ஆயிரம் பூக்கள் மலரட்டும்!

முதலில் பிறந்தது வார்த்தை என்கிறது விவிலியம்! பிறக்கும் வார்த்தையெல்லாம் எங்கோ இருக்கின்றன, அவைகளைத் தேடுதல் நலமன்று. பல நேரங்களில் இனிய மொழி இருக்க, இன்னா வார்த்தைகள் பேசி விடுகின்றோம். அவைகளை மீண்டும் கேட்க யார் ஆசைபடுவர்? எனவே, எல்லாவற்றையும் சேர்க்க முடியாது. ஆனால் திருவாய்மொழிகளை, நல்ல இலக்கியச் சொல்லாடலை சேர்த்து வைத்தால், பின்வரும் சந்ததியினர் இரசிப்பர். அப்படிச் சேர்த்து வைத்ததுதானே அகநானூறு, புறநானூறு போன்றவை!

இலக்கியச் செல்வங்களைப் பாதுகாக்க பல வழிகள் உண்டு. அவைகளைப் பற்றி விரிவாக திசைகள் இதழில் எழுதிவருகிறேன். இதுவரை மேற்கொண்ட முயற்சிகளை முதுசொம் சாளரம் வழியாகக் காணலாம்.

ஆனால் மின்வெளியில் உருவாகும் தமிழ் இலக்கியம் ஒரு புது வகை. சமகால இலக்கியத்தில் ஒருவகை. மற்ற எழுத்துக்களைவிட இதைப் பாதுகாப்பது சுலபம். இது பாதுகாப்பான ஒரு ஊடகத்தில் இருக்கிறது. இலக்க எழுத்துக்களை இணையம் வழி பாதுகாப்பது எளிது. ஆனாலும், இதில் பல நடைமுறைச் சிக்கல் உள்ளன. உதாரணமாக,

1) உற்சாகமுள்ளவர்க்கு, இணையம் ஒரு Super High Way! முன்பு மாதத்திற்கு ஒரு மடல் எழுதியவர் இன்று நாளைக்கு நான்கு எழுதிகிறார். எனவே இங்கு இலக்கிய உற்பத்தி அதிகம். வேகம் கூட. எழுதுகிற எல்லாம் இலக்கியமென்று சொல்ல வரவில்லை. ஆனால் நடைமுறை உலகை விட மின்வெளியில் ஆக்கம் கூடுதல் என்பது நடமுறை! இதனால், எழுதும் எழுத்தைச் சீர் செய்து (edit) வெளியிடுவது பெரிய வேலை. தமிழ்.நெட்டில் மின்வெளியைத் தமிழன் முதல்முறையாகக் கண்டபோது ஒரு தங்கவேட்டையே நடந்தது - அதாவது Gold Rush! அது வண்டி, வண்டியாய் கிடக்கிறது. அதை யார், எப்போது சீர் செய்து வெளியிடுவது? ஆனால், அதிலிருந்து இலக்கியத்தை மீட்க ஒரு வழியுண்டு..

2) எழுதியவரே தொகுப்பதுதான் சிறந்த வழி. தமிழ் இணையத்தில் வெளிவந்த எனது பாசுர மடலே முதலாவதாக அப்படித் தொகுக்கப்பட்ட நூலாகும். அதை நான் முதலில் எனது வலைத்தளத்தில் சேர்த்தேன். HTML கற்றுக் கொண்ட புதிது. வலைவடிவமைப்பு அதிகம் தெரியாத காலம். பின்னால் இதையே கொஞ்சம் நல்ல படங்கள், இசை இவை சேர்த்து ஒரு குறுந்தகடாக தமிழ் இணைய 2001ம் மாநாட்டில் வெளியிட்டேன். எனவே இலக்கவடிவில் இணைய இலக்கியமாக வெளிவந்த முதல் படைப்பு இது என்று சொல்லலாம். அதே மாநாட்டில் டாக்டர் ஜெயபாரதி அவர்கள் தனது இணைய எழுத்துக்களை புத்தக வடிவில் கொண்டு வந்தார். அந்த மாநாட்டில்தான் எனக்கு 'பாசுரமடல்' கண்ணன் என்ற பட்டமும் கிடைத்தது! இரண்டு படைப்புக்களுக்குமே அமோக வரவேற்பு இருந்தது. நான் கோலாலம்பூர், பினாங் என்று இரண்டு இடத்திலும் வெளியிட்டேன். (மேடையேற்றமில்லாத வெளியீடு இது. மேடையில் அது அடுத்த வருடம் துபாய் அருகேயுள்ள சார்ஷா என்ற இடத்தில் வெளியிடப்பட்டது. இதனால் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவெனில் பதிப்பகத்தார் வெளியிடும்வரை காத்திருக்காமல் எழுத்தாளரே தனது எழுத்தைத் தொகுத்து வெளியிட முடியும். அதற்கு இணையம் எளிய வழிகளைத் தருகிறது. இம்முறையில் தொகுப்பில் அதிக கவனமும், அக்கறையும் எடுத்துச் செய்ய முடியும். எழுத்துப் பிழைகள் (printers devil!). பரிணாம விதிகளைப் பார்க்கும் போது இவ்வழியே சிறந்த வழி என்று தோன்றுகிறது. Selfish Genes கோட்பாட்டின்படி சுய அக்கறை கொண்ட எதுவும் காலத்தை வென்று நிலைத்து நிற்கும். ஒருவகையில் இதுவும் சுயத்தைத் தக்க வைத்துக்கொள்ளும் முயற்சியே! வாழ்வின் வெற்றிப் பின்னணியே இதை நம்பித்தான் உள்ளது. பாரதிக்கு இந்த மீடியா கிடைத்திருந்தால் எழுதித்தள்ளியிருப்பான். பல புதுமைகள் செய்திருப்பான். அது காலத்தை வென்றும் நின்று இருக்கும்.

3) படைப்பாளியே தனது படைப்புகளை இணையத்தளத்தில் சேர்த்து வைப்பது. நான் செய்திருக்கிறேன். டாக்டர் ஜெயபாரதி மற்றும் பலர் செய்துள்ளனர். இதுபற்றிய சேர்ப்பு வலைத்தளமிருந்தால் சொல்லுங்கள். இங்கு தொடர்பு கொடுக்கலாம். ஆனால் இதைச் செய்வதற்கு கொஞ்சம் தொழித்திறன் வேண்டும். இல்லையெனில் சிவசங்கரி செய்தது போல் காசு கொடுத்து வலையகம் உருவாக்கலாம். ஆனால், புத்தகம் வெளியிடுவதே பெரிய காரியமாக பல எழுத்தாளர்களுக்கு இருக்கும் போது காசு கொடுத்து எப்படி வலைத்தளம் அமைப்பது?

4) இதற்கிடையில், சுலபமான ஒரு வழியை இணையம் நமக்குத் தந்துள்ளது. அதுதான் பூவகம் அமைப்பது. இது வலையகம் கட்டுவதைவிட எளிது. ஆனால் அதிலே செய்யக் கூடிய அத்தனை நகாசு வேலையும் இதிலே செய்ய முடியும் - அதில் செலவிடக்கூடிய நேரத்தில் பாதியில்! ஒரு எழுத்தாளனுக்கு இது தரும் இதங்கள் என்னென்ன என்று பார்ப்போம்:

4.1. எழுத்தாளனுக்கு உந்துதல், உற்சாகப்படுத்துதல் அவசியம். அதற்கு ஏற்ற தளங்கள் தமிழ் மடலாடற்குழுக்கள். அவைகளில் பதிப்பிப்பது எளிது. அப்படிப்பதிப்பித்த எழுத்தை, உம்.கவிதை, கட்டுரை பூவகத்தில் எளிதாகக் கோர்க்கமுடியும். உண்மையில் இது மாலைக்கட்டுகிற வேலைதான்!

4.2. வலையகத்தில் ஒவ்வொரு கோப்பையும் வலையேற்றம் செய்தல் பெரிய வேலை. அதை இலகுவாக்கியதன் மூலம், காணும் எழுத்தை வெட்டி, ஒட்டினால் பூவக அமைப்பில் வேலை முடிந்தது.

4.3. மேலும் புதிய பக்கங்களை உருவாக்கல் இங்கு வெறும் சொடுக்கு வேலை!

4.4. ஒரே பக்கத்தில் கூட வெவ்வேறு தலைப்புகளில் நமது எழுத்தைப் பதிப்பிக்க முடியும்.

4.5. படங்கள் சேர்க்க முடியும். உதாரணமாக 'சம்ஸ்காரா' புகழ் யு.அனந்தமூர்த்தி அவர்களுடன் நான் அவர் லண்டன் வந்தபோது எடுத்த படம்.

4.6. வாசிப்பவர் தொடுக்கும் கேள்விகளை வாசிக்கமுடியும், சின்ன அரட்டை அரங்கங்களை நடத்தமுடியும், வேண்டுமெனில் நேரடியாக (real time chat) அரட்டையடிக்கமுடியும்.

5. எனவே இன்றே ஒரு பூவகம் தொடங்குக: எனக்குத்தெரிந்து நான்கு வள்ளல்கள் இலவசமாக பூவக அமைப்பைத் தருகின்றனர். அங்கு சென்று பூக்கூடை, நார் இவைகளை வாங்கிக் கொள்ளலாம். பூ சேகரிக்க வேண்டியது நமது பொறுப்பு!

5.1 Blogger
5.2 Rediff
5.3 Easy Journal
5.4 Intermutual

6. அடுத்து, பூவகம் அமைத்தபின் அது இருப்பதை அறிவிப்பவர்கள். எனக்குத் தெரிந்து இது பற்றி முதலில் தமிழில் வந்த கட்டுரை திரு.மாலனுடையது . பூக்களைக் கோர்த்து மாலையாக்கியபின் மாலைகளை அடுக்க வந்திருக்கிறார் ஹவாய் சந்திரமதி. இவரது Tamilblogs பூவகம் இதைச் செய்கிறது.

7. பூவகம் குறித்த செய்திகளைத் தாங்கும் ஒரு பூவிதழ் வர வேண்டிய காலக்கட்டம் வந்தாகிவிட்டது. அதில் பூவகம் அமைக்கும் முறைகள், எளிய கருவிகள், உத்திகள் பற்றிய விவரம், தமிழ்ப் பூவகங்களில் காணும் சிறப்பு என்று பலவாறு ஆராய இது உதவும். மேலும் பூவகம் பற்றி உலகு அறிய இது செய்யும். அதுதானே ஒரு எழுத்தாளனுக்குத் தேவை.

சரி, இவ்வளவு சொல்லியாகிவிட்டது. இன்னுமா சும்மா உட்கார்ந்திருக்கிறீர்கள்? எங்கே உங்கள் பூவகம்?

நீண்ட வருடங்களுக்குப் பின் தூரக் கிழக்குத் தேசத்தில் வாழ்வது புத்துணர்ச்சி ஊட்டுவதாய் உள்ளது. இன்னும் இவர்களிடன் நிறைய வெகுளித்தனம் எஞ்சி நிற்கிறது. எப்படி இன்னும் இந்த உலகில் இது சாத்தியப்படுகிறது என்று ஆச்சர்யமாக இருக்கிறது. சந்தைக்குப் போய் சாமான் வாங்குவதெல்லாம் மறந்து போன ஒன்று. திருப்பூவணம் சந்தை மிகச் சத்தமாக இருக்கும். ஆனால் இங்கு சந்தை என்பது அந்த வகையில் இல்லை. சென்னை காய்கறி மார்க்கெட் போல என்று சொல்லலாம். ஜெர்மனியில் வாழ்ந்தவரை இந்த வகையான Open market -ல் சென்று காய்கறி வாங்குவதில் காசு சேர்க்க முடியாது. பேசாமல் Super Market- போய் சாமான் வாங்குவதே மேல். மொத்தமாக வாங்கி-விற்பதால் அங்கு விலை குறைவாக இருக்கும். ஜெர்மன் விவசாயிகளெல்லாம் ரொம்ப sophisticated (பதிவுசு)! இவர்கள் விலையெல்லாம் யானை விலை, குதிரை விலையிருக்கும். எனவே கடந்த பத்து வருடங்களுக்கும் மேல் சூபர் மார்க்கெட்டில் காய்கறி வாங்கியே பழகி விட்டது. நான் இருப்பது ஒரு provincial area. கிராமம் இன்னும் இருக்கிறது. வயலையும், மலையையும், கடலையும் பார்த்துக் கொண்டு ஒரு மரத்தடி கோஷ்டி உட்கார்ந்திருப்பதைப் பார்த்தவுடன் எங்கோ போய்விட்டது மனது. பஸ்ஸில் போய்க் கொண்டிருந்தேன். அப்போதும் உள்ளம் துள்ளி அந்த மரத்தடிக்கு ஓடியது. இந்த சூழலில் மார்க்கெட்டுக்குப் போய் காய்கறி வாங்குவது சுகமாக இருக்கிறது. சும்மா சொல்லக் கூடாது தூரக்கிழக்கு மக்களுக்கு சூழலை சுத்தமாக வைத்துக் கொள்ளும் பழக்கம் இருக்கிறது. இந்தியாவைத் தாண்டி, மலேசியா, சிங்கப்பூர் என்று வரும் போதே மாகள் தங்களைச் சுற்றியிருக்கும் சூழலை சுத்தமாக வைத்திருப்பது புரியும். இந்திய மார்க்கெட்டுகளில் அழுகிய பழமும், புதிய காய்கறியும் ஒரே இடத்தில். கடைக்கு வெளியே என்பது கழிப்பிடம். வீட்டிற்கு வெளியே கழிப்பிடம். இந்த மனோநிலை என்று மாறும் என்று தெரியவில்லை. கொரியாவில் இந்த பாட்டிமார்கள் பாவமாக இருக்கிறார்கள். குட்டையாக, தடித்த முகத்துடன், கூன் விழுந்து. இவர்கள் காலை நீட்டிக் கொண்டு காய்கறிகளை விரித்து வைத்து விற்கும் போது வாங்கு, வாங்கு என்கிறது. விலை மார்க்கெட்டைவிட மலிவு. கீரை வகைகளை இவர்கள் கழுவி மிக அழகாக வைத்து விற்கிறார்கள். காய்கறிக்கடை முழுவதும் பெண்கள் சாம்ராஜ்ஜியமாக இருக்கிறது. ஒரு ஆண் கண்ணில் படவில்லை. வியாபார நுணுக்கமெல்லாம் பெண்களுக்குத்தான் தெரியும் போல!

நேற்று பஸ் நிற்பதற்கு முன் ஒரு டாக்சி வந்து மறித்தது. பஸ் ஓட்டுநர் ஒன்றும் சொல்லாமல் கதவைத் திறந்தார் - திறந்த கதவுடன் பயணிப்பதெல்லாம் இந்தியாவில்தான்! ஒரு கிழவன் என்னவோ பேசிக் கொண்டு வந்தான். இரண்டாவது சீட்டில் ஒரு பள்ளி மாணவன் உட்கார்ந்திருந்தான். கிழவன் வந்து அந்த சீட்டின் பக்கத்தில் கைவிட்டு எதையோ தேடினான். ஒரு பர்ஸ் கிடைத்தது. சிரித்துக் கொண்டே கீழே இறங்கி டாக்சி ஓட்டுநரிடம் காசு கொடுக்க திறந்த போது காசு இல்லை!! திரும்ப புலம்பிக் கொண்டே உள்ளே வந்து தேடினான். டிரைவர் ஒரு வார்த்தை சொல்ல வேண்டுமே? பொறுமையாக கதவைத் திறந்து வைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான். இதற்குள் டாக்சி டிரைவர் 'கைப்பேசியில்' யாருடனோ பேசிக்கொண்டு பந்தாவாக பஸ்ஸிற்குள் வந்து தேடினான். ஏதோ இவன் வந்தால் காசு கிடைத்துவிடும் போல. இப்போதாவது யாராவது ஒரு வார்த்தை பேச வேண்டுமே? இதுவே ஜெர்மனியாக இருந்திருந்தால் வேறு மாதிரி இருந்திருக்கும். அவனுக்கு நேரம் தவறக்கூடாது. எனவே இதையெல்லாம் அனுமதிக்க மாட்டான். அவரவர் பொருளை பாதுகாக்க வேண்டியது அவரவர் பொறுப்பு. கிடைத்தல் அதைக் கொண்டுபோய் ஒரு இடத்தில் கொடுத்துவிடுவர். அங்கு போய் பார்த்துக் கொள்ள வேண்டியது நமது பொறுப்பு! இந்தியாவாக இருந்தால் இதற்குள் ஒரு நாடகமே நடந்திருக்கும். பொது மக்கள் ஒரு பேச்சு, டிரைவர் ஒரு பேச்சு, தொலைத்தவன் ஒரு பேச்சு, டாக்சி டிரைவர் ஒரு பேச்சு என்று. கடைசியில் ஓட்டுநர் குரலே ஓங்கி நிற்கும். வண்டி எப்போதோ போயிருக்கும். ஆனால் வண்டி நின்று கொண்டே இருந்தது. ஒரு வார்த்தை. ஒரே ஒரு வார்த்தை. ஊகூம், இந்தப் பொறுமையை நான் உலகிலேயே பார்த்ததில்லை. முத்தாற்பாய், டாக்சி கிளம்பி பஸ்ஸை சுற்றிக் கொண்டு போகும்வரை பஸ் காத்திருந்தது. சத்தியமாய் இவர்கள் வேறு சாதி!! புத்தன் தவறிப் போய் இந்தியாவில் பிறந்து விட்டான். அவன் இவர்களுடன் பிறந்திருக்க வேண்டியவன்!

ஆய்வுப்பட்டறைக்கு வந்திருந்த ஒரு சீன விஞ்ஞானி காலை உணவின் போது என்னிடம் "தான் இதுதான் முதன் முறையாக மிகவும், அன்பாகவும், பண்பாகவும் பேசும் ஒரு இந்தியனைப் பார்க்கிறேன்" என்று என்னைப் பார்த்துச் சொன்னார். தூக்கிவாரிப் போட்டது. அவர் பார்த்தவரைக்கும் இந்தியர்கள் மூக்குத் தூக்கிகளாகவும், அராத்துகளாகவுமே இருந்திருக்கின்றனர். இந்தியாவிலிருந்து புதிதாக வரும் மாணவர்கள் கூட மிகவும் arrogant-ஆக இருப்பதாகச் சொன்னார். என்னால் முழுவதும் மறுப்பதிற்கில்லை. நாம் வேறு சாதி. கோபதாபங்கள், சந்தக்கடைச் சத்தம், அழுக்குப் பிடித்த தெருக்கள், கூவமென்று வாழ்வென்று வாழ்ந்து வரும் போது இந்தியர்கள் அப்படித்தான் இருப்பார்கள். அந்த இந்தியாவில் உலகு மெச்சும் தத்துவங்கள் வந்தது எப்படி என்பது பெரிய கேள்வி? அப்படியிருப்பதால்தானோ என்னவோ அத்தகைய தத்துவங்களும் தேவைப்படுகின்றன?

கமலஹாசன் நடித்து மிகவும் பிரபலமான 'தெனாலி' படத்தின் ஆங்கில மூலத்தை இப்போதுதான் பார்க்க நேர்ந்தது :E) ஆச்சர்யமே படவில்லை. Bill Murray நடித்தது! கமலின் ஆகச் சிறந்த படங்களெல்லாம் ஏதாவது காப்பியாக இருக்கும். Robin Williams பெண் தாதியாக வந்ததைக் கமல் ஔவை சண்முகியாக்கினார். Peter Sellers காலை மடக்கி நடித்ததை கமல் அபூர்வ சகோதர்கள் படத்தில் செய்து காட்டினார்.

கமல் ஏன் இப்படிச் செய்கிறாரென்று கேட்டுப்பார்த்தேன் (எனக்குள்தான் :-) கமலுக்கு எப்போதும் தான் பின் தங்கிவிடுவோமோ என்ற ஒரு மன உளச்சல் இருக்கும். அதற்காகவே யாரும் சாதிக்காதவற்றை இவர் தமிழ் மண்ணில் சாதித்துக் காட்டுவார். குட்டையான குறை கால்களுடன் நடிப்பது (அபூர்வ சகோதரர்கள்), மனப்பிறழ்வினால் அசாத்தியமானவற்றைச் செய்யும் பாத்திரங்கள் (குணா, ஆளவந்தான்), முலைகள் பாதித்தெரிய பெண் வேடத்தில் நடிப்பது (இதில் இவர் கெட்டி. லக்ஷயே இல்லாமல் :\ ) இப்படி ஏதாவதொரு out of the ordinary பாத்திரங்கள்.... கமல் என்றும் யாருக்கும் பின் தங்கிவிடக் கூடாது என்ற பிடிவாதம். இவரது பிடிவாதத்திற்கு தீனி போடும் அளவில் பாலிவுட்டோ , கோலிவுட்டோ ஆக்கபூர்வமாக இருப்பதில்லை. ஆனால் ஹாலிவுட், உலக அளவில் முன் நிற்க வேண்டிய கட்டாயத்தினால் ஆக்க பூர்வமாக இருக்க வேண்டிய சூழல். டார்வின் கோட்பாடு படி 'survival of the fittest' (தகுதியானவையே நிலைத்து நிற்கும்)! ஹாலிவுட் படங்கள் முன் நிற்கின்றன! கமலுக்கு அவற்றிலிருந்து சவாலான பாத்திரங்களை காப்பியடிக்க முடிகிறது.

அதிலும் கமல் தனது முத்திரையை வைக்கிறார். ஹாலிவுட் பாத்திரங்களைவிட தன்னால் இன்னும் சிறப்பாகச் செய்ய முடியுமென்று தனது படங்களில் காட்டுகிறார். இப்படிச் சொல்வது கூட எனது (தமிழரது) கலாச்சார வழுக்கல் (cultural bias) என்று தோன்றுகிறது. இவர் செய்யும் அளவிற்கு மிகை நடிப்பை ஹாலிவுட் படங்களில் பார்க்கமுடியாது. அது அவர்களுக்கு இயற்கையாக இருக்காது. காரமான மிளகாய்! காமசூத்திரம் (சீனாவில் குடும்பக் கட்டுபாடு வதாகிவிட்டது!!)! சிவாஜி என்று எல்லாவற்றிலும் மிகை கண்டவர் நாம். கொஞ்சம் காரம் குறைந்தாலும் உப்பு சப்பில்லாமல் போய் விடுகிறது நமக்கு!!

நாம் இப்படியிருக்கும் வரை கமல் காப்பியடிப்பார், இரண்டு கதாநாயகிகளுடன் குஜால் பண்ணுவார், அமானுஷ்ய சக்தி கொண்ட முரடனாக வருவார். முரண்பாடு என்பது நமெக்கென்ன புதுசா?

இந்தப் பூவகம் ஏன் தோற்றுவித்தேன் என்றொரு கேள்வி எனக்குள் வருகிறது?

முதல் காரணம் ஏதாவது புதுமை என்று வரும் போது அதைக் கௌவிக்கொள்ளும் பழக்கம் எனக்கு இருக்கிறது. அந்த என் குணமே இன்று என்னை வெளிநாட்டில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது. நம்மால் நம் நாட்டில் செய்ய முடியாததை இவர்களால் வெளிநாட்டில் செய்துவிட முடிகிறது. இந்த ஓட்டப் பந்தயத்தில் (relay race) வெல்லும் அணியுடன் ஓடுவது உளச்சுகமளிக்கிறது. குதிரை வண்டியில் எப்போதும் முன்னால் உட்கார்ந்தே பழகியவன் நான். கல்யாண ஊர்வலத்தில் கூட மாப்பிள்ளையை பின்னால் தள்ளிவிட்டு முன் சீட்டில் கண்ணாடிக்குப் பக்கத்தில் இருப்பேன் :-)

அடுத்த காரணம் புதுமையுடன் இதிலொரு ஆக்கத்தைக்காட்டும் கூறு இருக்கிறது. ஆக்கபூர்வமாக இருக்க வேண்டுமென்ற ஆசை எப்போதுமுண்டு எனக்கு. ஆய்வகத்தில் ஒரு பழமொழி உண்டு 'publish or perish' என்பது. அதாவது ஆய்வில் புதுமைகள் செய்து வெளியிட்டுக் கொண்டே இருக்க வேண்டும். 'செய் அல்லது செத்து மடி' என்பது போன்றது அது. இம்மடலை தூக்கம் விழித்து எழுதச் செய்வது இச்சக்தியே!

மூன்றாவது காரணம் சினிமா விளம்பர வண்டியின் பின்னால் போகும் கிராமத்துச் சிறுவனின் வெகுளி இன்னும் என்னுள் இருப்பது. வைணவம் பிடித்திருப்பதற்குக் காரணம் அங்கு இறைவன் சுலமாகக் கிடைக்ககூடிய எளியவனாக இருக்கிறான் ['பத்துடை அடியவர்க்கு எளியவன்' என்பது நம்மாழ்வார் வாக்கு]. இந்த வெகுளித்தனத்தாலே உலகம் எனக்கு எப்போதும் ஆச்சர்யமாகவே இருக்கிறது. ஒரு பொழுதுகூட சோம்பலாக இருப்பதில்லை. எல்லாவற்றிலும் ஏதாவதொரு ஆச்சர்யம் ஒளிந்திருப்பதைக் காண்கிறேன். இது விஞ்ஞானிக்கும், கவிஞனுக்கும் உள்ள பொதுவான குணாம்சம்! ஆகவே நான் இரண்டுமாக இருக்கிறேன்.

நான்காவது காரணம் பூவகம் எனது பிரத்தியேக உலகம். இங்கு யாரும் தண்ணி போட்டு வந்து கலாட்டா செய்ய முடியாது. I hate those chracters in India! தனி மனித சுதந்திரம், உரிமை இதில் எனக்கு அதிக பிடிப்பு. எனது தனிமைக்குள் யாரும் மூக்கை நுழைப்பதை நான் விரும்புவதில்லை. அதே போல் அடுத்தவர் வம்பிற்கும் நான் போவதில்லை. அதற்கு பூவகம் இடமளிக்கிறது.

அதே நேரத்தில் நான் தனிமைப்பட்டு போகவும் விரும்புவதில்லை. அதனாலேயே என் பூவகம் பற்றி வெட்கமில்லாமல் எல்லோரிடமும் சொல்லிக் கொள்கிறேன். சில நேரங்களில் தோன்றுகிறது 'இதை வெட்டி பந்தா' என்று யாராவது நினைத்துக் கொள்வரோ என்று. கவிஞன் ஒரு கலைஞன். அவனுக்கு பொது மக்கள் ஏற்பு அவசியம்! அவர்களது உற்சாகப்படுத்தல் அவசியம். அதற்குப் பதிலாக அவன் இவர்களுக்கு கேளிக்கை காட்டுகிறான், அறிவுரை தருகிறான், தான் கண்ட உள்ளொளியைப் பகிர்ந்து கொள்கிறான். இதைத் தனிப்பட செய்ய இயலாது. 'யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்' என்றுதான் கவிஞன் எழுத முற்படுகிறான். இதில் ஒரு சின்ன சிரமமுள்ளது. கவனிக்கப்படும் எதுவும் கல்லெறி படுவது இயற்கை. என் சுபாவத்தைப் புரிந்து கொள்ளாதோர் என்னைத் தவறாகப் புரிந்து கொண்டு கல்லெறிகின்றனர். கவிஞன் மெல்லியவன். வள்ளுவன் பேசும் அனிச்ச மலர் உள்ளம் கொண்டவன். பூவைப் பிடுங்க கோடறி எறியும் மூடர்கள் மூர்க்கமாக என்னைப் பாதிக்கின்றனர். அதிலிருந்து மீள நான் ஆக்கபூர்வமாக மாற வேண்டியுள்ளது. நான் ஆக்கபூர்வமாக இருப்பதால் மீண்டும் உயர, உயரப் போகிறேன். வீசும் மலர்ச் செண்டை விட, கற்களே தூரம் போகக் கூடியவை. எனவே கற்கள் மீண்டும் வருகின்றன. நான் மேலும் போகிறேன். ஆனால் இத்தனை உயர்விற்கும் ஆக்கமான உள்ளமே காரணம். அதைத் தருபவர்கள் மெல்லிய குணம் படைத்தவர்களே. பாறைகள் பலம் கொண்டவை போல் தெரியலாம். ஆனால் இடுக்கில் முளைக்கும் மெல்லிய செடியோ, புல்லோ கால ஓட்டத்தில் பாறையப் பெயர்த்து விடும்.

வாழ்க பூக்கள்!


உணவுப் பழக்கமென்பது நாட்டிற்கு நாடு வேறுபடுகிறது. ஏன் இந்தியா போன்ற பெரிய நாட்டில் பிரதேச வேற்றுமையும் உண்டு. உத்திரப்பிரதேசத்தில் காலையில் ஒரு சொம்பு பாலும், ஜிலேபியும் சாப்பிடுகிறார்கள். நம்மால் முடியுமா? கழிசல் கண்டுவிடும். இது போல்தான் இந்தக் கொரியர்களும்.

காலையில் எழுந்தவுடன், சுடுசோறு, கிம்ச்சி. மதியம் சுடுசோறு, கிம்ச்சி, புலால், இரவு சுடுசோறு, கிம்ச்சி, மீன் இப்படி. எந்த நேரமும் சுடுசோறு சாப்பிட முடியுமா? ஒரு மாறுதல் வேண்டாமா? சீனாவில் கூட வெவ்வேறு கஞ்சி வகைகள் உண்டாம். ஜப்பானில் நமது இட்லி போன்ற ஒரு பதார்த்தம் உண்டு. உள்ளே புலால் வைத்து வேக வைப்பார்கள்.

இவர்களுக்கு புரதமென்பது பெரும்பாலும் கடலிலிருந்தே கிடைக்கிறது. மீன் முக்கிய உணவு. கடல் நண்டு, இரால், விலாங்கு, கடல் வெள்ளரி, கடற்குச்சி (Sea Urchin), கடல் நத்தை, இன்னும் பல பெயர் தெரியாத ஜீவன்களை உண்கிறார்கள். இப்படி பலவற்றையும் உண்பதால் இவர்கள் உணவுச் சுரப்பிகள் மிக வலுவாக இருக்கின்றன என்று சொல்ல வேண்டும். என்னுடன் இரண்டு வியட்னாம் பெண்மணிகள் உள்ளனர். இரண்டும் 50 கிலோவிற்கும் குறைவு. மெல்லிய உடம்பு. ஆனால் இவர்கள் என்னை விட இரண்டு மடங்கு சோறு உண்கிறார்கள். புலால் இல்லாமல் சாப்பாடு இல்லை. எப்படித்தான் இப்படி உடம்பை வைத்துக் கொள்ள முடிகிறதோ? நமக்கு நல்ல சாப்பாட்டைக் கண்ணில் காட்டினாலே உடம்பு பெருத்துவிடுகிறது. என்ன ஜாதகமோ!

இந்தக் கிம்ச்சி என்பது ஒருவகை ஊறுகாய். சைனா முட்டைக்கோஸில் தயாரிப்பது. நூல்கோல், கீரை என்று வெவ்வேறு வகை கிம்ச்சிகள் உண்டு. நம்மவர்க்குப் பிடிக்கும் ஏனெனில் இதில் மிளகாய் அள்ளித்தெளித்திருக்கும். மிளகாய் இல்லாமல் எந்த உணவுமில்லை. எல்லாவற்றிலும் அள்ளித் தெளிக்கிறார்கள். மிளகாய் போர்த்துக்கீசியரால் 17ம் நூற்றாண்டில் ஆசியாவிற்கு கொண்டுவரப்பட்டது. இரண்டு நூற்றாண்டுக்குள் அது ஆசியாவின் தேசியக் காய் ஆகிவிட்டது (கவனமாக எழுத வேண்டியுள்ளது 'தேசிக்காய்' என்றால் எலுமிச்சை என்று சிலோன் வழக்கில் பொருள்!). இந்தியர்களும், மெக்சிகர்களும் காரமான உணவு சாப்பிடுவதில் வல்லவர்கள் - என்று நினைத்திருந்தேன். கொரியர்கள்களைக் கண்டபின் அது வாபஸ்!!

எல்லாம் இருக்கட்டும், இட்லி, தோசை வேண்டாம். ஒரு ரொட்டி? அதுவாவது இந்த ஜீவனுக்குக் கிடைக்காதா? ரொட்டிக்கடை கண்டு பிடிக்க இரண்டு நாள் ஆனது. வெள்ளை மைதா ரொட்டி. ஏதோ பஞ்சு மிட்டாய் தயாரிப்பது போல் அவ்வளவு soft ! இவர்களுக்கு ஜெர்மனியில் பயிற்சி தரவேண்டும். நார்ச்சத்து கொண்ட கோதுமை மாவில் எப்படி வகை, வகையான ரொட்டி செய்யலாமென்று அவர்களுக்குத்தான் தெரியும். இந்த அமெரிக்க, ஆங்கிலேயர்களுக்குத் தெரியாது. எல்லாம் வெள்ளை ரொட்டிக் கேசுகள்! Continental Breakfast என்று சொல்லிவிட்டு வெள்ளை ரொட்டி தருவார்கள். தடவிக் கொள்ள மயனேஸ்...உவே!!

சரி! புலால் மறுத்தலை வள்ளுவனுக்குப் பின் முறையாகக் கடை பிடிக்கும் நான் என்ன செய்கிறேன் என்று கேட்கிறீர்களா? காலையில் சோறு, கிம்ச்சி...மதியம் சோறு, கிம்ச்சி..இரவு சோறு கிம்ச்சி....:-))

இரவில் கொட்ட, கொட்ட விழித்திருந்துவிட்டு பகலில் தூங்கி விடாமலிருக்க 'விழிப்பி மணி' (அலாரம்) வைப்பது இயல்பு. ஆனால் வழக்கமான மணி (உண்மையில் அது பீப், பீப்!) அடிக்காமல் இன்று எழுப்பிவிட்டது "இடி". "ஈரக்குலை நடுங்கிறமாதிரி" ஒரு பயம். நான் இருக்குமிடம் ஒரு தீவு. ஒரு புறம் பசிபிக் மாகா சமுத்திரத்தின் தொடக்கம், இன்னொரு புறம் கொரிய தீபகற்பம். நல்லவேளை நாட்டைப்பார்த்து நிற்கும் தீவுப்பகுதில் அமைந்துள்ளது ஆய்வகம். இது கொஞ்சம் பாதுகாப்பு. ஆனாலும் சுற்றி மலை. மலைக்கு இறங்கிவருவது மழையின் இயல்பு! அது பரவாயில்லை. ஆனாலும் வானமே இறங்கிவந்தாற்போன்ற மழையை இதுவரை கண்டதில்லை. கோடையிடி இந்தியாவில்தான் பிரபலம் என்று எண்ணியிருந்தேன். இன்று காலை இடித்த இடியைப் பார்த்தால் இந்திய இடிகள் பிச்சை வாங்கவேண்டும்:-)

உலுப்பி, உலுப்பி எழுப்பி ஊர்த்தவதாண்டவத்தை பார் என்றது வானம். பாரதி இதைப்புகழ்ந்து 'சட்டச்சட சட்ட' என்று மழை பொழிந்தது என்கிறான். இடி அவனையும் பயமுறுத்தியிருக்கும். பயத்தை மறைத்துக்கொள்ள 'சக்தி தாண்டவம்' அது, இது என்று கதையளந்திருக்கிறான் படவா! பயம் வரும் போது ஒன்று வழிப்படத்தோன்றுகிறது அல்லது அழத்தோன்றுகிறது! இரண்டிற்கும் சம்மந்தம் உண்டு. சமய உணர்வு இப்படித் தோன்றியதுதான் என்று சொல்கின்றனர் மானுடவியலர். ஆனால் சிறு கூற்றுதான் இதில் உண்மை! 'இடி, இடித்து மழை மொழிந்து எல்லாம் நின்றாச்சு' என்று இரண்டு அர்த்தத்தில் கண்ணதாசன் பாடுவான். இன்று பெய்த மழையில் மலையே கரைந்து கடல் தண்ணீர் குடி தண்ணீர் ஆகிவிட்டது. அப்படித்தான் இருக்க வேண்டும். உச்சியிலிருந்து பார்க்கும் போது கடல் நீலமாக இல்லாமல் புனல் நீர் போல் மண்டியாக, சிவப்பாக இருக்கிறது. நல்லவேளை, மலை முற்றும் கரையவில்லை. இப்படி உருவானதுதானே கடல்!!

இடியை உதாரணமாக வைத்து ஜெர்மன் பேச்சு வழக்கில் "donnawetter" எனற சொல்லாட்சி உண்டு. சொல்லும்போதே இடியோசை கேட்பது போலிருக்கும். தமிழில் அப்படி இருந்தால் எழுதுங்கள்!!

உயிரெழுத்து
Date: Tue Jul 22, 2003 4:42 am
Subject: பெயர்-ச்சி! (Cyber Avatar)

அவனை
அவனுக்குக்
காட்டியபின்
அவனுக்கு
அவனாக
இருக்கப்
பிடிக்கவில்லை.

அவனுக்கு
அவளாகவும்,
அவனாகவும்,
அவையாயும்
ஆகும்
ஆசை
வந்தது.

மலையேறிப் பார்த்தான்
கடல் வந்து பார்த்தான்
கழனி, பாலையென்று
ஐந்தாய் அலைந்தான்.

ஆறில் கிடைக்குமென்று
அசரீரி சொன்னது.

அங்கொரு பெயர்
இங்கொரு விலாசம்
இன்றொரு கருத்து
நாளைக்கு மறுப்பு

இன்னும்...
இன்னும்..
என்று
அலையும்
மனதுடன்
அவையும்
இவையும்
உவையுமென
ஆவியாய்
அலைகிறான்

ஆறாம்திணையில்!

From: உயிரெழுத்து
Date: Mon Jul 21, 2003 11:51 pm
Subject: சு(ட்)டும் விழி!

எரியும்
தீப்பந்த
அழகு
கருமைப்
படுதாவில்.

சொக்கப்பனை
எரியும் போது
பறக்கும்
எரி கருக்கு
பார்வைக்கு
அழகு.

எரிந்து
மிஞ்சும்
கரிக்கட்டி
வயலுக்கு
வளமை
என்பது
வழமை.

காலாற
நடந்து
பழகுவது
போல்
நடந்துவிட்டு
வருகிறாள்
அனல்
படுக்கையில்
அகிலா.

தீயில்
பட்ட
அவள்
பாதத்தால்
நெருப்பு
மென்மையாகி
சும்மா
விட்டது
போலும்.

சுடும் போது
இன்பம்..
யாருக்கு?
இல்லைச்
சுடாமல்
விட்டதால்தான்
இன்பமா?
பாரதியிடம்
கேட்க வேண்டும்.

சுட்டும் விழி
சுகத்திற்கு
சுடும் விழ
பரத்திற்கு.

நா.கண்ணன்

பின்குறிப்பு: ஈனப்பிறவி என்று சில நேரம் உடல் கூசுகிறது. விழியில் பருகி, பின் உடல் முழுதும் இன்பம் வேண்டும் என்கிறது மெய்! எதுவுமே நிலைத்து நிற்காத உலகில் இன்பம் எங்கே, இன்பம் எங்கே என்றுதான் அலைகிறது மனது. சுட்டும் விழி சுகத்திற்கு இட்டுச் செல்ல, சுடும் விழி பரத்திற்கு இட்டுச் செல்லும் என்று அனுபவஸ்தர்கள் சொல்கிறார்கள். நெற்றிக்கண் வந்தவிதம் இப்படித்தான். கட்புலனுக்கு அப்பால்தான் மூன்றாவது கண் இருக்க முடியும். ஆழ்வார்கள், நாயன்மார்களுக்குப் பின் பக்தி இலக்கியம் என்பது நின்றே போய் விட்டது. புதுக்கவிதை அதற்கு புணருத்தாரணம் தரலாம்!

இன்றோடு நான் கொரியா வந்து ஒரு மாதமாகிறது. வந்த நாளிலிருந்து அடை மழை. ஆங்கிலேயனாக இருந்தால் பூனையும், நாயுமாகப் பெய்கிறது என்பான். என்ன expression-னோ! பூனையை இன்னும் அதிகம் பார்க்கவில்லை. நாய்கள் இருக்கின்றன. இந்த நாயின் பரிணாமம் மனித வளர்ச்சியுடன் மிகவும் நெருங்கியது. எங்கெல்லாம் மனிதன் இருக்கிறானோ அங்கெல்லாம் நாயும் இருக்கும். எனவேதான் மனித வடிவில் இறைவனைப் படைக்கும் போது கூடவே ஒரு நாயையும் வைத்தான் தமிழன் (பைரவர்). வேடிக்கை என்னவென்றால், கொரிய மக்களுக்கு அழகிய நீண்ட கண்கள். அது காதுகளை நோக்கி ஒடுக்கமாய் நீண்டு இருக்கும். அது பெண்களுக்கு ஒரு அழகைத் தருகிறது. ஜெர்மன்காரர்கள் சீனாக்காரர்களை (அவர்களைப் பொருத்தவரை வியட்நாம், கொரியா, ஜப்பான் -காரர்கள் எல்லாம் ஒன்றுதான்)க் குறித்துப் பேசும் போது கண்களை இடுக்கி, கையால் காது பக்கம் மேலே இழுத்துக் கேலி பேசும் ஒரு வழக்கமுண்டு. அந்த அளவிற்கு இவர்களின் காதோரம் நீண்ட விழிகள் பிரபலம். ஆனால், என்னை ஆச்சர்யப்பட வைத்த விஷயம், இங்குள்ள நாயினங்களின் ஒன்றிற்கு கண்கள் இவர்களைப் போலவே உள்ளது. இது தேர்ந்தெடுத்த இனப்பெருக்கத்தின் விளைவா? (selective breeding) அல்லது இயற்கையிலேயே அப்படியா என்று தெரியவில்லை. நாயின் பரிணாமம் இப்படித் தேர்வு அடிப்படையில் இருப்பதை உயிரியலார் ஆய்ந்துள்ளனர் (கையட்ட நாய், எலி போன்ற நாய் என்று பலவகை இப்படி உருவானதே). வால்ட் டிஸ்னிப் படங்களில் இப்படி நாயின் சொந்தக்காரர் முகம் போலவே நாய் இருப்பதைக் கேலி செய்து கார்ட்டூன் வரும். உண்மைதான். அவரவருக்கு ஏற்றவாறு நாய்களும் அமைந்திருப்பது, ஏதோ கடவுளின் படைப்பில் "custum designed"-ஆக படைக்கப்பட்டிருப்பது போல் படுகிறது. பைரவருடன் கூட இருக்கும் நாய் இந்திய நாய். அது கொரியன் நாய் அல்ல! எஸ்கிமோவின் நாய் அவர்களைப் போலவே furry-ஆக இருக்கும்! "அவரவர் இறையவர் குறைவிலர்" என்கிறார் சடகோபன். அவரவருக்கு ஏற்றவகையில் இறைவனே அமையும் போது afterall நாய் என்ன மாத்திரம்?

Tamil Unicode input made Easy!

Thanks to my discussion with Muthu Nedumaran, Badri Seshadri, Maalan, Suba and Mathy. I derived the following easy method for Unicode Tamil Input.

Input:

1. Get the latest version of Murasu Anjal http://groups.yahoo.com/group/anjal/files You may have become a member of Anjal eMail group. Get this superb Tamil editing software "free". Install this software in your system. Allow 'Anjal' to run in the background. This is important! Anjal related web functions are enabled only when you allow this software to run in the background (this simply means "minimize" the software).

2. Choose 'Anjal' as your phonetical keyboard and TSCII 1.7 as your input 'encoding'.

3. Type your content in Tamil.

4. Select the content and choose 'convert selection' and convert this selection to 'unicode'. Your Tamil will look slightly different now. Don't worry.

5. Now cut this Unicode Tamil and paste it in the Blogger or any Blog hosting website in the "New Post" category. Post and publish it.

[there is another way of converting a Tamil text into Unicode at http://www.suratha.com/reader.htm]


6. You need to do a simple editing in your 'default' template. Insert the following Tags


*font face="TSCu_InaiMathi, Latha"* at *$BlogDescription$* - if you want to leave some greetings in the front!


as well as at

*$BlogItemBody$* in the Blog Post - this is very important b'cos if Murasu Anjal is turned-off still the default font "Latha" helps the XP readers to view the Unicode Tamil.

[* replace asterick with < or > appropriately!]

Leave the rest unmodified (I mean the other style formatting).

7. View your Blog now. Bingo! You should see Unicode Tamil in your favorite Inaimathi TSC_u font or the big, fatty "Latha"!

Muthu wrote to me that TSC_u stands for TSCII 1.7 and Unicode rendering. So, it is important that Murasu Anjal runs at the background. If you fail to click-on the Anjal, the default "Latha" font in Windows XP should take care of the Unicode Tamil rendering. I presume you should allow your XP to support 'indic' languages. If you have not done it during your installation, you may do so later with your Windows XP CD. You don't have to worry about if you run Anjal in the background.

That is how this page is created.

Thanks to Muthu. Murasu Anjal made Tamil Unicode Blogging very easy!

நேற்று "உந்துமொழி" என்றொரு சொல் பிறந்தது. இணையம் வந்த பிறகு மடலாடற்குழுக்கள் இம்மொழிப் பயன்பாட்டை அதிகரித்துள்ளன. தமிழிலில் 'அவசரக்கொட்டை' என்றொரு பதப்பிரயோகம் உண்டு. உந்துமொழி என்பது ஒரு அவசரமொழி. இது மின்வெளித்தமிழின் ஒரு கூறு. அதாவது மடலாடற்குழுவில் ஒரு கடிதம் பார்த்தபின் அறிவு பூர்வமாக யோசிப்பதற்குமுன் உணர்வுபூர்வமாக பதில் எழுதிவிடுவது! உணர்வு உந்த எழுதப்படும் மொழி 'உந்துமொழி'. இணையம் என்பது ஒரு சுதந்திர ஊடகம். ஆள், தராதரம், தகுதி, பால் போன்ற எந்த வழக்கமான தயங்கு சக்திகளும் தடைசெய்யாத சுதந்திர வெளிப்பாடு இணையத்தில் சாத்தியம். அடையாளம் என்பதே கேள்விக்குறியாக இருக்கும் ஒரு ஊடகம் இது. யார் வேண்டுமானாலும் எந்த வேஷமும், எப்போது வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளலாம். வேஷத்தில் மறந்து கொண்டு வசை மொழியும் பாடலாம். தண்ணி போட்டு விட்டு 'கன்னா, பின்னா' என்று கத்துவது போல. இது ஒரு வசதி. இப்படியெல்லாம் வசதிகள் இருப்பதும் 'உந்துமொழி'ச் செயல்பாட்டை ஊக்கப்படுத்தும். உந்துமொழியின் தோற்றம் ஒரு அவசர முடிவு, ஒரு அவசரப்பதில் என்று இருக்கும். முன் அபிப்பிராயம், எழுதியவர் பற்றிய ஒரு முன் தோற்றம் (இமேஜ்) இவை எழுதும் பதிலை வண்ணப்படுத்தும். பெரும்பாலும் கருத்திற்கு பதில் என்பதை விட அபிப்பிராய அடுக்கு என்றே இதைச் சொல்ல வேண்டும். பல நேரங்களில் உந்து மொழி பாராதூரமான விளைவுகளை தந்துவிடுகின்றன. எழுதியவரின் அகப்பாடு தாக்கப்படும் போது சுடு மொழிப் பறிமாறல்கள் அதிகரிக்க அடிப்படை நாகரீகம் என்பது காணாமல் போகும் சம்பவங்களும் உண்டு. எனவே பதில் எழுதும் போது ஒன்றுக்கு இரண்டுமுறை பார்த்துவிட்டு எழுதுவது நல்லது. உந்துமொழி வேறுவகையில் ஆங்கிலத்தில் கவனிக்கப்படுகிறது. எழுத்துப்பிழை என்பது உந்துமொழியில் கண்டுகொள்ளப்படுவதில்லை. தோன்றும் எண்ணம் மறைவதற்குள் எழுதப்படவேண்டும் என்பதெ அங்கு விதி! மடலாடற்குழு இம்மொழிப்பயன்பாட்டை அதிகரிக்கிறது. அச்சுப் பத்திரிக்கையில் இம்மாமதிரி எழுத்துக்கள் வருவதற்கான சாத்தியக்கூறுகள் மிகக் குறைவு (வேண்டுமென்று வசை பாடுவது வேறு!). காலம் என்பது இங்கு முக்கியக்காரணியாக நிற்கிறது. இரண்டாவது கடிதம் எழுதுவதற்கு காசு கொடுத்து கார்டு வாங்க வேண்டும், தபால் ஆபீஸ் போக வேண்டும், எழுதிய பின் போஸ்ட் பண்ணவேண்டும் இத்தியாதி..இத்தியாதி.. ஆனால் இந்த அசௌகர்யமெல்லாம் கணினியில் இல்லை. தட்டச்சு தெரிந்தால் தட்டிவிடலாம். கடிதம் எழுதச் செலவு இல்லை. editing என்பது குறைவு - மட்டுறுத்தல் இருந்தாலும், ஒரு நம்பிக்கையின் பேரிலும், கடிதப்போக்குவரத்து அதிகம் இருக்க வேண்டுமென்ற ஆசையினாலும் கடிதங்கள் பெரும்பாலும் ஒடுக்கப்படுவதில்லை. இச்சூழலும் உந்துமொழிக்குச் சாதகமாக உள்ளது. ஒற்றுப்பிழை, சந்தி போன்றவை மெல்லத் தமிழில் மறைய இணையம் வழிவகுக்கும். தமிழுக்கு எழுத வேண்டிய இலக்கண நூலில் 'உந்துமொழி' பற்றியும் பின்னால் எழுத வேண்டிவரும்.


டைரி என்பது அழகியல் சார்ந்த விஷயமாகப் படுகிறது. எத்தனை வகையான டைரிகள். எப்போதும் அவைகளை தக்க வைத்துக் கொள்ள மனது ஆசைப்படுகிறது. இளம் பிராயத்தில் டைரி கிடைக்கும் என்பதற்காக கம்பெனி ஆட்களாக நட்புப் பிடிப்பது. டைரி கைக்கு வந்தபின்தான் அதில் என்ன எழுதுவது என்பது ஒரு பிரச்சனை என்பது புரியும்! பல நேரங்களில் மிக விவரமாக பெயர் முகரி எழுதியதுடன் காரியம் முடிந்துவிடும். கிராமத்தில் பிறந்த நாள் குறித்து வைக்கும் பழக்கம் கூட கிடையாது. செலவுக்கணக்கு எழுதும் அளவிற்கு பணப்புழக்கம் அப்போது கிடையாது (இப்போது என்ன வாழ்கிறது ?) எனவே அசடு வழிந்து வாங்கிய டைரியெல்லாம் கடைசி வரைக்கும் "காத்துக்கிடக்குதண்ணே வேரில் பழுத்த பலா" என்று கைபடாமல் கிடக்கும்.