பேசாமல் இங்கேயே இருந்திடலாம் போலிருக்கு!


கொரியா வந்து இரண்டு மாதமாகிவிட்டது! மூன்று மாதத்திற்குள் 'அந்நியப்பதிவு' செய்துகொள்ளவேண்டும். இன்று அதற்காக மொழிபெயர்ப்புத் துணையுடன் போனோம். அது சின்ன அலுவலகம். கொஞ்சம்தான் சிப்பந்திகள். என்னுடன் வந்தவர் மட, மடவென வந்த விவரத்தைச் சொன்னார். ஆண் அதிகாரி வாயைத் திறப்பதற்குள், அரை நிர்வாணமாயிருந்த குழந்தைக்கு ஏதோ செய்து கொண்டிருந்த பெண் பதில் சொன்னார். பெரும்பாலான கொரியப் பெண்கள் போல் இவரும் அழகாக இருந்தார். அது முக்கியமல்ல :-) ஆனால், அலுவலக நேரத்தில், ஒரு சிப்பந்தி குழந்தையை, அதுவும் அலுவலகத்தில் கவனிக்கலாமோ? No Problem! Koreans are cool about it! பாங்கிற்குப் போனால் வந்த காரியம் என்னவென்று சொல்வதற்குள் ஒரு பெண் காப்பி கொண்டு வந்து தருகிறாள். இந்த அலுவலகத்திலும் இலவசக் காப்பி இருந்தது. வந்தவர்கள் மேலும் பேசிக் கொண்டிருக்கும் போது பெண் சிப்பந்தி வெளியே வந்தார் குழந்தையுடன். நமக்குத்தான் குழந்தை என்றாலே ஒரு ஈர்ப்பு உண்டே. குழந்தையிடம் போனேன். தாய் வணக்கம் கூறச் சொன்னாள். அக்குழந்தை மழலையில் ஏதோ சொன்னது. இந்த இன்பமெல்லாம் எங்கே தொலைந்தது நாகரிகம் மிக அடைந்த வெள்ளையர் உலகில்? Koreans are simply cool and natural! ஒரு காலத்தில் இந்தியாவும் இப்படி இருந்தது. இதுவே ஜப்பானாக இருந்தால் அவர்கள் பண்ணுகிற ஜபர்தார்! My God! ஜெர்மனைப் பார்த்து ஈயடிச்சான் காப்பி! கொரிய மக்கள் ரொம்ப வித்தியாசமானவர்களாக இருக்கிறார்கள். நேற்று தொங்யோங்க் போன போது ஒரு பேக்கரியில் சும்மா ஒரு டாலருக்கும் குறைவான சாமான்தான் வாங்கினேன். அந்தச் சின்ன வியாபாரத்தைக் கூட மிகப்பதிவுசாக, அன்புடன் செய்கின்றனர். அங்கும் ஒரு கைக்குழந்தை :-) இங்கு சம்பளம் அமெரிக்கா போல் இல்லாமல் இருக்கலாம். ஜெர்மனி போன்ற துப்புரவான நகரமைப்பு இல்லாமல் இருக்கலாம். ஆனால் மக்களிடம் இன்னும் வெகுளித்தனம் இருக்கிறது. அன்பு இருக்கிறது. மனித வாழ்விற்கு அடிப்படையான இதைத் தொலைத்து விட்டு வாழ்கைத்தரம் உயர்ந்திருக்கிறது எங்கள் நாட்டில் என்று யாராவது சொன்னால் நம்பாதீர்கள்!

கடைசியாக நேற்று காய்கறிக்காரக் கிழவியை போட்டோ எடுத்து விட்டேன். ரொம்பக் கூச்சப்பட்டு எழுந்தே விட்டார். ஆனாலும் கேமிரா விடவில்லை!

வாழ்க கொரியா!

0 பின்னூட்டங்கள்: