மடலாடல் மஞ்சரி

புதிதாக அறிமுகமாகியிருக்கும் Weblog என்னும் நுட்பத்திற்கு பல பயன்கள் உண்டு. இதற்கான நாமகரணம் ஆகிவிட்டது. பெயர்த்தேர்வு ஆகவில்லை. இரமணிதரன்: வலைப்பதிவு; நா.கணேசன்: வலைச்சுவடு; மாலன்: "இணையப்பட்டி, இணைப்பதிவு, இணை-வரிசை (அலைவரிசை போல) அல்லது அதன் பயன்பாட்டுத் தன்மையைக் கருதி சிற்றிணை, அல்லது இணைக்குறிப்பு, குறிப்பிணை இப்படி அமையலாமா?"; சுரதா: குடில்; மணிவண்ணன்: வலைப்பூ. கடைசி இரண்டிலும் கவித்துவம் முன் நிற்கிறது.

இதைப் பயன்படுத்திய பின் இன்னும் சில பெயர்களை முன் வைக்கத் தோன்றுகிறது. கலைக்கதிர் என்பது ஒரு அறிவியல் பத்திரிக்கை. அதுபோல் இதை 'வலைக்கதிர்' எனலாம். கதிர் பல்கிப் பெருகி ஒளி வீசுவது போல், சிந்தனை ஒளிவீசும் தளமிது. தொகைப் படுத்துதலும் இதன் முக்கிய வேலை, எனவே 'வலைத்தொகை' என்றும் சொல்லலாம். இராம.கி என்ன சொல்லியுள்ளார் என்று தெரியவில்லை. நான் வலைப்பூ என்பதைப் பயன்படுத்துவதற்கான காரணங்களை முன்பு உயிரெழுத்தில் எழுதினேன், "பயன்பாட்டாளன் என்றளவில் ஏதாவதொரு சொல்லைப் பயன்படுத்த வேண்டியது அவசியம். நிற்கும் சொல் வென்றது என்று பொருள்'.

இந்த வலைத்தொகை இப்போது ஒரு காரியம் செய்யலாம்! எத்தனையோ மடலாடற்குழுக்கள் தமிழில் வந்து விட்டன. எல்லோருக்கும் எல்லாவற்றையும் வாசிக்கும் நேரமிருப்பதில்லை. Reader's Digest மாதிரி ஒரு "வலைமஞ்சரி" (இதுவே கூட Weblog என்பதற்கு இணையான சொல்லாகலாம்) -யை உருவாகலாம். இது எவ்வளவோ பயனுள்ளதாக இருக்கும். நானும், ஹவாய் மதியும் பல புதிய பயன்களைக் கண்டுள்ளோம். ஒவ்வொன்றாய் இங்கு சொல்லுவோம். இதற்கிடையில் இந்த 'வலை மஞ்சரி'யை முன்னிருந்து நடத்த ஆர்வமும், நேரமும், கொஞ்சம் கலா ரசனையும், முடிந்தால் editorial அனுபவமும் உள்ளவர்கள் வந்தால் இதைத் தமிழ் மரபு அறக்கட்டளையின் ஒரு செயல்திட்டமாக நாம் நடத்தலாம். வலைத்தொகை அமைப்பிற்கு எங்களாலான் உதவிகளைச் செய்ய முடியும்.

0 பின்னூட்டங்கள்: