கொரியக்குழந்தைகளும், இந்தியப் பெரிசுகளும்!
இன்னும் ஒருமுறை எழுதுவிட்டு, மீண்டும் இந்த மார்க்கெட்டுக்குப் போற கதையைச் சொல்ல மாட்டேன் - பிராமிஸ்! இன்று 'துங்யோங்" என்ற இடத்திற்குப் போனோம். இது கொரியன் தீபகற்பம் கோஜே தீவுடன் சேருமிடத்திலுள்ளது. வழக்கம் போல் வாரக்கடைசி ஷாப்பிங். இந்த ஊரிலும் பாட்டிகள்தான் கடையைக் கவனிக்கிறார்கள். டாக்டர் ஹாங் என்னும் சக விஞ்ஞானியிடம் இது பற்றிச் சொன்னேன். அவள் கிழவிகளுக்கு தோல் சுருங்கியவுடன் வெக்கம் போய்விடுமென்றாள். நம்மவூருக்கும் இது பொருந்தும். கிராமத்து நாடகங்கள் தனி. பள்ளி செல்லும் காலங்களில் ரைஸ்மில் சந்து வழியாகத்தான் போக வேண்டும். சந்து என்பதெல்லாம் கிராமத்தில் தனிச்சுகம் காணும் இடங்கள். கொஞ்சம் பிரைவசி அங்குதான் இருக்கும். ஒரு பொம்பளை ஒண்ணுக்குப் போய்க்கொண்டு இருந்தாள். உட்கார்ந்து அல்ல. நின்று கொண்டு (சுஜாதா கதை நினைவிற்கு வந்தால் நான் பொறுப்பல்ல). அது எப்படி முடியுமென்று கேட்டால் திருப்புவனம் சென்று பார்க்க என்பதே பதில். எங்களுக்குப் பள்ளி செல்லும் அவசரம். சிறுபிள்ளைகளை இப்பொம்பிளை ஆளுங்க கண்டு கொள்வதில்லை. [இதற்கு ரொம்ப நான்-வெஜிடேரியன் கதை ஒன்று உண்டு. என் தந்தை சொன்னது. அது இப்போது வேண்டாம்]. ஆனால் ஒரு பெரிசு அப்போது வந்து விட்டது. அதற்கு போவதா? வேண்டாமா? என்று சங்கடம். கடந்து போயாக வேண்டும். அவர் கடுப்பை சொல்லிக் கொண்டே கடந்து போனார். பாவம்! இந்த பொம்பிளை பாதி சுகத்தில் (I mean half relieved!) இருந்தாள்! நிறுத்த முடியவில்லை. சும்மா போய் கொண்டிருந்திருக்கலாம். ஆனால் இந்தக் கிராமத்து பொம்பிளைகளுக்கு வாய் ஜாஸ்தி. பதிலுக்கு பதில் சொல்லவிடில் தூக்கம் வராது. எனவே அவளும் திரும்ப அந்தப் பெரிசு கேட்கும் படி "ஆத்திரத்தை அடக்கினாலும்....திரத்தை அடக்கமுடியாதுன்னு தெரியாதாக்கும் இவருக்கு" என்று ஒரு போடு போட்டாள். ஆக தோல் சுருங்கி விட்டால் வெட்கம் போய்விடும் என்பது உண்மைதான். ஆனால். அந்த மாதிரியெல்லாம் இங்கு நடக்கவில்லை. பாட்டிமார்கள் காலை நீட்டிக் கொண்டு காய்கறி விற்பதும், நாம் அந்தப் பெரிசுகளிடம் பேரம் பேசி காய்கறி வாங்குவதும் பெரிய சுகம்தான். இதை 13 வருடங்களாக இழந்திருப்பது அப்போதுதான் தெரிந்தது. ஜெர்மனியில் பேரம் என்ற பேச்சிற்கெ இடமில்லை. சிரிப்பு என்பதற்கும்தான். எவனாவது இத்தாலியன், துருக்கிக்காரனென்றால் அங்கு சிரிப்பு இருக்கும். பாட்டிகளுக்கு ஜப்பானிஸ் தெரியும். எனக்கும் கொஞ்சம் தெரியும். எனவே சமாளித்தேன். கூட வந்த இரண்டு வியட்நாம் பெண்களுக்கு நான்தான் மொழி பெயர்ப்பு. எல்லாக் கீரைவகைகளையும் சுத்தமாக கழுவி விற்கிறார்கள். ஆனால், உருளைக் கிழங்கு, இஞ்சி, வெங்காயம் இவைகளை மண்ணும் மட்டையுமாக விற்று விடுகிறார்கள். வெள்ளைப்பூண்டை அழகாக உரித்து பையில் போட்டு...சரி விடுங்க..ஊருக்கு ஊர் வித்தியாசம். சாமான் வாங்கும் போது இந்த குட்டிக்குழந்தைகள் நம்மை அப்படியே பார்த்துக் கொண்டு நிற்கும். இதுகளையெல்லாம் பார்த்தால் எனக்கு அப்படியே சாப்பிட்டுவிடணும் போல் தோன்றும். லட்டு, லட்டாய் இருக்கும். அவ்வளவு அழகு. "anyong haseyo" என்று சொன்னால் இந்தக் கன்னுக்குட்டி கழுத்தைத் தூக்கிக்கொண்டு வருவது போல் நம்மிடம் வந்துவிடும். குழந்தையைக் கொஞ்சுவதற்கும் மேலான இன்பம் உலகில் உண்டோ ? பெற்றோரும், கிழவிகளும் அதைக் கண்டு பூரித்துப் போவார்கள். ஜெர்மனியில் வளர்ப்பு நாயிடம் கூட கொஞ்ச முடியாது. அது வேறு வகை. நாம் ஆசியர்கள். இந்தக் கிழவிகள் நம்ம கிழவிகள். இந்தக் குழந்தைகள் நம்ம குழந்தைகள். வாழ்க கொரியா!

0 பின்னூட்டங்கள்: