இரவில் கொட்ட, கொட்ட விழித்திருந்துவிட்டு பகலில் தூங்கி விடாமலிருக்க 'விழிப்பி மணி' (அலாரம்) வைப்பது இயல்பு. ஆனால் வழக்கமான மணி (உண்மையில் அது பீப், பீப்!) அடிக்காமல் இன்று எழுப்பிவிட்டது "இடி". "ஈரக்குலை நடுங்கிறமாதிரி" ஒரு பயம். நான் இருக்குமிடம் ஒரு தீவு. ஒரு புறம் பசிபிக் மாகா சமுத்திரத்தின் தொடக்கம், இன்னொரு புறம் கொரிய தீபகற்பம். நல்லவேளை நாட்டைப்பார்த்து நிற்கும் தீவுப்பகுதில் அமைந்துள்ளது ஆய்வகம். இது கொஞ்சம் பாதுகாப்பு. ஆனாலும் சுற்றி மலை. மலைக்கு இறங்கிவருவது மழையின் இயல்பு! அது பரவாயில்லை. ஆனாலும் வானமே இறங்கிவந்தாற்போன்ற மழையை இதுவரை கண்டதில்லை. கோடையிடி இந்தியாவில்தான் பிரபலம் என்று எண்ணியிருந்தேன். இன்று காலை இடித்த இடியைப் பார்த்தால் இந்திய இடிகள் பிச்சை வாங்கவேண்டும்:-)

உலுப்பி, உலுப்பி எழுப்பி ஊர்த்தவதாண்டவத்தை பார் என்றது வானம். பாரதி இதைப்புகழ்ந்து 'சட்டச்சட சட்ட' என்று மழை பொழிந்தது என்கிறான். இடி அவனையும் பயமுறுத்தியிருக்கும். பயத்தை மறைத்துக்கொள்ள 'சக்தி தாண்டவம்' அது, இது என்று கதையளந்திருக்கிறான் படவா! பயம் வரும் போது ஒன்று வழிப்படத்தோன்றுகிறது அல்லது அழத்தோன்றுகிறது! இரண்டிற்கும் சம்மந்தம் உண்டு. சமய உணர்வு இப்படித் தோன்றியதுதான் என்று சொல்கின்றனர் மானுடவியலர். ஆனால் சிறு கூற்றுதான் இதில் உண்மை! 'இடி, இடித்து மழை மொழிந்து எல்லாம் நின்றாச்சு' என்று இரண்டு அர்த்தத்தில் கண்ணதாசன் பாடுவான். இன்று பெய்த மழையில் மலையே கரைந்து கடல் தண்ணீர் குடி தண்ணீர் ஆகிவிட்டது. அப்படித்தான் இருக்க வேண்டும். உச்சியிலிருந்து பார்க்கும் போது கடல் நீலமாக இல்லாமல் புனல் நீர் போல் மண்டியாக, சிவப்பாக இருக்கிறது. நல்லவேளை, மலை முற்றும் கரையவில்லை. இப்படி உருவானதுதானே கடல்!!

இடியை உதாரணமாக வைத்து ஜெர்மன் பேச்சு வழக்கில் "donnawetter" எனற சொல்லாட்சி உண்டு. சொல்லும்போதே இடியோசை கேட்பது போலிருக்கும். தமிழில் அப்படி இருந்தால் எழுதுங்கள்!!

0 பின்னூட்டங்கள்: