உணவுப் பழக்கமென்பது நாட்டிற்கு நாடு வேறுபடுகிறது. ஏன் இந்தியா போன்ற பெரிய நாட்டில் பிரதேச வேற்றுமையும் உண்டு. உத்திரப்பிரதேசத்தில் காலையில் ஒரு சொம்பு பாலும், ஜிலேபியும் சாப்பிடுகிறார்கள். நம்மால் முடியுமா? கழிசல் கண்டுவிடும். இது போல்தான் இந்தக் கொரியர்களும்.

காலையில் எழுந்தவுடன், சுடுசோறு, கிம்ச்சி. மதியம் சுடுசோறு, கிம்ச்சி, புலால், இரவு சுடுசோறு, கிம்ச்சி, மீன் இப்படி. எந்த நேரமும் சுடுசோறு சாப்பிட முடியுமா? ஒரு மாறுதல் வேண்டாமா? சீனாவில் கூட வெவ்வேறு கஞ்சி வகைகள் உண்டாம். ஜப்பானில் நமது இட்லி போன்ற ஒரு பதார்த்தம் உண்டு. உள்ளே புலால் வைத்து வேக வைப்பார்கள்.

இவர்களுக்கு புரதமென்பது பெரும்பாலும் கடலிலிருந்தே கிடைக்கிறது. மீன் முக்கிய உணவு. கடல் நண்டு, இரால், விலாங்கு, கடல் வெள்ளரி, கடற்குச்சி (Sea Urchin), கடல் நத்தை, இன்னும் பல பெயர் தெரியாத ஜீவன்களை உண்கிறார்கள். இப்படி பலவற்றையும் உண்பதால் இவர்கள் உணவுச் சுரப்பிகள் மிக வலுவாக இருக்கின்றன என்று சொல்ல வேண்டும். என்னுடன் இரண்டு வியட்னாம் பெண்மணிகள் உள்ளனர். இரண்டும் 50 கிலோவிற்கும் குறைவு. மெல்லிய உடம்பு. ஆனால் இவர்கள் என்னை விட இரண்டு மடங்கு சோறு உண்கிறார்கள். புலால் இல்லாமல் சாப்பாடு இல்லை. எப்படித்தான் இப்படி உடம்பை வைத்துக் கொள்ள முடிகிறதோ? நமக்கு நல்ல சாப்பாட்டைக் கண்ணில் காட்டினாலே உடம்பு பெருத்துவிடுகிறது. என்ன ஜாதகமோ!

இந்தக் கிம்ச்சி என்பது ஒருவகை ஊறுகாய். சைனா முட்டைக்கோஸில் தயாரிப்பது. நூல்கோல், கீரை என்று வெவ்வேறு வகை கிம்ச்சிகள் உண்டு. நம்மவர்க்குப் பிடிக்கும் ஏனெனில் இதில் மிளகாய் அள்ளித்தெளித்திருக்கும். மிளகாய் இல்லாமல் எந்த உணவுமில்லை. எல்லாவற்றிலும் அள்ளித் தெளிக்கிறார்கள். மிளகாய் போர்த்துக்கீசியரால் 17ம் நூற்றாண்டில் ஆசியாவிற்கு கொண்டுவரப்பட்டது. இரண்டு நூற்றாண்டுக்குள் அது ஆசியாவின் தேசியக் காய் ஆகிவிட்டது (கவனமாக எழுத வேண்டியுள்ளது 'தேசிக்காய்' என்றால் எலுமிச்சை என்று சிலோன் வழக்கில் பொருள்!). இந்தியர்களும், மெக்சிகர்களும் காரமான உணவு சாப்பிடுவதில் வல்லவர்கள் - என்று நினைத்திருந்தேன். கொரியர்கள்களைக் கண்டபின் அது வாபஸ்!!

எல்லாம் இருக்கட்டும், இட்லி, தோசை வேண்டாம். ஒரு ரொட்டி? அதுவாவது இந்த ஜீவனுக்குக் கிடைக்காதா? ரொட்டிக்கடை கண்டு பிடிக்க இரண்டு நாள் ஆனது. வெள்ளை மைதா ரொட்டி. ஏதோ பஞ்சு மிட்டாய் தயாரிப்பது போல் அவ்வளவு soft ! இவர்களுக்கு ஜெர்மனியில் பயிற்சி தரவேண்டும். நார்ச்சத்து கொண்ட கோதுமை மாவில் எப்படி வகை, வகையான ரொட்டி செய்யலாமென்று அவர்களுக்குத்தான் தெரியும். இந்த அமெரிக்க, ஆங்கிலேயர்களுக்குத் தெரியாது. எல்லாம் வெள்ளை ரொட்டிக் கேசுகள்! Continental Breakfast என்று சொல்லிவிட்டு வெள்ளை ரொட்டி தருவார்கள். தடவிக் கொள்ள மயனேஸ்...உவே!!

சரி! புலால் மறுத்தலை வள்ளுவனுக்குப் பின் முறையாகக் கடை பிடிக்கும் நான் என்ன செய்கிறேன் என்று கேட்கிறீர்களா? காலையில் சோறு, கிம்ச்சி...மதியம் சோறு, கிம்ச்சி..இரவு சோறு கிம்ச்சி....:-))

0 பின்னூட்டங்கள்: