வைகைக்கரை காற்றே!......009

உலகத்திலேயே மிகவும் அழகான ஒரு ஜீவராசி உண்டென்றால் அது கன்னுக்குட்டியாகத்தான் இருக்க முடியுமென்று நந்து நம்பினான். இவர்கள் வீட்டுக் கொல்லையில் அந்தக்கன்று இருப்பது நந்துவிற்கு பெரிய சௌபாக்கியமாகப் பட்டது. அந்த காராம் பசுவிற்கு லக்ஷ்மி என்றுதான் அம்மா பேரிட்டிருந்தாள். அதுதான் அதன் இயற்பெயர் என்பதுபோல் லக்ஷ்மி என்று கூப்பிட்டால் பசு திரும்பிப் பார்க்கும். முட்டாது என்று அம்மாவும், பங்கஜமும் சொன்னாலும் அவனுக்கு மாட்டுப் பக்கம் போக ஒரு பயமுண்டு. பங்கஜம் போன பிறவியில் ஒரு இடைப் பெண்ணாக பிறந்திருக்க வேண்டும். எந்தக் கூச்சமும் இல்லாமல் மாட்டுச் சாணத்தை எடுத்து வழித்து, தவிடு சேர்த்து விரட்டு தட்டி கக்கூஸ் சுவரில் தட்டுவாள். மழைக்காலம் முடிந்த காலங்களில் சுவரின் பலத்தில் விரட்டி நிற்கிறதா இல்லை, விரட்டியின் பலத்தில் சுவர் நிற்கிறதா என்ற கேள்வி வரும்.

நந்து விளையாட வேண்டுமென்று சொன்னால் கன்னுக்குட்டியை அவிழ்த்து விடுவாள். இவன் பிடிப்பதற்குள் அது துள்ளிக் குதித்து ஓடிவிடும். அதன் ஓட்டத்திற்கு பல நேரம் இவனால் ஈடு கொடுக்க முடியாது. அது துள்ளித்துள்ளி இங்கும் அங்கும் ஓடும். இவனுக்கு கவலையாக வரும் அது எங்கேயாவது போய் முட்டிக் கொள்ளப்போகிறதே என்று. இவன் நினைப்பது போலவே லக்ஷ்மியும் நினைத்து 'ம்மா' என்று கத்தும். கன்னுக்குட்டிக்கு இதுவொன்றும் புரியாது. அது பாட்டுக்கு ஓடும். கொல்லைக் கதவு என்பது வங்கிலிருக்கும் கதவு போலவா இருக்கும்? ஒரு தட்டுத்தட்டினால் ஒடிந்துவிடும், எனவே அந்தச் சின்னக் கதவைத் தாண்டிப் போய்விடுமோ என்ற கவலையும் உண்டு அவனுக்கு. பங்கஜம் வந்து புல் தருவது போல் காட்டி பிடித்துக் கொடுப்பாள். அதன் கழுத்தை அப்படியே கட்டிக் கொண்டு இருப்பதில் உள்ள சுகம் வேறு எதிலும் இருப்பதாக நந்து நினைக்கவில்லை. பட்டின் மெதுவைக் கொண்டு போய் அதன் கழுத்தில் வைத்தவன் எவன்? அதன் காதுகள் சிவப்பாக வெய்யிலில் தெரியும். அதன் இரத்த நாளங்களைப் பார்ப்பதில் நந்துவிற்கு ஆர்வமுண்டு. எவ்வளவு அழகான ஜீவன். இப்படிப்பட்ட ஜீவனுக்கு மூக்கணாம் கயிறு போடுவதை அவனால் தாங்கிக் கொள்ளமுடியாது. சில கோனார்கள் முரட்டுத்தனமாக மாட்டின் மூக்கணாம் கயிறை இழுக்கும் போது இரத்தம் வருவதுண்டு. அதைக் கண்டு இவன் துடித்துப் போவான்.

இப்படிக் கன்னுக்குட்டிப் பிரியனாக இருந்த நந்துவிற்கு முயல் மீது திடீரென்று காதல் வந்துவிட்டது. எங்கே பார்த்தான் என்று யாருக்கும் தெரியவில்லை. உடனே முயல் வேண்டுமென்று ஒரே அடம். ஐயர் வீட்டில் முயல் எப்படி இருக்கும்? அது எங்கிருக்குமென்றும் யாருக்கும் தெரியாது. ஆனால் வீட்டின் ஒரே ஆம்பிளைப் பிள்ளை கேட்கிறான். இவன் கேட்டு எதையும் இல்லை என்று யாரும் சொன்னதில்லை. என்ன செய்வதென்றே தெரியவில்லை. கட்டாரியிடம் கேட்கலாமென்றால் அவனை ஆளையே காணோம். அண்ணா இதற்கான போர்க்காலத்தீவிர முயற்சியில் ஈடுபடலானார். முயல் வளர்ப்பதாக அந்த அக்கிரகாரத்தில் யாரும் கேள்விப்பட்டது கூடக் கிடையாது. 'இது' கேட்கிறதே என்று வீடே முயல் வேட்டையில் இறங்கிவிட்டது!

அண்ணா எப்படியோ யார், யாரிடமோ சொல்லி மூன்று, நான்கு முயல்களைப் பிடித்து விட்டார். ஆனால் பாவம்! அதற்கு அவர் ரொம்ப கஷ்டப்பட்டிருக்கிறார். "ஐயரே! முயல் ரத்தம் வேணுமா? கொண்டு வந்து தரலாம். முடி நல்லா வளரும். முசலைக் கேக்கறீகளே! அடிச்சா சாப்பிடப்போறீக? பின்ன எதற்கு முசல்?" என்பது போன்ற கேள்விகளுக்கு அவர் பதில் சொல்லவேண்டியிருந்தது! "என்னது பையன் விளையாடறதுக்கா? அதுக்குப் போய் மெனக்கெட்டு யாரு சாமி முசலைப் பிடிப்பாக. சாப்பிடறதுக்குன்னா சொல்லுங்க பிடிச்சுத்தரேன்." என்பார்கள். இந்தக் காலம் போல் கடைக்குப் போய் விளையாட்டு முயல் வாங்கமுடியாத காலம். காட்டு முயலைத்தான் பிடித்து வர வேண்டும். அது பெரிய வேலை!

காட்டு முயல் தன் கைவரிசையைக் காட்டிவிட்டது. நந்து வருகிறேன் என்றாலே மூலையில் போய் உட்கார்ந்து கொள்ளும். அப்போது 'தாத்தா ரூம்' சும்மாத்தான் இருந்தது. தாத்தா இன்னும் இவர்களுடன் வந்து ஒண்டிக் கொள்ளவில்லை. எனவே அந்த ரூமில் கொண்டு வந்து முயலை விட்டு விட்டுப் போய் விட்டார்கள். ஓடி விடுமே! அதனால் வலையடித்த தடுப்பு வேறு. நந்துவிற்கு முயலைப் பிடித்து கொஞ்சவே முடியவில்லை. சே! இந்தப் பழம் புளிக்குமென்று அவனுக்குத் தோன்றிவிட்டது. ஓரத்தில் ஒண்டும் ஒரு ஜீவனை எவ்வளவு நாட்கள் பார்த்துக் கொண்டிருப்பது? இராக்குதான் சொன்னாள். 'இந்த பாரு, சாமி! நீ எவ்வளவு கூப்பிட்டாலும் அது ஒங்கிட்ட வராது. அதென்ன கன்னுக்குட்டியா?' நந்துவிற்கு கன்றின் மேலுள்ள பாசம் கூடிவிட்டது. எனவே கன்னுக்குட்டியுடனே விளையாடுவதாகச் சொல்லி விட்டான்.

இராக்கு வந்து ஒரு சாக்கில் முயல்களைப் பிடித்துப் போனாள். அடுத்த நாள் அவள் விரிந்த கூந்தலில் சிவப்பாக எதையோ தடவிக் கொண்டிருந்தாள். இவனைப் பார்த்து சிரித்தாள். அவள் கூந்தல் இப்படி கரு, கருவென்று ஏன் வளர்கிறது என்று நந்து புரிந்து கொண்டான்.

0 பின்னூட்டங்கள்: