ஒரு நாடு விரைவில் எப்படி முன்னேறுகிறது அல்லது முன்னேற்றம் ஏன் நத்தை வேகத்தில் நடக்கிறது என்பதை அங்கு வாழும் மக்களின் மனோபாவத்திலிருந்து தெரிந்து கொள்ளலாம்!

புயல் அடித்த மறுநாள் உப்பரிகையிலிருந்து பார்த்தபோது எங்கள் ஆய்வக இயக்குநர் துடப்பத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு குப்பை கொட்டிக் கொண்டிருந்தார். அது நீண்ட விடுமுறைக் காலமாதலால் துப்புரவுத் தொழிலாளர் இல்லை (என்று எண்ணினேன்). இருந்தாலும் ஆய்வக அறைகளைத் துப்புரவு செய்வது ஒரு ஆய்வாளனின் கடமை. அது ஆய்வின் தூய்மைக்கு முக்கியமானதும் கூட. ஆனால் இவர் ஏன் தெருவைப் பெருக்கிக்கொண்டிருக்கிறார்?

புயல், விடுமுறை முடிந்த முதல் வேலை நாள். ஆய்வக வாயிலில் பலவகையான துடப்பக்கட்டைகள், குப்பை வாரும் உபகரணங்கள்! சரி, ஒரு கும்பல் வந்து குப்பை கொட்டப் போகிறது என்று எண்ணிக்கொண்டே உள்ளே போனேன். அதற்குள் அங்கு முடிவெடுக்கப்பட்டு என் ஆய்வகத் தலைவர் எங்களுக்கு ஒதுக்கீடான பகுதிக்குச் செல்லுமாறு வேண்டினார். அப்போதுதான் புரிந்தது, குப்பை கொட்ட யாரும் வரப்போவதில்லை, நாங்கள்தான் குப்பை கொட்ட வேண்டுமென்று :-)

ஏறக்குறைய அன்று முழுவதும் வேலை செய்தோம், எந்தப் பாகுபாடுமின்றி. PhD, Post Docs, Senior Scientist, Department Head, Director இப்படி எல்லோரும் குப்பை கொட்டிக் கொண்டிருந்தனர். மாலையில் வளாகத் தெருக்கள் "படுத்துக்கொள்" என்று அழைக்கும் வண்ணம் சுத்தமாக இருந்தன (you see! Scientists are meticulous workers!).

ஜப்பானிலும் இது நடந்திருக்கும். கோபே நகரம் நில நடுக்கத்திற்குப் பிறகு ஆடிப்போயிருந்தது! கடைகளில் கதவுகள் உடைக்கப்பட்டுக் கிடந்தன. தெரு வெறிச்சோடிப் போயிருந்ததே தவிர கலிபோர்னியோவில் நடந்த மாதிரி கொள்ளை நடக்கவில்லை. நாணயம் நெஞ்சில் இருந்தது!

சீனா போய் வந்தபின் அதன் அபரித வளர்ச்சி குறித்து இண்டி.ராம் இணையத்தில் எழுதியிருந்தார். சீன வம்சா வழியினருக்கு அந்தச் சுய ஒழுங்கு இருக்கிறது. அது அவர்களை உயர்த்தும்.

இந்த நேரத்தில் என் தாய் நாடு பற்றிய எண்ணங்கள் வருகின்றன. கட்டுப்படுத்திக் கொள்கிறேன்.

மேமியின் அசுரபலத்தைக் காட்டும் வண்ணம் அது இரு கப்பல்களை தரை தட்ட வைத்ததை இக்குறும்படம் காட்டும் (55 வினாடிகள்தான்). இது Nikon Coolpix 885 Digital Cmera (not video camera!) கொண்டு எடுத்த குறும்படம். குறும்படம்தான் எடுக்கமுடியும் :-)

0 பின்னூட்டங்கள்: