புயல் ஓய்ந்த பின்தான் சேதங்கள் கணக்கெடுக்கப்படுகின்றன. காலையில் இணையத்தின் வழியாக கொரியாவிலிருந்து வெளிவரும் ஆங்கிலப் பத்திரிக்கைகளைப் பார்த்தால், ஒன்றுமே நடவாதது போல் ஒரு செய்தி கூட இல்லை!! சரி, என்று வெளியே கிளம்பி ஆய்வகம் எப்படியிருக்கிறது என்று போனால்! போகும் வழியில் மரங்கள் ஒடிந்து கிளைகள் நிரம்பியிருந்தன.

வாசற்கதவைக் காணவில்லை. வெறும் கண்ணாடிக் குவியல்தான் உள்ளது! உள்ளேயிருந்த அழகான சாடிகளெல்லாம் உடைந்து வராண்டா முழுவதும் ஒரே மண்! நல்ல போன்சாய் மரங்கள் உடைந்து கிடக்கின்றன.


சரி, என்று மேலே பார்த்தால் கூரை பிய்ந்து போய் கிடக்கிறது. பக்கத்திலுள்ள கட்டடங்களின் கூரைகள் பிய்த்தெரியப்பட்டுள்ளன. சின்ன மரங்கள் வேரறுந்து வெளியே கிடக்கின்றன.


ஆய்விற்குப் போக வேண்டிய கப்பல்கள் எங்கள் துறைக்கு வந்து கட்டப்பட்டுக் கிடைக்கின்றன. ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம் எனது அறையில் மட்டும் இணையம் துண்டிக்கப்படவில்லை. மின்சாரம் போகவில்லை. பக்கத்து அறையில் தொலைக்காட்சியில்லை! புயல் அடித்துக் கொண்டிருக்கும் போது உதகமண்டலத்து நண்பருடன் இணையத்தின் வழி அரட்டை செய்து கொண்டிருக்கிறேன். உங்களுக்கு செய்தி அனுப்பிக் கொண்டிருக்கிறேன்.

ஆனாலும் புயல் இந்தச் சின்னத்தீவை பாதித்து விட்டது. மின்சாரம் இல்லாமல் போய்விட்டது. அதனால் இன்னும் மூன்று நாட்களுக்கு தண்ணீர் வராது என்று சொல்கிறார்கள். தண்ணீர் நின்று விட்டது. குடிக்க நீர் சேகரித்துள்ளேன். அது எவ்வளவு நாளுக்கு வரும்? (மூன்று பாட்டில் :-) குளிக்க கொள்ள துறையில் நிற்கும் கப்பலை உபயோகித்துக் கொள்ளலாமாம்! சுவாரசியமாக இருக்கிறது.

பாரதி பாடலில் சொன்னவாறு, "தீனக் குழந்தைகள் துன்பப்படாதிங்கு தேவி அருள்செய்ய வேண்டுகின்றோம்" என்று சீக்கிரம் மின்சாரம் வர வேண்டுகிறேன். சௌகர்யங்கள் கூடப்பிறந்தவை போல் பல நேரம் எண்ணிவிடுகிறோம். நல்ல வேலை இந்தியாவில் பிறந்தது சௌகர்யமாய் போய்விட்டது! கஷ்ட்டத்திற்கு அது பழக்கிவிடுகிறது :-)

மனித அகந்தைக்கு துன்பம் வரும் போதுதான் தீனன் என்ற ஞாபகமே வருவது ஆச்சர்யம்!! குலசேகர ஆழ்வார் இந்த மனித உளவியலைப் புரிந்து கொண்டு இறைவனிடம் தனக்கு துன்பம் தரும் படி வேண்டுகிறார். அப்போதுதான் 'அவன்' ஞாபகம் வருமாம்!!

0 பின்னூட்டங்கள்: