நேற்று "உந்துமொழி" என்றொரு சொல் பிறந்தது. இணையம் வந்த பிறகு மடலாடற்குழுக்கள் இம்மொழிப் பயன்பாட்டை அதிகரித்துள்ளன. தமிழிலில் 'அவசரக்கொட்டை' என்றொரு பதப்பிரயோகம் உண்டு. உந்துமொழி என்பது ஒரு அவசரமொழி. இது மின்வெளித்தமிழின் ஒரு கூறு. அதாவது மடலாடற்குழுவில் ஒரு கடிதம் பார்த்தபின் அறிவு பூர்வமாக யோசிப்பதற்குமுன் உணர்வுபூர்வமாக பதில் எழுதிவிடுவது! உணர்வு உந்த எழுதப்படும் மொழி 'உந்துமொழி'. இணையம் என்பது ஒரு சுதந்திர ஊடகம். ஆள், தராதரம், தகுதி, பால் போன்ற எந்த வழக்கமான தயங்கு சக்திகளும் தடைசெய்யாத சுதந்திர வெளிப்பாடு இணையத்தில் சாத்தியம். அடையாளம் என்பதே கேள்விக்குறியாக இருக்கும் ஒரு ஊடகம் இது. யார் வேண்டுமானாலும் எந்த வேஷமும், எப்போது வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளலாம். வேஷத்தில் மறந்து கொண்டு வசை மொழியும் பாடலாம். தண்ணி போட்டு விட்டு 'கன்னா, பின்னா' என்று கத்துவது போல. இது ஒரு வசதி. இப்படியெல்லாம் வசதிகள் இருப்பதும் 'உந்துமொழி'ச் செயல்பாட்டை ஊக்கப்படுத்தும். உந்துமொழியின் தோற்றம் ஒரு அவசர முடிவு, ஒரு அவசரப்பதில் என்று இருக்கும். முன் அபிப்பிராயம், எழுதியவர் பற்றிய ஒரு முன் தோற்றம் (இமேஜ்) இவை எழுதும் பதிலை வண்ணப்படுத்தும். பெரும்பாலும் கருத்திற்கு பதில் என்பதை விட அபிப்பிராய அடுக்கு என்றே இதைச் சொல்ல வேண்டும். பல நேரங்களில் உந்து மொழி பாராதூரமான விளைவுகளை தந்துவிடுகின்றன. எழுதியவரின் அகப்பாடு தாக்கப்படும் போது சுடு மொழிப் பறிமாறல்கள் அதிகரிக்க அடிப்படை நாகரீகம் என்பது காணாமல் போகும் சம்பவங்களும் உண்டு. எனவே பதில் எழுதும் போது ஒன்றுக்கு இரண்டுமுறை பார்த்துவிட்டு எழுதுவது நல்லது. உந்துமொழி வேறுவகையில் ஆங்கிலத்தில் கவனிக்கப்படுகிறது. எழுத்துப்பிழை என்பது உந்துமொழியில் கண்டுகொள்ளப்படுவதில்லை. தோன்றும் எண்ணம் மறைவதற்குள் எழுதப்படவேண்டும் என்பதெ அங்கு விதி! மடலாடற்குழு இம்மொழிப்பயன்பாட்டை அதிகரிக்கிறது. அச்சுப் பத்திரிக்கையில் இம்மாமதிரி எழுத்துக்கள் வருவதற்கான சாத்தியக்கூறுகள் மிகக் குறைவு (வேண்டுமென்று வசை பாடுவது வேறு!). காலம் என்பது இங்கு முக்கியக்காரணியாக நிற்கிறது. இரண்டாவது கடிதம் எழுதுவதற்கு காசு கொடுத்து கார்டு வாங்க வேண்டும், தபால் ஆபீஸ் போக வேண்டும், எழுதிய பின் போஸ்ட் பண்ணவேண்டும் இத்தியாதி..இத்தியாதி.. ஆனால் இந்த அசௌகர்யமெல்லாம் கணினியில் இல்லை. தட்டச்சு தெரிந்தால் தட்டிவிடலாம். கடிதம் எழுதச் செலவு இல்லை. editing என்பது குறைவு - மட்டுறுத்தல் இருந்தாலும், ஒரு நம்பிக்கையின் பேரிலும், கடிதப்போக்குவரத்து அதிகம் இருக்க வேண்டுமென்ற ஆசையினாலும் கடிதங்கள் பெரும்பாலும் ஒடுக்கப்படுவதில்லை. இச்சூழலும் உந்துமொழிக்குச் சாதகமாக உள்ளது. ஒற்றுப்பிழை, சந்தி போன்றவை மெல்லத் தமிழில் மறைய இணையம் வழிவகுக்கும். தமிழுக்கு எழுத வேண்டிய இலக்கண நூலில் 'உந்துமொழி' பற்றியும் பின்னால் எழுத வேண்டிவரும்.

0 பின்னூட்டங்கள்: