வைகைக்கரை காற்றே நில்லு......002வையை நதிக்கரையில் தனக்கென ஒரு சன்னிதி கொண்டு, சுதந்திர நாயகியாக, நந்தி முன் நிற்க வீற்றிருக்கும் சௌந்தர்யநாயகியின் கடைப்பார்வை அச்சிறுவனின் மேல் படும் முன்னர், இன்னும் கிழக்காக வையைக்கரையில் சோமசுந்தரக் கடவுளுடன் கம்பீரமாய் வீற்றிருக்கும் மீனாட்சி அருட்பார்வை கிடைத்துவிட்டது. ஆனால் இவள் ஆலவாய் நகர் மீனாட்சி அல்ல! மானாமதுரை மீனாட்சி!! அதுவொரு புராதணமான கோயில். அக்கோயிலில் ஸ்ரீ ஞானாநந்தர் பல சித்துகள் செய்திருப்பதாக வெகு காலத்திற்குப் பின் மானாமதுரையைச் சார்ந்த ஒரு டாக்டர், எழுத்தாளரை கோலாலம்பூரில் இவன் சந்தித்தபோது அறிந்து கொண்டான். அவனுக்கு கோயிலை விட மிகவும் பிடித்த இடமாக அப்போது பட்டது மானாமதுரை புகைவண்டி நிலையம்தான். ஓடாத குட்ஸ் வண்டிகள் அங்கு நின்று கொண்டிருக்கும். அதில் ஒளிந்து விளையாட சௌகர்யமாய் இருக்கும். அதிகப்பேர் இருக்க மாட்டார்கள். இரயிலடி வீட்டிற்குப் பின்புறம்தான். ஓடும் வண்டியை நிறுத்த பெட்டிகளுக்கிடையில் ஒரு குழல் போகும். இதன் வழியாக ஓட்டுநர் சூனியத்தை (vaccum) அனுப்ப வண்டி நிற்கும் என்பது பௌதீகம். ஆனால் இந்தச்சுட்டிகள்தான் அந்தக் குழலைக் கழட்டி அதிலுள்ள வளையங்களை எடுத்து விடுகிறார்களே! அதன் பின்னும் வண்டு எப்படி பிரேக் போடுகிறது என்பது தெரியவில்லை. அரியலூர் விபத்து இவனால் அல்ல என்பது மட்டும் நிச்சயம். லால்பகதூர் சாஸ்திரி இதற்குப் பொறுப்பேற்றுக் கொண்டு பதவி விலகினார், பாவம் பொழைக்கத்தெரியாத மனிதர்!

உலகின் அதி நீளமான நதிக்கரை மானாமதுரையில்தான் உள்ளது என்று அச்சிறுவன் நம்பினான். இக்கரையிலிருந்து அக்கரைக்குப் போக அரை மணி நேரம் கூட ஆகும். அதுவும் அக்கரை ஆஞ்சநேயருக்கு ஏதாவது வேண்டிக் கொண்டால் போச்சு. இவன் வாழ் நாளில் கடந்த அதி உச்ச தூரம் மானாமதுரையில்தான்! இவ்வளவு கஷ்டப்பட்டு ஆஞ்சநேயர் கோயிலுக்குப் போனால் வடைமாலை பிரசாதமாகக் கிடைக்கும். ஆஞ்சநேயருக்கு அந்த வடை பிடிக்குமோ தெரியாது, நம்ம ஹீரோவுக்குப் பிடிக்காது. அது வடையிலும் சேர்த்திலில்லாமல், தட்டையிலும் சேர்த்தியில்லாமல் இரண்டும் கெட்டானாய் இருக்கும். இதில் வடைபூரா மிளகு!! அச்சோ! அச்சோ!! பாவம் ஆஞ்சநேயர் அவ்வளவு வடையையும் மாலையாய் சார்த்திக்கொண்டு ஒரு தும்மல் இல்லாமல் எப்படித்தான் நிற்கிறாரோ தெரியாது. பட்டர் போனபிறகு அச்சு, அச்சு என்று தும்பினால் யாருக்குத் தெரியப்போகிறது. பகலிலேயே கோயில் ஒதுக்குப்புறம் பயமாக இருக்கும். இரவில் எவன் வருவான் அந்தப் பக்கம்? அதுவும் அஞ்சலையின் பிள்ளை தும்பினால் பயப்படாமல் இருக்க முடியுமா?


அக்காவிற்கு கல்யாணமாகும் போது இவனுக்கு ஒரு வயது! கைக்குழந்தையின் பெயர் சுந்தர்.


நம்மாளுக்கு அதிக நண்பர்கள் மானாமதுரையில் கிடையாது. அது அவன் கோகுலமுமல்ல. அது ஒண்ட வந்த இடம். ஆனால் இவர்கள் இருந்த வீட்டிற்கு ஒரு ராப்பிசாசும் ஒண்ட வந்தது ஆச்சர்யம். இரவு 10 மணிக்கு மேல் டொக், டொக்கென்று யாரோ உலக்கையைப் போட்டு அடிப்பர். அது பிசாசு என்று குடும்பமே நம்பியது. பகலில் அந்தச் சத்தம் கேட்காது.

இவனுக்கு திருப்பதி என்றொரு பெரியப்பா (என்ன பெயரப்பா!). அவர் கடைந்தெடுத்த கஞ்சர். அவர் தன் தம்பி குடும்பத்தைப் பார்க்க வந்திருந்தார். வரும் போது கையில் பெரிய போணி கொண்டு வந்திருந்தார். ஆனால் அதை வாசலில் (திண்ணை) ஓரமாக வைத்து விட்டு உள்ளே போனதை இவனைத் தவிர யாரும் பார்க்கவில்லை. ஏனெனில் நம்ம ஹீரோவுக்கு வெளியில்தானே ஜோலி எப்போதும்! பையன் யாருக்கும் தெரியாமல் திறந்து பார்த்த போது தேங்குழல், அதிரசம் போன்ற தின்பண்டங்கள்!! நம்மாளுக்குத்தான் இதெல்லாம் பிடிக்குமே. ஒரு பிடி பிடித்து விட்டு, உள்ளே போய் பெரியப்பாவிடம் ஒன்றுமே தெரியாதது போல், "பெரியப்பா நீங்க எதையோ திண்ணையிலே மறந்து வைத்து விட்டீர்கள்! எடுத்து வரட்டுமா?" என்று கூற. மனிதர் பதறிப் போனார் (தம்பி குடும்பம் பெரிசு, போணியைத் திறந்தால் எல்லாம் போச்சு! என்னும் பயம்). எப்படியோ சமாளித்து விட்டார். பேசாமல் இருந்தால் போகும் போது காலணா தருவதாகச் சொன்னார். இவனும் சரியென்றான். போகும் போது எப்போதும் பெயராத பெரியப்பா இவனுக்கு லஞ்சமாக ஒரு காலணா தந்தார். சும்மா இருந்ததற்கு. ஆனால் அவர் வீடு போனபின்தான் தெரியும், பாதி பக்ஷணம் போணியில் போணியாகிவிட்டதென்று!!

வைகைக் காற்று இன்னும் வீசும்.....

0 பின்னூட்டங்கள்: