வைகைக்கரை காற்றே நில்லு......006

பத்மநிலையத்தில் அவனுக்குப் பிடித்த பகுதி கொல்லைப்புறம்தான். இடையர்கள் வாழும் தெரு அது. எனவே மாடும் கன்றுமாக எப்போதுமிருக்கும். காலையில் மாடுகளை மேய்ச்சலுக்கு இட்டுச் செல்வதும் மாலையானதும் அவைகளைக் கொண்டு வந்து கொட்டிலில் அடைப்பதும். அது போது நிகழும் மனித பசுக்கூட்டங்களின் நாடகம் பார்க்க சுவாரசியமாக இருக்கும். பெரும்பாலும் பசுக்களுக்கே உள்ள அந்தக் கூட்டத்தில் கன்றுகள் எப்படி உருவாகின்றன என்பது அவனுக்கு நீண்ட நாள் தெரியாமலிருந்து. அதைப்பற்றிய சுவாரசியமான விவரங்கள் அவனுக்குப் பின்னால்தான் தெரிய வந்தன. கிருஷ்ணக் கோனார் என்பது மரியாதைக்காகச் சொல்லும் பெயர். "டேய் கிட்ணா வாடா!" என்பதுதான் நடைமுறைப் பெயர். கிட்ணனும் பெரிய வயசான ஆளில்லை. இளமைதான். தலையில் ஒரு சின்ன முண்டாசும் (அதுவே வேர்க்கும் போது கைக்குட்டையாகும், குளிக்கும் போது துண்டாக மாறும்), கையில் ஒரு சொம்பும், இடிப்பில் ஒரு விளக்கெண்ணெய் கிண்ணியுமாக கிட்ணன் வந்து கொல்லையில் கதவைத் திறக்கும் போது அடுக்குள்ளில் இருக்கும் அம்மா, 'டீ, பங்கஜம் கிருஷ்ணன் வந்துட்டான்!" என்று சொல்லவும் சரியாக இருக்கும்.

அம்மாவிற்கு எப்படி கொல்லையில் கிருஷ்ணன் கதவைத்திறக்கும் முன் தெரிகிறது என்ற சூட்சுமம் பின்னால் அம்மா சொல்லித்தான் அவனுக்குத் தெரிந்தது. கோனார் வருகிற ஓசை கேட்டவுடன் பசுமாடு கத்தும். மாடு ஏன் கத்துகிறது? கோனார் வந்தால் அதற்கு இரண்டு வகையான சுகம் கிடைக்கும். ஒன்று தன் அருகிலேயே இருந்தும் பால் கொடுக்க முடியாமல் நின்று கொண்டிருக்கும் கன்றிற்கு பால் கொடுக்க முடியும். மடி கனம் குறையும். இரண்டாவது, கன்று முட்டி, முட்டி முலையுண்ணுதலில் உள்ள சுகம். கிட்ணக் கோனாருக்கு இந்த சூட்சுமம் தெரிவதால் கன்றை நன்றாக சப்ப விட்டு பால் சுரக்க ஆரம்பிக்கிறது என்று தெரிந்தவுடன் கன்றை ஒரு கையால் புறம் தள்ளி விட்டு மறு கையால் மடுவில் கொஞ்சம் விளக்கெண்ணெய் தடவி நீவி, நீவி விட்டு பால் கறக்கத் தொடங்குவான். பசுவிற்கு சுகத்தில் எந்த தடங்கலும் வராத மாதிரி அவன் பால் கறக்கும் விதம் கவிதை.

அது பசுமாடாகட்டும், தாய்ப் பெண்ணாகட்டும் முலையுண்ண பிள்ளையை அழைத்தல் ஒரு சுகம். அது கணவன் கையாக இருந்தாலும், பிள்ளையின் வாயாக இருந்தாலும் கிடைக்கும் சுகம் ஒன்றே. மாடு வாலைச் சுருட்டிக் கொண்டு வேகமாக நீர் பாய்ச்சும். அது அவள் உச்சத்தில் இருக்கிறாள் என்பதன் அடையாளம். எனவெ கன்று முட்டுவது போல் கிட்ணன் முலையில் முட்டுவான். பால் சுரக்கும். கன்று இதையெல்லாம் பார்த்துக் கொண்டு பேந்தப் பேந்த நிற்கும். இது கோனாருக்கும் பசுவிற்கும் இடையே நடக்கும் காம விளையாட்டு! சொம்பு நிறையப் பால் கறந்தாக வேண்டும். இல்லையெனில் அம்மா திட்டுவாள். பொங்கல், விசேஷமென்றால் அப்போதுதான் கோனாரை நன்றாக கவனிப்பாள். ஆனால் இந்தப் பசுமாடு இது மாதிரி எத்தனை கோனார்களைப் பார்த்திருக்கும்! கோனாருக்கு 'பேப்பே' காட்டிவிட்டு கன்றை மீண்டும் பால் குடிக்க விட்டு விட்டுப் போகும் போது, அது பாட்டுக்கு கன்றுக்கும் கொடுக்க பால் வைத்திருக்கும்! இரண்டும் அரை மணி நேரமாவது முட்டுவதும், குடிப்பதுமென்றிருக்கும். பால் முழுவதும் சுரந்த பிறகு மாட்டிற்கு மடு வலிக்கும். அது தெரியாமல் கன்று மீண்டும் முட்டும். ஒரே உதை! அதுதான் சமிக்ஞை. பங்கஜம் கன்னுக்குட்டியை இழுத்து தரியில் கட்டி விடுவாள். இதையெல்லாம் வேடிக்கை பார்க்க நந்துவிற்குப் பிடிக்கும். இதற்கு மேல் பள்ளிக் கூடம் போ! போ! வென்று ஏன் சொல்லுகிறார்கள் என்று புரியாது. இதில் இல்லாதது ஒட்டப் பள்ளிக்கூடத்தில் என்ன இருக்கிறது? ஆங்! பன்றிகள் சுத்தும் முத்தும் விளையாடுவது! அவை செய்யும் சேட்டைகள் இவை பள்ளி போனால்தான் பார்க்க முடியும். வெளியே பார்த்துக் கொண்டே வாய் "ஓரெண்டு, ரெண்டு, ஈயிரெண்டு நாலு" என்று சொல்லிக் கொண்டிருக்கும்.

இந்த வாய்ப்பாட்டு அட்டவணை அவனுக்குப் பிடிக்காத ஒன்று. 5 வரைக்கும் சரியாக மனப்பாடம் ஆகிவிடும். இந்த எட்டு, ஒன்பது இவையெல்லாம் ஏன் கணக்கில் வைத்தார்கள் என்று அவனுக்குப் புரியாது. ஐந்து வரைக்கும் வாய்ப்பாடு இருந்தால் போதாதோ? இதில் பின்னம் வேறு. வீசம், கால், அரை, மாகாணியென்று! நம்மாளுக்கு அப்பவே இதெல்லாம் பிடிக்காது. உயிர்கள். அவையுள் உறையும் உறவுகள் இவைதான் அவனுக்குப் பிடிக்கும். ஆனால் இவன் பள்ளிக் கூடத்தில் கருப்பையா என்றொரு பையன். பெயருக்கேற்ற மாதிரி கருப்பு. குள்ளம். ஆனால் அவனுக்கு பின்னமெல்லாம் அத்துபடி. கருப்பையா ஒணக்கு மட்டும் ஏண்டா இதெல்லாம் புரியுது? என்று கேட்டால் அவன் சொல்லுவான், 'நந்து, எங்க பெரியப்பா மளிகைக் கடை வைச்சிருக்காரில்லை. இதைப் படிச்சா பின்னால உதவும்' என்பான்.

அடுத்த தெருவில் இருந்தது பாண்டி நாடார் பலசரக்குக் கடை. அந்தக் கடைக்கு சாமான் வாங்க அம்மா அனுப்புவாள். பாண்டி நாடார் அப்பாவின் மீது மரியாதை கொண்டவர். எனவே கடனாவுடனாக் கொடுப்பார். பெரிய குடும்பியான அப்பாவிற்கு இது பெரிய உதவி. மாசச் சம்பளம் எப்பவும் வாய்க்கும் வயிற்றிற்குமென்றிருக்கும். இவன் பாண்டிநாடார் கடைக்குப் போகும் போதெல்லாம் நாடார் இவனுக்கு பேரிச்சம்பழம் கொடுப்பார். அவரது அண்ணன் பையன் கருப்பையா. கருப்பையாவிற்கு தந்தை இல்லை. சித்தப்பா வீட்டில்தான் படித்தான். இளமையிலேயே ஆச்சர்யமான பொறுப்பு அவனிடம் இருந்தது. பாண்டிநாடார் கடைக்குப் போகும் வழியில் குடியான வீட்டுப் பொம்பளையொருத்தி குழிப்பனியாரம், இடியாப்பாம், கொழாப்புட்டு இவையெல்லாம் செய்து விற்பாள். ஆவி பறக்க அவள் குழாய் புட்டை எடுத்து வைக்கும் போது நந்துவிற்கு வாய் சுரக்கும். அம்மா சொல்லி வைத்திருந்தாள் வழியில் கண்ட இடத்தில், கண்ட சாமானை வாங்கித்திங்கக் கூடாது என்று. அவன் பள்ளி முடிக்கும் வரை சப்பு கொட்டிக் கொண்டேதான் இருந்தான்.

கண்ணன் என்னும் கருந்தெய்வம்


கொரப்பள்ளிக்கு போவதில் உள்ள இன்னொரு சுகம் கருப்பையா! தினம் இவன் வீட்டு வாசலில் வந்து நின்று இவனை அழைத்துப் போவது. வெறுங்கையோட வரமாட்டான் கருப்பையா. இவனைப் பார்த்தவுடன் டவுசருக்குள் கையை விட்டு ஒரு முட்டாய் எடுத்துக் கொடுப்பான். ஒரு நாளில்லை, இரு நாளில்லை, தினம். தினம் தினம். கோகுலத்தின் முதல் சுவையைத் தந்தவன் கருப்பையா. கோகுலம் ஒரு தோழமையுள்ள இடம் என்பதை இவனுக்குச் சுட்டியவன் கருப்பையா. கோகுலம் உறவின் கோலமென இவனுக்குக் காட்டியவன் கருப்பையா. கருப்பையா பின்னால் புற்று நோய் வந்து இறந்துவிட்டான்.

0 பின்னூட்டங்கள்: