நாகண்ணன் என்பது கொரியப் பெயர்?!

கொரியா சின்னச் சின்ன இன்ப அதிர்ச்சிகளைத் தந்த வண்ணமுள்ளது!

ஆய்வகத்தில் ஒருவருக்கொருவர் செல்லப் பெயர் வைத்து அழைத்துக் கொள்ளும் அளவிற்கு வந்திருக்கிறோம். நான் கொரியனாக இருந்தால் என்ன பெயர் கொடுப்பீர்கள் என்று கேட்டபோது வந்த பதில் சுவாரசியமாக இருந்தது. கண்ணன் (இதை கன்னன், கந்நன் என்பது போல் பலுக்கின்றனர்) என்பது செல்லப்பெயர் என்றும் கொரியக் குழந்தைகளை இப்படி அழைப்பதுண்டு எனவே அதையே வைக்கலாமென்றனர். இன்னும் கூடுதல் சுவாரசியமாக, நாராயணன் கண்ணன் என்பதைச் சுருக்கி நகன்னன்/நகந்நன் எனலாமென்றனர்.எனக்கு பல நாள் சந்தேகமுண்டு 'கண்ணன்' என்பது தமிழில் செல்லப்பெயர், அதை முழு நாமகரணமாக வைப்பதில்லை. செல்லமாகக் கூப்பிட்டு அதுவே முழுப்பெயராகி விட்டதோ என்று! கண்ணன் ஸ்வாமிகள் என்றொரு வைணவ ஆச்சாரியர் உண்டு. எனவே பெரியவருக்கும் இப்பெயர் உண்டு போலும். எங்கள் ஊரில் நான் கண்ணன். புஷ்பவனம் என்னும் பக்கத்து வீட்டுப் பையனுக்கு செல்லப் பெயர் 'கண்ணன்'. அவன் என்னை விடப் பெரியவன். எனவே அவன் 'கண்ணன்', நான் 'சின்னக்கண்ணன்'. பேரே செல்லப் பெயர். அதிலே இன்னும் செல்லம் என்ன வேண்டிக் கிடக்கு?

இந்தப் பெயரிலேயே இளமை இருப்பதால் வயது ஏறுவது ஒரு பொருட்டல்ல :-) குட்டி பட்டரின் பெண்ணிற்கு 'பேபி' என்று பெயர். அவள் பெரியளாகி, கல்யாணமாகி, பாட்டியானாலும் (பாவம் அது அவ்வளவு நாள் வாழலை :-( பேபிதான்.

நான் தாத்தாவானாலும் சின்னக் கண்ணன்தான். இந்தியாவில் மட்டுமல்ல, கொரியாலும் என்று இன்று தெரிந்து கொண்டது உற்சாகமளிக்கிறது!

0 பின்னூட்டங்கள்: