வைகையின் ஸ்பரிசம் இன்னும் உடலில்....

இரவுகள் நம்மை ஒரு படிம உலகிற்கு இட்டுச் செல்கின்றன. பாதி புரிந்து, பாதி புரியாத பிக்காசோ உலகமது. கனவு போன பின் எஞ்சியிருக்கும் எச்சங்களை வைத்துக் கொண்டு மீண்டும் ஒரு ஓவியம் தீட்ட வேண்டியுள்ளது. அஜந்தா குகைகளில் ஆயிரம் வருஷத்து அழிந்த ஓவியங்களை மீண்டும் உயிர்ப்பித்தல் போன்ற ஒரு செயல். நானொரு தேர்ந்த ஓவியன் என்று சொல்வதற்கில்லை!


எனது கனவுகள், எனது கவிதைகள் இவைகளில் என் வாசகர்களின் பங்கும் நிரம்ப இருக்கிறது. கள் தோன்றுவதற்கு கிரியா ஊக்கிகள் இருப்பது போல... உஷா என்னை மீண்டும் நந்தகுமாரனின் உலகிற்குச் செல் என்று கேட்டுக் கொண்டார். நந்து மீண்டும் என்னுள் புகுந்து கொண்டான்.

நந்து பெரியவனாகி இருக்கிறான். பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் வைகைக்கரைக்குப் போகிறான். அவன் குளித்து விட்டு அந்தத்தெருவில் நடக்கிறான். அவனுக்குத் தெரிந்தவர்களென்று சொல்ல ஒருவரும் அங்கில்லை. ஆயினும் அவனுக்கு அந்தத்தெருவில் ஒரு உரிமை இருப்பதை ஏதோ உணர்த்துகிறது.

இரட்டை அக்கிரஹாரத்தின் இன்னொரு பகுதி. குளித்த ஈரம் தலையில் இன்னும் இருக்கிறது. உடல் ஈரம் காய்ந்து விட்டது. ஆனாலும் துவட்டிக் கொள்ளச் சொல்கிறது மனது. ஒரு வீட்டில் ஒரு அம்மா யாருடனோ பேசிக் கொண்டிருக்கிறாள். இவன் உரிமையுடன் அவளிடம் ஒரு துண்டு தாருங்கள் துவட்டிக் கொள்ள வேண்டுமென்கிறான். கைகள் எதையோ மறைத்து நிற்கின்றன. ஆம் நந்து நிர்வாணமாக இருக்கிறான். வெட்கம் இருக்கிறது. எப்படி ஆடையே இல்லாமல் இவ்வளவு தூரம் வந்தான் என்று அவனுக்குத் தெரியவில்லை!

ஆனால் அங்குள்ள பெண்கள் இதைக் கண்டு கொள்ளவில்லை. அதை ஒரு பொருட்டாகவே அவர்கள் காணவில்லை. அந்தப் பெண் இவனுக்கு துண்டு தருகிறாள். இவன் பக்கத்து அறைக்குள் புகுந்து துவட்டிக் கொள்கிறான். உடல் ஈரம் அனேகமாகக் காய்ந்த பின்னும் ஏன் துண்டு கேட்டு தொந்தரவு செய்தோம் என்று வருத்தமடைகிறான். இந்த நினைவுடன் குனிந்த தலை நிமிரும் போது அங்கு வேலையாள் நின்று கொண்டிருக்கிறாள். இவனுக்கு மீண்டும் வெட்கம். அவள் பயந்த வண்ணம் அந்த அறையிலிருந்து நகர்கிறாள்.

நந்து அந்தத்துண்டை நன்றாகக் கட்டிக் கொண்டு வெளியே வந்து அந்த அம்மாவிடம் தான் யார் என்ற விவரத்தைச் சொல்கிறான். இவனது குடும்ப விவரம் அவளுக்குத் தெரியாது. தான் சிறுவனாக இருந்த போது அந்தத்தெருவே அவனுக்கு உறவாக இருந்து அதை இன்று இழந்து விட்ட அவலத்தைச் சொல்கிறான்.

அவள் ஆறுதலாக, இவ்வளவு நேரம் பேசிவிட்டுப் போன பெண் இவனது உலகமறிந்தவள் என்றும். இவனது குடும்ப விவரங்களைப் பற்றி இவளிடம் சொன்னாள் என்றும். அவள் சொல்லும் போது கண்கள் பனித்திருந்தன என்றும் சொன்னாள். அது அவனுக்கு ஆறுதல் அளித்தது.

எதிரே கிருஷ்ணய்யர் வீடு. ஆனால் அது கோயில் சுவருடன் இணைந்திருந்தது. திருநெல்வேலியிலிருந்து இங்கு வந்து குடியேறி காபி கிளப் வைத்து பெரும் பணக்காரர் ஆனவர் கிருஷ்ணய்யர். அவர் கொஞ்சம் கொஞ்சமாக அக்கிரகாரத்தில் பல வீடுகளை வாங்கியவர். ஆனால் அவர் வீடு இன்று கோயில் சுவருடன் இணைந்து ஐக்கியமாகியிருந்தது ஆச்சர்யமாக இருந்தது.

அந்தப் பெண் திடீரென்று உங்களுக்கு இலங்கைத் தமிழர்களைத் தெரியுமா? என்று கேட்கிறாள். "ஓம்! அதற்கென்ன? எனக்கு நிறைய இலங்கை நண்பர்கள் உண்டு" என்று சொல்கிறேன். அவள் சொல்கிறாள், "அக்கிரஹாரத்து சனங்கள் அவர்களுக்கு வீடு வாடகைக்கு விடவே இப்போதெல்லாம் ஆசைப்படுகின்றனர்" என்கிறாள். அது அவனுக்கு இன்னும் ஆச்சர்யத்தைத் தருகிறது.

கட்டிய துண்டுடன் அவன் 'பத்ம நிலையம்' வருகிறான். வீடு பூட்டி இருக்கிறது. உள் தாட்பாளை கையை விட்டு நகர்த்தப் பார்க்கிறான். சித்தி உள்ளேயிருந்து யார் என்று கேட்பது காதில் விழுகிறது.

0 பின்னூட்டங்கள்: