வியட்நாமிய நினைவுகள் 002

வளரும் நாடுகளுக்கென்று சில குணாதிசயங்கள் உண்டு. அவை வியட்நாமில் நிரம்பிக்கிடக்கின்றன.

ஒரு மெத்தனப்போக்கு/திட்டமிடாத்தன்மை: நான் கிளம்பும் வரை என்று பேசப்போகிறேன் என்பது தெரியப்படுத்தவில்லை. எங்கு தங்குவேன் என்பது குறித்து எழுதிய கேள்விகளுக்கு பதில் இல்லை. இறுதியில் இணையத் துணையுடன் ஒரு ஹோட்டல் புக் பண்ணினேன். அதுபற்றி வந்தபிறகும் அவர்கள் என்னிடம் ஒன்றும் பேசவில்லை! வெளிநாட்டுக்காரன் சமாளித்துக் கொள்வான் என்ற நம்பிக்கை :-)


போக்குவரத்து நெரிசல்: புதியவர்களுக்கு பின் லாடன் கூட்டமும், சென்னை முகமூடிக் கொள்ளைக்காரர் கூட்டமும் வியட்நாமிற்குள் ஊடுறுவியது போல் படும். பாவம்! புகைக்காற்றை தினமும் சுவாசிக்கமுடியுமா? எல்லாம் முகமூடிதான். இதனால் நஷ்டம்? மிக அழகான உடையோடு போகும் அழகிகள் முகத்தை மறைத்துவிடுவதால் முழுவதும் ரசிக்கமுடியவில்லை. நம்ம ஊர் மாதிரியே பசங்கள் இளம் பெண்களைக் கண்டு 'டாவு' அடிக்கிறார்கள். பெண்கள் அதைப் பூஜை மலர்கள் போல் ஏற்றுக்கொண்டு கம்பீரமாக நடக்கிறார்கள். வந்து இருந்த ஒரு வாரத்தில் சூரியனை முழுசாய் பார்க்கமுடியவில்லை. ஒரே புகை மூட்டம். 3.5 மில்லியன் மக்கள். ஸ்கூட்டர்/மோட்டர் பைக் கார்களை ஒன்றுக்கு பத்து என்ற விகிதத்தில் பீட் அடிக்கின்றன.

போக்குவரத்து ஒழுங்கின்மை: நாற்சந்திகள் ஏதோ குரோசவா படத்தில் வரும் போர் காட்சிகளை நினைவுறுத்தலாம். எல்லாப் பக்கத்திலிருந்தும் எல்லா வகையான வாகனங்களும் ஒரே நேரத்தில் மோதிக் கொள்கின்றன! ஆனால், பாசி பிடித்த குளத்தில் குச்சியால் கோடு போட்டால் எப்படி மோதல் இல்லாமல் பாசிகள் விலகிக் கொள்ளுமோ அதுபோல் ஸ்கூட்டர்கள் புசுக், புசுக்கென்று மோதாமல் விலகி விடுகின்றன. நான் பார்த்த அளவில் கோபதாபங்கள் இல்லாமல் அவரவர் வழியில் போய்விடுகின்றனர். சென்னை போல் உரசி விட்டு, கீறி விட்டு, கண்ணாடியை உடைத்து விட்டு ஓடி விடுவதில்லை. அப்படி நடந்தால் நிதானமாகச் சண்டை போடுகிறார்கள்! நம்ம ஊர் போக்குவரத்து பற்றி ஒரு டச்சுக்காரர் என்ன சொல்கிறார் என்று கேளுங்கள்!

உரக்கப் பேசுதல்: மெதுவாகப் பேசுதல் என்பதை இவர்கள் எப்போது பயன்படுத்துகிறார்கள் என்று கவனமாக அவதானிக்க வேண்டியுள்ளது. எதற்காக சுருதியைக் கூட்டுகிறார்கள் என்பதும் புரிவதில்லை. ஹானோய் நகரமே தமிழக கிராமம் போல் நடந்து கொள்வது வினோதமாக உள்ளது!

கடைசியாக...நான் பார்த்த வரையில் ஒரே ஒரு ஆள்தான் சுவரைக் குறி வைத்து குறியைக் காட்டிக் கொண்டு ஒண்ணுக்கு அடித்தார். சென்னை போல் தூசு பரந்தாலும், சென்னை போல் ஒரு கூவம் இங்கும் இருந்தாலும் அவை பொதுக்கழிப்பிடமாக மாறவில்லை. இவர்களுக்கு தன்மானம் இருக்கிறது. எல்லா இடத்திலும் கு....யைக் காட்டுவதில்லை :-)

0 பின்னூட்டங்கள்: