விரயம் ஒரு மீள்பார்வை

அப்பா பாய்ச்சிய விந்துக் கூட்டத்தில் முதலாவதாக ஓடிவந்ததால் இன்று நாம் 'நாமாக' உலவுகிறோம். இது சாதாரண வெற்றியல்ல! ஏறக்குறைய 113 மில்லியன் விந்துக்கள் கலந்து கொண்ட போட்டி! நியூயார்க் மாரதானெல்லாம் இதன் முன் பிச்சை வாங்க வேண்டும். வாழ்க்கை என்னும் ஒட்டப்பந்தயத்தில் வெற்றி வீரர்களாக வெளி வந்த நாம், பின் நம் தோல்விகளை நாமே உருவாக்கிக் கொள்கிறோம் என்பது வேறு கதை! இன்று நான் பேச வந்தது எண்ணிக்கை பற்றி, படிகள் பற்றி, அரைத்த மாவை அரைப்பது பற்றி! சும்மா ஒரு 10 விந்துவை அனுப்பாமல் 10 கோடி விந்துவை ஏன் அனுப்ப வேண்டும்? ஏதாவது ஒன்றாவது வெற்றி பெற வேண்டும் என்னும் இயற்கையின் உந்துதலே அதற்குக் காரணாம். வாழ்வே வெற்றியை நோக்கிய ஒரு பயணம் என்பது மறைந்திருக்கும் செய்தி. இங்கு மேமிப் புயல் அடித்து ஓய்ந்த பின் கடல் சிவப்பாக மாறிவிட்டத்து :-) வேடிக்கையல்ல, Red Tide என்று சொல்லப்படும் Algal Bloom. இது சாதாரணமாக இலையுதிர் காலத்தில் வருவதல்ல. ஆனால் கடல் கலக்கக்கப்பட்டதால் பாசி வளர்வதற்கான உணவுச் சத்து கிடைத்தது, உறங்கிக் கொண்டிருந்த algal cyst மீண்டும் உயிர்பெற்றன. கடலே சிவப்பாக வேண்டுமெனில் எத்தனை கோடி பாசிகள் உயிர் பெற்றிருக்க வேண்டும். ஒரு காலத்தில் (:-) மலேசியக் கடற்கரையில் ஆமைகள் ஓடி வந்து முட்டை இடுமாம். கோடிக் கணக்கில் முட்டைகள் பொறித்து ஆமைகள் மீண்டும் கடலை நோக்கி ஓடுவது கண்கொள்ளாக் காட்சி. ஒரு முட்டை போட்டு, ஒரு முட்டை வருவதென்பது இயற்கையில் கிடையாது. மனித உடல் ஒரு குழந்தைக்கென்று உருவானது என்றாலும் நான்கு குழந்தைகள் பிறப்பது காணக்கூடியதாகவே உள்ளது. எனவே ஒன்றுக்கு மேல் என்பது இயற்கையின் கணக்காக உள்ளது. இளவேனிற்காலத்தில் மகரந்தம் காற்றில் தூவப்படும், மில்லியன் கணக்கில்! தூவும் மகரந்தம் சூலகம் சேர்வது உறுதியில்லாமல் இருப்பதால்! இது பலருக்கு ஹே! காய்ச்சலைத் தருவதுண்டு (இது திட்டத்தில் இல்லாதது!) பிரபஞ்ச விதியில் ஒரு நிரந்தரமற்ற தன்மை இருப்பதால் இப்படி விரயம் செய்வதும் கூடவே விதிக்கப்பட்டுள்ளது. என்னுடன் அம்மாவின் சூலகத்தில் ஓடி வந்த 113 மில்லியன் (மைனைஸ் ஒண்ணு) விந்துக்கள் விரயம்தானே (வெற்றி பெற்ற வேறொரு விந்து (அது சகோதர உறவல்ல! அது யாரோ? (நான்) யாரோ!) இப்படிப் பேசுமா என்று தெரியாது). எனவே விரயம் என்பது வாழ்வின் கூறு.

இப்போது பாயிண்டுக்கு வருவோம். நான் இணையத்தில் நுழைந்த தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் மதுரைத்திட்டம் என்பதில்லை. தமிழ் இணையம் என்ற தமிழ்.நெட்தான் இருந்தது. வேறு மடலாடற்குழுக்கள் இல்லை (இந்த வார்த்தைப் பிரயோகமே அப்போது இல்லை). பேரா.திலீபன் நாலாயிர திவ்யப்பிரபந்தத்தை வலையேற்றிக் கொண்டிருந்தார். குயூபெக் ஸ்ரீநிவாசன் ஆதாமி என்னும் செயலியை இனாமாக வழங்கிக் கொண்டிருந்தார். டாஸ், பின் விண்டோ ஸ் என்று அது வளர்ந்தது. என்னைப் போன்ற மெக்கிண்டாஷ் பயன்பட்டாளர் திக்கித் திணறி, தக்கித் தவித்துதான் தமிழ் உலகிற்குள் வந்தோம். அன்றிலிருந்து இன்றுவரை ஒரே உற்ற துணைவன் கு.கல்யாணசுந்தரம்தான். தமிழை மின்பதிப்பாக்கினால் தமிழில் இதுவரை வெளிவந்த அத்தனை இலக்கியத்தையும் ஒரு சின்ன குறுந்தகடில் இட்டு விடலாம் என்று ஸ்ரீநிவாசன் என்னிடம் சொன்னார்! கல்யாண் மதுரைத்திட்டத்தை முன் வைக்கிறார். திருக்கூட்டம் சேர்கிறது (இது திருக்கூட்டம்தான் ஏனெனில் இது 'வாணி தொழில்' என்று பாரதி சொல்கிறான்). மின் எழுத்து என்பது மிக எளிதாக்கப்பட்ட இன்று ஆயிரக்கணக்கானோர் தினம் தினம் அவரவர் சிந்தனையை மின்பதிப்பாக்கி வருகின்றனர் (இது வலைபூவின் வரவால் இன்னும் கூடும்). கணினி என்பதொரு சமாச்சாரம் வரமாலிருந்தால் இவர்களெல்லாம் இவ்வளவு எழுதியிருப்பார்களா என்பது சந்தேகமே. எனவே கணினி என்பது இயற்கை கடைக்கொள்ளும் 'மால்தூசியன்' விதிக்கு உற்ற துணையாகிப் போனது. விந்து விரயம் போல் எழுத்து விரயமும் தவிற்கவியலாததே! (சிலர் சொன்ன விஷயத்தையே பல்வேறு மடலாடற்குழுக்களில் மாற்றி, மாற்றிச் சொல்வதை இங்கு சொல்லவில்லை :-) மின்பதிப்பு இலகுவாகிப் போனது. மலிவாகிப்போனது. பாருங்கள்! தேனி கஷ்ட்டப்பட்டு வைக்கும் கூட்டை மனிதன் எடுத்துக் கொள்வதைப் போல், மதுரைத்திட்டத்தின் சேகரத்தை சென்னை வாசியொருவர் குறுந்தகடில் போட்டு ரூ90க்கு விற்கிறார் (கேட்டால் நாங்கள் மீண்டும் பதிப்பித்தோம் என்கிறார். இப்பேச்சே ஒரு விரயம்தான்). இது மலிவுதானே! பாரதிக்கு மணிமண்டபம் கட்ட நண்பர் மாலன் முன் வந்துள்ளார். பாரதி என்ற சொல்லிற்கு மந்திர சக்தியுண்டு. இலக்கிய நயமறிந்த எவனையும்/எவளையும் சுண்டியிழுக்கும் வசிய மந்திரம் அது! எல்லோரும் பாரதியை பதிப்பித்து வருகின்றனர். ஆனால் இவையெல்லாம் 'சக்கரத்தை' மீண்டும் மீண்டும் கண்டுபிடிப்பது போல் ஆகிவிடக்கூடாது! எது, எது மின் எழுத்தாக இல்லையோ? அதைத்தான் மினெழுத்தாக்க வேண்டும். வாத்தியார் சுஜாதா சொல்வது போல் வள்ளுவனுக்கு 40 படிகள் மின்பதிப்பில் வேண்டாம் (உரைகளென்றால் தேவலை, மூலத்தை அல்ல!). இது பற்றி மாலன் கவலைப்பட வேண்டும். முதலில் பாரதியின் மின் எழுத்திற்கான ஒரு அட்டவணை வேண்டும். செய்தத்து எது, செய்ய வேண்டியது எது என்று அப்போதுதான் புரியும்! இல்லையெனில் பாரதியும், மால்தூசும் கைகோர்த்து நடக்க வேண்டியதுதான்! ஜெர்மனியில் டாக்சி ஓட்டிய நேரம் போக மிச்சமிருக்கும் நேரத்தில் மெனக்கெட்டு பாரதியை மின்பதிப்பாக்கும் கருணாகரமூர்த்தி போன்ற பல அன்பர்களின் நேரம் விரயமாகாமல் காக்கலாம். தினமொரு கவிதையென்று இப்போது பலர் ஆரம்பித்து விட்டனர். வந்த கவிதையே மீண்டும் மீண்டும் உலா வராமல் இருந்தால் சரி!! தொடர்பு என்பது இணையத்தின் அடிக்கோடாக இருந்த போதிலும் மகரந்தம் போல் பல்கிப் பெருகி வரும் தமிழ் மின்வெளியில் யார் எதை மீண்டும், மீண்டும் மினெழுத்தாக்கி வருகின்றனர் என்பது கண்டு கொள்ள முடியாததாகவே உள்ளது. ஆயினும் தெரிந்த மின்னாடற்குழுக்களிலாவது இந்த விரயத்தைத் தவிர்க்கலாம். மதுரைத்திட்டத்தில் வந்த அத்தனை நூல்களையும் இணையப் பல்கலைக்கழகம் சிறப்புப் பதிப்பாக மீண்டும் செய்வது போல் நடப்பதை சீராக்கலாம். தமிழனுக்கு ஒற்றுமை உணர்வு குறைவு. அகப்பாடு அதிகம். எனவே ஒன்றுபடுதல் கடினம். இல்லையெனில் எத்தனை ஞானபீட விருது இன்னேரம் தமிழுக்கு வந்திருக்கும். இதே போக்கு மின்வெளியிலும் வராமல் காக்கமுடியுமாவெனப் பார்க்கலாம்.

என் பதிப்பு சிறந்தது, உன் பதிப்பு சிறந்தது என்ற போட்டியும் மால்தூசியன் விதியின் படியே நடக்கிறது. அது கடைசியில் தமிழுக்கு நல்லதே. அகப்பாடு மிகக்கொண்டு எழுத்திற்கு காப்புரிமை கோர்வது கூட குறுங்காலச் செயல்பாடே! 70 வருடம் தாண்டி விட்டால் அது பொது உடமையாகிவிடும். ஆனால் வாழ்கின்ற காலத்திலேயே தன் எழுத்தை கோழி முட்டையைக் காப்பதுபோல் காப்பது அகப்பாடின் வெளிப்பாடே! வளரும் மின் உலகில் இணைப்புக் கொடுத்துக் கொண்டு சேகரம் செய்ய வேண்டியது, எல்லா எழுத்திற்கும் இல்லையென்றாலும் நல்ல எழுத்திற்கு அவசியமே. அதிலாவது ஒற்றுமை அவசியம். இயற்கையைக் கண்காணித்தால் ஒன்றுபட்டு வாழ்வதைவிட விரயம் பண்ணி வாழ்வதே இறுதியில் வெல்லும் என்று தோன்றுகிறது. இப்பேச்சும் விரயமென்றால் அது இயற்கை விதிக்கு உடபட்டதே என்று காண்க.

0 பின்னூட்டங்கள்: