வியட்நாமிய நினைவுகள் 005

வியட்நாம் கோயில்களுக்குப் போனால் தெரிகிறது இந்தியச் சமயம் எப்படியெல்லாம் இங்கு வரை வந்துள்ளது என்று!

ஹனோய் நகரிலுள்ள ஒரு புராதண (ஆயிரம் வருடம் என்றான் தோழன். உண்மையா என்று தெரியவில்லை) கோயிலில் விசேடமாக இரண்டு யானைகள் துவாரபாலகர்களாக நிற்கின்றன. சங்கமித்திரையின் கனவில் வந்த யானையை நினைவுறுத்தும் அடையாளம் போலும்!


குதிரையும் இருக்கிறது. நம்ம ஊர் கோயில்களில் குதிரை வாகனம் அரபியர்களின் வருகைக்குப்பின்தான் வந்திருக்க வேண்டும். இங்கு எப்போது வந்தது? என்று தெரியவில்லை.

கோயில் கோபுர அமைப்பு கேரளக் கோயில்களை நினைவுறுத்துகின்றன. அங்கிருந்து கட்டிடக்கலை "பட்டுச்சாலை" (Silk sea) வழியாக இங்கு வந்திருக்கலாம். ஆனால் இந்த பீனிக்ஸ் பறவை சீனர்களின் கற்பனையா? அல்லது கிரேக்கர்களின் கொடையா? என்று தெரியவில்லை.

நேபாளம் போனாலே இந்து மதம் எது? பௌத்தம் எது? என்ற குழப்பம் வந்துவிடும்! விஷ்ணுவின் திருவிக்கிரம (விஸ்வரூபம்)க் கோலத்தை புத்தர் தனதாக்கிக் கொண்டு விடுவார். பிரகார மூர்த்தியாக பிரம்மா மாறிவிடுவார். ஊருக்கு இளைச்சவன் கோமாளி என்கிற கதை போல் இந்த சமய எழுச்சி/வீழ்ச்சியில் பிரம்மா காயடிக்கப்பட்டுவிடுகிறார்.

விஷ்ணு மிகத்திறமைசாலி. பௌத்தம் வளர்ந்த போது புத்தருக்கு ஒரு சல்யூட் அடுத்துவிட்டு, பின்னால் அதுவும் தனது ஒரு அவதாரமே என்று சொல்லி விடுகிறார்! எனவே பிரச்சனை இல்லை. கபளீகரத்தில் இது ஒரு வகை :-))

0 பின்னூட்டங்கள்: