கொரியா வந்ததிலிருந்து கிழக்காசியாவைக் கூர்ந்து நோக்கும் வாய்ப்புக் கிடைத்துள்ளது. கொரியாவில் இப்போது மழைக்காலம் முடிந்து 'அக்னிநட்சத்திரம்' ஆரம்பம் :-) ஏ.சி (குளிர்சாதனம்) இல்லாமல் இருக்க முடியவில்லை. நானிருக்கும் தென் கொரியத் தீவிற்கு (கோஜே-ஷி) உல்லாசப் பயணிகள் வந்தவண்ணமுள்ளனர். தனிமையில் கிடந்த எங்கள் மாகடல் ஆய்வு மையம் குழந்தைகளின், பெண்களின் சிரிப்பில் பூத்துக் கிடக்கிறது. கொரியக் குழந்தைகள் மிகச் சுத்தமாக 'அப்பா, அம்மா' என்னும் போது 'ஊம்' என்று சொல்லத் தோன்றுகிறது - ஏதோ நம்மவூரில் இருப்பது போன்றதொரு உணர்வு. தமிழுக்கும் கொரிய மொழிக்கும் என்ன தொடர்பென்று தெரியவில்லை. ஆனால் பல முகங்கள் என் உறவுகளில் கூட உண்டு. என்ன தொடர்பு? பல்லவர் காலத்துச் சீனப் பயணிகளிடம் கேட்க வேண்டும் :-) அப்போதெல்லாம் சீனம் என்றால் கொரியாவுமுண்டு. ஏனெனில் கொரியாதான் 'பட்டுப்பாதையின்' முக்கிய பயணத்தலம். நண்பர்களின் மனைவிமார்கள் ஏதாவது தின்னத் தருகிறார்கள். உப்புமாவும், தோசையும் கலந்தார் போல ஒரு உணவு - ரொம்ப சவுக்கு, சவுக்கு! இந்த அரிசியை எப்படித்தான் உண்கிறார்களோ தெரியவில்லை. இந்தப்பசை அரிசிதான் 'சாப்ஸ்டிக்' என்ற கைக்குச்சியின் தோன்றத்திற்கு இட்டிருக்கும். சாப்பிட்டு வைத்த பாத்திரத்தையும் பெண்களே ஆவலுடன் கழுவிவிட்டனர். அந்தப் பண்பு, அந்த அன்பு என்னை மீண்டும் தமிழ் மண்ணிற்கே இட்டுச் சென்றது. கையில் காசைக் கொடுக்கும் போதுள்ள பணிவு, குளிர்பானம் தரும் போது ஒரு கையால் தராமல் இரு கைகொண்டு மரியாதையுடன் தருவது..இதுவெல்லாம் நமக்குப் புதிதல்ல. இந்தியாவிலிருந்துதான் எல்லாம் அங்கே போயிற்று என்று சொல்லாமல் அங்கிருந்து இந்தியா வந்திருக்கலாம் என்ற எண்ணம் வலுப்பட ஆரம்பித்துள்ளது.

0 பின்னூட்டங்கள்: