நானும் வந்த நாளிலிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன், இங்கு ஏன் இவ்வளவு மழை பொழிகிறது என்று! இன்று உச்சக் களியாட்டம்! புயல்!! பசிபிக் மகாசமுத்திரத்திலிருந்து புறப்பட்டு கரையைத் தாக்குகிறது. மின்சாரம் எந்த நேரமும் போகலாம். இந்த ஊழிக் கூத்தின் மத்தியில் உங்களுக்கு இம்மமடலை எழுதுகிறேன். கதவை நன்றாக சாத்திக் கொண்டு, இணைய வானொலியின் சத்தத்தைக் கூட்டி வைத்துக் கொண்டு...இருந்தாலும் காது கிழியும் சத்தம் வெளியே! மிக அருகே மூங்கில் காடு. சாதாரணமாகவே வேய்குழல் ஊதும் இக்காடுகள் ஆனால் இன்று பேய்காற்று வேறு! ஒரே கூச்சல்! கூரை பிய்த்துக் கொண்டு போய் விடும் போல..செப்டம்பர் 11 பாரதி நினைவு தினம். பாரதி பாதி பயத்திலும், பாதி உற்சாகக் களியாட்டத்திலும் புயல் பற்றிப் பாடும் பாடலைப் பார்ப்போம்...

கார்த்திகை 8 தேதி, புதன் கிழமை இரவு, 1916-17? எழுதியது!

மனைவி:
காற்றடிக்குது, கடல்குமுறுது
கண்ணை விழிப்பாய் நாயகனே!
தூற்றல் கதவு சாளரமெல்லாம்
தொளைத்தடிக்குது, பள்ளியிலே.

கணவன்:
வானம் சினந்தது; வையம் நடுங்குது;
வாழி பராசக்தி காத்திடவே!
தீனக் குழந்தைகள் துன்பப்படாதிங்கு
தேவி அருள்செய்ய வேண்டுகின்றோம்.

மனைவி:
நேற்றிருந்தோம் அந்த வீட்டினிலே, இந்த
நேரமிருந்தால் என்படுவோம்?
காற்றென வந்தது கூற்றமிங்கே, நம்மைக்
காத்தது தெய்வ வலிமை யன்றோ!


மழை!

திக்குகள் எட்டும் சிதறி-தக்கத்
தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட
பக்க மலைகள் உடைந்து-வெள்ளம்
பாயுது பாயுது பாயுது-தாம்தரிகிட
தக்கத் ததிங்கிடத்தோம்-அண்டம்
சாயுது சாயுது சாயுது-பேய்கொண்டு
தக்கை யடிக்குது காற்று-தக்கத்
தாம்தரிகிடத்தாம்தரிகிடதாம்தரிகிடதாம்தரிகிட!


பாரதி நாமம் வாழ்க!

0 பின்னூட்டங்கள்: