மேமி என்றால் கொரியன் மொழியில் சில்லு வண்டு என்று பொருளாம். நேற்று கற்றுக் கொண்டேன். ஒரு சில்லு வண்டு செய்த பாதகம் நம்பமுடியாமலே உள்ளது. ஞாயிறன்று நண்பர் டாக்டர்.லீ அவர்களுடன் ஒக்போ என்ற இடத்திற்குச் சென்றோம். புயல் ஓய்ந்த இரண்டாம் நாள். இன்னும் தண்ணீரும், மின்சாரமும் வரவில்லை. எனவே பலர் இத்தீவின் இங்கும் அங்கும் அலைந்து கொண்டிருந்தனர். எனக்கு கோஜேத்தீவின் மறுபக்கமான ஒக்போ சென்று புயலின் வீச்சைக் காண வேண்டுமென்று ஆசை. நண்பர் லீக்கு தனது குடும்பத்தினருக்கு வெற்றி ஸ்தம்பத்தைக் காட்டவேண்டுமென்று ஆசை. எனவே எல்லோரும் கிளம்பினோம்.


20,000 டன் எடையுள்ள ராட்சசக் கப்பலை தரையில் கிடாசியிருக்கும் காட்சி


வெற்றி ஸ்தம்பம் 16ம் நூற்றாண்டில் ஜப்பானியரின் ஆக்கிரமிப்பை வெற்றிகரமாக எதிர்த்த கோஜேத்தீவின் வீரன் ஜெனரல் லீ சுன் சின் அவர்களின் பராக்கிரமத்தைக் கொண்டாடும் விதத்தில் அமைக்கப்பட்டது. அதுவொரு குன்றில் உள்ளது. அங்கு சென்ற போதுதான் தெரிந்தது அந்த ஸ்தம்பத்தில் பதிக்கப்பட்டிருந்த வெற்றிச் சேதிகளைத் தாங்கும் கருங்கல்லை மேமி பேர்த்து எடுத்து உடைத்திருப்பது! அழகான மரமொன்று உடைந்து கிடந்தது!


கோபுரத்தில் பதிக்கப்பட்ட கிரானைட் கல்லை பேர்த்து எடுத்து, உடைத்திருக்கும் காட்சி


மணிக்கு சுமார் 240 கி.மீ வேகத்தில் காற்று அடித்திருக்கிறது. மணிக்கு 72 கி.மீ வேகத்தை தாண்டும் போது நடக்கும் மனிதன் வீசியெறியப்படுவான். மேமியின் வேகம் இதைப்போல் மூன்று மடங்கு. எனவே கல்லைப் பிடுங்குதல் ஒரு பெரிய காரியமில்லை. குன்றிலிருந்து பார்த்த போது இரண்டு பெரிய கப்பல்கள் தரைக்கு மிக அருகாமையில் இருப்பது தெரிந்தது. நிறைய மக்கள் அங்கு சென்ற வண்ணமிருந்தனர். அது பொது மக்களுக்கு அனுமதி மறுக்கப்படும் ஏரியா. தாவு கம்பெனியின் கப்பல் கட்டும் தளம்.


அருகில் சென்ற போதுதான் தெரிந்தது ஒன்றல்ல, இரண்டு கப்பல்கள் தரை தட்டியிருப்பது!


கப்பல்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருப்பதாகவே முதலில் நினைத்தோம். ஆனால் அருகில் சென்ற போதுதான் அவை தரை தட்டிக் கிடப்பது புரிந்தது. சுமார் 20,000 டன் எடையுள்ள நங்கூரம் பாய்ச்சிய கப்பலை நகர்த்தி கொண்டுவந்து தரைதட்ட வைத்திருக்கிறது என்றால் மேமியின் பலம் எவ்வளவு? வீட்டில் மின்விசிறி ஓடாத நேரத்தில் மக்கள் இத்தரை தட்டிய கப்பலின் நிழலில் படுத்து சுகம் கண்டது சிரிப்பாக இருந்தது. வாழ்வின் நிலையின்மையில் இப்படி நொடிச் சுகம் காணுதலே நிரந்தரம் என்பது நிதர்சனமானது!

மேமியின் அழிவிற்குப் பின்னால் சில நகைச்சுவையும் உண்டு. செஸ்ட் நட் என்று சொல்லக்கூடிய கொட்டைகள் உலுப்பி எடுத்து வெளியே வீசப்பட்டதால், பலர் அதைப் பொறுக்கிச் சுட்டு சுகம் கண்டனர். எங்கிருந்தோ ஒரு பெரிய பூசணி எங்கள் ஆய்வகம் வந்தது. உண்டு சுகம் காண்கிறோம். புயலுக்கு அடுத்த நாள் வழக்கம் போல் காலையில் கூவும் பறவையின் ஓசை என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. இத்தனை புயலுக்கும் நடுவே அப்பறவை ஜோடிகள் உயிர் தப்பிப் பிழைத்திருக்கின்றன. கல்லுக் கட்டிடம் உடைந்து கிடக்கும் போது மரத்துக் கிளையில் உயிர்வாழும் பறவை தப்பியது எப்படி? அறிவு, ஞானம் என்பது மனிதனுக்கு மட்டும் சொந்தம் என்பது எவ்வளவு பேதமை? உயிர்வாழும் திறன். சோதனையை எதிர் கொள்ளும் திறன் எறும்பிலிருந்து மனிதன் வரைக்கும் ஒன்றாகவே அமைக்கப்பட்டுள்ளது. கருங்கல் தேரைக்கும், கருப்பை உயிர்க்கும் உற்ற தோழனாக ஒருவன் இருப்பது அப்போது புரிந்தது.

அடுத்த மடலில் ஒரு சின்ன வீடியோ காட்சி தருகிறேன்!

0 பின்னூட்டங்கள்: