பாண்டம்

ஆண்களுக்கு ஒரு வசதி, அவர்கள் தொடர்ந்து பேணப்படுவர். முன்னொரு காலத்தில்..சிறுவனாக இருந்த போது, இரண்டு வீடு தள்ளி சாரதா டீச்சர் வீடு. சாரதா டீச்சருக்கு எதோ வியாதி, சதா இருமிக்கொண்டே இருப்பார். அதனால் அவர் குழந்தைகளிடன் சிரித்துப் பேசிப் பார்த்ததில்லை. அவரால் உட்கார்ந்து சமைக்க முடியாது. அவருக்கு ஒரே பிள்ளை. சேது என்று பெயர். அவர்தான் வீட்டில் சமையல். கிராமத்து மனோபாவம் தெரியாதா? தினம் அவர் சமையல் கரண்டி தூக்குவதால் அவரை யாரும் ஆண்மகனாகப் பார்ப்பதில்லை. நான் இந்தியாவை விட்டு வெளியே வரும்வரை சமையல் கட்டிற்கு சாப்பிட மட்டுமே போனதுண்டு. ஆண்கள் அதிகமாகவே அங்கு பேணப்படுகிறார்கள். இங்கு இப்போது நானே சமையல் செய்து கொள்கிறேன். தமிழ்ச் சமையலில் நிறைய வேலையுண்டு. 'சமைத்தல்' என்ற வார்த்தையே அதைத்தான் சொல்கிறது, பக்குவப்படச் செய்தல் என்று பொருள். ஆனால் ஜப்பானிய மொழியில் அப்படியில்லை. "ரியோரி" என்றால் 'பொருள்' என்று பொருள். அதாவது சமைப்பது முக்கியமில்லை. சமைக்கப்படும் பொருள் முக்கியம். எனவே கொரிய, ஜப்பானிய ரியோரியில் உணவுப் பொருள் அதிகப் பக்குவப்படாமல் அப்படியே வேக வைக்கப்பட்டோ , முடிந்தால் கச்சையாகவோ உண்ணப்படுகிறது. அது கீரை வகையாக இருந்தாலும், மீன், பாம்பாக இருந்தாலும் அப்படியே...இது நமக்கு சகித்துக் கொள்ள முடியாத ஒன்று. இந்தியா நூற்றாண்டுகளாக மனம் சார்ந்த உளவியலில் கவனம் செலுத்திவிட்டது. அதனால் அங்கு எல்லாமே நுண்ணிய அமைப்பு சரியாக அமையும்வரை சிறப்பானதாக (ஆங்கிலத்தில் complicated, complex, elaborate போன்ற வார்த்தைகளால் சொல்லலாம்) இருக்க வேண்டிய கட்டாயம். அது சைவ சித்தாந்தமாக இருந்தாலும், இராக ஆலாபனையாக இருந்தாலும், கோவில் கோபுரமாக இருந்தாலும், வாழைப்பூ வதக்கலாக இருந்தாலும் இந்தத் தன்மையைக் காணலாம். மனிதன் என்ற பெயரே அவன் மனம் கொண்டதால், மனத்தால் நடத்தப்படுபவன் என்ற பொருளிலேயே வருகிறது. ஆக, சமைப்பது, சாப்பிடுவது ஒரு மனோபாவம். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நண்பர்கள் பாரிசில் வாழ்ந்தாலும், மாஸ்கோவில் வாழ்ந்தாலும் கதிர்காமம் கோயிலில் கொடியேற்றி விட்டால் புலால் உண்பதை நிறுத்திவிடுகின்றனர். 'மச்சம்' (புலால்) செய்யப் பயன்படும் பாத்திரங்களும், கரண்டிகளும் அந்த நாட்களுக்கு ஓரமாக வைக்கப்படும். இதெல்லாம் ஒரு சம்பிரதாயம். ஒரே பாத்திரத்தைப் பயன் படுத்துவதாலோ, அதே கரண்டியைப் பயன்படுத்துவதாலோ சாமி வந்து கண்ணைக் குத்தாது :-) இருந்தாலும் அதுவொரு உளப்பாங்கு.

எனக்கு இரண்டு பிரச்சனைகள். சமைப்பது, அடுத்து இருக்கின்ற பாத்திரங்களை எது சமைப்பதற்கும் அனுமதிப்பது! நேற்று இரவு 11 மணியிருக்கும், சமையல் அறையில் கட, முட என்று சத்தம். அப்போதுதான் ஒரு பெண்மணி கடலிலிருந்து பொறுக்கி வந்த நத்தைகளைக் கழுவிக் கொண்டிருந்தாள். பொதுவான பாத்திரத்தில் தண்ணீர் கொதித்துக் கொண்டிருந்தது. தூங்கும் போது இச்சிந்தனை வந்தது. எல்லாம் பாத்திரத்தைப் பற்றித்தான்! பாண்டம் எது சமைப்பதற்கும் இடம் கொடுக்கிறது. அது சமை படுவதில்லை. சமைத்த உணவு ஒட்டிக் கொள்வதில்லை. அதுபோல்தான் மனித வாழ்வும் என்று தோன்றியது. இந்த உடல்தான் சமைபடும் பொருள். அதன் இச்சா, தாபங்கள்...இம்சைகள்..அவதிகள் (கொதிக்கும் பொருள்)! உள்ளிருந்து இயக்கும் இறைமை சமையல் பாத்திரம் போல் ஒட்டாமல் நிற்கிறது! நமது கன்ம வினைகளை நாம்தான் அனுபவிக்க வேண்டும். அப்படித்தான் சொல்கிறது நமது சமயம். அங்கும் சமைத்தல் இருக்கிறது! இந்தியனாகப் பிறந்துவிட்டாலே இதுதான் தொல்லை. காந்தி லண்டனில் வாழ்ந்த காலத்தில் தனது புலால் மறுக்கும் நோன்பை எப்படிக் காப்பதென்பதிலே அதிக நேரத்தைச் செலவிட்டார் என்று நாய்ப்பால் போன்ற பிரபல எழுத்தாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். காந்திக்கே அந்தக்கதி :-) 'உலகம் உண்ட பெருவாயனை' பரம் பொருளாக ஏற்றுக் கொண்ட பின் இப்படி நத்தைக்கும், புழுவிற்கும் சங்கப்பட்டுக் கொண்டு இருக்கக்கூடாது. உயிர்த்தல் என்றாலே உண்ணுதல் என்றுதான் பொருள். உண்ணப்படும் பொருள் எல்லாம் உயிரே! அவர்கள் (கொரிய, சீன, ஜப்பானியர்) பிழைத்துப் போகட்டும் :-))

0 பின்னூட்டங்கள்: