மேமி


மூழ்கிய வாகனங்கள்
கொரிய சரித்திரம் காணாத ஒரு கொடும் புயல் என்னைக் கடந்து போயிருக்கிறது. அது கடக்கும் அதே நேரத்தில் நான் உங்களுக்கு தமிழில் மடல் அனுப்பியிருக்கிறேன். இப்போது நினத்துப் பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கிறது. வலைப்பதிவின் வெற்றிகளில் இதையும் ஒன்றாகச் சேர்த்துக் கொள்ளலாம். இது உங்களைப் பாதிக்காத செய்திதான். இருந்தாலும் செய்தி அனுப்புவதில் வலைப்பதிவின் எளிமை ஒரு சாதாரணனுக் கூட செய்தி பரப்ப வைக்கும் திறனை, வலுவைக் கொடுக்கிறது. இதை முதல் முறையாக சரித்திரம் காண்கிறது என்பது உண்மை. இதை மறுக்க முடியாது!

100க்கும் அதிகமானோர் இங்கு உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் வீடிழந்துள்ளனர். நிவாரணப்பணியில் ஈடுபட்டோ ர் காயப்பட்டுள்ளனர். வயல்வெளிகள் சேதமாகியுள்ளன. அறுவடை பாதிக்கப்பட்டுள்ளது.


கவிழ்ந்து கிடக்கும் கப்பல்


மேமி என்றழைக்கப்படும் இக்கோடைப் புயல் (ஆமாம் இலையுதிர் காலத்தில் இன்னொரு புயல் வருமாம்!) சரித்திரம் காணாத வேகத்தைக் கண்டிருக்கிறது. இரண்டு வெவ்வேறு இடங்களில் நொடிக்கு 60 மீட்டர் வேகத்தைக் கண்டுள்ளது. 1959-ல் வீசிய 'சாரா' என்ற புயல் (இந்தியாவில் புயலுக்குப் பேரிடுவதில்லை!) 46.9 மீ/விநாடி அளவில் வீசிய போதே 849 உயிர்களை அள்ளிக் கொண்டு போயிருக்கிறது. ஆனால் இம்முறை அவ்வளவு உயிர்ச் சேதமில்லை. அது வலுவாகியிருக்கும் அடிப்படை வசதிகளைச் சுட்டுகிறது.


தடம் புரண்ட ரயில்


நான் வெளியே சென்று பார்த்தபோதுதான் உணர முடிந்தது புயலின் வலுவை. எங்கள் ஆய்வகத்தின் பல கட்டிடங்களில் கூரையைக் காணவில்லை. கரையோரத்தில் பொதுமக்கள் பார்வைக்கென வைக்கப்பட்டிருக்கும் Display board அதை நட்டு கழட்டி தூக்கி வீசியிருக்கிறது புயல். பெரிய தந்திரக்கார புயல்தான் மேமி! இவ்வளவிற்கும் தீவின் மிகப்பாதுகாப்பான மூலையில் இருக்கிறோம் நாங்கள். சுற்றிலும் மலை அரண் உண்டு. இவ்வளவு இருந்தும் மேமி ஓடி வந்து கண்ணாடிக் கதவை உடைத்திருக்கிறாள் (மேமி என்னும் பெயர் பெண் பால் போல் படுகிறது!). கூரையை பிளேடு வைத்து வெட்டுவது போல் வெட்டி வீசியிருக்கிறாள்.


100 டன் எடையுள்ள கிரேன் ஒடிந்து கிடக்கிறது!


Display board-ன் நட்டைக் கழட்டத் தெரிந்த மேமிக்கு 100 டன் எடையுள்ள கிரேன் பெரிய விஷயமில்லை. அப்படியே ஏதோ குச்சியை ஒடிப்பது போல் ஒடித்துப் போட்டிருக்கிறாள். டைட்டானிக் போன்ற சொகுசுக் கப்பல்களை கவிழ்த்து விட்டிருக்கிறாள்! மின்சார வண்டியை தடம் புரட்டியிருக்கிறாள். கார்களை கவிழ்த்துப் போட்டிருக்கிறாள். இவ்வளவு நடந்து கொண்டிருக்கும் போது நான் உங்களுக்கு மடல் அனுப்பியிருக்கிறேன். ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம். ஆனால் நீங்கள் ஒருவர் கூட 'த்சோ' கூடச் சொல்லவில்லை என்பது வேறு விஷயம். அதற்குப் பின்னால் வருகிறேன்:-) ஆனால், இம்மாம் பெரிய புயல் வீசிக் கொண்டிருக்கும் போது இணையத்தொடர்பு துளிக்கூட பாதிக்கப்படவில்லை என்பது சேதி! மேலும் எங்கள் ஆய்வக மின்சாரம் இப்போதுவரை ஒரு நொடி கூட துண்டிக்கப்படவில்லை என்பதும் சேதி. கோஜேத் தீவே இருளில் மூழ்கிக்கிடக்கும் போது நான் உங்களுக்கு எழுதிக் கொண்டிருக்கிறேன். அதுவும் சிங்கப்பூரிலிருந்து வரும் இணைய வானொலியைக் கேட்டுக் கொண்டே (of course with the howling noise outside)!

ஆனால் இந்த அனுபவங்கள் உங்களைச் சேரும் போது வெறும் வார்த்தைகள். அது அனுபவமன்று. எனவே அதில் பாதிப்பு இருக்க வாய்ப்பில்லை. மேலும் எனது சகோதரி ஒரு முறை சொன்ன மாதிரி "ஏண்டா! ஏதாவது தெரிந்த ஊருக்குப் போகமாட்டோ யோ?" என்பதுபோல் கொரியா அவ்வளவாகத் தெரியாத தேசம்! அமெரிக்காவில் நடந்தால் உலகறியும்! இன்னொன்றும் உள்ளது. வையகம் மனித அலகில் மிகப்பெரியது. ஒரு பக்கம், இடி புயல் என்றாலும் இன்னொரு பக்கம் கனவுகளுடன் உறங்க முடியும். ஒரு தேசத்தின் துயர் இன்னொரு தேசத்தால் அறியப்படாமலே இருக்கமுடியும். நமது அக்கறைகளை வைத்தும் நம்மை எது பாதிக்கும் எது பாதிக்காது என்று சொல்லிவிட முடியும். பாண்டிச்சேரியில் உட்கார்ந்து கொண்டு பிஜித்தீவில் பட்டினி கிடப்போருக்காக உருகி பாரதி கவிதை பாடினான் என்னும் போது அவனது மெல்லிய உணர்வும், 'உலக துக்கத்தை தன் துக்கமாகக் காண முடிகிறது' என்பது போன்று நாம் வியாக்கியானம் செய்ய முடியும். ஆனால் அதே நேரத்தில் பாரதியால் தனது வீட்டில் உலை பொங்கவில்லை என்பதைக் காண முடியாமல் போய்விட்டது யதார்த்தம். நம் அன்னை செல்லம்மாள் பாரதி வானொலி உரையில் "காதல் ராணியாக மனைவியைப் போற்றும் கவிஞன் அவளுக்குச் சாதமும் போடவேண்டும் என்ற நினைவேயின்றிக் காலம் கழித்தானேயானால், என்ன செய்ய முடியும்?" என்று 1951ஆம் ஆண்டு திருச்சி வானொலியில் 'என் கணவர்' என்ற தலைப்பில் திருமதி செல்லம்மாள் பாரதி ஆற்றிய உரையைக் கேட்ட போது எனக்கு சிரிப்பும், துக்கமும் சேர்ந்தே வந்தன. மனிதக் கவனம் என்பது அவன் பாரதி போன்ற மாமனிதனாக இருந்தாலும் குறிப்பிட்ட சில விஷயங்களில் மட்டுமே இருக்கமுடிகிறது என்பது யதார்த்தம். இதே காரணத்தால்தான் பாரதி இறந்தபோது 20 பேருக்கும் குறைவாகவே இருந்தனர். மனித கவனத்தை ஈர்க்க ஒன்று பிரம்மாண்டமாக ஏதாவது நடக்க வேண்டும் இல்லை வாசிப்பவனை தனிப்பட்ட முறையில் அது பாதிக்க வேண்டும். இல்லையெனில் சேதி என்பது வெறும் சேதியே!

மனித வாழ்வு விசித்திரமானதே! மேமிப் புயல் என்னையும் அந்த 100 பேர்களுடன் கொண்டு போயிருந்தாலும் 'த்சு' கொட்ட சிலர் வரலாம், சிலருக்கு அது தாழ்த்தப்பட்டு அறிந்த சேதியாகலாம், சிலருக்கு அது வெறும் சேதியாகலாம், பலருக்கு அது எந்த பாதிப்பையும் நிகழ்த்தாமல் போகலாம். வையத்தின் வாழ்வின் வகை அப்படி :-)

0 பின்னூட்டங்கள்: