விடலைத் தவிப்பு!

ஜெர்மனி தாய் வீடாகி விட்டது. இதை எப்போதாவதுதான் உணர முடிகிறது! இன்று உணர்ந்தேன். ஒரு வேடிக்கையான அநுபவத்தில்!

ஒரே புயல், அடை மழை. இதை எழுதும் போது கூட மழையின் வீச்சு வெளியே! தொலைக்காட்சி சில மணி நேரம் பழுதாகிவிட்டது. எனவே மடிக்கணினியில் சோல் நகரில் வாங்கிய Ants in the Pants என்ற படத்தைப் போட்டுப் பார்த்தேன். அது ஒரு விடலைப் பருவத்துக் கதை. வெளியே பார்த்தவுடன் அது அமெரிக்கன் காமெடி என்று வாங்கி வந்தேன். பாதி படத்தில் புரிந்து கொண்டேன் அதுவொரு ஜெர்மன் படமென்று (எழுத்து காட்டிக் கொடுத்துவிடும்!). ஆனால் இத்தாலியில் நடப்பதாக எடுக்கப்பட்டிருக்கிறது. ஜெர்மானியர்களும் ஆசியர்கள் போல் 50 களில் கூட கட்டுபெட்டியாகத்தான் இருந்திருக்கின்றனர். ஆனால், போருக்குப்பின்னான விடுதலையில் உடல் சார்ந்த விடுதலையும் கிடைத்துவிட்டது. அங்கு போர்னோகிராஃபி என்பது தடையான விஷயமில்லை. இரவு 10 மணிக்கு மேல் தாராளமாக நீலப்படங்கள் பார்க்கலாம். ஆனாலும் அதிலொரு தார்மீகம் வைத்திருக்கிறார்கள். அதாவது பெண்ணின் மார்பு தாராளமாகக் காட்டப்படும். அதே போல் ஆணின் பின்புறம் காட்டப்படும். ஆனால் ஆணின் ஆண்குறி hotcore pornography-ல் மட்டுமே காட்டப்படும். இது பெண்பாலுக்கும் பொருந்தும். மற்றபடி நம்ம சினிமா செய்வது போல் suggestive-வாக எல்லா விஷயமும் காட்டப்படும்!

ஆனால் அந்தத் தரத்தில் வைத்துப் பார்த்தால் இந்தப்படம் ரொம்ப mild. பாலியல் உணர்வு பொங்கும் வயதில் இருக்கும் பள்ளி மாணவனின் அவஸ்தையைக் காட்டும் படம். ஜெர்மன் பெற்றோர்கள் கூட கூச்சப் படுகிறார்கள். இந்தப் பையனுக்கு விளக்கமாகச் சொல்ல ஆள் இல்லை. பாவம் இவனுடன் படிக்கும் சக-பெரிய-மாணவன் தன் கற்பனையைக் கலந்து இவனுக்கு கதை அளந்து விடுவான்.

எனக்கு என் பால்ய ஞாபகம் வந்து விட்டது. ரொம்ப அவஸ்தையான கால கட்டமிது. உண்மையில் இந்தியாவில் பெண் மட்டுமல்ல, ஆணும் சிறைப்பறவைதான். வீட்டின் ஒழுங்குக் கட்டுப்பாடுகள் இவனை ஒன்றுமே அறிய விடுவதில்லை. சினிமா ஒரு வடிகால். ஆனால் அது ஆசையை இன்னும் கன்னாபின்னாவென்று கிளப்பிவிடும் சாதனம். சினிமாவிலிருந்து தப்பித்தாலும் தமிழ்ச் சினிமாப்பாட்டிலிருந்து தப்பிக்கமுடியாது அங்கே! இரட்டை அர்த்தம் இல்லாத ஒரு தமிழ்ப் பாட்டையாவது யாராவது சொன்னால் நான் மொட்டையடித்துக் கொள்கிறேன் (முடி அதிகமில்லை என்ற தைர்யம் :-)

விடலை அவஸ்தையை இந்தியத்தன்மையோடு காட்டிய ஒரே தமிழ் படம் "அழியாத கோலங்கள்"தான். அதுவும் ஒரு இலங்கைத் தமிழரால்தான் செய்ய முடிந்தது. தமிழ்நாடு விட்டு விடுதலை ஆகவே ஆகாது :-)

Ants in the Pants என்னும் படத்தில் கடைசியில் ஜெர்மன் மொழியிலேயே பாடல் கொடுத்து விடுகிறார்கள். அப்போதுதான் நான் ஜெர்மன் நாட்டை உள்ளுக்குள் நேசிப்பது புரிந்தது. அந்த மொழியைத் திட்டினாலும் அது பிடித்தே இருக்கிறது. மனைவியைத் திட்டிக் கொண்டே காதலிப்பது போல. இந்தப் பாசத்திற்கு மொழி மட்டும் காரணமில்லை. அங்குள்ள பாசங்கற்ற சுதந்திரமும்தான் என்பதை இந்த அழகான சிறிய படம் உணர்த்தியது.

0 பின்னூட்டங்கள்: