இன்று மெயின்லாண்டிலிருக்கும் பூசான் என்ற நகரத்திற்கு கடல் வழியாகப் போய் வந்தேன். கடல் மாலை வெய்யிலில் புனல் நீர் போல் கொஞ்சம் மஞ்சள் கலந்த பச்சையிலிருந்தது. கடல் எப்போதும் பிரம்மிக்க வைக்கும் விஷயம். கடலைத் தரையிலிருந்து பார்த்தாலும், கடலை கடலிலிருந்து பார்த்தாலும் பிரம்மிப்புதான். கடலை "முந்நீர்" என்றனர் நம் முன்னோர். எல்லா நீருக்கும் முந்திய நீர் என்று பொருள்! கொரியாவின் தென்முனை ஏகப்பட்ட தீவுகள் கொண்ட பகுதி. இந்தத்தீவுகளெல்லாம் ஒரு காலத்தில் பெரும் மலைகளாக இருந்திருக்க வேண்டும். கடல் நீர் கொட்டிக் கொட்டி இவைகளை அமுக்கி வைத்திருக்கிறது என்பது அறிவியல் தெரிந்தவருக்கு மட்டுமே புரியும். அதுவும் இந்த ஆச்சர்யத்திற்குக் காரணம். இந்தத் தீவுகளில் பல இன்னும் மக்கள் குடியேறாத தீவுகள்! கடற்பறவைகள் மட்டும் சுதந்திரமாக போய் வருவதைப் பார்த்தால் எனக்குள் ஆசை பெருகிறது. எனக்கும் பறக்கும் திறமையிருந்தால் இத்தீவுக்கூட்டங்களுக்கு மாலை வேளையில் போய் வருவேன். கனவுகளில் அடிக்கடி பறந்து இப்படி சஞ்சாரிப்பேன். ஒருமுறை பறந்து இலங்கையிலுள்ள அனுராதபுரத்திற்குப் போய் வந்தேன் (அது எப்படி கரெக்கெட்டா அனுராதபுரம்ன்னு கேட்கக்கூடாது. புத்த விகாரம் இருந்தது. அதனால்). எனக்கு ஏதோ சம்சயம் எனக்கும் பௌத்ததிற்கும் ஏதோ தொடர்பு இருக்கிறது. இன்று ஒரு புராதண புத்தர் கோயிலுக்கும் போனேன். அது பற்றி அடுத்த மடலில், படங்களுடன்.

0 பின்னூட்டங்கள்: