வைகைக்கரை காற்றே!......007

கொல்லையில் கிணறு வெட்ட வேண்டிய தேவை வந்தது. இவர்கள் வந்திறங்கியபோது ஒரு பாதாளமான பெரிய குழி இருந்தது. இராத்திரி கக்கூஸுக்குப் போகும்போது யாராவது விழுந்து தொலைத்தால்? எனவே கிணறைத் தூறு எடுத்து தொட்டி கட்டி எழுப்ப வேண்டும். வண்டியில் சிமிண்ட் வளையங்கள் வந்து சேர்ந்தன. கொஞ்சம் கொஞ்சமாக கிணறை ஆழ, அகலப் படுத்தினர்.

கமலா அண்ணாவைப் பார்த்து 'ஏதாவது புதையல் கிடக்குமோ?' என்றாள். அவர்கள் வீட்டில் தந்தையை அண்ணாவென்று அழைக்கும் வழக்கம் இருந்தது. சில வீடுகளில் ஐயா என்றும் அழைப்பர். பக்கத்து வீட்டில் அப்பாவென்று அழைப்பர். அண்ணா சிரித்துக் கொண்டே 'கிணறு வெட்ட பூதம் கிளம்பாமல் இருந்தால் சரி!' என்றார். அவருக்கு செலவுக்கு மேல செலவு. வீட்டிற்கு இன்னும் கரெண்ட் வரவில்லை. இரவெல்லாம் ஒரே இருட்டு.

ஒருவழியாக கிணறு நிறைவுறும் போது தண்ணீர் மட்டம் மள, மளவென்று ஏறி வந்தது எல்லோருக்கும் ஒரே மகிழ்ச்சி. குளித்து கும்மாளமடிக்கலாம். நந்துவிற்கு குளிக்கப் பிடிக்கும். அப்போதுதான் குளித்து வந்திருப்பான். அக்கா குளிக்கப் போவாள். இவன் மீண்டும் ஓடி வந்து அவளுடன் ஒட்டிக் கொள்வான். அப்புறம் இன்னொறு அக்கா. இப்படி நாள் முழுவதும் குளியல்தான். அம்மாதான் வந்து இழுத்து விடுவாள். நாளை ஜலதோஷம் வந்தால் அவள்தான் அவதிப்படனும். அம்மா தலை தோட்டுவது மாதிரி இந்த உலகில் யாரும் தலை தோட்ட முடியாது என்பது நந்துவின் கருத்து. ஒரு பூவைத் தொடுவது போல் தலையைத் தொட்டு துவட்டுவாள். இந்த சௌந்திரம் தோட்டினால் தலை பிஞ்சுவிடும்!

வாசலைப் பார்த்து சிவன் கோயில் பெரிய மதில். அதில் அழகாக வெள்ளை, சிவப்பு அடித்திருக்கும். மதிலில் பறந்து வந்து மயில் கூவும். மாடப் புறாக்கள் மதில் பொந்தில் கூடு கட்டி வாழ்ந்து வருவதால் 'க்கும், க்கும்' என்று எப்போதும் ஒரு சத்தம் இருக்கும். கோயிலில் பெரிய நந்தவனமும், பெரிய கிணறுமுண்டு.

வீடு கொஞ்சம் கொஞ்சம் சரியாகிவரும் போது சித்தி தன் இரண்டு குழந்தைகளுடன் திருப்புவனம் வந்து சேர்ந்தாள். இவர்களுடன் நிரந்தரமாகத் தங்கிவிட! சித்தப்பா எங்கேயோ தேசாந்திரம் போய்விட்டார் என்ற முகாந்திரத்துடன்.

0 பின்னூட்டங்கள்: