வைகைக்கரை காற்றே!......008

பத்மநிலையம் இருந்தது இரட்டை அக்கிரஹாரம் என்னும் பகுதியில் சிவன் கோயில் தெருவில் இருந்தது. அத்தெருவின் மூலையில் பஞ்சாங்க ஐயர் (உண்மையில் ஐயங்கார்) வீடு, அடுத்து காளமேக ஐயங்கார் வீடு, அடுத்து அத்தியான பட்டர் வீடு, அடுத்து பத்ம நிலையம், அடுத்து பஞ்சாங்க ஐயரின் இன்னொரு வீடு (இங்கு ஒரு சுவாரசியமான டீச்சர் வரப்போகிறார்கள்), சாரதா டீச்சர் வீடு, அடுத்து கிச்சு, கிச்சு மாமா வீடு, அடுத்து மிக்சர்கடை பலராம ஐயர், அடுத்து ஜடாதர ஐயர் வீடு. அடுத்த பகுதிக்கு அப்புறம் போவோம்.

கிச்சு கிச்சு மாமா அந்தத்தெரு வாண்டுகளின் சிம்ம சொப்பனம். மனிதர் கிச்சு கிச்சு மூட்டியே உயிரை எடுத்து விடுவார். அவர் வீட்டைத்தாண்டும் போது வாண்டுகள் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு ஒரே ஓட்டம் ஓடிவிடும். ஆனால் கிச்சு கிச்சு மாமா மூலையில் காத்துக் கொண்டிருப்பார் 'கபக்' கென்று பிடித்துவிடுவார். அவர் கையில் மாட்டிக் கொண்டால் அது முதலை வாயில் அகப்பட்டது மாதிரி. என்ன திமிறினாலும் விட மாட்டார். சில நேரங்கள் கை திருகிக்திருகி சிவந்துவிடும். சிலர் அழுவார் சிலர் சிரிப்பார். கிச்சு கிச்சு மாமாவிடம் மாட்டிக் கொண்டவர் சிரித்துக் கொண்டே அழுவர். நந்துவிற்கு இப்போது நினைத்தாலும் கைகள் சிவந்த தடம் இருப்பது போல் ஒரு பிரமை. அவருக்கு என்ன அப்படியொரு முரண் விளையாட்டு?

மாமிக்கு குழந்தையே இல்லை. போகும் வரும் குழந்தைகளைப் பார்த்து ஏக்கப் பெருமூச்சு விடுவாள். அந்தத் தெருவிலேயே அதிகக் குழந்தைகள் நாராயண ஐயங்காருக்குத்தான். ஏழு முயற்சிகள் தோல்வியுற்ற பின் எட்டாவது முயற்சியில் பிறந்தவன் நந்தகுமாரன். அப்பாடா! என்று அதற்குப் பின் பிறப்பென்பது அந்த வீட்டில் நின்றுவிட்டது. ஆனால் கிச்சு கிச்சு மாமாவுக்கோ குழந்தை பாக்கியமில்லை. மாமி நந்துவிடம் மிக அன்பாக இருப்பாள். தின்பண்டங்கள் தருவாள். அவளைப் பார்க்கப் போகும்போதுதான் முதலை பிடித்துக் கொள்ளும். மாமி கூட குழந்தை அழுவதைப் பார்த்து, 'சே! விடுங்கோன்னா! பாவம் குழந்தை அழுகிறது!" என்பாள். ஆனால் மாமாவிற்கு கிச்சு கிச்சு மூட்டுவதில் ஒரு வெறித்தனமான இன்பம் இருந்தது.

மூலை வீட்டு பஞ்சாங்கய்யங்கார் எதிலும் பட்டுக் கொள்ளவே மாட்டார். அவருக்கு பெரிய பசங்கள். ராமன், கோபாலன் என்று. நிறையக்காசு உண்டு. ஆனால் அழுது வழிந்து கொண்டிருக்கும் வீடு. காளமேகம் உறவுதான். ஆனால் அம்மா ஏனோ ஒட்ட வேண்டாமென்று சொல்லிவிட்டாள். அத்தியான பட்டர் அடுத்த சிம்ம சொப்பனம். ஒரே விரட்டல்தான் குழந்தை என்றில்லை, பெரியவர்களைக்கூடத்தான். ஓய்வுபெற்ற உயர் அதிகாதி அவர். அதே அதிகாரம் இன்னும் தூள் பறக்கும். அவர் மனைவி பாட்டியோ அதற்கு மேல். மடி, ஆச்சாரமென்று இதுகளை நெருங்க விடமாட்டாள். பலராம ஐயரை பார்க்கவே முடியாது. மனிதர் மாடாக உழைத்துக் கொண்டிருப்பார். இரவு வந்துவிட்டு அதிகாலையில் போய் விடுவார். அவரைப் பார்க்க வேண்டுமெனில் புதூர் மிக்சர் கடையில்தான் பார்க்கமுடியும். புதூர் ரொம்ம்ம்ப தூரம். அவர் இரவு தாமதமாக வந்தாலும் ஆரோக்கியமாக இருந்தார் என்பதை அவர்கள் வீட்டு மூன்று பிள்ளைகள் ஒரு பெண் சொல்லும். அவர் பெண் சகுந்தலா அப்படியே கன்னடத்துப் பைங்கிளி சரோஜாதேவி மாதிரியே இருப்பாள். அவளைக் காப்பதே கடமையென இருக்கும் அவள் அன்னை ஆண் வாடையே வீட்டுப்பக்கம் வரக்கூடாது என்று சபதம் போட்டிருந்தாள். நந்து சின்னவன் என்றாலும் 'சாண் ஆனாலும் ஆண்' இல்லையா. அதனால் அவனுக்கும் தடையே! ஜடாதரைய்யர் மெலிந்த மனிதர். உடல் நலக்குறைவால் எப்போதும் சிடு, சிடு என்றிருப்பார். அவருக்கு மூத்த மனைவி மூலமாக ஒரு பெரிய பையனும், இரண்டாம் மனைவி மூலமாக ஒரு சிறு பையனுமுண்டு. அவனுக்குப் பெயர் 'குட்ட மணி'. அவன் நந்துவின் சீடன்!

நந்துவின் கோகுல பரிவாரங்கள் மெல்ல மெல்ல உருவாகும் காலமது. பிராமணர்கள் மட்டுமே அதுவரை வாழ்ந்திருந்த இரட்டை அக்கிரகாரத்தில் முதல் முறையாக பெரியசாமிப் பிள்ளை வீடு வாங்கினார். அவர் ரோடு காண்டிராக்ட் எடுத்ததில் நிறைய சம்பாத்தித்து விட்டார் என்று சொல்லுவார்கள். அந்த இரட்டை அக்கிரகாரத்திலே புதுசாகத் தெரியும் ஒரே வீடு அவருடையதுதான். அவர் மனைவி சொர்ணம் சுத்தத்தங்கம். எப்போது நந்து போனாலும் வீட்டிற்குள் அழைத்து சோபாவில் உட்காரச் சொல்வாள். நந்து வீட்டில் சோபா கிடையாது. ஒரே ஒரு கட்டில்தான் உண்டு. வருபவர்கள் தரையில் உட்கார்ந்தே பேசுவர். சொர்ணத்திற்கு ஒரு சமைஞ்ச பெண் ஜோதி, மூன்று பசங்கள். அதில் பெரியவன் மணி (நந்துவிற்கு மூத்தவன்), அடுத்த பாண்டி, நாகன். இவர்கள் நந்துவின் பரிவாரங்களாக உடனே ஆகிப்போயினர்.

அத்தியான பட்டர் வீட்டிலிருந்து கோபியர்கள் இனிமேல்தான் வரப் போகிறார்கள்.

0 பின்னூட்டங்கள்: