வைகைக்கரை காற்றே நில்லு......இவன் பிறந்த போதும் வைகைக்காற்று நாணல் புதர்கள் வழி இன்னிசை பரப்பிக் கொண்டுதான் இருந்தது. இவன் கோகுலத்தில் பிறந்தான் என்று நம்புகிறான். அது துபார யுகமாகப் படவில்லை, இந்தப் படத்தைப் பார்த்தால். சுதந்திர இந்தியாவாக இருக்கலாம். சுதந்திரம் வாங்கிய பின் கொஞ்ச ஆண்டுகளாக இருக்க வேண்டும். ஆனால் அவனது நினைவுகள் ஒரு கோகுலத்தைச் சுற்றியே செல்கின்றன. இவன் யமுனைத்துறைவனாக இருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் இது வைகைக்கரை. அங்கு துறை போடும் அளவிற்கு நீர் இருப்பதில்லை. ஆனாலும் வரண்டு போயும் இருப்பதில்லை. 'வையை என்னும் பொய்யா குலக்கொடி' என்னும் சங்கத் தமிழ் இவன் காலம் மட்டும் உண்மையாக இருந்து வந்தது. இவன் இடையர் குலத்தில் பிறக்கவில்லை, நந்தகோபன் இவன் தகப்பனும் இல்லை. ஆனாலும் இவன் நினைவுகள் ஒரு கோகுலத்தைச் சுற்றியே வட்டமிடுகின்றன.

இவன் வைகைக்கரைக்கு அழைத்து வரப்பட்டு சில ஆண்டுகள் ஆகியிருந்தன. இவன் பிறந்தது இராமனும் அவனது ஆஞ்சநேயக் கூட்டமும் வட்டமிட்ட தொண்டிக்கரை சமீபமாம். திருவேகம்பத்தூர் என்பதாம். இவன் கர்ப்பவாசம் செய்து கொண்டிருந்தபோது இவன் அன்னை, என்ன இவனை விட ஐந்தாறு மடங்குதான் பெரியவளாக இருப்பாள். ஒல்லிசான தேகம். தீர்க்கமான கண்கள். கோகிலம் போன்ற குரல். இவனைத் தூக்கிக் கொண்டு அவள் நடப்பதே பெரிதாக இருந்தது. இது பெரிய குழந்தை. 10 பவுண்டு. ஊரணிக்கரைக்கு நீர் ஏந்தச் சென்ற போது இவன் சகலை சேது மதில் மேல் ஓடிக்கொண்டிருந்தான். அவனைக் காக்க இவன் அன்னை ஓட 'இதோ பிடித்து விட்டோ ம்' என்ற போது சேது கரையில் இவன் ஊரணியில் - அதாவது இவன் ஒரு குளத்தில், அக்குளம் இன்னொரு குளத்தில்!

அதெல்லாம் இவனுக்கு ஞாபகம் இல்லை. எல்லாம் இவன் சித்தி சொன்னதுதான். இவன் அன்னை அதிகமாகப் பேசுவதில்லை. அனுபவங்கள் சொல்லும் அளவிற்கு அவளுக்கு என்றும் நேரமிருந்ததில்லை. ஏனெனில் இவன் வீட்டின் கடைக்குட்டி. கடையை மூடிய குட்டி. அதற்கு முன் 7 பாண்டங்களைக் கூத்தாடி, கூத்தாடி பெற்றிருந்தாள். அதில் உடைந்த குடங்கள் 2. தங்கியது 5. இவனையும் சேர்த்து 6. கூடவே வால் போல் இவன் சித்தி, சித்தப்பா, சித்தி பையன், சித்தி பெண். இவர்களையும் பார்க்க வேண்டுமா? சரி, போனால் போகிறது, நமது ஹீரோ அனுமதியளித்து விட்டார்.இவனைப் போலவே துரு, துருவென்று அருகிலிருப்பது இவன் சித்தி பெண் பட்டு. இவனை ஊரணிக்குள் தள்ளக் காரணமாயிருந்த சேது, பின்னால். ஒரு காலத்தில் பத்மினி, ராகினி போல் மினுமினுத்த சௌந்தரம் நேர் பின்னால். கொஞ்சம் பானுமதி போல் தோற்றமளிக்கும் பெரியவள் செல்லம். இது பூவணநாதர் கோயிலுக்கு அருகில்லுள்ள 'பத்ம நிலையம்' வீட்டு மொட்டை மாடியில் எடுத்தது. யார் எடுத்தார் என்று நினைவில்லை. கேட்டால் நிச்சயமாக தான் எடுத்ததாக அக்கா புருஷன் சொல்லுவார். அவருக்குத்தான் அப்போது இம்மாதிரி டெக்கினிக்கல் விஷயமெல்லாம் தெரியும்.

அந்தக்காலத்தில் இன்னும் கிராமப்புரங்களில் தெரு ஓரத்தில் கம்பத்தில் அரிக்கேன் விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. மாலையானவுடன் தீவட்டியத்தூக்கிக் கொண்டு ஒருவன் வந்து விளக்கேற்றுவான். அவன்தான் தீவட்டித்தடியன்! அப்போது கேமிராவில் படமெடுப்பது எவ்வளவு பெரிய விஷயம்?!


வைகைக் காற்று வழிப்போக்கில் இப்படி கதைச் சொல்லிப் போகும்......

0 பின்னூட்டங்கள்: