The Classic - a movie

மனித அறிவு என்பது மானுடம் முழுவதும் சம அளவில் பரந்து கிடப்பதாகப்படுகிறது. அதனால்தானோ என்னவோ பண்டையத்தமிழர் மானுடம் முழுவதற்கும் பாடல் பாடி வைத்தனர். உலகு என்று ஆரம்பிக்கும் பாடல்களே சங்க காலத்தில் அதிகம். இந்த எண்ணம் வந்த காரணம் விசித்திரமானது. இன்று மாலை ஒரு கொரியப்படம் பார்த்து முடித்த போது தோன்றிய எண்ணமிது.

ஏன் இப்படியொரு எண்ணம்? நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போது பாலு மகேந்திரா தனது கேமிரா நுணுக்கத்தால் எங்களைக் கொள்ளை கொண்டார். பின் பாரதிராஜா தனது படப்பிடிப்பால்...ஏராளமான சினிமா புகைப்படக் கலைஞர்களை தமிழகம் வைத்துள்ளது. அப்போதெல்லாம் சத்தியஜித் ரேயின் படங்களை பாடம் படிப்பதை விட நுணுக்கமாய் பார்ப்போம். அவ்வளவு கவித்துவமுண்டு அதில். ஹாலிவுட் கலைஞர்களைச் சொல்லவே வேண்டாம்! ஐரோப்பிய சினிமா நுணுக்கம்.... இப்படி.

இப்போதுதான் முதல் முறையாக ஒரு கொரியன் படம் பார்க்கிறேன். கதையின் தலைப்பு ஆங்கிலத்தில் The Classic. தனது முந்தயப் படமான My Sassy Girl லிருந்து வித்தியாசப்படுத்தி இதை எடுத்திருக்கிறார் இயக்குநர் Gwak Jae-yong. அதாவது பழங்காலத்துக் காதல் என்பது என்றும் அமரகாவியம் என்று சொல்ல வருகிறார். பள்ளிக் காதல். பட்டணத்து Chi-hye கிராமத்திற்கு வரும் போது அங்குள்ள மாணவ பருவத்து பையனின் மேல் காதல் வசப்படுகிறாள். ஆசியக் காதல் என்பதால் எந்த விரசமும் கிடையாது. முத்தம் கூட கிடையாது. ஆனால் காதல் இதையெல்லாம் தாண்டிய அற்புத உணர்வு என்பதை படம் பார்க்கும் ஒவ்வொரு நிமிடமும் உணர வைக்கிறார். இந்த மாதிரி கேமிரா பார்த்ததில்லை. என்ன மந்திரமென்று தெரியவில்லை அது கண்கள் காண்பதை காட்டுவது மட்டுமல்லாமல், அதனுள் உள்ள கவித்துவ உணர்வையும் வெளியே காட்டுகிறது. அது எப்படி என்று ஆச்சர்யமாக இருக்கிறது. காமிராவிற்கு மனது இருப்பது போல் படம் ஓடுகிறது.

இவர்கள் செய்யும் காதலைப் பார்த்தால் இதைவிட பேரற்புதம் வாழ்வில் ஒன்றும் கிடையாது என்று தோன்றுகிறது. பெண் அம்மாவின் பழைய பெட்டியைத்திறக்கும் போது அவளுக்கு வந்த காதல் கடிதங்கள் கிடைக்கின்றன. தாயாகவும், பெண்ணாகவும் Son Ye-jin அற்புதமாக நடித்திருக்கிறார். தாயின் காதல் கதையில் வருகிறான் கிராமத்துக் கதாநாயகன். ஆனால், அவளின் தந்தை இந்தப் பையனின் உற்ற நண்பனுக்கு பெண் தருவதாக ஒரு உடன்பாட்டில் இருக்கிறார் (அந்தஸ்து!). பள்ளித் தோழர்கள் இருவரும். ஆக, ஒரு முக்கோணக் காதல் :-) கடைசியில் பணம் வெல்கிறது. வேடிக்கை என்னவெனில் அப்பெண்ணின் மகள் காதலித்து பின் கை பிடிப்பது பள்ளிக் காதலனின் பையனை!! கதை என்னவோ நம்ம ஊர் கதை மாதிரிதான். ஆனால் படம் பார்த்தால் டைட்டானிக் பார்ப்பது போல் உள்ளது. அற்புதமான படைப்பிடிப்பு. எடிடிங்க், நடிப்பு. ஐயோ! அந்தக் கிராமத்துப் பையன் சிவாஜியைத் தோற்கடிக்கும் அளவில் உணர்சிகளை மிகையில்லாமல் (நம்மாளு அதில் கொஞ்சம் வீக்) கையாள்கிறான்.

படம் பார்த்து முடித்த பின்தான் தெரிந்தது, எங்களுக்குக் கிடைத்தது சோதனைக் காட்சியென்று. இரவில் ஜாங்மோக் கிராமத்துக் காரர்களுக்கு காட்டப் போகிறார்கள். ஒரே சிறுவர் கும்மாளம். ஆய்வக வளாகம் இவர்கள் கீச்சுக்குரலில் நிரம்பி வழிகிறது. இந்தப் படம் இச்சிறார்களுக்கு எங்கே புரியப்போகிறது? ஆனாலும், ஒரு இடம் விட்டு இன்னொரு இடம் வந்து படம் பார்ப்பதில் ஒரு குஷி உண்டுதானே!

பள்ளியில் காதல் வரும் என்று என்னால் நம்பமுடியவில்லை. நான் படித்தது ஆண்/பெண் பள்ளி என்றாலும், காதல் வந்ததில்லை. பாலியல் உணர்வு உண்டு. ஆனால் இப்படத்தில் வருவது போன்ற அற்புதக் காதல் உணர்வு வந்ததில்லை. வெட்கக்கேடு கல்லூரி முடிக்கும் வரை கூட காதல் வராமல் வீடு பார்த்துக் கொண்டது (என் மீது மையல் கொண்ட என் கல்லூரித் தோழிகளே உங்களைக் கைபிடிக்க முடியாமல் வீடு தடுத்துவிட்டது :-(. அதுதான் முன்னமே சொன்னேனே, இந்தியாவில் பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் சிறைப்பறவைகளே :-))

0 பின்னூட்டங்கள்: