உலகின் ஜனத்தொகையில் 5ல் ஒருவர் சீனர், ஏழில் ஒருவர் இந்தியராக இருக்க வேண்டும். வேகமாகச் சுருங்கிவரும் உலகில் இதைக் காணக் கூடியதாகவே உள்ளது. முதல் முறையாக ஞாயிற்றுக் கிழமை சில இந்தியர்களைச் சந்தித்தேன். அறிமுகப்படுத்தியவர் மோகன் ஜித் அலுவாலியா என்ற பஞ்சாபி மராட்டியர் (சீக்கியர்). அவர் மனைவி ஜம்மு மானிலத்தைச் சேர்ந்தவர். அன்று சந்திப்பில் ஒரிசாவிலிருந்து ஒரு இணை (couple), மகராஷ்டிராவிலிருந்து ஒரு இணை, கல்யாணமாகாத கேரள தேசத்து அனுப் சதாசிவன், கல்யாணமாகியும் பிரம்மச்சாரியான தமிழ்நாட்டு நான். ஆக வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என்று முழு இந்தியா இருந்தது அன்று. பாகிஸ்தான் இல்லை. இருந்திருந்தால் அகண்ட இந்தியாவாக இருந்திருக்கும் (நக்கல் என்னுடையது :-)

எல்லோரும் சாம்சுங் கப்பல் கம்பெனியில் வேலை செய்யும் இந்தியர்கள். சாம்சுங், தவூ இவை உலகின் ஆகப்பெரிய கப்பல் நிர்மாணத்தளங்களை எங்கள் கோஜேத் தீவில் அமைத்துள்ளன. இந்திய மூளைகள் ஐ.ஐ.டியை விட்டு வெளி வாசல் தாண்டும் முன் வேட்டையாடப்படுவதில் புதிதாகச் சேர்ந்திருக்கும் நாடு கொரியா. கொரியா மட, மடவென முன்னேறிவிடும். இந்தியர்களுக்கு நல்ல ராசியுண்டு. எல்லோரும் குருவிக்கூடு வீட்டில் இந்திய நினைவாக அரட்டை, தொலைபேசி என்று வாழ்கிறார்கள். சாம்சுங் இவர்களது NRI கணக்கில் டாலரில் சம்பளத்தை அனுப்பிவிடுகிறது. ஒருமுறை குடும்பத்துடன் இந்தியா போய்வர விமான டிக்கெட்டும் கொடுத்துவிடுகிறது.

இரவு எனது ஆய்வகம் திரும்பும் போது பல ஸ்ரீலங்கன் இளைஞர்கள் குந்தியிருந்தார்கள். சிங்களவர். 500 டாலர் சம்பளத்தில் வேலை பார்க்கும் நீலக்காலர் சிப்பந்திகள்.

கொரியா புதிய வளைகுடாவாக இந்தியர்களுக்கு தெரிய ஆரம்பித்திருக்கிறது! மொழியும், சாப்பாடும் மிகவும் அந்நியமாக இருந்தாலும்!

0 பின்னூட்டங்கள்: