வைகைக்கரை காற்றே நில்லு......003

ஒக்கூர் வெள்ளையஞ் செட்டியார் பள்ளி பஸ் ஸ்டாண்டிற்கு அருகில். அங்கு பாரதியாரின் சகோதரர் வேலை பார்த்தார் என்று பின்னால் அவனுக்குச் சொன்னார்கள்! ஆனால் ஒண்ணாம் கிளாஸ்ஸிற்கெல்லாம் பாரதியின் சோதரர் தேவையில்லைதானே! அந்தப்பள்ளியில் படித்ததற்கான எந்தச் சுவடும் அவனுக்கு இல்லை. ஆசிரியர் பெயர், ஆம்பிளை வாத்தியாரா? பொம்பிளை வாத்தியாரா? ஒன்றும் நினைவில் இல்லை. பள்ளிக்கு தொடர்ந்து போனது கூட நினைவில் இல்லை. ஆனால், அந்த ஸ்கூலுக்குப் போகும் வழி நன்றாக ஞாபகம் இருக்கிறது அவனுக்கு. கடைத்தெரு வழியாகப் போக வேண்டும். கடைகளில் பலவகையான சாமான்களைப் பார்த்துக் கொண்டு போவது சுகம். மானாமதுரை இரயில்வே ஸ்டேஷனும் அருகில்தான். எல்லோருக்கும் போல் அவனுக்கும் எஞ்சின் டிரைவராக வரவேண்டுமென்ற ஆசை இருந்தது. இவர்கள் வீட்டிற்கு நேர் எதிரே பாண்டித்தேவர் வீடு. அவரின் மனைவியை இவனுக்குப் பிடிக்கும். பெரிய கொண்டை. பெரிய உடம்பு. எப்பப்போனாலும் அன்பாக அணைத்துக் கொள்வாள். அவள்தான் இவனது யசோதை அப்போது. பாண்டித்தேவர் சிவாஜி கணேசன் போலிருப்பார். அவருக்கு இவனை விட இவனது அக்காவை ரொம்பப்பிடிக்கும். அவருக்கு பாலு என்றொரு பையன் உண்டு. இவனுக்குப் பெரியவன். விளையாடத்தோதில்லாமல் பெரியவன். அவனை இவனுக்குப் பிடிக்காது. தண்டவாளத்தைக் கடந்து மேற்கே போனால் நிரைய கூஜா, தண்ணீர்ப் பானைகள் பரந்து கிடக்கும். மானாமதுரை மட்பாண்டம் உலகப்பிரசித்தி (இப்படித்தான் சொல்வார்கள், யார் கண்டது?) அம்மா, ஒரு மண்பானை வாங்கி அதில் வெட்டிவேர் போட்டு வைப்பாள். அந்த நீர் குடிக்க சுவையாக இருக்கும்.

மானாமதுரையில் கொண்டாடிய தீபாவளி ஞாபகம் இருக்கிறது. நிறையப் பட்டாசு. அதில் கைத்துப்பாக்கி போல் ஒரு ராக்கெட். கையில் வைத்துக் கொண்டு விடலாம். சுர்ரென்று நேரே பாய்ந்து செல்லும். உலகிலுள்ள வெகுளிகளின் தலைவியாகும் தகுதி இவன் அக்கா கமலாவிற்கு உண்டு. அவளுக்கு தனியாக யாரும் நகைச்சுவை ஊட்ட வேண்டியதில்லை. வேடிக்கை ஊறிக்கொண்டிருக்கும் உள்ளமது! திருப்பதி மொட்டையைக் கண்டால் சிரித்து விடுவாள். வாழைப்பழச் சறுக்கலில் யாராவது விழுந்தால் கிடந்து சிரிப்பாள். பெரியவர்கள் திட்டுவார்கள். அப்படி சிரிக்கக் கூடாது என்று. ஆனால் அவளது சிரிப்பு இவனுக்கு ஒட்டிக் கொள்ளும். அந்தத் தீபாவளியில் எப்படியோ இவளுக்கு கைத்துப்பாக்கி ராக்கெட் கிடைத்து விட்டது. இப்படிப் பிடிக்கணும் அப்படிப் பிடிக்கணுமென்று எல்லோரும் சொல்லும் முன் இவள் ராக்கெட்டை விட்டு விட்டாள். அது நேராக ரோட்டில் சைக்கிளில் போய்க் கொண்டிருந்த ஒருவரின் தலையைப் பதம் பார்த்து விட்டது. மண்டைக்கு நடுவில் ரோடு போட்ட மாதிரி முடியைக் காணவில்லை. குய்யோ முறையோ என்று அவர் வீட்டை நோக்கி வருகிறார். எல்லாம் ஆளுக்கொரு திசைக்கு ஒளிந்து கொள்ள ஓடுகிறது. இந்தக் கமலம் சிரியோ, சிரியென்று அந்த ஆளப்பார்த்து சிரித்துக் கொண்டிருக்கிறாள்!!


வெகுளிகளின் தலைவி கமலா, அக்கா குழந்தையுடன்


நம்ம ஹீரோவுக்கு அப்போதே நாட்டியம், நாடகம் இவற்றில் ஈடுபாடு உண்டு. ஒயிலாட்டம் என்றொரு நாட்டியம் அந்தப் பக்கத்தில் ஆடுவர். கையில் கைக்குட்டையை விரலிடுக்கில் வைத்துக் கொண்டு முன்னும் பின்னும் ஆட்ட வேண்டும். வேடிக்கையாக இருக்கும். அன்று கோகுலாஷ்ட்டமி. கண்ணன் பிறந்த தினம். அன்று பார்த்து இவனுக்கு நாட்டியக் கச்சேரி! வெளியிடம் போயாகிவிட்டது. நினைவெல்லாம் அம்மா செய்யும் வெல்லச் சீடை, தட்டை இவற்றில்தான் இருந்தது. ஆடிக் களைத்து மேடையை விட்டுக் கீழே இறங்கினால் ஒரு டபேதார் (சிப்பந்தி) கையில் ஒரு டப்பாவில் வெல்லச் சீடை, உப்புச் சீடை, முருக்கு இவைகளை வைத்துக் கொண்டு நிற்கிறார். இவள் அன்னை இவனுக்கு அளித்த பரிசுகளில் இதுதான் இன்றளவும் இவனுக்கு பெரிதாக நினைவில் நிற்கிறது. ஞாபகம் வைத்திருந்து குழந்தை ஆசைப்படுவானே என்று ஆளனுப்பி பக்ஷணம் தருவித்தாளே! அதுவல்லவோ அன்னை மனது.

திருப்புவனத்தில் பெரிய தாத்தா மஞ்சக்காணி சொத்தாக தந்த வீடு மீண்டும் இந்தக் குடும்பத்திடம் வந்தது. அதற்காக அப்பா ரொம்ப உழைத்தார் என்று சித்தி சொல்லுவாள். மானாமதுரையை விட்டு திருப்புவனம் பயணம் ஆரம்பித்தது. வாடகை வீடில்லாமல் சொந்த வீட்டிற்கு செல்லும் ஆர்வம் எல்லோருக்கும். அப்போதுதான் பசுமாடு கன்று ஈன்றிருந்தது. அதை கழுத்தில் வாகாகப் போட்டுக் கொண்டு வீட்டு வேலையாள் நடக்க மாட்டு வண்டி கோகுலத்தை நோக்கி நடை போடத்துவங்கியது. வழக்கம் போல் முன் சீட் நம்ம ஹீரோவுக்குத்தான் கிடைத்தது. வலது புறம் வையை என்னும் பொய்யாக் குலக்கொடி மெல்ல நடந்து கொண்டிருந்தாள்.

0 பின்னூட்டங்கள்: