அபிப்பிராயங்கள் இல்லாமல் வாழமுடியுமா என்றொரு கேள்வி? அதற்கு உங்கள் பதில் என்ன?

ஊடகங்கள் தொடர்ந்து அபிப்பிராயங்களை உருவாக்குகின்றன. அதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்பின் அதன்மேல் நாம் நமது சொந்த அபிப்பிராயங்களை சேர்த்துக் கொள்கிறோம். இப்படியே பல அடக்குகள் கொண்ட அபிப்பிராய வங்கியாக நாம் உலவுகிறோம்! என்று யாராவது யோசித்தது உண்டா? :-)

நான் ஜப்பானில் வாழ்ந்த காலங்களில் கொரியா பற்றிய ஒரு தாழ்வான அபிப்பிராயத்தை ஜப்பானிய ஊடகமும், அம்மக்களும் தந்தனர். அதை ஏற்றுக்கொண்டேன். அதே நேரத்தில் அந்த ஊடகங்கள் இந்தியா ஒரு பிச்சைக்கார நாடு என்று காட்டியபோது உணர்ச்சி வசப்பட்டேன். ஜப்பானில் வெளிவரும் மைனிச்சி (தினத்தந்தி!) என்னும் ஆங்கில நாளிதழுக்கு ஊடகங்களின் stereotyped reporting of India பற்றி எழுதினேன். இத்தகைய ஊடகங்கள் என்ன மாதிரியெல்லாம் இந்தியாவைப் பற்றி சொல்லி வைத்திருக்கின்றன என்பதை எங்கள் ஆய்வகத்திற்கு வந்த ஒரு விஞ்ஞானியின் மனைவி கேட்ட கேள்வியில் அறிந்து கொண்டேன். "இந்தியப் பெண்களெல்லாம் கூரையில் நடப்பார்களாமே?" என்றொரு கேள்வியை அந்த அம்மாள் கேட்டாள். இப்படியான ஒரு அபிப்பிராயம் அவளுக்கு வர எந்த ஊடகம் உதவியது என்று தெரியவில்லை. சதி பற்றி கேள்வி கேட்டிருந்தாலும் ஒருவாறு புரிந்து கொள்ளலாம். ஆனால் குரங்கு போல் எம் பெண்கள் கூரையில் நடமாடுவதாக அவள் கேள்வி கேட்டது என்னை வெட்கிக்கூன வைத்தது.

ஜெர்மனியில் வாழும் காலங்களில் அவர்கள் தொடர்ந்து போலந்து பற்றி தாழ்வான அபிப்பிராயத்தை வைத்திருப்பதைக் கண்டேன். ஒரு பெண் கிழடு என்னிடம் ஒருமுறை சொன்னது, "நாங்கள் போலந்தை வைத்திருந்தபோது அது தானியக் களஞ்சியமாக இருந்தது. இப்போது பாருங்கள் கஞ்சிக்கு லாட்டரி அடிக்கிறார்கள்" என்று. ஜெர்மன் திறமைக்கு அவளே ஒரு ஷொட்டு கொடுத்துக் கொண்டாள்! இந்தியாவைப் பற்றி அவ்வளவு மட்டமாக ஊடகங்கள் காட்டுவதில்லை. ஆனாலும் தெருவோர பிச்சைக்காரர்களும், ஏதோவொரு வடநாட்டு கிராமத்தில், ஏதேவொரு கோயிலில் எலிகள் தாராளமாக வாழ்வதையும், அதற்கு பூஜை, புணஸ்காரம் உண்டு என்றும் காட்டுவதுண்டு. இதனால்தான் இந்தியாவில் பிளேக் வந்தபோது இந்திய விமானத்தை விமான தளத்தின் ஓரத்தில் வைத்து பினாயில் அடித்து, அங்கிருந்தே பிரயாணிகளை சுத்தப்படுத்தி அனுமதித்தனர். இப்படி இல்லையெனில் சாயிபாபா கொடம் கொடமாக திருநீறு கொட்டுவதைக் காட்டுவார்கள். இந்தியாவால் ராக்கெட்டும் விடமுடியும் என்பதைக் காட்டவே மாட்டார்கள். பாவம், எனது சக விஞ்ஞானி இந்தியா போய் வந்துவிட்டு அதிர்ச்சியில் இருந்தார். காரணம், ஊடகங்கள் சொன்னது அனைத்தும் மிகைப்படுத்தப்பட்ட சேதி என்று! அவருக்கு இந்தியா பிடித்திருந்தது.

எனவே நேரில் வந்து பார்த்தால்தான் நிலவரம் புரிகிறது. கொரியா என்றால் ஆக்ரோஷமாக 'பந்து' நடத்துபவர், கோபக்காரர்கள் என்றொரு அபிப்பிராயம் எனக்கு இங்கு வருவதற்கு முன் இருந்தது. வந்து பார்த்தால், இவர்கள் ஜப்பானியரைவிட சுதந்திரமாக தங்கள் கோரிக்கைகளை முன்வைப்பதை ஜப்பான் அப்படிக் காட்டி வந்தது புரிந்தது. இவர்கள் நிறையச் சிரிக்கிறார்கள், தங்களைத் தாங்களே விமர்சித்துக் கொள்கிறார்கள். இதுவெல்லாம் ஜப்பானில் காணக்கிடைக்காதது. மேலும் இவர்கள் கஷ்ட்டப்பட்டாவது ஆங்கிலம் பேச முயற்சிக்கிறார்கள். ஜப்பானிலும், ஜெர்மனியிலும் நீங்கள் அந்த நாட்டு மொழி பேச வேண்டுமென எதிர்பார்ப்பார்கள். பிரான்ஸ் மாதிரி. அன்று ஒரு ஆறாம் கிளாஸ் படிக்கும் சிறுமி வெட்கத்துடன் வந்து பஸ் ஸ்டாண்டில் என் அருகில் உட்கார்ந்தது. நீ ஆங்கிலம் பேசுவியா என்று கேட்டேன். நான் ஆங்கிலம் பேசுவதில்லை என்று ஆங்கிலத்தில் பதில் சொன்னது! கொஞ்ச நேரத்தில் ஒரு சின்ன ஆங்கில சம்பாஷணை அங்கு நடந்தது. அவள் அந்தக் குறுகிய நேரத்தில் எனக்கு கொரியன் கற்றுக் கொடுத்தாள். என் பெயர் கண்ணன் என்று எப்படிச் சொல்லவேண்டும்? என்று கேட்டதற்கு கொரியனில் ,"நாயேன் இருமி கண்ணன்" என்று சொன்னாள். Well, தமிழுக்கு கிட்டே வருகிறதா? :-) என்ன கொஞ்சம் அடக்கத்துடன் 'நான்' என்பதை 'நாயேன்' என்று சொல்ல வேண்டியுள்ளது. ஆழ்வார்கள், நாயன்மார்கள், பாரதி சொல்லவில்லையா? :-)

இவர்கள் வெகுளிகள். அன்பானவர்கள். கடின உழைப்பாளிகள். ஊறுகாயை உண்டு விளாசுபவர்கள்!!

ஆக, கொரியா பற்றிய அபிப்பிராயம் மாறியிருக்கிறது.

அபிப்பிராயங்கள் இல்லாமல் வாழமுடியுமா என்றொரு கேள்வி? அதற்கு உங்கள் பதில் என்ன?

0 பின்னூட்டங்கள்: