சுகப்பெண்!

நான் காய்கறிக் கிழவிகளிடம் பேசுவதை நீங்கள் அறிவீர்கள். அவர்களுக்கு ஜப்பானீஸ் தெரியும். ஏனெனில் கொரியா ஜப்பானின் காலனியாக இருந்திருக்கிறது. நம்மாளுக பட்லர் இங்கிலீஸ் பேசுவது போல! நான் ஜப்பானிய மொழியில் பேசும் போது மிகச் சிலரே பதிலுரைத்தனர் அதே மொழியில். சில கிழவிகள் கஷ்டப்பட்டு ஆங்கிலத்திற்குத் தாவினர். ஜப்பானிஸ் தெரியாதாலோ, நம்மாளுக மாதிரி ஒரு ஆங்கில மோகத்தாலோ அல்ல அது. அவர்களுக்கு அம்மொழி அது தரும் நினைவுகள் பிடிக்கவில்லை! ஏன்?

இரண்டாம் உலகப்போரில் ஜெர்மன் நாட்சிகள் செய்த கொடுமை உலகமறியும். அதைத் தூக்கிச் சாப்பிடும் கொடுமைகளை ஜப்பான் கொரியர்களிடம், சீனர்களிடம், மலேசியரிடம் செய்திருக்கிறது. இதைப்பற்றி நம்மில் பலர் பேசுவதுமில்லை. பல காரணங்களுண்டு. நாம் ஆங்கிலேயன் என்ன சொல்கிறானோ (அதாவது பி.பி.சி) என்ன சொல்கிறதோ, சி.என்.என் என்ன சொல்கிறதோ! அதுதான் உண்மை, அதுதான் உல்கமென்று வாழ்பவர்கள்! ஆங்கிலேயருக்கு இன்றளவும் நாட்சிகளைப் பற்றிப் பேசுவது பிடிக்கும். இந்த ஆங்கிலேயர்கள் நமக்குச் செய்த கொடுமைகளைக் கூட மறந்து கிளிப்பிள்ளை போல் நம்மவர் ஆங்கிலேயன் போல் ஜெர்மானியரைக் குறை சொல்லிப் பேசுவது பல சமயம் எரிச்சலாக வரும். அடுத்து, நம்ம சுபாஷ் சந்திரபோஸ் ஜப்பானியருடன் உறவு வைத்துக் கொண்டதால் நமக்கு ஒரு பாசம் ஜப்பானியரிடம் உண்டு. இதனால் ஜப்பானியர் செய்த கொடுமை உலகமறியாமலே போய்விட்டது.

ஜப்பானியப் பாடத்திட்டத்தில் இரண்டாம் உலக யுத்தம் பற்றிய குறிப்புக் கூடக் கிடையாது. ஆனால் ஜெர்மன் தொலைக்காட்சியில் வாரம் ஒரு படம் போகும் ஹிட்லர் பற்றி. அவர்கள் அடுத்த தலைமுறைக்குச் சொல்லிச் சொல்லித் திருத்துகிறார்கள். ஜப்பானியர் ஊமைக் கொட்டானாக ஒன்றுமே நடக்காதது போல குழந்தைகளை வளர்க்கிறார்கள்!!

கொரியா சீன தேசத்தின் மூக்கு என்று சொல்லலாம். பட்டுப்பாதை பிரபலமாக இருந்த போது, கொரியா ஒரு மிக முக்கியத் துறைமுக நாடு. ஜப்பானுக்கு பௌத்தம் போனது கொரியா வழியாகத்தான். அவர்கள் மொழி போனதும் இங்கிருந்துதான். இன்று கூட கொரிய வம்சத்தைச் சேர்ந்தவர்தான் ஜப்பானிய மன்னர். ஆனால் என்ன இருந்து என்ன பயன். வருபவன், போபவனெல்லாம் கொரியாவை ஆண்டிருக்கிறான். ஏறக்குறைய 900 முறை அது அடிமைப் பட்டிருப்பதாக ஒருவர் என்னிடம் கூறினார். அதிலொன்றுதான் ஜப்பானியரிடம் அடிமை வாழ்வு வாழ்ந்தது! கொரியப் பெண்கள் பார்க்க மிக அழகாக இருப்பார்கள். போதாதோ? ஜப்பானிய போர் வீரர்களுக்கு களிப்பூட்ட கொரிய மாந்தர் களிப்பெண்களாக ஆக்கப்பட்டனர். களித்தல், சுகித்தல், பின் புறக்கணித்தல் என்பவை போர்க்கால நியதி அல்லவோ? நான் பார்த்த கிழவிகள் ஒரு காலத்தில் அழகியாக இருந்திருப்பர். அவர்களில் சிலர் ஜப்பானியரிடம் களிப்பெண்களாக கொங்கையடி பட்டிருப்பர். அந்த சோகம் இப்போது தெரியவில்லையெனினும் அவர்கள் ஜப்பானிய மொழியை புறக்கணிப்பதன் அர்த்தம் புரிகிறது.

ஆகஸ்ட் 15 கொரியா ஜப்பானிடமிருந்து விடுதலை பெற்ற தினம். வாழ்க சுதந்திரம்.

0 பின்னூட்டங்கள்: