மனிதன் சாகபட்சிணியா? மாமிச பட்சிணியா? தோற்ற விளக்கம்!

இதற்கான முன் வரவை நண்பர் காசிலிங்கம் மனிதனின் உணவு தர்மம் என்று இரண்டு வலைக்குறிப்பில் தந்துள்ளார்.

சொடுக்குக

உணவு தர்மம் 1

உணவு தர்மம் 2

இக்குறிப்புகளைப் படித்துவிட்டு என் குறிப்பைப் படிக்கவும். அட்டவணையெல்லாம் கொடுத்து அமர்க்களப்படுத்தியிருக்கிறார் (பை த வே..அவர் வலைப்பூ யுனிகோடில் அமைந்துள்ளது!)

நமது முன்னோர்களான மனிதக் குரங்குகள் (இதெல்லாம் கப்சா என்பவர்களை பசித்த புலி உண்ணட்டும் :-) அல்லது கொரில்லா பிடித்துக் கொண்டு போகட்டும்! காய்கறிகளை உண்ணும் சாகபட்சிணிகளென்றே அறிவியல் உலகம் நீண்ட காலமாக நினைத்து வந்தது. ஆனால், ஆப்பிரிக்கக் காட்டில் நடத்திய ஆய்வுகள் இவை மாமிசம் உண்பதைக் காட்டின. ஆனால் முழு நேர மாமிச பட்சிணியாக அல்ல. தேவைப்படும் போது. கிராமத்தில் வளர்ந்த காலத்தில் 'கிளியோ, கிளியோ' என்று பெண்கள் மண்ணில் வாயை வைத்துக் கூவ, மட, மடவென கரையான்கள் ஓடிவரும். அவைகளை அப்படியே சாப்பிடுபவரும் உண்டு, பொறித்துச் சாப்பிடுபவரும் உண்டு. பார்க்க வேடிக்கையாக இருக்கும் (இதைப் பார்ப்பதே பாபம்! என்று வீட்டில் திட்டுக் கிடைக்கும்!). இந்தச் செய்கையை ஆப்பிரிக்க கொரில்லா செய்வதை ஆவணப் படுத்தியிருக்கிறார்கள்! அது குளியோ, குளியோ சொல்வதில்லை. ரொம்ப விவரம்! ஒரு நாணலை உள்ளே விட்டு மேலே ஏறி வரும் கரையான்களை அப்படியே உறிஞ்சிவிடும். ஸ்றாவை எப்படிப் பயன்படுத்துவது என்பதைக் கண்டவன் கொரில்லா! நாமல்ல!! எனவே மனிதன் ஆரம்பம் முதல் opportunistic feeder. எது கிடைக்கிறதோ, அதைச் சாப்பிடுவான். வேத காலத்து பிராமணர்கள் சுத்த அசைவமாக இருந்திருக்கின்றனர்.

சைவ உணவு என்பதை அறிமுகப்படுத்தியவர்கள் 'சைவர்கள்' அல்ல!! சமணர்கள். இவர்கள் மகா தீர்க்கதரிசிகள். மனித வாழ்வின் நீண்டகால பயன்பாட்டிற்கு (Sustainable staple diet) உசிதமானது மரக்கறி உணவே எனக் கண்டு இந்தியாவைக் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றினர். இன்று உலகில் அதிக அளவு சாகபட்சிணிகள் உள்ள நாடு (ஏறக்குறைய 700 மில்லியன் மக்கள்) இந்தியாதான். தீர்த்தங்கரருக்கு ஒரு வணக்கம்!

ஏன் இந்த வழித்தடம்? இதுவொரு அறிவியல் பூர்வமான வழிகாட்டல். வாழ்விற்கான சக்தி சூரியனிடமிருந்து வருகிறது. சூரியச் சக்தியில் கோடியில் ஒரு மடங்கைத்தான் தாவரங்கள் ஒளிச்சேர்க்கையின் மூலம் உண்ணும் சக்தியாக மாற்றுகின்றன. எனவேதான் ஆக்கியோனாகிய நாரணனை சூரியனாக வழிபடும் வழக்கமுண்டு. சூரியநாராயணன் என்னும் பெயர் இதைச் சுட்டும். சூரியன் இல்லையேல் வாழ்வு இல்லை. மனிதன் வேறு கிரகங்களுக்குப் போனாலும் சூரியன் போன்ற ஒரு ஒளிச் சக்தி கொண்ட நட்சத்திர மண்டத்திலேதான் உயிர் வாழ முடியும். இதை esoteric circle மிக அழகாக உருவகப் படுத்துகின்றனர். இறைவன் ஜோதி/ஒளி வடிவினன். அவனை அண்டியே பௌதீக உயிர்களும், அமானுஷ்ய உயிர்களும் (ஆன்மாக்கள்) வாழ்கின்றன என்று சொல்கிறார்கள். வைகுண்டத்தில் நிரந்தரமாக உள்ள ஆன்மாக்களை "நித்ய சூரிகள்" என்றே அழைக்கின்றனர். அவர்கள் சுயப் பிரகாசமாக இருக்கக் கூடியவர்கள். அந்நிலையில் உணவுத்தேவை என்பது அற்ற, சுய உற்பத்தி நிலையில் வாழ்கின்றனர் என்று பொருள். இந்நிலையில் இல்லாத பௌதீக உடல் கொண்ட எந்த ஜீவனும் சூரிய ஒளிச்சக்தியை நம்பியே வாழ வேண்டும். இது இயற்கை விதி.

இச்சூரியச் சக்தியின் அபரித ஆக்கப்பொருள் வடிகால் நிலையில் கொஞ்சம் கொஞ்சமாக படிக்கட்டு போல் தாவரங்களிடமிருந்து, முதல் நிலை விலங்குகளுக்கும், பிற நிலை விலங்குகளுக்கும் போகின்றன. கீழே உள்ள படத்தைக் காணவும்.வாழ்வு கடலில் துவங்குகிறது. தாயின் கருப்பையில் (நீர்க்குடம்) நாம் நீந்தி வளர்வது இதைச் சுட்டும்)! இப்படம் கடலில் உள்ள சக்திப் பாதையைக் காட்டும். முதற் சக்தியை 100 அலகுகள் என்று கொண்டால், 57 விழுக்காடு நுண்வாலிகள் (flagellates), 32 விழுக்காடு மிருகப்பாசிகள் (zooplankton) என்று போகிறது. மிருகங்களுக்கான சக்தி இங்கிருந்துதான் கிடைக்கிறது. இச்சக்தியில் 6 விழுக்காடு மட்டுமே மேல் தட்டிலுள்ள விலங்கினங்களுக்குப் போகிறது! எனவே சூரியச் சக்தியின் கிட்டங்கியாக இருப்பது விலங்குகள் அல்ல. தாவரங்களே. எனவே மனிதம் நீண்ட காலம் நீடித்து வாழ வேண்டுமெனில் கடைப்பிடிக்க வேண்டியது சைவ உணவே! மதுரை முணியாண்டி விலாஸ் மிலிட்டரி சாப்பாட்டுக் கடையெல்லாம் தற்காலிக மானதே. உலகம் ஒருநாள் இதை உணரும். அப்போது சாகபட்சிணிகள் மட்டுமே உலகில் திரிவர்!! :-)

இதைத் தொடர விரும்புவோர் அவரவர் வலைபூவில் தொடருங்கள். காசிலிங்கம், கண்ணன் வலைபூவின் தொடர்புகளுடன். இதுவும் ஒரு சக்தி ஓட்டம்தான். சிந்தனை வடிவில்!!

0 பின்னூட்டங்கள்: