ஆயிரம் பூக்கள் மலரட்டும்!

முதலில் பிறந்தது வார்த்தை என்கிறது விவிலியம்! பிறக்கும் வார்த்தையெல்லாம் எங்கோ இருக்கின்றன, அவைகளைத் தேடுதல் நலமன்று. பல நேரங்களில் இனிய மொழி இருக்க, இன்னா வார்த்தைகள் பேசி விடுகின்றோம். அவைகளை மீண்டும் கேட்க யார் ஆசைபடுவர்? எனவே, எல்லாவற்றையும் சேர்க்க முடியாது. ஆனால் திருவாய்மொழிகளை, நல்ல இலக்கியச் சொல்லாடலை சேர்த்து வைத்தால், பின்வரும் சந்ததியினர் இரசிப்பர். அப்படிச் சேர்த்து வைத்ததுதானே அகநானூறு, புறநானூறு போன்றவை!

இலக்கியச் செல்வங்களைப் பாதுகாக்க பல வழிகள் உண்டு. அவைகளைப் பற்றி விரிவாக திசைகள் இதழில் எழுதிவருகிறேன். இதுவரை மேற்கொண்ட முயற்சிகளை முதுசொம் சாளரம் வழியாகக் காணலாம்.

ஆனால் மின்வெளியில் உருவாகும் தமிழ் இலக்கியம் ஒரு புது வகை. சமகால இலக்கியத்தில் ஒருவகை. மற்ற எழுத்துக்களைவிட இதைப் பாதுகாப்பது சுலபம். இது பாதுகாப்பான ஒரு ஊடகத்தில் இருக்கிறது. இலக்க எழுத்துக்களை இணையம் வழி பாதுகாப்பது எளிது. ஆனாலும், இதில் பல நடைமுறைச் சிக்கல் உள்ளன. உதாரணமாக,

1) உற்சாகமுள்ளவர்க்கு, இணையம் ஒரு Super High Way! முன்பு மாதத்திற்கு ஒரு மடல் எழுதியவர் இன்று நாளைக்கு நான்கு எழுதிகிறார். எனவே இங்கு இலக்கிய உற்பத்தி அதிகம். வேகம் கூட. எழுதுகிற எல்லாம் இலக்கியமென்று சொல்ல வரவில்லை. ஆனால் நடைமுறை உலகை விட மின்வெளியில் ஆக்கம் கூடுதல் என்பது நடமுறை! இதனால், எழுதும் எழுத்தைச் சீர் செய்து (edit) வெளியிடுவது பெரிய வேலை. தமிழ்.நெட்டில் மின்வெளியைத் தமிழன் முதல்முறையாகக் கண்டபோது ஒரு தங்கவேட்டையே நடந்தது - அதாவது Gold Rush! அது வண்டி, வண்டியாய் கிடக்கிறது. அதை யார், எப்போது சீர் செய்து வெளியிடுவது? ஆனால், அதிலிருந்து இலக்கியத்தை மீட்க ஒரு வழியுண்டு..

2) எழுதியவரே தொகுப்பதுதான் சிறந்த வழி. தமிழ் இணையத்தில் வெளிவந்த எனது பாசுர மடலே முதலாவதாக அப்படித் தொகுக்கப்பட்ட நூலாகும். அதை நான் முதலில் எனது வலைத்தளத்தில் சேர்த்தேன். HTML கற்றுக் கொண்ட புதிது. வலைவடிவமைப்பு அதிகம் தெரியாத காலம். பின்னால் இதையே கொஞ்சம் நல்ல படங்கள், இசை இவை சேர்த்து ஒரு குறுந்தகடாக தமிழ் இணைய 2001ம் மாநாட்டில் வெளியிட்டேன். எனவே இலக்கவடிவில் இணைய இலக்கியமாக வெளிவந்த முதல் படைப்பு இது என்று சொல்லலாம். அதே மாநாட்டில் டாக்டர் ஜெயபாரதி அவர்கள் தனது இணைய எழுத்துக்களை புத்தக வடிவில் கொண்டு வந்தார். அந்த மாநாட்டில்தான் எனக்கு 'பாசுரமடல்' கண்ணன் என்ற பட்டமும் கிடைத்தது! இரண்டு படைப்புக்களுக்குமே அமோக வரவேற்பு இருந்தது. நான் கோலாலம்பூர், பினாங் என்று இரண்டு இடத்திலும் வெளியிட்டேன். (மேடையேற்றமில்லாத வெளியீடு இது. மேடையில் அது அடுத்த வருடம் துபாய் அருகேயுள்ள சார்ஷா என்ற இடத்தில் வெளியிடப்பட்டது. இதனால் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவெனில் பதிப்பகத்தார் வெளியிடும்வரை காத்திருக்காமல் எழுத்தாளரே தனது எழுத்தைத் தொகுத்து வெளியிட முடியும். அதற்கு இணையம் எளிய வழிகளைத் தருகிறது. இம்முறையில் தொகுப்பில் அதிக கவனமும், அக்கறையும் எடுத்துச் செய்ய முடியும். எழுத்துப் பிழைகள் (printers devil!). பரிணாம விதிகளைப் பார்க்கும் போது இவ்வழியே சிறந்த வழி என்று தோன்றுகிறது. Selfish Genes கோட்பாட்டின்படி சுய அக்கறை கொண்ட எதுவும் காலத்தை வென்று நிலைத்து நிற்கும். ஒருவகையில் இதுவும் சுயத்தைத் தக்க வைத்துக்கொள்ளும் முயற்சியே! வாழ்வின் வெற்றிப் பின்னணியே இதை நம்பித்தான் உள்ளது. பாரதிக்கு இந்த மீடியா கிடைத்திருந்தால் எழுதித்தள்ளியிருப்பான். பல புதுமைகள் செய்திருப்பான். அது காலத்தை வென்றும் நின்று இருக்கும்.

3) படைப்பாளியே தனது படைப்புகளை இணையத்தளத்தில் சேர்த்து வைப்பது. நான் செய்திருக்கிறேன். டாக்டர் ஜெயபாரதி மற்றும் பலர் செய்துள்ளனர். இதுபற்றிய சேர்ப்பு வலைத்தளமிருந்தால் சொல்லுங்கள். இங்கு தொடர்பு கொடுக்கலாம். ஆனால் இதைச் செய்வதற்கு கொஞ்சம் தொழித்திறன் வேண்டும். இல்லையெனில் சிவசங்கரி செய்தது போல் காசு கொடுத்து வலையகம் உருவாக்கலாம். ஆனால், புத்தகம் வெளியிடுவதே பெரிய காரியமாக பல எழுத்தாளர்களுக்கு இருக்கும் போது காசு கொடுத்து எப்படி வலைத்தளம் அமைப்பது?

4) இதற்கிடையில், சுலபமான ஒரு வழியை இணையம் நமக்குத் தந்துள்ளது. அதுதான் பூவகம் அமைப்பது. இது வலையகம் கட்டுவதைவிட எளிது. ஆனால் அதிலே செய்யக் கூடிய அத்தனை நகாசு வேலையும் இதிலே செய்ய முடியும் - அதில் செலவிடக்கூடிய நேரத்தில் பாதியில்! ஒரு எழுத்தாளனுக்கு இது தரும் இதங்கள் என்னென்ன என்று பார்ப்போம்:

4.1. எழுத்தாளனுக்கு உந்துதல், உற்சாகப்படுத்துதல் அவசியம். அதற்கு ஏற்ற தளங்கள் தமிழ் மடலாடற்குழுக்கள். அவைகளில் பதிப்பிப்பது எளிது. அப்படிப்பதிப்பித்த எழுத்தை, உம்.கவிதை, கட்டுரை பூவகத்தில் எளிதாகக் கோர்க்கமுடியும். உண்மையில் இது மாலைக்கட்டுகிற வேலைதான்!

4.2. வலையகத்தில் ஒவ்வொரு கோப்பையும் வலையேற்றம் செய்தல் பெரிய வேலை. அதை இலகுவாக்கியதன் மூலம், காணும் எழுத்தை வெட்டி, ஒட்டினால் பூவக அமைப்பில் வேலை முடிந்தது.

4.3. மேலும் புதிய பக்கங்களை உருவாக்கல் இங்கு வெறும் சொடுக்கு வேலை!

4.4. ஒரே பக்கத்தில் கூட வெவ்வேறு தலைப்புகளில் நமது எழுத்தைப் பதிப்பிக்க முடியும்.

4.5. படங்கள் சேர்க்க முடியும். உதாரணமாக 'சம்ஸ்காரா' புகழ் யு.அனந்தமூர்த்தி அவர்களுடன் நான் அவர் லண்டன் வந்தபோது எடுத்த படம்.

4.6. வாசிப்பவர் தொடுக்கும் கேள்விகளை வாசிக்கமுடியும், சின்ன அரட்டை அரங்கங்களை நடத்தமுடியும், வேண்டுமெனில் நேரடியாக (real time chat) அரட்டையடிக்கமுடியும்.

5. எனவே இன்றே ஒரு பூவகம் தொடங்குக: எனக்குத்தெரிந்து நான்கு வள்ளல்கள் இலவசமாக பூவக அமைப்பைத் தருகின்றனர். அங்கு சென்று பூக்கூடை, நார் இவைகளை வாங்கிக் கொள்ளலாம். பூ சேகரிக்க வேண்டியது நமது பொறுப்பு!

5.1 Blogger
5.2 Rediff
5.3 Easy Journal
5.4 Intermutual

6. அடுத்து, பூவகம் அமைத்தபின் அது இருப்பதை அறிவிப்பவர்கள். எனக்குத் தெரிந்து இது பற்றி முதலில் தமிழில் வந்த கட்டுரை திரு.மாலனுடையது . பூக்களைக் கோர்த்து மாலையாக்கியபின் மாலைகளை அடுக்க வந்திருக்கிறார் ஹவாய் சந்திரமதி. இவரது Tamilblogs பூவகம் இதைச் செய்கிறது.

7. பூவகம் குறித்த செய்திகளைத் தாங்கும் ஒரு பூவிதழ் வர வேண்டிய காலக்கட்டம் வந்தாகிவிட்டது. அதில் பூவகம் அமைக்கும் முறைகள், எளிய கருவிகள், உத்திகள் பற்றிய விவரம், தமிழ்ப் பூவகங்களில் காணும் சிறப்பு என்று பலவாறு ஆராய இது உதவும். மேலும் பூவகம் பற்றி உலகு அறிய இது செய்யும். அதுதானே ஒரு எழுத்தாளனுக்குத் தேவை.

சரி, இவ்வளவு சொல்லியாகிவிட்டது. இன்னுமா சும்மா உட்கார்ந்திருக்கிறீர்கள்? எங்கே உங்கள் பூவகம்?

1 பின்னூட்டங்கள்:

Anonymous 10/15/2010 12:25:00 AM

I must digg your post so more folks are able to look at it, really helpful, I had a hard time finding the results searching on the web, thanks.

- Joe