தமிழின் மூத்த இலக்கியவாதிகளில் ஒருவரான சிட்டி சுந்தரராஜன் தனது இலக்கிய நினைவுகளை உயிர்ப்பூவில் பதிய முன் வந்துள்ளார். முதுசொம் இலக்கியக் கூடம் இதை நினைத்து மிகவும் பெருமைப் படுகிறது! அவரது மருமகனும், தமிழ் உலகில் பிரபலமான எழுத்தாளருமான திரு.நரசய்யா அவர்கள் சிட்டியின் நினைவுகளைத் தொகுத்துத்தர முன் வந்துள்ளார். சிட்டி அவர்கள் 'செஞ்சுரி' அடிக்கக் காத்திருக்கும் இலக்கிய ஜாம்பவான். அவரது படத்திலுள்ள புன்னகை காலம் அவரைப் பழுதாக்கவில்லை என்று காட்டுகிறது! நான் அவரைச் சென்னையில் சந்தித்த போது மிகவும் குதூகலத்துடன் இருந்தார். நகைச்சுவை அவருடன் கூடப் பிறந்த சுபாவம். எனவே பொழுது மிக இனிமையாகப் போனது. அவர் சொல்லப் போகும் கதைகள் தமிழ் இலக்கிய உலகிற்கும், தமிழைப் புதிதாக அறிந்து கொள்பவர்க்கும், பிற மொழி எழுத்தாளர்களுக்கும் பயனுள்ளதாக அமையும் என்று எதிர்பார்க்கிறேன். சிட்டி அவர்கள் ஒரு குழந்தையின் ஆர்வத்துடன் இம்முயற்சியில் இறங்கியிருப்பதாக திரு.நரசய்யா எழுதுகிறார். "தன் கதை" சொல்லும் ஆர்வமல்ல அதற்குக் காரணம். 'வானம் வசப்படும்' என்ற பாரதியின் வசனம் உண்மையாவதைக் கண்டுதான் அந்தக் குதூகலம்! தமிழ்ச் சிறுகதை வளர்ச்சி, தமிழ் நாவல் வரலாறு என்று தமிழின் இலக்கியப் பெருமையைச் சொன்னவர் சிட்டி. இவர் தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளிலும் புலமை வாய்ந்தவர். தெலுங்கு தேசம் தமிழுக்குத் தந்த கொடை சிட்டி என்று எழுதுகிறார் இலக்கிய விமர்சகர் லக்ஷ்மி கண்ணன்.

மணிக்கொடி எழுத்தாளர் சிட்டி சுந்தரராஜனை ஆர்வமுடன் வரவேற்போம். சுட்டியை உலவியில் பதித்துக் கொள்ளுங்கள்!


UyirppU - Tamil Heritage is yoU & yoU

Chitti recollects...


0 பின்னூட்டங்கள்: