நாய் பொழைப்பு!

கோஜேத் தீவு அழகான தீவு. அதைச்சுற்றிப்பார்க்கும் போது ஒரு கலையகம் வந்தோம். மிக நேர்த்தியாக 'போன்சாய்' மரங்கள் இருந்தன. அங்கொரு கிளி. பேசும் கிளி. தென் அமெரிக்க வெள்ளைக்கிளி. முதலில் கொத்துமோ என்ற பயமிருந்தாலும் கொஞ்ச நேரத்தில் தோழமையாகிவிட்டோ ம். அது கூண்டின் வழியாக கையை நீட்டி, சாரி, காலை நீட்டி 'கை குலுக்கியது'. விடை கொடுக்க மறுத்து விட்டது. ஒவ்வொருமுறை போகும் போதும், அது ஓலமிடும். பார்க்க பரிதாபமாக இருக்கும். அதன் கொண்டையைக் கோதி விட அனுமதித்தது. நாய் மனிதரிடம் அன்பாகப் பழகும் என்று தெரியும்; ஆனால் ஒரு கிளி இவ்வளவு அன்பாக, மனித நேசத்திற்குத் தவிப்பதை அன்றுதான் கண்டேன். அன்புக்காக ஏங்குவதில் மனிதனுக்கும் மற்றவைக்கும் என்ன பெரிய வேறுபாடு?

நாய் என்றவுடன் ஞாபகம் வருகிறது! இரவெல்லாம் நாய்கள் குலைப்பது தினம் தூக்கத்தைக் கெடுக்கிறது. நம்மவூர் நாய் தெரு நாய் (Definition: கழுத்திலே பெல்ட் இருந்தா வீட்டு நாய்! இல்லைன்னா தெரு நாய்! நாய் வண்டியிலே இழுத்திட்டுப் போயிடுவான் - 'மூன்றாம் பிறை' வசனம்). ஆனால் இந்தவூர் நாய் தெரு நாயல்ல. பின் ஏன் இப்படிப் பிராணன் போக இரவெல்லாம் கத்துகிறது என்று சக விஞ்ஞானி டாக்டர். ஓ விடம் கேட்டேன். அவர் சங்கடத்துடன் சொன்னார் 'கண்ணன்! இங்கு நாயை உண்பவருண்டு' என்று! ஆச்சர்யமாக இருந்தது. சீனர்கள்தான் உண்பார்களென்றிருந்தேன். நாய்க்கு அமானுஷ்ய உணர்வுண்டு என்று சொல்லக் கேள்வி. அதன் மரணம் அதற்குத் தெரிவதால் அப்படிக் கத்துகிறதோ என்னவோ?

நாய்கள் ஓநாய் இனத்திலிருந்து இன மாற்றம் (breeding) செய்யப்பட்டவை. ஒநாயைச் சாப்பிடும் தைர்யம் மனிதனுக்குக் கிடையாது. என்று ஓநாய் மனிதனுடன் சகவாசம் வைத்துக் கொண்டதோ அன்றே அதன் கம்பீரம் போய் விட்டது. வாலையாட்டிக் கொண்டு, 'நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு' என்றாகி விட்டது. இந்த நாய் மாமிசத்தில் என்ன ருசி இருக்கும் என்று கேட்டேன் வியட்நாமியப் பெண்களிடம். சும்மாப் பேச்சுக்குத்தான் கேட்டு வைத்தேன். அவர்கள் சொன்னார்கள் வியட்நாம் ஆண்களில் நாய் மாமிசம் சாப்பிடாதவன் ஆண்மை இல்லாதவனென்று. போச்சுடா! அங்கும் இதுவுண்டா? என்றாகி விட்டது! எங்கள் ஆய்வக காவல்காரன் ஒரு நாய் வளர்க்கிறான். அதன் பெயர் சிந்தான். பார்க்க அழகாக ஓடி, ஓடி வருகிறது! அதற்கென தனிக் கிண்ணம், உணவு எல்லாம் உண்டு.


After wild dogs learned not to bite the hand that fed them, French poodles werenஒt far behind

சிந்தானிடம் நான் தமிழில் பாடினேன், "இரை போடும் மனிதருக்கே இரையாகும் வெள்ளாடே! இதுதான் உலகமிது இதை நம்பி இருந்திடாதே!" என்று. அதற்குத் தமிழ் புரிந்ததோ என்னவோ?

0 பின்னூட்டங்கள்: