தூர கிழக்கில் பௌத்தம்!

அப்போது நான் ஜப்பானில் வாழ்ந்து வந்த சமயம். என் குழந்தை பிரசவத்திற்கு என் மாமியார் வந்திருந்தார். அவர் "மறந்தும் புறம் தொழா" வைஷ்ணவர். பாவம் வயதான காலத்தில் பல ஆயிரம் மைல்கள் கடந்து வந்திருக்கிறார், வந்தவருக்கு ஆறுதலாக இருக்கட்டுமே என்று, "பெருமாள் கோயிலொன்று இருக்கிறது, வருகிறீர்களா? என்று கேட்டேன். முகம் மலர்ந்து உடனே வந்து விட்டார். அருகிலிருக்கும் புத்தர் ஆலயத்திற்கு அழைத்துப் போனேன். "அண்டர்கோன் அணியரங்கன்! - என் அமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாதே!" என்று சொல்லுமாற்போல அவரது கண்கள் அணியரங்கனை அங்கு தேடிக்கொண்டிருந்தன. ஆனால் சாமவேதம் ஓதுவது போல் புத்த பிட்சுக்கள் பௌத்த மந்திரம் ஓதிக்கொண்டிருந்தனர். 10 அவதாரத்தில் இவரும் ஒருவர்தானே! என்று சமாதானம் செய்து பார்த்தேன். புத்தரை ஒரு அவதாரமாக ஆழ்வார்களும் ஏற்றுக் கொள்ளவில்லை, ஆச்சார்யர்களும் ஏற்றுக்கொள்ளவில்லை. என் மாமியாரும் ஏற்றுக் கொள்ளவில்லை!!


கொரியக் கலைஞர்கள் ஜப்பான் நாரா-நகரில் அமைத்த மாபெரும் புத்தர் கோயில்


பௌத்தம் தழைத்திருந்த நாடுகளுக்கெல்லாம் 17ம் நூற்றாண்டு தொடக்கம் கிறிஸ்தவம் வர ஆரம்பித்தது. இன்று கொரியாவில் எங்கு திரும்பினாலும் கிறிஸ்தவ தேவாலயங்களே! அவை ஊருக்கு நடுவே இருக்கின்றன. புத்தர் கோயில்கள் ஊருக்கு புறத்தே மலையில் இருக்கின்றன. 21ம் நூற்றாண்டிலிலேயே அடர்ந்த காடுகளுக்கிடையில் இருக்கும் இக்கோயில்களுக்கு போவது கடினமாக இருக்கிறது...(சபரிமலை மாதிரி என்று வைத்துக்கொள்ளுங்கள்) 17ம் நூற்றாண்டைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். துறவு என்பதை முக்கியக் குறிக்கோளாக பௌத்தம் வலியுறுத்துவதை இன்று கூடக் காணமுடிகிறது. இல்லறம், துறவறம் என்பதைப் பற்றி நம்மவர் ஏன் கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே பேசத் தொடங்கிவிட்டனர் என்று இப்போது புரிகிறது! சமயங்கள் குடும்பஸ்தனுக்கு அருகாமையில் இருக்கவேண்டும். மனது கஷ்ட்டப்படும் போது கோயிலுக்கு போகக்கூடியதாய் இருக்க வேண்டும். சுவாமி, மலையில் போய் உட்கார்ந்து கொண்டால் பக்தன் என்ன செய்வான்? பௌத்த, சமண மதங்களுக்கு எதிரான போரில் ஆழ்வார்களும், நாயன்மார்களும் இதை முன்னிறுத்தி வென்றும் இருக்கின்றனர். வெங்கடேச சுப்ரபாதம் நாரணனை 'லோக பந்து' என்கிறது. இவன் உலகத்திற்கு நண்பன். அவர்களை விட்டு விலகிப் போவதில்லை. அவர்கள் அருகாமையில் இருப்பவன். திருநெல்வேலிச் சீமையிலிருக்கும் பெருமாள் கோயில்களெல்லாம் வயல்காட்டின் நடுவே அமைந்திருக்கின்றன. வயலில் உழைப்பவன் கோயிலுக்கென்று வேறெங்கும் போக வேண்டாம். குளித்து, அப்படியே ஒரு கும்பிடு போட்டால் போதும். (இந்தக் கும்பிடு போடுவது பற்றி அடுத்ததில்!)


நாரா புத்த பெருமான். இவரது மூக்கு ஓட்டைக்குள் ஒரு மனிதன் நுழைந்து வரும் அளவு மிகப்பெரிய சிலை


லௌகீக வாழ்விற்கு இந்த அருகாமை மிகவும் முக்கியம். ஆனால் தூர கிழக்குவரை தனது தத்துவ வலிமை ஒன்றை மட்டும் பலமாகக் கொண்டு பரவிய பௌத்தம் 'மெலிந்து' கிடக்கிறது. நட்பு, தோழமை, ஒரு கிளப் மனப்பான்மை இவைகளை நடைமுறையில் கொண்டுள்ள இஸ்லாம், கிறிஸ்தவம் - மலேசியா, இந்தோனிசியா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் பௌத்தத்தை வென்று விட்டது. அடுத்துக் கொரியா என்று தோன்றுகிறது!

அரசுகள் பௌத்தத்தை ஆதரித்தவரை பௌத்தம் வளர்ந்தது. இன்று அரசு ஆதரவு இல்லாத நிலையில் அது வழக்கொழிய ஆரம்பித்துள்ளது. இந்தியச் சமயங்கள் 'நிறுவனப்படுத்துதலை' (institutionalizing Truth) என்றும் ஏற்றுக் கொண்டதில்லை. எனவே அங்கு ஒரு 'போப்பாண்டவர்' 'இமாம்' இல்லை. அதனால் சமயங்கள் தழைக்க அரசு ஆதரவை அவை நம்பியிருந்தன. ஆனால் இஸ்லாம், கிறிஸ்தவம் என்பவை இறுக்கமான கட்டமைப்பு கொண்ட சமயங்கள். அரசு ஆதரவின்றியே அவை தன் காலில் நிற்கக்கூடியவை! அடுத்த நூற்றாண்டின் சமயமாக கிறிஸ்தவமே இருக்கும் என்று தோன்றுகிறது! அதனுடைய பிரச்சார வலிமை பௌத்தத்திற்கும், பிற இந்தியச் சமயங்களுக்கும் இல்லை. காலம் மாறி வருகிறது. இதைக் கணக்கில் கொள்ள வேண்டியுள்ளது.

0 பின்னூட்டங்கள்: