இன்று காலையில் ஜன்னல் வழியாக வெளியே பார்த்தால் "இந்தப் பூனையும் பால் குடிக்குமோ!" என்று சொல்லும் வண்ணம் இயற்கை மிகத்தெளிவாக இருந்தது. இதே இயற்கைதான் இரவில் அப்படியொரு ஊழிக்கூத்து நடத்தியது என்று இந்தப் போட்டோ வைப் பார்ப்பவர் சொல்லமாட்டார்கள்.

Mood மாறிக்கொண்டே இருப்பதால் பெண்ணையும் இயற்கையையும் ஒப்பிடும் பழக்கமுண்டு. ஆங்கிலப்பெண்கள் மாதிரியே லண்டன் weather இருக்கும்..அழுது வழிந்து கொண்டு :-)

நேற்று இரவு கொஞ்சம் பயமுறுத்திவிட்டது. இரவில் தெளிவிருப்பதில்லை. அதுவே மனித பயத்திற்குக் காரணம். அத்தோடு புயல் சேர்ந்தால் நிரம்ப பயப்பட வேண்டியுள்ளது. கோடைப்புயல் என்பது இங்கு வழக்கம்தான் - இங்கிருப்பவர்களுக்கு :-) ஆனால் நமக்கு?

பூமியில் பருவகாலம் தோன்றுவதற்கு பூமிச் சுழற்சியில் உள்ள கோளாறுதான் காரணம் என்று அறிவியலார் சொல்கின்றனர். நொண்டிக்காலன் போல் பூமி அவ்வப்போது நொண்டுமாம். அதுதான் இந்த பருவ மாற்றங்களுக்குக் காரணமாம். பூமி சீறும் போது மனித உயிர் என்பது அல்பமானது. பிரபஞ்சத்திலுள்ள பெரிய நட்சத்திரங்களை ஒப்பு நோக்கும்போது சூரியன் ஒரு மூன்றாம்தர நட்சத்திரம். அதிலுள்ள பூமி ஒரு சின்ன சுண்டைக்காய். ஆனால் இந்த சுண்டைக்காய் படுத்தும் போது சிற்றெறும்பான மனிதன் ஆடிப்போகிறான். ஆனால் இந்த பிரம்மாண்டங்களையெல்லாம் சட்டை செய்யாமல் மனித மனம் அது பாட்டுக்கு ஆடுகிறது! ஏதோ இதுதான் அனைத்திற்கும் மூலம் என்பது போல்!!

ஐந்து நாள் விடுமுறை என்பது இங்கு பெரிய விஷயம். இவர்கள் சிற்றெறும்புக் கூட்டம். உழைத்துக் கொண்டே இருப்பவர்கள். ஆனால் அமெரிக்கர்கள் புகுந்த பிறகு விடுமுறையை அனுபவிக்க வேண்டுமென்ற ஒரு புதுப்பழக்கம் அறிமுகமாகியிருக்கிறது. ரோடு நிரம்பி வழிகிறது. ஆனால் எல்லார் ஆசையிலும் மண்ணைப் போட்டுவிட்டது இக்கோடைப்புயல். தெருவெல்லாம் மண்ணும், தூசும்தான்!

0 பின்னூட்டங்கள்: