வைகைக்கரை காற்றே நில்லு......004

அது மாட்டு வண்டியாகட்டும், குதிரை வண்டியாகட்டும் அவனுக்கு முன்னுக்கு உட்காருவதில் ஆர்வம். முன்னேறிச் செல்லும் வேகம் பிடிக்கும். முகத்திலடிக்கும் காற்றுப் பிடிக்கும். முகரச் சொல்லும் வாசம் பிடிக்கும். பாயும் வேகத்தில் பயந்தோடும் சனங்கள் பிடிக்கும். பைய நடக்கும் பசங்களைப் பார்த்து கையசைத்து வெவ்வே காட்டப் பிடிக்கும். ஆனால் பிடிக்காத ஒன்று மாட்டுக்காரன் மாட்டைச் சவுக்கால் அடிக்கக் கூடாது. நம்ம ஹீரோவுக்கு கெட்ட கோபம் வந்துவிடும். சில நேரங்களில் சாட்டையை பிடுங்கிய அநுபவங்கள் உண்டு. குதிரை வண்டியில்தான் பெரிய பிரச்சனை. சில வண்டிக்காரர்கள் குதிரையை 'மாட்டடி' அடிப்பார்கள். அப்போது இந்த்ச் சிறுசு சண்டைக்குப் போய்விடும். குதிரை, அது இழுக்கும் வண்டு, ஓடும் தெரு எல்லாமே தன் சொந்தம் போல் பாவிக்கும் வண்டிக்காரர்களுகும் இவனுக்கும் எப்போதும் லடாய்தான். இவனை இறக்கினால்தான் வண்டி விடுவேன் என்று சண்டை போட்ட்ட வண்டிக்காரர்கள் உண்டு. ஆனால் 80 விழுக்காட்டு வண்டிக்காரர்கள் தங்கள் பிராணிகளை அன்புடன் நடத்தவே விரும்பியதால் இவனது வேண்டுகோள் அவர்களுக்கு உற்சாகமளிக்கும். இவன் போகும் வண்டியில் பெருத்த சத்தம் வந்தால் அதற்கு இவன் காரணம் என உணர்க. இவனைக் குஷிப்படுத்த வண்டிக்காரர் சாட்டைக் கட்டையை வண்டிச் சக்கரத்தில் விட்டு டகடா, டகடா என்று சத்தம் எழுப்புவார். அந்தச் சத்தத்தைக் கண்டு பயந்து குதிரை பாயும். நம் நந்த குமாரனுக்கு உற்சாகம் பீச்செடுக்கும்! மாணாமதுரையை விட்டகன்ற மாட்டுவண்டி ஏறக்குறைய சொந்த வண்டி மாதிரி. "ஐயா எப்படி சொல்லீற்களோ, அப்படியே பதிவிசா ஓட்டறேன்" என்று சொல்லும் வண்டிக்காரர். பின் பயண சுகத்திற்குச் சொல்லவா வேண்டும்!

நீண்ட நெடிய பயணமது. அடுத்த12 ஆண்டுகளுக்கு அவனது பயணம் பூவணநாத புரியில் இருக்கும் என்று அப்போது அவனுக்குத் தெரியாது. ஒரு சிவஸ்தலம் எப்படி கோகுலமாகப் போகிறதென்றும் அப்போது அவனுக்குத் தெரியாது. அப்போது தெரிந்ததெல்லாம் வழியில் போகும் ஆடுகள், வாத்துக் கூட்டம், மீனவர், இடையர், பறைவைகள், சுற்றியிருக்கும் புளிய மரங்கள், சுகமான காற்று இவைதான். திருப்புவனம் வந்த போது இவன் அக்கா மடியில் தூங்கிக் கொண்டிருந்தான். அதுவே ஒரு நீண்ட பயணத்தின் முத்தாரமாய் அமைந்தது.

'பத்ம நிலையம்' அதிக அகலமில்லாமல் நீண்டு கிடந்தது. திண்ணை, ரேழி, கூடம், முற்றம், அடுப்படி, கொல்லை. கொல்லையில் ஒரு ஓரத்தில் கக்கூஸ் இருந்தது. மாட்டுக் கூடமிருந்தது. அதில் மாட்டைக் கட்டி கன்றை இறக்கிவிட்டதும் அது நிற்கத்தடுமாறியது. தோள் சுகம் அதற்கும் பிடித்து விட்டது! மாடு 'மா' என்று கத்தியது. வாலைத்தூக்கிக் கொண்டு மூத்திரம் போனது. 'டே! இந்தப் பக்கம் வாடா! என்று அக்கா இழுக்க இவன் முருங்கைக் கொப்பில் மோதினான். அது பொசுக்கென்று ஒடிந்து விழுந்தது. கமலம் வழக்கம் சிரித்துக் கொண்டு, 'நாளைக்கு முருங்கைக் கீரை மசியல்' என்று அவளாகவே பிரகடணப்படுத்திவிட்டு அகன்றாள். முருங்கை ரொம்ப தொட்டாச்சிணுங்கி. அதற்குப் பின் எப்போது அந்த மரத்தில் ஏறினாலும் அது பொடுக்கென்று ஒடிந்துவிடும். எப்போதும் பாராட்டா கிடைக்கும். முது வீங்கிய சமயமும் உண்டு.

திருப்புவனம் வந்தவுடன் இவனை மீண்டும் பள்ளிக்கு அனுப்ப வேண்டுமென்ற பேச்சு வந்தது. அது அவனுக்கு அளப்பிலா துக்கத்தைத் தந்தது. மெதுவாக இரவு அம்மாவிடம் சொன்னான், "அம்மா! பள்ளிக்கூடம் வேண்டாம், நான் பாட்டுக்கு சமத்தா விளையாடிக் கொண்டிருக்கிறேன்" என்றான். 'கூடவே இரண்டு ஆடு வாங்கிக் கொடு! மேய்த்துக் கொண்டிருக்கட்டும்' இது செல்லம். அவள் ஒருவளுக்குத்தான் உலகிலேயே ஸ்கூலுக்குப் போகப்பிடிக்கும். அவள்தான் அடுத்த நாள் ஒட்டப் பள்ளிக்குக்கூடத்திற்கு இட்டுச் சென்றாள். ஒட்டர் என்று சொல்லும் குறவர் குடிசைகள் அந்த ஆரம்ப நிலை பள்ளிக்கு அருகில் இருந்ததால் அந்தப் பள்ளியை குரப்பள்ளி அல்லது ஒட்டப்பள்ளிக்கூடம் என்பார்கள். அங்குதான் அவன் பன்றிகள் பற்றிய பல சூட்சுமங்களை அறிந்து கொண்டான். குரவர்களும் பன்றியும் ஏறக்குறைய ஒரே மாதிரியான வாழ்வை வாழ்ந்து வந்தனர்!

தலைமை ஆசிரியர் வீட்டிற்கு தேங்காய், பழம் சகிதம் கிளம்பிவிட்டாள் செல்லம். அப்பா எங்கே போனார் என்று தெரியாது. அம்மா வெளியே வரமாட்டாள். கமலாவிடம் சொன்னாள் அவள் அடுத்த ஊர் பள்ளிக்கூடத்தில் சேர்த்தாலும் சேர்த்து விடுவாள். எனவே ஒரே விவரமான ஆளு இந்தச் செல்லம்மாதான். அவளே அப்போது பெரிய பள்ளியில் படித்துக் கொண்டிருந்தாள். இருந்தாலும் அவள் பதிவிசாக டீச்சரிடம் சொல்லி சேர்த்து விட்டாள். ஆனால் அவனுக்கு ஒன்று புரியவில்லை. மானாமதுரையிலும் ஒண்ணாம் கிளாஸ். திருப்புவனத்திலும் ஒண்ணாம் கிளாஸ்!

0 பின்னூட்டங்கள்: