இந்தப் பூவகம் ஏன் தோற்றுவித்தேன் என்றொரு கேள்வி எனக்குள் வருகிறது?

முதல் காரணம் ஏதாவது புதுமை என்று வரும் போது அதைக் கௌவிக்கொள்ளும் பழக்கம் எனக்கு இருக்கிறது. அந்த என் குணமே இன்று என்னை வெளிநாட்டில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது. நம்மால் நம் நாட்டில் செய்ய முடியாததை இவர்களால் வெளிநாட்டில் செய்துவிட முடிகிறது. இந்த ஓட்டப் பந்தயத்தில் (relay race) வெல்லும் அணியுடன் ஓடுவது உளச்சுகமளிக்கிறது. குதிரை வண்டியில் எப்போதும் முன்னால் உட்கார்ந்தே பழகியவன் நான். கல்யாண ஊர்வலத்தில் கூட மாப்பிள்ளையை பின்னால் தள்ளிவிட்டு முன் சீட்டில் கண்ணாடிக்குப் பக்கத்தில் இருப்பேன் :-)

அடுத்த காரணம் புதுமையுடன் இதிலொரு ஆக்கத்தைக்காட்டும் கூறு இருக்கிறது. ஆக்கபூர்வமாக இருக்க வேண்டுமென்ற ஆசை எப்போதுமுண்டு எனக்கு. ஆய்வகத்தில் ஒரு பழமொழி உண்டு 'publish or perish' என்பது. அதாவது ஆய்வில் புதுமைகள் செய்து வெளியிட்டுக் கொண்டே இருக்க வேண்டும். 'செய் அல்லது செத்து மடி' என்பது போன்றது அது. இம்மடலை தூக்கம் விழித்து எழுதச் செய்வது இச்சக்தியே!

மூன்றாவது காரணம் சினிமா விளம்பர வண்டியின் பின்னால் போகும் கிராமத்துச் சிறுவனின் வெகுளி இன்னும் என்னுள் இருப்பது. வைணவம் பிடித்திருப்பதற்குக் காரணம் அங்கு இறைவன் சுலமாகக் கிடைக்ககூடிய எளியவனாக இருக்கிறான் ['பத்துடை அடியவர்க்கு எளியவன்' என்பது நம்மாழ்வார் வாக்கு]. இந்த வெகுளித்தனத்தாலே உலகம் எனக்கு எப்போதும் ஆச்சர்யமாகவே இருக்கிறது. ஒரு பொழுதுகூட சோம்பலாக இருப்பதில்லை. எல்லாவற்றிலும் ஏதாவதொரு ஆச்சர்யம் ஒளிந்திருப்பதைக் காண்கிறேன். இது விஞ்ஞானிக்கும், கவிஞனுக்கும் உள்ள பொதுவான குணாம்சம்! ஆகவே நான் இரண்டுமாக இருக்கிறேன்.

நான்காவது காரணம் பூவகம் எனது பிரத்தியேக உலகம். இங்கு யாரும் தண்ணி போட்டு வந்து கலாட்டா செய்ய முடியாது. I hate those chracters in India! தனி மனித சுதந்திரம், உரிமை இதில் எனக்கு அதிக பிடிப்பு. எனது தனிமைக்குள் யாரும் மூக்கை நுழைப்பதை நான் விரும்புவதில்லை. அதே போல் அடுத்தவர் வம்பிற்கும் நான் போவதில்லை. அதற்கு பூவகம் இடமளிக்கிறது.

அதே நேரத்தில் நான் தனிமைப்பட்டு போகவும் விரும்புவதில்லை. அதனாலேயே என் பூவகம் பற்றி வெட்கமில்லாமல் எல்லோரிடமும் சொல்லிக் கொள்கிறேன். சில நேரங்களில் தோன்றுகிறது 'இதை வெட்டி பந்தா' என்று யாராவது நினைத்துக் கொள்வரோ என்று. கவிஞன் ஒரு கலைஞன். அவனுக்கு பொது மக்கள் ஏற்பு அவசியம்! அவர்களது உற்சாகப்படுத்தல் அவசியம். அதற்குப் பதிலாக அவன் இவர்களுக்கு கேளிக்கை காட்டுகிறான், அறிவுரை தருகிறான், தான் கண்ட உள்ளொளியைப் பகிர்ந்து கொள்கிறான். இதைத் தனிப்பட செய்ய இயலாது. 'யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்' என்றுதான் கவிஞன் எழுத முற்படுகிறான். இதில் ஒரு சின்ன சிரமமுள்ளது. கவனிக்கப்படும் எதுவும் கல்லெறி படுவது இயற்கை. என் சுபாவத்தைப் புரிந்து கொள்ளாதோர் என்னைத் தவறாகப் புரிந்து கொண்டு கல்லெறிகின்றனர். கவிஞன் மெல்லியவன். வள்ளுவன் பேசும் அனிச்ச மலர் உள்ளம் கொண்டவன். பூவைப் பிடுங்க கோடறி எறியும் மூடர்கள் மூர்க்கமாக என்னைப் பாதிக்கின்றனர். அதிலிருந்து மீள நான் ஆக்கபூர்வமாக மாற வேண்டியுள்ளது. நான் ஆக்கபூர்வமாக இருப்பதால் மீண்டும் உயர, உயரப் போகிறேன். வீசும் மலர்ச் செண்டை விட, கற்களே தூரம் போகக் கூடியவை. எனவே கற்கள் மீண்டும் வருகின்றன. நான் மேலும் போகிறேன். ஆனால் இத்தனை உயர்விற்கும் ஆக்கமான உள்ளமே காரணம். அதைத் தருபவர்கள் மெல்லிய குணம் படைத்தவர்களே. பாறைகள் பலம் கொண்டவை போல் தெரியலாம். ஆனால் இடுக்கில் முளைக்கும் மெல்லிய செடியோ, புல்லோ கால ஓட்டத்தில் பாறையப் பெயர்த்து விடும்.

வாழ்க பூக்கள்!

0 பின்னூட்டங்கள்: