகள் சத்யாவிற்கும், பூஜாவிற்கும்.
இயேசுவின் பார்வையில் யாரோ இப்படித்தீர்மானித்து உள்ளனர்! ஒரு விதவைத்தாய். தன் மகனே கதியென்று, அவன் முன்னேற்றமே தன் வாழ்வின் நோக்கு என்று பெரிய தியாகங்களைச் செய்த தாய்! அதை அழகாகச் சொல்லத்தெரிந்த தாய் என்றும் சொல்ல வேண்டும்.
சந்தோஷுக்கு ஏன் பரிசு? அங்கும் ‘தாய் செண்டிமெண்ட்’தான். நடக்க முடியாத தாய். தாய்க்கேற்ற தனயன் எனும் படி சந்தோஷ்!
ஆனால் யார் இறுதிப் போட்டியில் அத்தனை பாடகர்களும் நிற்க வைத்து கரகோஷம் வாங்கியது? யார் அந்த எதிர்பார்த்த இசை இரசவாதம் செய்தது?யாருடைய இசை இந்த நால்வரில் அன்று தனித்து நின்றது? இவ்விழியமே சாட்சி.
இதை போட்டி என்று சொல்வது அந்த வார்த்தைக்கு அவமரியாதை செய்வது. போட்டி என்றால் விதிமுறைகளுண்டு. அதை ஒழுங்காக செயல்படுத்த வேண்டும். விதி மீறல்களைக் கவனிப்போம்:
1. ஓராண்டாக ஒரு நடுவர் குழு மாறி, மாறி இவர்கள் திறமைய சோதித்து இருவரை இறுதிச் சுற்றுக்கு அனுப்புகிறது. ஆனால், ‘தாய் செண்டிமெண்ட்’ ஒர்கவுட் ஆகுமென்ற தெரிந்த சில சக்திகள் ‘உந்து அட்டை’யை திடீரென அறிமுகப்படுத்தி பின் கேட் வழியாக இருவரைச் சொருகுகிறது.
2. செமி பைனல்ஸ் முடிந்து பைனல்ஸ் வந்த பின் மீண்டும் ஒரு செமி பைனல்ஸ் என்று எந்த ஆட்டத்திலும் கிடையாது. வேண்டுமானால் செமிபைனல்ஸ் என்பதையே ‘உந்து அட்டை’ முறையில் நடத்தியிருக்கலாமே?
3. ’ஏதோ குரல் வளம்’ மட்டும் இருந்த பாடகர்களை தயார்ப்படுத்தி, பயிற்சி கொடுத்து மிகத்திறமையான பாடகர்களாக மாற்றித்தந்துள்ளனர். இந்த ‘உந்து அட்டை’ முறையை முதலிலேயே அறிமுகப்படுத்தியிருந்தால் அதிலும் பயிற்சி பெற்று எப்படி ஓட்டு கேட்பது என்று அறிந்திருப்பர். பாவம்! பூஜா! எதற்கெடுத்தாலும் நாங்கள் எல்லோரும் கடினமாக உழைத்திருக்கிறோம். எனக்குத்திறமை இருப்பதாக நீங்கள் நம்பினால் ஓட்டு போடுங்கள் என்கிறார். ‘தன்னை’ முன்னிருத்த வேண்டும் என்பது கூடத் தெரியாத அப்பாவி அவர். அவருடைய அம்மா அதற்கும் மேல் (அவரும் விதவைதான்). நம்ம சத்யா, ஓட்டுக்கேட்கும் போது தனது அடையான எண்ணையே மாற்றி, ‘SS 05' க்கு ஓட்டுக் கேட்கிறார்!! இவர்தான் இப்படியென்றால் இவர் அப்பா உணர்ச்சி வசப்பட்டு நெகிழ்கிறாரே தவிர, பேசவே தெரியவில்லை. உருப்படியாக இப்போட்டியில் ஓட்டுக் கேட்டவர்கள் இருவரே, ஒன்று சாய், மற்றது பிரவீன். எனவே ‘உந்து அட்டை’ப் பயிற்சி என்று கொடுத்திருக்க வேண்டும்.
4. மக்கள் ஓட்டுப்போட்டு ஒருவர் தேர்வாகிறார் என்றால் எத்தனை ஓட்டு வித்தியாசத்தில் பரிசுகள் வழங்கப்படுகின்றன எனப் பொது மக்களுக்குச் சொல்ல வேண்டியது ‘சட்ட பூர்வமான’ கடமை. இதற்காக இவர்கள் மீது வழக்குத் தொடுக்கலாம்.
5. எல்லோரும் ஏராளமாக ஓட்டுப் போடுங்கள் என்பதும், ‘கள்ள ஓட்டு’க்கூட போடலாம் (ஆங்கர் சிவா சொன்னது) என்பதும் அபத்தம். இணைய முகவரி எதற்குக் கொடுத்து எம்மைப் போல வெளிநாட்டில் இருப்பவரின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கொள்கிறார்கள்? இணையதில் ‘எத்தனை ஓட்டு வேண்டுமானாலும் போட வசதி செய்யவில்லை விஜய் டிவி’ மூன்று ஓட்டுக்களே உச்சம்! இப்படி பொது மக்களுக்கு தவறான சேதி சொல்லி திசை திருப்பியதற்கும் வழக்குப் போடலாம்.
நான் போன பதிவில் சொன்ன படி. இதுவொரு சொதப்பல் ஷோ! மேலை நாட்டு ஷோக்களை பார்த்துவிட்டு ஏதோ நாங்களும் செய்கிறோமென்று போட்டுக்கொள்ளும் சூடு போன்றது இது. எந்த விதிமுறையும் இல்லாமல், இஷ்டத்திற்கு நடத்தப்பட்ட சொதப்பல்.
இதுவொரு விதவைகள் போராட்டம். பூஜா, சாய், கௌசிக் இவர்களின் தாய்மார்கள் போராடினர். முதலில் அவுட் கௌசிக். கடைசியில் அவுட் பூஜா. சாய் சரணின் தாய் வென்றிருக்கிறார். சாய் சரண் திறமைசாலி. கடின உழைப்பாளி. அவனின் தாய் தியாகங்கள் செய்துள்ளார். மனிதாபிமான அடிப்படையில் இத்தேர்வை ஏற்றுக் கொள்கிறேன். திறமையின் அடிப்படையில் என்பதை எக்காலத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதை சத்யாவின் பாடலை ’அப்படி’ அனுபவிக்கும் சாய் சரணின் தாயே ஒத்துக்கொள்வார்.
நடுவர்களுக்கும், அனந்த் வைத்யநாதனுக்கும் சிறப்புப் பாராட்டுகள். முதல் 10, 5 எனும் கூட்டத்தில் வந்த அனைவருமே திறமையான பாடகர்கள். சூப்பர் சிங்கர் என்பது சத்யப்பிரகாஷ்தான்.
சூப்பர் சிங்கர் இரைச்சல்கள் ஓய்ந்த பொழுதில்
இந்தியத்தனமான இசைநிகழ்ச்சி
ஏர்டெல் சூப்பர் சிங்கர் 3 ஒரு காட்டாறு போல் ஒழுங்கற்று நடக்கிறது. ஒரு போட்டி என்றால் குவாட்டர் பைனல்ஸ், செமி பைனல்ஸ், பைனல்ஸ் என்று அமைவதுதான் ஒழுங்கு. செமி பைனல்ஸ் நடத்திவிட்டு, இருவரை பைனல்ஸ்ஸுக்கு தெரிவு செய்த பின் மீண்டும், ‘உந்து அட்டை’ (வைல்ட் கார்டு) மூலம் மீண்டும் இருவரைத் தேர்ந்தெடுத்து இருப்பது போட்டியை ஒரு படி கீழே இறக்கி மீண்டும் செமி பைனல்ஸ் நிலைக்கு கொண்டு வந்திருக்கிறது. இதற்குப் பதில் செமிபைனல்ஸ் நிலையிலேயே நால்வரைத் தேர்ந்தெடுத்து இறுதிச்சுற்றுக்கு அனுப்பி இருக்கலாமே? எதற்கு இறக்க வேண்டும்? மீண்டும் ‘மக்கள் வாக்குகளால்’ தேர்ந்தெடுத்திருப்பது போன்று போலித்தோற்றம் தர வேண்டும். மக்கள் வாக்கு என்றால் யார், யாருக்கு எத்தனை ஓட்டு கிடைத்தது? யாருக்கும் சொல்லக்கூடாத ரகசியம் என்றால்? பொது ஓட்டு என்று ஏன் சொல்ல வேண்டும்? மக்களவைக்கு ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்றார் அவர் எத்தனை ஓட்டு வித்தியாசத்தில் வென்றார் என்ற விவரம் ஒரு ஜனநாயக நாட்டில் அறிவிக்கப்பட வேண்டும். அதைச் செய்யவில்லை விஜய் டிவி! இணையம் மூலம் போட்டால் மூன்றே மூன்று ஓட்டு. ஏர்டெல் மூலம் போட்டால், ‘போட்டுக்கொண்டே’ இருக்கலாம். அடடா!!
அவர்கள் போக்கிற்கு நடுவர்களை மாற்றிக்கொண்டே இருக்கிறார்கள்!! மக்கள் ஓட்டு என்கிறார்கள். பிறகு நடுவர்களை ஏன் உட்கார வைத்திருக்கிறார்கள்?
இதற்கிடையில் அனந்த் வைத்யநாதன் ‘நிறைய, நிறைய ஓட்டுப்போட்டு’ எல்லோரையும் தேர்ந்தெடுங்கள் என்கிறார்கள். ஆனால் திவ்யாவோ இந்த நால்வரில் ஒரே ஒருவருக்குத்தான் டைட்டில் என்று கிளிப்பிள்ளை போல சொல்லிக்கொண்டு இருக்கிறார்.
‘அந்த பிரம்மாண்ட மேடை’யில் பைனல்ஸ் என்று பயங்கர விளம்பரம். அதற்கு ரிகர்சல் என்று ஏதோவொரு மாலில் மாடியில் நிற்க வைத்து பாட வைப்பது கேவலமாக இருக்கிறது. மாலுக்கு சாமான் வாங்க வருபவர்கள் ஒரு பக்கம் போய்க்கொண்டு இருக்க இதன் நடுவே ஒரு போட்டி. சவுண்ட் சிஸ்டம் படு கோளாறு. இதில் பாடினால் உள்ள குரலும் போய்விடும். அதுதான் சத்யாவிற்கு நடந்தது. அவரால் பாடிய பின் பேசவே முடியவில்லை. பிரம்மாண்ட சபை நிகழ்ச்சி இப்படித்தான் இருக்குமென்றால், நிகழ்ச்சியை பார்க்காமலே/கேட்காமலே இருக்கலாம்!
எந்தவொருத்திட்டமுமின்றி இஷ்டத்திற்கு வெறி கொண்டு ஓடும் காட்டாறு போல் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. கேவலமாக உள்ளது. இதுதான் இந்திய நிகழ்ச்சிகளின் தரமா?
யார், யார் வரப்போகிறார்கள் என்பது முன்கூட்டியே தெரிவான ஒன்று போல் படுகிறது. எது எப்படி நடந்தாலும் இதுதான் உண்மையான வரிசை: சத்யா/பூஜா (சமநேர்), சாய் சரண், சந்தோஷ். இதே போல்தான் மக்கள் தேர்ந்தெடுப்பார்கள். பார்த்துக்கொண்டே இருங்கள். அது எப்படி என்று கேட்கக்கூடாது?
ஏதோ ஏர்டெல் கம்பெனிக்கு நல்ல வியாபாரமாக வேண்டும். அவர்கள் இதை வைத்து எவ்வளவு சம்பாதித்தார்கள் என்பதைத் தொழில் ரகசியமாக வைத்திருக்க விரும்புவதால் மொத்தம் எத்தனை ஓட்டு விழுந்தது என்பது கடைசிவரைத்தெரியாது. மக்கள்தான் தேர்ந்தெடுக்கப் போகிறார்களாம்! அது எப்படி? இது என்ன போட்டி? எவ்வகை விதிகளும் பொதுமைக்கு, நேர் பார்வைக்கு வராமல்!
ஏர்டெல் சூப்பர் சிங்கர்ஸ் 3. படு சொதப்பல்!!
ஜவ்வாக இழுபடும் சூசி 3
சூசி 3 அல்லது சூப்பர் சிங்கர் 3 எனப்படும் தமிழகத்தின் சிறந்தகர் பாடகர் தேர்வுப் போட்டியின் 3ம் பருவம் பல சமயம் வேண்டுமென்றே இழுக்கப்படுகிறது எனும் உணர்வைத்தருகிறது. உவப்புச் சீட்டு சுற்றில் (Wild card round) ஒரு வாரம் இவர்கள் தம் திறமையைக் காட்டினால் போதாதா? இரண்டாவது வாரம் எதற்கு? முதல் வாரத்திலேயே தெரிந்து விட்டதே அத்தனையும் தங்கமென்று. இவர்களை அடுத்த வாரமும் துன்பப்படுத்தி, அவர்கள் பட்ட கஷ்டத்தை பிலிம் போட்டுக் காட்டி...ஏதோ தெருவோர பிச்சைக்காரி ஒரு பிள்ளையை (அது அவள் பிள்ளையாகக் கூட இல்லாமல் இருக்கலாம்) இடுப்பில் தூக்கிக்கொண்டு பிச்சை எடுப்பது போல் உள்ளது. அதற்கென்று அந்த ஷாட் எல்லாம் கருப்பு, வெள்ளையில் எடுத்திருக்கிறார்கள் :-)
வேறு எந்த நாட்டிலும் நடக்காது! நீதிபதிகளே போட்டியாளர்களுக்கு ஓட்டுக் கேட்பது! முன்பு தோற்றுப்போன போட்டியாளர்கள் வந்து ஓட்டுக் கேட்பது. அது மட்டுமல்ல, ஒரு போட்டியாளருக்கு என்றில்லாமல் பல போட்டியாளர்களுக்கு ஒருவரே ஓட்டுப்போடச் சொல்வது. இவையெல்லாம் திட்டம் ஏதுமில்லாமல் ஏதோ நிகழ்ச்சியை இழுக்க வேண்டுமென்று செய்வது வெட்டவெளிச்சமாகத் தெரிகிறது. மேலும் நீதிபதிகளை இஷ்டத்திற்கு மாற்றிக்கொண்டு இருக்கிறார்கள். தன்யா ஒருமுறை சொல்லியவாறு, ஸ்ரீநிவாஸ், உன்னி, சுஜாதா என்று எண்ணி பாடலை தயாரித்து வந்தால் அங்கு வேறொரு செட் உட்கார்ந்து இருக்கிறது! எதிலுமே ஒரு தரக்கட்டுப்பாடு இல்லை (no standardized protocol). மக்களிடம் ஓட்டுக்கேட்கிறார்கள், பின் நீதிகளின் மார்க்கு எதற்கு? அநேகமாக இறுதிச் சுற்று என்று சொல்லிவிட்டு, மீண்டுமொரு அரையிறுதிச் சுற்று போல் நான்கு பேரைப் பாடவிடப்போகிறார்கள் என்று தெரிகிறது. மக்கள் தீர்ப்பாக ஒருவர், நீதிபதிகள் தேர்வாக ஒருவர். இது எப்படியும் சாய் சரணை இறுதிச் சுற்றில் நிற்க வைக்கும் முயற்சியாக இருக்கலாம். பூஜா, சத்யா இருவரும் அரையிறுதி வென்று விட்டோம் என்று மகிழ்ந்திருப்பார்கள். ஆனால் நடக்கப்போவது இறுதிப்போட்டி அல்ல. மீண்டுமொரு அரையிறுதிப் போட்டியே. இல்லையெனில் இறுதிப்போட்டியில் நான்கு பேர் போட்டி போடுவார்களோ?
Shame on you Vijay!
இந்த வாரத்தில் நடந்திருக்கும் சில நன்மைகள். ஹரிஹரசுதன், ‘வெறிஹரசுதனாக’ மாறி வெளுத்துக்கட்டுவது! அவனது பெரியம்மா முதன்முறையாக அரங்கில் கலந்து கொண்டு பிள்ளைக்கு ஓட்டுக்கேட்பதுடன் அவனைக் கலாய்வது! மாளவிக்காவின் அம்மா பச்சைப்புடவை கட்டாமல் வருவதுடன், மாளவிக்காவைக் கலாய்வது! சாய்சரணைப் பார்த்தால்தான் பாவமாய் உள்ளது!
ம்ம்ம்..எல்லோருமே ஒருவகையில் பாவம்தான்.

