வைகைக்கரை காற்றே நில்லு......005

மானாமதுரை வீட்டில் இராப்பிசாசு ஒன்று கூடவே ஒண்டியிருந்தாலும் அது யாரையும் தொந்தரவு செய்வதில்லை. அனேகமாக அந்த வீட்டில் குடியிருந்து இறந்து போன கிழவியாக இருக்கலாம். அதான் இராவெல்லாம் பாக்கு, வெத்திலை இவைகளை இரும்பு உரலில் போட்டு 'டொக்கு, டொக்கு' என்று இடித்துக் கொண்டிருக்கும். சாதுவான கிழவியாகத்தான் இருக்க வேண்டும். அது பாட்டுக்கு எங்கோ மூலையில் கூடவே வாழ்ந்து கொண்டிருந்தது! ஆனால் பகலில் கிழவி வெத்திலை போடுவதில்லை. எனவே சத்தம் கேட்காது. அந்த வீட்டில் பெரிய முற்றம். அதைச் சுற்றி வீட்டறை இருந்தது. நம்ம நந்த குமாரனுக்கோ மானாமதுரையில் அதிக சகவாசம் கிடையாது. எனவே இவன் தந்தை இவனுக்கு ஒரு மூன்று சக்கர வண்டி வாங்கிக் கொடுத்திருந்தார். அதை அந்த முற்றத்தைச் சுற்றி நாள் பூரா சுற்றிக் கொண்டிருப்பான். அலுக்கவே அலுக்காது. ஆனால் திருப்புவனம் வீடு கட்டாரி கோமணம் மாதிரி நீண்டு கிடந்தது. முற்றமுண்டு ஆனால் அதைச் சுற்றி வண்டி ஓட்ட முடியாது. ஓட்டினால் வேகத்தில் ஒன்று யாரையாவது முற்றத்தில் சாய்க்க வேண்டும் இல்லையெனில் இவன் முற்றத்தில் விழ வேண்டும். அதுவொன்றும் ஆழமான முற்றமல்லதான். மானாமதுரை முற்றம் ஆழமானது, ஆனால் விழவேண்டிய அவசியமில்லாமல் சுற்றுப்பாதை பரவலாக இருந்தது. எனவே திருப்புவனம் வந்த பிறகு வண்டி ஓட்ட வேண்டுமெனில் தெருவில்தான் விட வேண்டும். தெரு மேடும் பள்ளமுமாக இருந்ததால் அவனுக்கு அதில் ஓட்டுவதில் சிரமம் இருந்தது. அதைப் பின்னால் அந்த வீட்டிற்கு வந்து சேர்ந்த சகலை வெகுவாக குறைத்து விட்டான்.

பத்மநிலையம் என்பது அம்மாவைப் பெற்ற அம்மாவின் பெயரான பத்மாவதிப் பாட்டியை நினைவாக வந்தது. இவன் பாட்டியைப் பார்த்ததில்லை. அவள் போட்ட அழகான எம்பிராய்டரி ஓவியத்தையும் அதில் மறக்காமல் ஆங்கிலத்தில் பத்மாவதியென எழுதியிருப்பதும் மட்டும்தான் இவனது பாட்டி நினைவுகள்! பத்மநிலையத்திற்கு இரண்டு முகப்பு உண்டு. வாசல் அந்தணர் தெருவை நோக்கியும் கொல்லை கோனார் தெருவை நோக்கியும் இருக்கும். இதுவொரு வசதி, காலையிலும் மாலையும் கொல்லையிலிருந்து கிருஷ்ணக்கோனார் வந்து பால் கறந்து கொடுத்துவிட்டுப் போவதற்கு வசதியாக இருந்தது. வந்து சேர்ந்தபோது கொல்லைக்குச் சுவரே இல்லாமல் திறந்து கிடந்தது. நல்லவேளை கக்கூஸுக்கு ஒரு மண் சுவர் இருந்தது. பொண்டுகள் நிரம்பிய வீடு. எனவே முதல் வேலையாக கொல்லைக்கு மண் சுவர் எழுப்ப வேண்டும். கான்கிரீட் சுவர் எழுப்ப அப்பாவிடம் நிதிப் பற்றாக்குறை. அந்த வீட்டைக் கொள்ளைப் பணம் கொடுத்து அப்போதுதான் அடமானத்திலிருந்து மீட்டிருந்தார். யார் அதை அடமானம் வைத்தது என்பது அவனுக்குப் போகப் போக தெரிந்தது. அதுவொரு சுவாரசியமான கதை.

சுவர் கட்டுவதற்காக வந்தவந்தான் கட்டாரி. அது என்ன பெயரென்று தெரியாது. அவனிடம் உன் வயதென்ன என்று கேட்டால் தெரியாது என்று காவிப்பல் தெரிய சிரிப்பான். பாரதிக்கு ஒரு கண்ணன் என்னும் சேவகன் வந்த மாதிரி அந்த வீட்டிற்கு கட்டாரி வந்து சேர்ந்தான். காலையில் வருவான். நாள் பூரா உழைப்பான். வீட்டிலேயே சாப்பிட்டுக் கொள்வான். மாலையில் மீண்டும் ஆற்றைக் கடந்து அக்கரைக்குப் போய்விடுவான். எங்கிருந்து வருகிறான் எங்கு போகிறான் என்று இவனுக்கும், இவன் வீட்டாருக்கும் தெரியாது. மழை பெய்து மண் சுவரெல்லாம் கரைந்து விட்டால் 'மூக்கில் வேர்த்தது' மாதிரி வந்துவிடுவான். கட்டாரி இப்படிப் பல காலம் பழகியதால் அவனை அம்மாவின் தம்பி என்று அழைக்கும் ஒரு சம்பிரதாயம் வந்தது. வேடிக்கையாக 'டேய் உங்க மாமா' வந்துட்டார் டோ ய்' என்று இவனிடம் சிலர் சொல்லுவதுண்டு. கட்டாரி எப்போதும் கோமணம்தான் அணிந்திருப்பான். அவன் வேட்டி, சட்டை போட்டு யாரும் பார்த்ததேயில்லை. அவனுக்கு சாப்பாடு போக அதிகப்படி கூலி என்பது அம்மா போட்டு மிச்சமிருக்கும் கொழுந்து வத்திலை, பாக்குதான். அம்மா வெத்திலை போட்டால் வாய் அப்படியே கோவைப்பழம் போல் சிவந்துவிடும். பாவம் கட்டாரிக்கு பல பற்கள் அரித்திருந்தன. அவன் செம்படவ இனத்தைச் சேர்ந்தவன். வைகை நதியில் மீன் பிடிப்பான். மீன் பிடிப்பது எப்படி என்று இவனுக்கும் பின்னால் கற்றுத்தந்தான். ஆனால் நந்தகுமாரனுக்கோ மீன் பிடித்து மீண்டும் ஆற்றில் விடத்தான் ஆசை. கட்டாரி மீனை சமைத்துச் சாப்பிடுவான். முகப்பிலிருந்து சிவன் கோயில் நந்தவன மலர்களின் வாசம் வரும். கொல்லையிலிருந்து கருவாடு பொறிக்கும் நாத்தம் வரும்.

சுவர் வருவதற்கு முன் ஒன்றுடன் ஒன்றாய் இந்த வீட்டுடன் வாழ்ந்து வந்தவள் இராக்கு. இவள் இசை வேளாலர் குடும்பத்தைச் சேர்ந்தவள். தேவதாசி முறை முற்றாக ஒழியாத காலம். இராக்குவிற்கு பெரிய உடம்பு. பெரிய மார்பு. பெரிய கொண்டை. அவள் கருவாடு பொறிக்க ஆரம்பித்தால் வீட்டுக் கதவைப் பூட்டிக் கொண்டு ஒண்ணுக்கு வந்தால் கூட யாரும் கொல்லைக்குப் போவதில்லை. மற்ற நாட்களில் இராக்கு மாதிரி ஒரு தோழி அம்மாவிற்குக் கிடையாது. இராக்குவிற்கு கோபம் வந்து இவன் பார்த்தது கிடையாது. எப்போதும் சிரித்தமுகம். அவளுக்கு இரண்டு சமைஞ்ச பொண்கள். பெரியவள் லட்சுமி, சின்னவள் மீனாட்சி. பெரியவள் அழகு, அடக்கம். சின்னவள் அதற்கு எதிர்மாறு. எப்போதும் இவனுடன் வம்பு இழுத்துக் கொண்டேயிருப்பாள். கருவாடு வேணுமா என்று கேட்பாள். இவன் வேண்டாம், வேண்டாமென்று அழும் வரை இவனைப்பிடித்து வைத்துக்கொண்டு அழுச்சாட்டியம் செய்வாள். ஆனால் அவள் இவன் அக்காமார்களுக்கெல்லாம் தோழி. கமலாவிற்கும், லட்சுமிக்கும் ஏறக்குறைய ஒரே வயது. சுவரில் கையை வைத்துக் கொண்டு இரண்டும் பேசிக் கொண்டே இருக்கும். மழை பெய்து முடிந்துவிட்டால் தரையிலிருந்து ஈசல் கிளம்பும். இராக்குவின் இரண்டு பெண்களும் மண்ணுடன், மண் வாய் வைத்து 'குளியோ! குளியோ' என்று கூவுவர். அந்தச் சத்தம் கேட்டு ஈசல் பொசுபொசுவென்று வெளியே வரும். கபக், கபக்கென்று பிடித்து அதன் இறக்கையைப் பிடுங்கி சட்டிப்பாணையில் போட்டு மூடிவிடுவர். இரவில் பொறித்துச் சாப்பிடுவார்கள். நெய் வாசம் வரும் என்று மீனாட்சி சொல்லுவாள். இவன் அவளை என்றும் நம்பியதில்லை. ருசி காட்டி என்றாவது வாயில் ஈசலைத் திணித்தாலும் திணித்து விடுவாள் என்ற பயம். இராக்கு இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டு நெடிய கூந்தலை சிடுக்கு எடுப்பது ஒரு ஓவியம் போல் பார்க்க அழகாக இருக்கும். ஈசல் பிடித்தபின் தாயும் மகளும் பேன் வார ஆரம்பிப்பார்கள். எடுக்க, எடுக்கக் குறையாமல் ஈறும் பேனும் வந்து கொண்டே இருக்கும். பேனுக்கு ஒப்பாரி வைப்பது போல் சிடுக்கு, சிடுக்கு என்று ஈறு முறியும் ஓசை!

கட்டாரியின் தயவால் வீட்டின் கொல்லைக்கு நாலாபுறமும் மண் சுவர் கட்டியாகிவிட்டது. ஆனாலும் கக்கூஸ் சுவரில் ஒரு பெரிய ஓட்டை எப்படியோ விழுந்திருந்தது!

0 பின்னூட்டங்கள்: