மழையும் வள்ளுவனும்

காலையில் எழுந்தவுடனே சிந்தனைகள் கொட்டுகின்றன. கொட்டுவதால் அதை இட்டுவிடமுடிவதில்லை. தென்கொரியாவில் மழை கொட்டி முடிந்துவிட்டது. மழைக்காலம் போய் வெய்யிற்காலம் வந்துவிட்டது. மழைக்காலமே தேவலாமென்றிருக்கிறது. ஜப்பானிய வேனிற்காலத்தை 'மூஷியட்ஷுயி' என்பார்கள். அதாவது உடம்பில் பூச்சி ஊறுவது போன்ற கோடை என்று பொருள். ஜப்பானியக்கோடை போல் இங்கும் இருக்குமோ என்று பயம். நீண்ட நாட்களுக்குப்பின் இரவில் fan-வைத்துக் கொண்டு தூங்குகிறேன்!! ஜெர்மனியில் வேனிற்காலம் சூடாக இருந்தபோதும் விசிறி வைத்துக் கொள்ளுமளவிற்கு இருக்காது. இந்த வருடம் ரொம்பச் சூடு என்று தெரிகிறது.

டாக்டர் லீ என்பவர் சக விஞ்ஞானி. கொரியச் சீனர் (பாதி/பாதி). மழைக்காலத்தில் ஒருமுறை சொன்னேன், 'நான் வந்ததால்தான் இப்படி மழை கொட்டோ கொட்டு என்று கொட்டுகிறதென்று'. ஏன் என்று கேட்டார்? வள்ளுவன் குறளைச் சொன்னேன், 'நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை' என்று. ரொம்ப நீளமாக இருக்கிறது என்று சிரித்தார். ஏன் உங்கள் ஊரில் மழையே பெய்யாதோ? என்றார். சிரித்தார். அப்படியும்தான், ஆனால் வள்ளுவன் இருந்த காலத்தில் மாதம் மும்மாரி பெய்திருக்குமென்றேன். மழை பெய்யவில்லையெனில் அதற்கு அரசன் பொறுப்பு என்ற நம்பிக்கையும் உண்டு என்றேன். இது சொல்லி ஒரு மாதமாகிவிட்டது. இடையில் சோல் (Seoul) சென்றுவிட்டார். திரும்பிவந்த போது மழை பெய்யக் காத்திருந்தது! லீ என்னைப்பார்த்து, 'நான் திரும்பியிருக்கிறேன்! அதனால்தான் இந்த மழைக்கூட்டமென்றார்!' சிரித்தார். பிடித்துக்கொண்டுவிட்டது சங்ககால நம்பிக்கை! வள்ளுவன் இப்படி ஒவ்வொருவரும் நம்பவேண்டுமென்றே அப்படிச் சொல்லியிருக்கலாம். மனித அகப்பாடு (ஈகோ) அறியாதவரா வள்ளுவர்!

0 பின்னூட்டங்கள்: