வைகைக்கரை காற்றே!......020

அண்ணா வழக்கம் போல் இரவில்தான் வீடு திரும்பினார். மதுரையிலிருந்து அம்மாவிற்கு மல்லிகைப்பூவும், குழந்தைகளுக்கு திருநெல்வேலி அல்வாவும் வாங்கி வந்திருந்தார். கையில் காசு வந்திருக்கிறது என்று அர்த்தம். வேறு அர்த்தங்களும், எதிர்பார்ப்பும் இருந்திருக்கக்கூடும். பாவம்! அந்தப்பலவீனம்தான் 'பத்ம நிலையத்தின்' விதியை மாற்றிவிட்டது!

குழந்தைகளெல்லாம் ஏறக்குறைய தூங்கிய நிலையில் தரையில் கோணல்மாணலாக படுத்துக் கிடந்தன.

"பாலகிருஷ்ணன் திரும்பி வந்துட்டான், தெரியுமோ?" என்றாள் கோகிலம்.

"அப்படியா?" என்றார் அண்ணா கொட்டாவிவிட்டுக் கொண்டே. கோகிலத்திற்கு பேச்சை எப்படி மேலே கொண்டு போவதென்று தெரியவில்லை.

"நம்மோடையே இருந்துக்கறேன் என்கிறாள் குஞ்சரம்"

"வீடுன்னு ஒண்ணு வந்தவுடனே வந்துடுவாளே. ஏன் அவன் இந்த வீட்டை அடமானத்திலேர்ந்து எடுத்திருக்கக்கூடாது?"

"அவனுக்கு அல்ப வருமானம்தானே"

"எனக்கு மட்டும் கலெக்டர் உத்யோகமா?" என்று அண்ணா சொன்னவுடன் கோகிலத்தின் கண்கள் கலங்கிவிட்டன. இந்த வீட்டை எடுப்பதற்கு அவர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார்கள். ஐந்து குழந்தைகளுக்கு சாப்பாடு போட்டு வளர்த்து வீட்டையும் மீட்க வேண்டுமென்பது பிரம்மபிரயர்த்தனமன்றோ!

"நேக்குத்தெரியாதா. ஏதோ கேக்கிறா. பாவம்ன்னு படறது மனசு"

"நீ இப்படி பாவப்பட்டுண்டே இருந்தா, உன் பிள்ளை குட்டியை எவன் காப்பாத்துவான்?"

"கோவப்படாதீங்கோ! பாலகிருஷ்ணன் ஒழுங்கா சம்பாதிச்சு காப்பாத்தறேன் என்கிறான். அவனுக்கு சீரழிந்து போயிருக்கும் ரெங்கநாதர் கோயிலைக் கட்டி எழுப்பணும்ன்னு ஆசை வந்துடுத்து. அதான் திருப்புவனம் வரேங்கறான். அது அவா பூர்வீகச் சொத்து இல்லையா? இந்தப் பிச்சை அதை கவனிக்காம சீரழிச்சுட்டான். அவாளோட சண்டை போட்டு கோயில் நிலங்களை மீட்க வேண்டும். அதுக்கு இங்க இருந்தாத்தான் தோது என்கிறான். என்ன சொல்றேள்" என்று அண்ணா கொண்டுவந்த மல்லிகைப்பூவைத் தலையில் சூடியபடி கோகிலம் கேட்டாள்.

மல்லிகையின் மணம் கொல்லென்று வீசியது. தலையாணியைத் தட்டிப் போட்டாள் கோகிலம். அண்ணா கவுந்துவிடுவார் என்பது அவளுக்குத் தெரியும்!

சித்திக்கு அதிகம் சொத்து, பத்துக் கிடையாது. ஒரே ஒரு டிரெங்குப் பெட்டியுடன் ஜாகைக்கு வந்து விட்டாள். அடுக்குள்ளை ஒட்டிய பின் போர்ஷன் அவளுக்கென்று ஆகியது. அங்கு சுவர் எழுப்பி குடுத்தனமாக்குவது ஜோசியர் பொறுப்பில் வந்தது. சமையல்தான் தனியே தவிர மற்றபடி குழந்தைகள் பொது இடத்தைப் பயன்படுத்திக் கொண்டனர். வராண்டாவிலேயே படுத்துக் கொண்டனர். ஜோசியருக்கு மட்டும் ரோஷத்தின் காரணத்தால் அந்த வீட்டில் படுக்க மனம் இடம் கொடுக்கவில்லை. சிவன் கோயிலை ஒட்டியிருந்த நடராஜ பட்டராத்துத் திண்ணையில் படுத்துக் கொண்டார். சாப்பிட மட்டும் இங்கு வருவார். சித்தி ஒரு மண்ணெண்ணெய் ஸ்டவ் வைத்துக் கொண்டு சமையல் செய்தாள். சித்தியாவிற்கு அவர்களது பூர்வீகத் தொழிலான பஞ்சாங்கம் பார்ப்பது, கோயில் உற்சவங்களுக்கு நாள் பார்ப்பது போன்ற விஷயங்களைக் கவனித்துக் கொண்டதால் நாள் விசேஷமென்றால் காய் கறிகள், தேங்காய் போன்றவை வீடு நோக்கிவரும். அது சில நேரங்களில் இரண்டு குடும்பங்களுக்கும் போதுமானதாக இருக்கும்.

சித்தியாவும், அண்ணாவும் நேருக்கு நேர் பார்த்து வீட்டு விஷயங்களைப் பற்றிப் பேசிக்கொண்டதில்லை. எல்லாம் அம்மாவூடாகத்தான் நடைபெற்றன. ஜோசியரும் வீட்டிற்கு ஏதாவது செய்யவேண்டுமென்று 'எலெக்டிரிக் கனெக்ஷன்' கொடுக்க ஏற்பாடு செய்தார். அவர் உபயமாக பத்மநிலையம் மின்சாரம் பெற்றது. மின்சாரத்தை மிச்சம்பிடிக்க ஜீரோ வாட் பல்பு பல இடங்களில் தொங்கியதால் பல நேரங்களில் மின்சாரம் இருந்ததற்கும் இல்லாததற்கும் அதிக வேறுபாடு இல்லாமல் இருந்தது. அடுக்குள் புகையில் எந்த பல்பு போட்டாலும் அது ஜீரோ வாட்டாக மாறும் நிலையும் இருந்தது. விடுதி அய்யங்காரத்து நாராயணன்தான் முன்னிருந்து எல்லா வேளைகளையும் கவனித்துக் கொண்டான்.

அந்த ஊருக்கு அப்போதுதான் மின்சாரம் வந்ததால் அதை உபயோகிப்பதில் எவ்வளவு கவனமாக இருக்கவேண்டுமென்பதற்கு தெரு முனையில் சினிமாப்படம் காண்பிக்கப்பட்டது. நந்துவிற்கு இந்தப்படங்கள் மிகவும் பிடித்தன. கல்யாணவீடு ஜெகத்ஜோதியாக இருக்க வேண்டுமென்று விரும்பும் பெண்ணின் தந்தை நல்ல வயர் வாங்கிப்போட மட்டும் கஞ்சப்பட்டார். விளைவு கல்யாணத்தன்று சரியான பாதுகாப்புமுறைகள் கடைப்பிடிக்கமுடியாததால் தீப்பற்றிக் கொண்டு கல்யாணப்பந்தலே ஜெகத்ஜோதியாக எரிகிறது. இது ஒரு படம். ஊர் பூரா கைகொட்டிச் சிரித்தது. ஆனால் அது சிரிக்கக்கூடிய சமாச்சாரமில்லை என்பதை சேதுவும், தாத்தாவும் பின்னால் நிரூபித்தனர்.

குஞ்சரம் வேக, வேகமாக ஓடிவந்தாள் அடுக்குள்ளை நோக்கி. "அக்கா! யார் வந்திருக்கா பார்?"

நந்து அந்த மஞ்சள் நிறத்தாத்தாவைப் பார்த்துக் கொண்டு இருந்தான். வெள்ளைக்காரன் போல் தொப்பியெல்லாம் வைத்திருந்தார். "இவர் யாரும்மா?" என்றான் நந்து.

முகத்தைத்துடைத்துக் கொண்டு அடுப்படியிலிருந்த வந்த அம்மா, "யாரு? அப்பாவா? எப்ப வந்தே?" என்றாள்.

"டேய் இவர் உன் தாத்தாடா" என்றாள்.

"இவர் ஏன் மஞ்சளா இருக்கார். இவரை மஞ்சள் தாத்தான்னு சொல்லலாமா?" என்றான் நந்து.

"இவன்தான் உன் வாண்டுவா. நன்னாப் பேசறான்" என்று சொல்லிக்கொண்டு நந்துவிற்கு பொட்டலத்தை பிரித்து பிஸ்கெட்டுக்களைத்தந்தார். அந்த பிஸ்கெட்டிலும் தொப்பி போல் இனிப்பு ஒட்டிக் கொண்டிருந்தது.

நந்து மஞ்சத்தாத்தாவைப் பார்த்து சிரித்தான்.

கோகிலம் இவர் ஏன் இப்போது வந்தார் என்று யோசித்துக்கொண்டிருந்தாள்.


நந்துவின் தாத்தாவின் சாயலில் ஒருவர்!

வைகைக்கரை காற்றே!......019

சித்தியின் ஆத்துக்காரரை இவர்கள் 'சித்தியா' என்று அழைத்தனர். சித்தியா வித்தியாசமான பேர்வழி. இவர் தெய்வமாக பிறந்திருக்க வேண்டியவர். ஏனோ மதுரைப்பக்கம் வந்து மனுசராகப் பிறந்து விட்டார். தெய்வங்கள் நினைத்தவுடன் கிளம்பிப்புறப்பட வாகனங்கள் உண்டு. மண்டூகங்களுக்கு புத்தி கொடுப்போம் என்று சரஸ்வதி நினைத்தவுடன் அன்னம் வந்து நிற்கும். அது தாமதமான வேளையில் பிறந்த பலர் திருப்புவனத்திலுண்டு என்பது வேறு விஷயம்! விஷ்ணுவிற்கு பக்த வத்சலன் என்று பெயர் வரக் கருடன் காரணம். அவர் எள்ளென்றால் பெரிய திருவடி (அதான் கருடன்) எண்ணெய் என்று நிற்கும். சிவன் முரட்டுத்தனமான கொடையுள்ளம் கொண்டவர். ஐயோ பாவம்! பக்தன் என்று நினைத்து விட்டாலே காளை மாடு உசுப்பிக் கொண்டு கிளம்பிவிடும். இப்படி சித்தியா நினைத்தவுடன் கிளம்ப திருப்புவனத்திலோ, மதுரையிலோ வாகனங்கள் இல்லை. மதுரையில் நிற்கும் போது திருப்புவனம் போக வேண்டுமென்று நினைப்பார். அப்போது சிவகெங்கை போற வண்டிதான் நிக்கும். இவர் திருப்புவனத்திலிருந்து மதுரை போக வேண்டுமென நினைக்கும் போது எதிர் பக்கத்து வண்டிதான் வந்து நிக்கும். ஆனால் இதற்கெல்லாம் சித்தியா கவலைப்பட மாட்டார். பிறப்பு எடுத்தாச்சு. பஸ்ஸும் லாரியும்தான் ரோட்டுலே ஓடுது. அவர் நினைக்கும் போது எந்த வாகனம் வருகிறதோ அதில் ஏறிக் கொள்வார். அது எதிர் திசையில் போனாலும் பரவாயில்லை. ஏனெனில் இவர் கொலம்பஸ் போல் உலகம் உருண்டை, அதனால் கிழக்கே போக வேண்டுமெனில் மேற்கு வழியாகவும் வரலாமென்பது இவருக்குத்தெரியும். என்ன கொஞ்சம் நேரமாகும். 12 மைல் தூரத்திலிருக்கிற திருப்புவனம் வர இவர் பிரான்மலை வழியாக வந்தால் காலையில் கிளம்பி மாலையில் வருவதுண்டு. அதனாலென்ன? பயணத்தின் இனிமை இலக்கில் இல்லை ஆனால் பயணத்தில் அல்லவோ உள்ளது? இது அறிந்தவர் சித்தியா!

ஊரெல்லாம் சித்தியா வந்து விட்டார் என்று பேச்சு. இது கோகிலம் காதிற்கும் வந்து சேர்ந்தது. அண்ணாவின் காதிற்கு எட்ட இரவு வெகு நேரமாகும். ஆனால் அதற்குள் சித்தி, சித்தியாவுடன் 'பத்ம நிலையம்' வந்து விட்டாள்.

"வா! கிருஷ்ணா. என்ன இப்படி எங்களையெல்லாம் தவிக்க விட்டுட்டு எங்கேயோ ஓடிட்டே?" என்றாள் அம்மா.

"நான் எங்கே ஓடினேன். பைத்தியக்காரி இவ, ஊரு பூறா நான் எங்கேயோ இவளை விட்டுட்டு ஓடிட்டேன்னு கதை விட்டுண்டு இருக்கா. நான் எங்கே ஓடிப் போனேன். அதான் திரும்ப வந்துட்டேனே!"

"சரிதாம்பா! இப்ப வந்துட்டே, ஆனா ரெண்டு வருஷமா குஞ்சரம் பட்ட பாடு எங்களுக்கின்னா தெரியும்"

"அதான் இருக்கேனே. கோகிலம் கொஞ்சம் குளிர்ச்சியா தீர்த்தம் கொண்டா. வெட்டிவேர் போட்டு வைச்சிருப்பியே. மானாமதுரையிலே இருந்தவளாச்சே!"

"அதுக்கென்ன? பானை நிறைய ஜலம் இருக்கு எடுத்துக்கோ. அது சரி, நீ இப்படி ரெண்டு வருஷமா எங்கேதான் போனே? ஓடிப்போனேன்னு இனிமே சொல்லலே!" என்று சிரித்தாள் அம்மா.

மதுரை ரயில்வே ஸ்டேஷன்னிலே நின்னுண்டு இருந்தேன். இராமேஸ்வரம் போயிட்டு வர ஒரு கோஷ்டி காசி போயிண்டு இருந்தது. வரேளான்னு கேட்டுது. சரின்னு கிளம்பிட்டேன்!"

"விடிஞ்சது போ! பொண்டாட்டி, குழந்தை ஞாபகம் அப்போ வரலையோ?"

"அவன்தானே என்னைக் கூப்பிடறான். அவன் இவாளைப் பாத்துக்க மாட்டானோ?"

"நன்னா சொன்னே போ! இப்படி எங்க வயித்தைக் கலக்கிட்டியே! குழந்தைகளுக்கு உன் முகமே மறந்து போச்சு"

பாலகிருஷ்ணன் என்ற சித்தியா சிரித்துக்கொண்டார். அவர் உட்கார்ந்து பொம்மணாட்டிகள்ட்ட பேச மாட்டார். கோகிலத்திடம் அவருக்கு ஒரு மரியாதை உண்டு. ஊரில் இப்படி பல பெரியவர்கள் வீடு தேடி வந்து கோகிலத்திடம் பேசி விட்டுப் போவார்கள். இதனால் படி தாண்டாப் பத்தினியான கோகிலத்திற்கு உலக விஷயம் முழுவதும் தெரியும். இரவில் அண்ணா வீட்டிற்கு வரும்போது அவருக்குச் சரியாக அம்மா விஷயம் அறிந்து வைத்திருப்பதைப் பார்த்து அண்ணா ஆச்சர்யப்படுவார். "ஏண்டி, உனக்கு ஏதாவது இட்சிணி வேலை தெரியுமோ? இத்தனை விஷயம் நோக்கு எப்படித் தெரியறது?" என்பார்!"தீர்த்ததை எடுத்துக்கோ. ஆமா! உனக்கு ஹிந்தி தெரியும்ன்னு எங்களுக்குத் தெரியாதே. வடநாட்டிலே அந்த பாஷைதானே பேசுவா?" என்றாள் கோகிலம்.

"எனக்கெங்கே தெரியும்?"

"பின்ன?"

"வேங்கடசலமய்யங்கார் சமிஸ்கிருதம் சொல்லிக்கொடுத்தது நல்லதா போச்சு. அத வச்சு சமாளிச்சுட்டேன்"

"சாப்பாட்டுக்கு என்ன பண்ணினே?"

"கைலேதான் தொழில் இருக்கே!"

"ஜோஸ்யத்தைச் சொல்றயா?"

"வேற எனக்கென்ன தொழில் தெரியும். நான் என்ன வலையனா? மீன் பிடிச்சு விக்க?" என்றார் சித்தியா கொல்லையில் வேலை செய்து கொண்டிருந்த கட்டாரியைப் பார்த்தவாறே!

"உன்னய யாரு இப்ப மீன் பிடிக்க சொல்றா? சமிஸ்கிருதத்திலே ஜோஸ்யம் சொல்ல நீ எப்ப கத்துண்டே?"

"துருவித்துருவி கேள்வி கேட்காதே! நான் தமிழ்லேதான் ஜோஸ்யம் சொன்னேன். அவனுக்குப் புரியலேன்னா எனக்குத்தெரிந்த சமிஸ்கிருதத்தை வச்சு சமாளிச்சுண்டேன்"

"அடேங்கப்பா! உங்க தாத்தா தோத்துப்போயிட்டார் போ! நீ ஜோஸ்யத்திலே சூரப்புலிதான்" என்றாள் கோகிலம் சிரித்துக்கொண்டே. "சரி, எங்கேல்லாம் போன சொல்லு?"

"விஜயவாடா, சிம்மாச்சலம்ன்னு தெலுங்கு தேசம் வழியா காசிக்குப் போனேன். தெலுங்குதான் நம்மாத்துலே புழக்கதுலே உண்டே. குஞ்சரம் கூட பேசுவாளே. அப்புறம் காசி, பிருந்தாவனம், கயான்னு எங்கெங்கோ போனேன்"

"அப்புறம் ஏன் திரும்பி வந்துட்டே?"

"காசிலேர்ந்து இராமேஸ்வரம் போறேன்னு ஒரு கோஷ்டி கிளம்பினது. இராமேஸ்வரம் போற வழிலதானே திருப்புவனம் இருக்குன்னு அவாளோட வந்துட்டேன்"

"நல்ல வேளை இராமேஸ்வரம் போற வழிலே திருப்புவனம் இருந்தது! இல்லாட்டி நீ பாட்டுக்கு திரும்ப எங்கேயாவது போயிருப்ப. அது சரி, இனிமேயாவது இவள வச்சு காப்பாத்துவியோ? இல்ல எங்கேயாவது திரும்ப க்ஷேத்ராடனம் போயிடுவியா?"

என்று அம்மா கேட்ட கேள்விக்கு வந்த பதில் பத்ம நிலையத்தின் விதியை மாற்றிவிட்டது.

வைகைக்கரை காற்றே!......018

ஆற்றில் வெள்ளம் வந்தது அக்கரையிலிருக்கும் சனங்களுக்கு பெரிய கஷ்டமாகப் போய்விட்டது. அந்த சமயத்தில் பஞ்சாயத்து போர்டு சேர்மனாக அக்கரையிலிருக்கும் பூவந்தியைச் சேர்ந்த சீமைச்சாமி இருந்தார். அவரால் திருப்புவனம் வரமுடியாமல் போய்விட்டது! காதைச் சுற்றி மூக்கைத்தொடுவது போல் அவர் மதுரைக்குப் போய் அங்கிருந்து திருப்புவனம் வர வேண்டியதாய்ப் போச்சு. இதற்கு ஏதாவது செய்ய வேண்டுமென்று அவருக்குத் தோன்றியது. வைகையின் குறுக்கே பாலம் ஒன்று போட வேண்டுமென்று ஒரு மனுப்போட்டார். அதற்கு உள்ளூரிலிருந்து பலத்த வரவேற்பு கிடைத்தது. அது வடிவெடுக்க பல வருடங்களானாலும் வெள்ளத்தால் விளைந்த சேதத்தில் அந்த ஊருக்குக் கிடைத்த ஒரே நன்மை ஒரு பாலம்.

அண்ணாவின் அண்ணாவிற்கு சதாபிஷேகமென்று அழைப்பு வந்திருந்தது. அவர் இரணியூர் என்னும் ஊரில் வாழ்ந்தார். அண்ணாவிற்கு நான்கு சகோதரர்கள். மூத்தவர் சேஷன். அடுத்தவர் திருப்பதி. அடுத்து நாராயணன் (அண்ணா). கடைசியாக கிருஷ்ணன். இவருக்கு அதிரசமென்றால் மிகவும் பிடிக்குமாம். அதனால் அவருக்கு 'அதிரசக் கிருஷ்ணன்' என்ற பட்டப்பெயர் வந்து விட்டது. ஆனால், பாவம் அவர் குறைந்த வயதிலேயே இறந்து விட்டார். சேஷன் பெரியப்பா பெரிய குடுமியுடன் வாட்ட சாட்டமாக இருப்பார். அவரது சாயலிலேயே கமலா இருப்பதாகச் சொல்வார்கள். கமலாவை அவருக்கு அதனால் கூடுதலாகப் பிடிக்கும். "டேய், கமலாபாய்! இங்க வாடா!" என்றுதான் கூப்பிடுவாராம். கமலா பெருமையாகச் சொல்லுவாள். அக்காமார்களில் பெண்மை அழகு கொண்ட கமலாவை அவர் பையன் போல் பாவித்தது ஒரு செல்லத்திற்கு என்றே கொள்ள வேண்டும்! திருப்புவனத்திலிருந்து இரணியூர் ரொம்ப தூரம். நேரடியாக பஸ் கிடையாது. அக்கரை போய், அங்கிருந்து சிவகெங்கை, காரைக்குடி வழியாக இரணியூர் போக வேண்டும். குடும்பத்துடன் வரும்படி பெரியப்பா எழுதியிருந்தாலும் அண்ணாவால் எல்லோரையும் அழைத்துக் கொண்டு போக முடியவில்லை. செலவுதான்! வேறென்ன காரணம்?

அம்மாவிற்கு வீட்டை விட்டு எங்கு போகப் பிடிக்காது என்றாலும், அம்மாவை விட முடியாது. போகாவிடில் பேச்சு வரும். "அம்பி வந்திருக்கானே! அவளுக்கென்ன வரதுக்கு? இந்த மதுரைக்காராளுக்கே கொஞ்சம் ராங்கி ஜாஸ்தி!" என்று ஓர்ப்படி சொல்லுவாள்.ஒரே ஒரு வாண்டு கூடப்போகலாமென தீர்மானமானது. நீ, நான் என்று ஒரே போட்டி. பங்கஜத்தைத் தவிர எல்லோரும் போட்டியில் கலந்து கொண்டனர். முடிவெடுப்பதற்கு முன்னமே சௌந்திரம் பாவடையை பெட்டியில் அடுக்கிவிட்டாள். கடைசியில் நந்துவை அழைத்துப் போகலாமெனத் தீர்மானமானது. இதில் சௌந்திரத்திற்குத்தான் ரொம்ப வருத்தம். ஜாலியாக வெளியூர் போகமுடியவில்லையே என்று. இவன் ஆம்பிளைப் பையன் என்பதால் இவனுக்கு மட்டும் செல்லமென்று திட்டிக் கொண்டிருந்தாள். ஆனால் அவள் பொருளாதரத்தில் பின்னால் பட்டமெடுக்கவிருந்தாலும் நந்துவின் தேர்விற்கு பொருளாதாரமே காரணம் என்பது அவளுக்குத் தெரியாமல் போய் விட்டது. இவன் ஒரு அரை டிக்கெட்டு. ஆள் குள்ளமென்பதால் இன்னும் அஞ்சு வயசாகவில்லையென்று ஓசியிலேயே கூட்டிக் கொண்டு போய்விடலாம்!

அப்பா, அம்மாவுடன் டிரங்கு பெட்டி சகீதம் ஆத்தைக்கடந்து அக்கரைக்குப் போனார்கள். அங்கு ஒரு விநோதமான பஸ் நின்று கொண்டு இருந்தது. அந்த பஸ்ஸுக்கு மூக்கு இருந்தது. இரயில் வண்டி மாதிரி புகை போக்கியும் இருந்தது. வண்டி கிளம்பும் முன் ஒரு ஆள் முன்னால் கடிகாரத்திற்கு சாவி கொடுப்பதுபோல் ஒரு கொக்கியை வைத்துக் கொண்டு குடைந்து கொண்டிருந்தான். அது எளிதில் கிளம்புவதாக இல்லை. பல முயற்சிக்குப் பிறகு பட, படவென புகை கிளப்பிக் கொண்டு ஆட ஆரம்பித்தது! கொஞ்ச நேரத்தில் பூவந்தி நோக்கிப் போக ஆரம்பித்தது. நந்து இந்த இடங்களையெல்லாம் அவன் வாழ்நாளில் பார்த்தது இல்லை!

வைகைக்கரை காற்றே!......017

ஆற்று வெள்ளம் வடிய பல வாரங்கள் ஆயின. ஆற்றின் முகமே மாறிப்போயிருந்தது. ஆழமாயிருந்த இடங்களெல்லாம் மேடு தட்டிப் போயிருந்தன. மேட்டில் ஓடி விளையாடிய இடங்களெல்லாம் காணவே காணோம்! கரையெல்லாம் ஒரே குப்பை, கூளம். சட்டைத் துணியிலிருந்து, ஜமுக்காளம் வரை எல்லாம் அழுக்கும், பிசுக்குமாக கரையிலும், அதற்கு மேலும் பரந்து கிடந்தன! ஜமுக்காளத்தை சுருட்ட நினைத்த பஞ்சப்பரதேசிகளுக்கு உள்ளே அழுகிய நாயும் கூடவே கிடைத்தது! ஆற்று வெள்ளத்தில் வீர சாகசம் செய்யப்போன இளவட்டங்களில் சிலர் காணாமலே போய் விட்டனர். கமலக்கிணத்து நீச்சு ஆத்து வெள்ளத்துக்கு ஆகாதுன்னு அப்போதான் ஊருக்குப் புரிஞ்சது.

அப்போதெல்லாம் அக்கரைக்குப் பாலம் கிடையாது. அக்கரைக்கு அப்பாலிருந்த சனங்களுக்கான சந்தை திருப்புவனத்தில்தான் உண்டு. எனவே ஆற்று வெள்ளம் வற்றாமல் ஓடிய போது பலர் சுரைக்குடுக்கையை இடுப்பில் கட்டிக்கொண்டு இக்கரைக்கு நீந்தி வந்ததுமுண்டு. என்ன? அரசமரத்துக்குக் குறி வைத்தால், திருப்புவனம் புதூரில் போய் இறங்குவார்கள்! புதூர் இன்னும் கிழக்கே இரண்டு மூணு மைல் போகணும். அப்புறம் திருப்பாச்சேத்தி வந்துவிடும். திருப்பாச்சேத்தி என்றாலே அந்த ஊரு அருவாள் தான் எல்லோருக்கும் ஞாபகம் வரும். திருப்புவனம் பழையூர் என்றொரு பகுதியுமுண்டு. அந்தப்பக்கம்தான் மயானம் இருந்தது. அந்தத்திசையே பார்க்கக்கூடாத ஒரு திசையாக அந்த ஊரில் இருந்தது. மதுரைக்குப் போகும் போது திருப்புவனம் எல்லை தாண்டியவுடன் மயானம்தான் வரும்."டேய் அந்தப்பக்கம் பாக்காதே!" என்று அக்காமார்கள் சொல்லிச் சொல்லி, திருப்புவனம் பெயர் பலகையைப் பார்த்தவுடனேயே நந்து வேறு பக்கம் திரும்பிக்கொள்வான். எம பயம் என்பது எல்லோர் உள்ளத்திலும் குடிகொண்டு இருந்தது. இதையறிந்துதான் மந்திரவாதிகளும், குடு குடுப்பாண்டியும் மண்டையோட்டுடன் அலைவார்கள். இவர்களைக் கண்டாலே உள்ளூர பயம் பலருக்கு. அதனாலே மேல் கேள்வி கேட்காம கேட்டதைக் கொடுத்து விடுவார்கள். அக்கிரஹாரத்து சனங்கள் கோயிலுக்கு பக்கத்திலேயே இருந்ததால் மயானம் என்பது தெரியாத ஒன்றாகவும், தெரிந்து கொள்ளக்கூடாத ஒன்றாகவும் இருந்தது.

சுரைக்குடுக்கையைக் கட்டுக் கொண்டு கட்டாரி ஆத்தைக் கடந்து வந்து விட்டான். நந்துவிற்கு ஒரே பெருமை. நம்ம வீட்டு கட்டாரி ஆத்து வெள்ளைத்தைக் கடந்து விட்டான் என்று எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருந்தான். அப்போதுதான் அவனுக்கும் சொரைக்குடுக்கை எப்படியிருக்கும் என்பதும் புரிந்தது! 'சொரைக்குடுக்கை பிச்சுக்கிட்டா என்ன செய்வே? கட்டாரி!' என்பது நந்துவின் கேள்வி. 'ஆத்தோட போக வேண்டியதுதான்' என்பது கட்டாரியின் பதில். ஆனால் கட்டாரி இதைச் சிரித்துக் கொண்டே சொல்வான்!ஆற்று வெள்ளம் வடிந்த பின்னும் பல மாதங்களுக்கு வீட்டுக்கிணறு நிரம்பியே இருந்தது. ராட்டினத்தில் போட்டு இறைக்காமல் குணிந்து எடுத்துக் குளிக்க முடிந்தது. ஆற்றில் வெள்ளத்தின் மீதி அங்கங்கே தங்கிப் போயிருந்தது. அது வாண்டுகள் குளுப்பதற்குத்தோதாக இருந்தது. ஆனாலும் சில இடங்களில் மூழ்கடிக்கக்கூடிய ஆழம் இருந்தது. நீச்சுத் தெரியாத நந்து ஆழம் தெரியாமல் காலை விட்டு ஆத்துத்தண்ணியை மடக்கு மடக்குன்னு குடித்ததுண்டு. கமலாவிற்கு மட்டும் இயற்கையாக நீந்த வந்தது. ஆனால் அவள் ஆத்துக்குள்ளெ குதித்தால் புஸ்ஸென்று பாவாடை ஒரு குடுவை போல் மிதக்கும். அதுதான் அவளை மூழ்கடிக்காமல் காப்பாற்றுகிறது என்பதெல்லாம் பௌதீகம் படிக்காத நந்துவிற்குத் தெரியாது. கமலா பெரிய நீச்சல் வீராங்கணை என்றே வீட்டில் பேச்சு. ஆனாலும் வீட்டிற்கு வந்தவுடன் தவறாமல் அம்மாவிடம் அடி கிடைக்கும். 'கேடு கெட்ட கழுதை! பெரியவளாயிட்ட பின்னால என்னடி ஆத்துலே போய் குளிக்கிறது? ஊருலே நாலு பேரு என்ன சொல்லுவா?' என்பதே அடிவிழுவதற்கான காரணமாக சொல்லப்படும். அந்த நாலு பேரு யாரு என்பது கடைசிவரை நந்துவிற்குத் தெரிந்ததே இல்லை. பாவம் ஆத்தில் கும்மாளமிட்ட குஷியெல்லாம் அம்மாவைக்கண்டவுடன் ஓடி விடும்! 'நந்து மட்டும் குளிக்கலாமா?' என்று கமலா வெகுளித்தனமாகக் கேட்டு வைத்து இன்னும் இரண்டு அடி வாங்கிக்கொள்வாள். 'அவன் ஆம்பிளைப் பையன். நீ பொம்மணாட்டி. மறந்துடாதே!' என்பதே அதற்கான பதிலாகக் கிடைக்கும். 'கட்டால போற கருவாக்கட்டை பாத்துண்டு இருந்தானோ?' என்று ஒரு கேள்வி வரும்.

கருவாக்கட்டையைப் பற்றி சொல்லும் முன்பு கோயில் காளை பற்றிச் சொல்ல வேண்டும்! கோயிலுக்கென்று சில காளை மாடுகளை நேந்து விட்டிருப்பார்கள். அந்த மாடுகளை யாரும் அடிக்கக்கூடக் கூடாது. அது பாட்டுக்கு திண்ணு கொழுத்துப் போயிருக்கும். பசு மாட்டைத்தொட்டுக் கும்பிட்டுப் பழகிய சில மாமிகள் தெரியாத்தனமா காளை மாட்டைத் தொடப்போய் (அதுவும் பிருஷ்ட்ட பாகத்தில்!) அது கூச்சமும், கோபமும் கொண்டு அதன் கூர்மையான கொம்பைத் திருப்ப விழுந்து அடித்துக் கொண்டு ஓடிய மாமிகளை நந்து கண்டிருக்கிறான் (மடிசார் தடுக்கும், இருந்தாலும் உயிர் இனிக்கும்). கோயில் காளைகளிடம் விளையாட்டுக் கூடாது!

கருவாக்கட்டையும் கோயில் காளை போல் கொழு கொழுவென்றுதான் இருப்பான். கன்னங்கரேலென்று இருப்பதால் அவனுக்கு கருவாக்கட்டை என்று பெயர். அவன் என்ன சாதி என்று தெரியாது. ஆனால் மைனர் செயினுடன் அவன் அக்கிரஹாரம் வழியாகத்தான் போவான். ஆத்துக்குப் போக வேற வழிகள் இருந்தாலும் அவன் அக்கிரஹாரம் வழியாகத்தான் போவான். அவனுக்கு சிவத்த குட்டிகள் தன்னைப் பார்த்து பொரும வேண்டும் என்று ஆசை. அவனை எதிர்த்துப் பேச மீசை முளைச்ச ஐயர்களுக்குக்கூட தைர்யம் கிடையாது. கிட்டு ஒருமுறை கேட்டு அறை வாங்கிக்கொண்ட பின் யாரும் கேட்பதில்லை. ஆனால் அக்கிரஹாரத்தின் எதிர்ப்பாக அவன் வருகிறான் என்றால் கோபமாக கதவைச் சாத்திக் கொள்வர் சிலர். சில வாண்டுகள் 'கருவாக்கட்டை! கருவாக்கட்டை!' என்று முரசு அறிவித்து விட்டு ஓடும். இது கதவை மூடுவதற்கான அறிவிப்பு என்றாலும் சில வீட்டு ஜன்னல்கள் இதைக்கேட்டுத் திறப்பதுமுண்டு!

முற்றுப்புள்ளிஇன்று
முற்றுப்புள்ளி என்னை
முத்தமிட்டது!
அதன்
அழுத்தத்தில்
ஆழத்தில்
அடர்த்தியில்
முழுமையில்
முற்றாக
மூழ்கியபோது
எண்ணில்லை
எழுத்தில்லை
எண்ணமில்லை
எழுத என்று
ஏதுமில்லை.
முற்றுப்புள்ளி

சாமியே!
ஒரு நண்பர் சமீபத்தில் மெரினா டாட் காம் என்னும் ரேடியோவை அறிமுகப்படுத்தினார். நியூயார்க் பக்கமிருந்து வருகிறது. நான் இந்த ரேடியோவைத் திறக்கும் போதெல்லாம் பக்திப் பாடல்களே வருகின்றன. நான் தூங்கலாமென்றால் அப்போதான் நாகூர் ஹனிபா எட்டுக்கட்டையில் பாடிக் கொண்டிருப்பார். ரொம்ப நாளைக்கு அப்புறம் "கேளுங்கள் தரப்படும், தட்டுங்கள் திறக்கப்படும்" பாட்டைக் கேட்டேன். எனக்குப் பிடித்த பாடல். ரொம்பவே ஆல் இண்டியா ரேடியோ போல் ரேடியோவை நடத்துகிறார்கள். அமெரிக்காவில் இருக்கிறவனுக்கு தேசிய கீதம்ன்னு "கொட்டு முரசே!" என்று டி.கே.பட்டம்மாள் பாட்டைப் போடுகிறார்கள். இவர்களுக்கு எது தேசியம்? (நமக்கேன் வம்பு? ஏற்கனவே வட கொரியாவை பின்னால குத்தப் போவதாய் - அதாவது பிரி எம்டிவ் ஸ்டிரைக்- சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்!).

நம்ம அனுராதா ஸ்ரீராமோட ரேன்சே தனி. மலை! மருதமலைன்னு அடிகுரலில் பாடுவார்கள். அப்புறம் 'அன்பென்ற மழையிலே' என்று உச்ச ஸ்தாயியில் பாடுவார்கள். இவர்கள் பாடிய பிள்ளையார் பாட்டு ஒன்று கேட்டேன். சூபர்!

இப்ப ஐயப்பா சீசன் போலருக்கு. ஒரே கேரள வாடை, ரேடியோவைத் திறந்தால்! யாரு இதை ஆரம்பித்து வைத்தது என்று தெரியவில்லை ஒரே கருங்கூட்டம் தென்னகம் முழுவதும். எந்தக் கோயிலுக்குப் போனாலும் இந்தக் கூட்டம் அலை போல் வந்து சாமி கும்பிட விடாமல் செய்து விடுகிறது. மதுரையில் மீணாட்சி கோயிலுக்கு அருகிலுள்ள நகைக் கடைத்தெருவில் கொஞ்ச காலம் குடியிருந்தோம். பாவிப்பயலுக! காலையே 4.30 மணிக்கு பஜனையை ஆரம்பித்து விடுவார்கள். இதுகளுக்கு வேற வேலையில்லைன்னா ஈரத்துணியை இடுப்பிலே கட்டிக்கிட்டு படுக்க வேண்டியதுதானே. ஊரையே ஏன் கூட்டணும்? விவஸ்தையே இல்லாத ஜனங்கள். பக்தி என்பது இறைவனுக்கும் நமக்குமுள்ள ஒரு அத்யந்த உறவு. இதை மைக் ஸ்பீக்கர் வைத்து பறை சாற்றக் கூடாது. இப்படிச் செய்வதிலிருந்து இவர்கள் எவ்வளவு மரத்துப் போய்விட்டார்கள் என்று தெரிகிறது! போனமுறை குருவாயூர் போயிருந்த போது இந்த காக்கா கூட்டம் ஓடி வந்து சந்நிதி பக்கமே என்னைப் போகவிடாமல் கெடுத்துவிட்டது. என்னையா அநியாயம் காலைலே 4.30 மணி தரிசனத்துக்கு இதுகள் ராத்திரி பத்தரை மணிக்கே துண்ட விரிச்சுறதுகள். சரி, நமக்கு லபிக்கலேன்னு வந்துட்டேன்! நமக்குத் திமிரு! ஊர்ல இருக்கிற பெருமாளை விட்டுட்டு குருவாயூர் போனா இப்படித்தான்! (குருவாயூர் மேலுள்ள பழைய பாடல்கள் அப்படி இனிக்கின்றன, என்ன செய்ய?)

இதுகளையெல்லாம் நாலு முறை ஆல்ப்ஸ் மலையிலே ஏற வைக்கணும். எந்தக் கூச்சலும் கும்பலும் இல்லாம வருஷா வருஷம் நாங்களும்தான் மலையேறிக் கொண்டிருக்கிறோம். ஆனா! இந்தக் காக்காய் கூட்டங்கள் போடற இரைச்சல் இருக்கே! பகவானே! (பகவதியேன்னு யார் கத்தறது? :-) தமிழ் மண்ணில் பக்தி கேளிக்கைப் பொருளாகிவிட்டது. நியூஜெர்சியில் ஐயப்ப பூஜைக்கான பொருள்கள் வாங்க என்று விளம்பரம் கேட்கும் போது 'காசிக்குப் போனாலும் கர்மம் தீராது' என்கிற பழமொழிதான் ஞாபகம் வருகிறது. பாருங்களேன் இதெல்லாம் வேண்டாம்ன்னு கொரியா வந்தாலும் விடமாட்டேங்கிறது! :-)

சரி, என் கவிதைத்தேர்வில் இது பற்றிய ஒரு கவிதையும் உள்ளது. எனக்குப் பிடித்தது. ஆனால் உங்கள் சொய்ஸ்ஸில் இடம் பெறவில்லை. போனா போகிறது இன்னொரு முறை படிச்சுப் பாருங்கள் பிடித்தாலும் பிடிக்கலாம்! (பை தி வே! ரொம்ப தாங்கஸ் பார் த செலக்சன்)


இரைச்சல்

கொஞ்ச நாளாக
காது மந்தமாகிவிட்ட
தொரு உணர்வு.

அடிக்கடி பார்க்கும்
சினிமா இரைச்சலா?
மார்கழிக்காலையில்
மிரட்டி எழுப்பும்
பக்தி இரைச்சலா?

என்ற விசாரத்தில்
மனையோரையும்
சேர்த்துக் கொள்ள
வேண்டும்.

குறிப்பு:
வீட்டில்
நாங்கள்
இருவர்தான்.

[போர்சூழல் பயில
ஒரு எதிரி போதுமே!]

அடங்கி ஒடுங்கி
அக்கடாவென்று
இருக்கையிலும்
அதே இரைச்சல்

உள்ளுக்குள் நிகழும்
சிந்தனை உரசல்கள்
'வாக்மேன்' வகை
இரைச்சல்கள் போலும்!

Alpha males

வாரமொரு வலைப்பூ அப்படின்னு ஒரு தலைப்புக் கொடுத்து இ-சுவடிக்கும், என் மடலுக்கும் ஒரு மடல் எழுத ஆரம்பிச்சு அப்படியே கிடப்பிலே விழுந்து போச்சு. வலைச் சறுக்கலில் எப்படியோ வலைப்பூ எனும் வலையகம் போன போதுதான், நம்ம சந்திரமதி இந்த ஐடியாவை செயல்படுத்திக் கொண்டிருப்பது தெரிந்தது.

வலைப்பூ கட்டாயம் எல்லோரும் படிக்க வேண்டும். முகவரி : http://valaippoo.blogspot.com/

நானொரு அம்மாஞ்சி! சுபா வாத்தியாரம்மா வேலை செஞ்ச போது அதை புக் மார்க் செஞ்சு வைச்சேன். அப்புறம் எப்போ போனாலும் அதுதான் வந்தது. சரி, வலையில் வலை விழுந்து விட்டது போலும் என்று போகவே இல்லை.

காலையே சுபா பேசறப்போ வலைப்பூ பற்றி என்னென்னமோ சொன்னா. அப்போதான் புரிந்தது நானொரு அம்மாஞ்சி, அசடு என்று. போய் பாத்தா இதுகள் அடிச்சிருக்க லூட்டி தாங்கலே! அடடா! விட்டுட்டோ மேன்னு கிடைச்ச எடத்திலே எழுதிட்டு வந்திட்டேன்.

நம்ம உஷா பாக்க ரொம்ப ஷோக்கா இருக்காங்க (இது ஒரு ரைம்க்குன்னு எடுத்துக்கணும்:-) திருப்புவனத்து நந்தகுமாரிகளின் வரவிற்கு காத்திருப்பதாக எழுதியிருக்காங்க. ரொம்ப சந்தோஷமா இருக்கு. வெட்கமாவும் இருக்கு. திருப்புவனதில் நந்து அடித்த லூட்டியை எழுதலாமா? வேண்டாமான்னு ஒரு போராட்டமே நடந்திட்டு இருக்கு. இது என் வலைப்பூ. இதில் முழுச்சுதந்திரம் எனக்கு இருக்குன்னு சொல்லும் போதே, எனது சமூகப் பொறுப்புகள் காலைப்பின்னுகின்றன. நான் மனித விநோதங்கள் பற்றி ஆழமாகப் படித்தவன். டெஸ்மாண்ட் மோரீஸ் வாசிச்சு இருக்கீங்களோ? அவரோட "மேன் வாட்சிங்" எனக்குப் பிடிச்ச புத்தகம். மனிதன் நடந்து கொள்வதற்கான உயிரியல் மூலத்தைக் கண்டறிவதில் எனக்கு கல்லூரி நாளிலேயே அதிக ஆர்வமுண்டு. நமது ஒவ்வொரு செய்கைக்கும் ஒரு உயிரியல் காரணமுண்டு. அது சுவாரசியமானது. நந்துவிற்கு இப்படிப் பல அநுபவங்கள் உண்டு.

தி.ஜா விரசமே இல்லாம இது பற்றியெல்லாம் சொல்லத் தெரிந்தவர். என் குருநாதர். ஆனா அவருக்கு வர எழுத்திலே கால் வாசி கூட எனக்கு வரதில்லே! அதனாலே அறிவியல்தனமாச் சொல்லி விடுவேன். இப்படி ஜெர்மன் மொழியில் சொல்லலாம். அங்கு அப்படியொரு கலாச்சாரம். தமிழில் ஒரு பூச்சு வந்து விட்டது. சங்கத்தில் காமமே முன் நின்றது என்று தஞ்சைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் என்னிடம் சொன்னார். நான் நம்புகிறேன். ஆனால் இன்று நிலமை அப்படியல்ல. ஒரு பூச்சு வந்து விட்டது. தி.ஜாவின் எழுத்தை விரசம் என்று சொல்லும் பிரகிருதிகள் உண்டு.

இன்று மாலையில் மீண்டும் ஒரு விருந்து (எங்காத்து மாமி வந்து பாக்கும்போதும் 'துளசிக் கல்யாணத்திலே' வர ஆம்படையான் மாதிரி பெருத்துப் போய் இருக்கப்போறேன்!). ஒரு ஹாங்காங் சீனமாது. சக விஞ்ஞானி. அவளைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது மனிதப் பரிணாமம் பற்றிய எண்ணங்கள் உதித்தன. அழகர் கோயிலில் பார்த்த பெண் குரங்குகள் ஞாபகத்திற்கு வந்தன. ஆனாலும் அவளது சிறுத்த மார்பகம் என்னுள் கிளர்ச்சியை உண்டு பண்ணின. அப்போதுதான் எனக்குப் புரிந்தது அது ஏன் என்று.

ஏனெனில் நானும் அடிப்படையில் குரங்கினமே. அழகை விட பார்க்கும் இனம் பெண் இனமாக இருக்க வேண்டும். அதுபாட்டுக்கு கிளர்ச்சி தரும்! இது உயிரியல் செயல்பாடு. இதில் பெரிதாக 'என்' கட்டுப்பாடு என்று எதுவும் கிடையாது.

சிந்தோ என்றொரு நாய் இங்கு வளர்க்கப்படுகிறது. மனிதர்கள் மட்டுமே உள்ள இந்த வளாகத்தில் அதற்கு தன்னினத் தொடர்பே இல்லாமல் இருக்கிறது. அது பாவம் இன்று மீட்டிங்கிற்கு வந்த ஒரு விஞ்ஞானியின் காலைச் சுற்றிக் கொண்டு போலிப் புணர்ச்சி பண்ணியது. அது நாய். கட்டுப்பாடு தெரியவில்லை. மனிதர்களும் ஒரு காலத்தில் அப்படித்தான் இருந்திருப்பர். போலிப் புணர்ச்சி என்பது பாலியல் சம்மந்தமானது அல்ல. அது ஆல்பா ஆர்டரை நிறுவ முயலுவது. நான் உனக்குப் பெரியவன் என்பதைச் சுட்ட இந்தப் போலிப் புணர்ச்சி பயன்படுகிறது. நாய்களுக்கு இதை முதலியே கற்றுத்தர வேண்டும். அப்போதுதான் பணியும் இல்லையெனில் நம்மைப் புணர்ந்து கொண்டே இருக்கும்! (சும்மாக்காச்சிக்கும்)

நேற்றுவரை கேரளாவில் நம்பூதிரிகள் கீழ்ச்சாதிப் பெண்களைப் புணர்ந்து வந்தனர். அது ஆல்பா ஆர்டரைச் சொல்லும் உத்தி.

(இது அதிகம் என்றால் நந்தகுமாரிகள் கதையில் வரவே மாட்டார்கள். ஓட்டெடுப்பு நடத்த வேண்டுமோ?)

வைகைக்கரை காற்றே!......016

ஊமையன் சோர்ந்து போய் உட்கார்ந்திருப்பது ஒரு பக்கமென்றால் இன்னொரு புறம் ஏகப்பட்ட ஜனங்கள் தோளில் மண்வெட்டியுடன் ஆற்றில் வேலை செய்து கொண்டிருந்தனர். ஊமையன் மண்வெட்டி அரசமரத்தடியில் கிடப்பதும், மற்றவர் மண் வெட்டி மண்ணுடன் விளையாடுவதும் நந்து இதுவரை காணாத காட்சி. வெருக்கு, வெருக்கென்று வேலை நடந்து கொண்டு இருந்தது. கனல் பட்டுக் கருத்து தெறித்த உடல்கள். தொந்தி தொப்பை என்பதெல்லாம் அந்தக் கூட்டத்தில் இல்லாத ஒன்று. கைகள் வச்சிரம் போல் இருந்தன. தோள்கள் திரண்டு கிடந்தன. தலையில் ஒரு சின்னத்துண்டு முண்டாசு போல் கிடந்தது. இவர்கள் பார்த்துக் கொண்டு இருக்கும் போதே ஆற்றின் வலக்கரையோரம் ஒரு நீண்ட பாம்பு போல் ஒரு கரை உருவாகியிருந்தது. கரையின் நீளம் எவ்வளவு இருக்க வேண்டுமென்பதில் அடுத்த ஊர்க்காரர்களுடன் பெரிதாக சண்டை நடந்து கொண்டிருந்தது. வெட்டு, குத்து நடக்குமோ என்றொரு பயம் சிறுவர்களுக்கு வர வீடு நோக்கி ஓடத்துவங்கினர்.

"டேய் நந்து! இங்க வாடா? ஆத்தங்கரைக்குப் போயிருந்தயா?" என்று கேட்டாள் சௌந்திரம்.

"ஆமா! அதுக்கென்னடி இப்ப?" என்றான் நந்து.

'உழக்கு அளவு கூட இல்லை, அதுக்குள்ள அக்காவை வாடி, போடின்னு பேச்சு!" என்று அங்காலாய்த்தாள் அவள்.

"இப்ப என்னடி உனக்கு?" என்றான் நந்து.

"இப்பலேர்ந்து ஆத்துப்பக்கம் போறத விட்டுடு" என்றாள் இவன் அக்கா.

"போடி! நான் அப்படித்தான் போவேன். என்ன செய்வே?" என்றான் நந்து.

"அம்மா! இங்க பாரு நந்து சொன்ன பேச்சைக் கேக்கமாட்டேங்கறான்"

"டேய்! இங்க வாடா! வெளியே போய்ட்டு வரயே முதல்ல கை, காலை அலம்பிண்டயோ?" என்றாள் அம்மா.

"இவ எங்க விடறா என்ன? வந்தவுடனேயே வாத்தியார் வேலைன்னா பாத்துண்டு இருக்கா?"

"சரி, அவள விடு, நாளைக்கு ஆத்துலே தண்ணி வருதாம். யாரும் ஆத்தாண்ட போகக்கூடாதாம். டமாரம் போட்டுட்டுப் போறான். அவன் கூப்பிட்டான், இவன் கூப்பிட்டன்னு ஆத்தாங்கரைப் பக்கம் போனே, முதுகு பிஞ்சுறும்" என்றாள் அம்மா.

இவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்பது அடுத்த நாள் வீட்டிற்கே ஆறு வந்த போதுதான் புரிந்தது. இப்படியொரு வெள்ளம் அந்த ஊரில் யாரும் பார்த்ததில்லை என்று பேசிக்கொண்டார்கள்.அரசமரத்துப் பிள்ளையாரைச் சுற்றி வெள்ளமாம். வீட்டுக் கிணறெல்லாம் நிரம்பி வழிந்தது. கிணத்திலே தண்ணியை மொண்டு எடுத்துக் குளித்தது அன்றுதான். நீர் வடிய சில நாட்கள் ஆனது. நந்து ஆத்துப் பக்கம் போன போது நொப்பும் நுரையுமாக தண்ணீர் ஒரு சிவப்பு நிறத்தில் ஓடிக் கொண்டிருந்தது. இறந்து போன மாடுகள் ஆற்றில் மிதந்து போயின. நாய்கள் போயின, சில உயிருடன், சில உயிரில்லாமல்! பன்றிகள் போயின. மனித உடல்களும் போனபோது ஊரே வாயடைத்துப் போனது!

ஆற்றுக்குக்கரை போட்ட சனங்களெல்லாம் அளவில்லாமல் வெள்ளம் வந்த போது அந்தத்தண்ணியை வைத்துக் கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் முழித்தனர். பிள்ளையார் திண்டு கண்ணில் பட்டது அடுத்த நாள். ஆற்றில் போன பொருள்களைக் கவர்வதற்கு ஆற்றில் குதித்த ஆடவர்கள் உண்டு. ஆனால் அவர்கள் எங்காவது கரையேறினார்களா என்று அடுத்த சில நாள் கழித்தே தெரிய வந்தது.வையைக் கரை குமுறும் என்று அன்றுதான் சனங்களுக்குப் புரிந்தது.

கொதி உலையில்இது உங்களுக்கு சாப்பிடற நேரமா இருந்தா இதை மூடிட்டு வேற வேலை பாருங்க!

ஆசியா-பசிபிக் நாடுகளிலிருந்து மொத்தம் 21 நபர்கள். மலேசியாவிலிருந்து வந்திருந்த ஒரு சிறப்புப் பேராசிரியர் வேலை முடித்து விட்டுக் கிளம்புகிறார் என்று இரவுச் சாப்பாட்டிற்கு அழைப்பு வந்தது. வெளியே போக ஏதாவதொரு சாக்கு இங்கு இருந்து கொண்டே இருக்கிறது. புனித ராமதான் மாதம். மலேசிய நண்பர் உண்ணா நோன்பை முடிக்கும் நேரம். "நெய்யுண்ணோம் பாலுண்ணோம்" என்று சொல்லி சின்னஞ்சிறார்கள் சிற்றஞ்சிறுகாலையில் நோன்பு இருந்தார்கள். வாங்கக்குடம் நிறைக்க பசு பால் கொடுத்தது. மாதம் மும்மாரிப் பெய்தது. நோன்பின் நோக்கம் தன் உடல் வருந்தும் போது ஏற்படும் வேதனையே நம்மால் பிற உயிர்கள் வாட்டப்படும் போதும் ஏற்படும் என்பதை உணர்த்துவதற்கே.

ஆனால் நேற்று நடந்ததே வேறு!

நோன்பிருந்தவர் கடல் உணவு வேண்டுமென்றார். எல்லோரும் கடலுணவகத்திற்குப் போனோம். நண்டு, நத்தை இன்ன பிற பெயர் தெரியாத கடல் வாழ் பிராணிகள் கொதி உலையில் கிடந்தன. அவை அப்போதுதான் உயிர்த்தியாகம் செய்தனவா, இல்லை செத்த பிறகு உலைக்கு வந்ததாவென்று தெரியவில்லை. ஆனால் நாங்கள் வேடிக்கையாகப் பேசிக்கொண்டிருக்கும் போதே சிப்பந்திப்பெண் உயிரோடிருக்கும் எட்டுக்கால் நத்தையான ஆக்டோ புஸ்ஸை உலையில் போட்டாள். இந்த ஆக்டோ பஸ் சும்மா நடந்தாலே பயமா இருக்கும். ஏனெனில் அது முழு வளர்ச்சியடையும் போது நீருள் இருக்கும் மனிதனை உறிஞ்சிக் கொல்லும் திறன் படைத்தது. அதோட போறாத காலம், இன்னும் வளரவில்லை. சின்னதாக உலைக்குள் தவழும் வயது! சிலர் போட்டோ எடுக்கும் போதே தத்தளித்து செத்தது!

ஹாங்காங்கில் பாம்பு உயிருடன் இருக்கும் போதே தோலை உரித்து உலையில் போடுகிறார்கள். கொதி உலையில் நாயைப் போடுவதாக முன்பு சொன்னேன்.

எல்லாம் பழகிவிட்டது..போங்கள். அந்த அழகிய கொரியப்பெண் ஒரு லாவகத்துடன் நண்டை உறித்து வெட்டுவதும், நத்தைச் சிப்பிக்குள்ளிருந்து நத்தையை எடுத்து (முன்னப்பின்ன இதைப் பார்த்ததில்லை) துண்டாக்குவதும், உறிஞ்சிகள் கொண்ட எட்டுக் கால்களை வெட்டிக் கொதறுவதும் ஒரு 'களியாட்டம்' போல் பட்டது.

அன்புதான் இன்ப ஜோதி, அன்புதான் இன்ப ஊற்று என்று சொன்ன சித்தார்த்த கௌதமன் மலை உச்சியில் இருந்தான் இதையெல்லாம் கண்ணுறாமல்!

கராவுக்கே!

காலனியான நாடுகள் எவ்வளவுதான் காலனித்துவத்தின் சுவடுகளை அழிக்கப்பார்த்தாலும், பல விஷ்யங்கள் இரண்டறக்கலந்து விடுகின்றன, அவைகளை பெயர்த்து எடுப்பதென்பது இயலாமல் போய்விடுகிறது. ஆங்கில மூக்குத்தூக்கித்தனம் எங்கே நம்மைவிட்டது? சொல்லுங்கள் பார்ப்போம் :-)

கொரியா ஜப்பானியரிடமிருந்து விடுபட்டாலும், ஜப்பானியரின் கராவுக்கேயிலிருந்து விடுபடவில்லை! கராவுக்கே என்பது ஒரு இசைத்தட்டிலிருந்து பாடும் குரலை எடுத்துவிட்டு, இசையை மட்டும் ஒலிபரப்பும் முறை. நமது குரலை இணைத்துக் கொண்டால் நாமே பாடுவது போலிருக்கும்!

எனக்கு சிவகுமார் என்றொரு நண்பன். அவன் ஜேசுதாஸ் பாடல்களை வாக் மேனில் போட்டுக் கொண்டு முணுமுணுக்கும் போது ஜேசுதாஸ் பாடுவது போலவே தான் பாடுவதாக எண்ணுவான். ஆனால் தனியாகப் பாடும் போதுதான் குட்டு வெளிப்படும். அப்போது கராவுக்கெ இல்லை. இருந்தால் ஜேசுதாஸ் பாடுவதுபோலவே பாடுவதாக ஒரு போலியை உருவாக்கிக் கொள்ளமுடியும். சும்மாக் கிடக்கிற அகப்பாட்டிற்கு (ஈகோ) சொறிஞ்சு கொடுக்கும் வேலையிது!

ஒவ்வொரு முறை சர்வ தேச பயிற்சிப்பட்டறை நடக்கும் போதும் இந்த கராவுக்கே பயமுறுத்தும். இசை மிகச் சத்தமாக இருக்கும். கூடவே அழ (அதாவது பாட) வேண்டும். இந்த இம்சை தாங்காது! நேற்றும் கராவுக்கே போகலாமென யோசன வந்தது. சும்மா இருந்திருக்கலாம்! இல்லை! காபி ஹவுஸ் போய் ஐஸ் கிரீம் சாப்பிடலாமென்றேன். ஆமாம்! ஆமாம்! என்று ஆஸ்திரேலிய, கனடிய விஞ்ஞானிகள் தலையாட்டினர். எல்லாம் சூடு வாங்கிய மாடுகள் போலும்!

கொரிய வழியிலிருந்து தப்பிப்பது கடினம். அப்படியும் தப்பிக்க வேண்டுமெனில் அதற்கு தண்டனை உண்டு! அப்படியெனில் நீயே கூட்டிக் கொண்டு போ! என்று சொல்லிவிட்டனர். இவர்களுக்கு கொஞ்சம் டீசண்டா உட்கார்ந்து காபி சாப்பிடுவது பிடிக்காது. வேறு வழி! ஐயாவிற்கு பழுத்தது 100 டாலர்! எல்லோருக்கும் ஐஸ் கிரீம் காபி!

பேசாமல் கராவுக்கே போய் அழுது விட்டு வந்திருந்தால் இந்தப் புலம்பல் இருந்திருக்காது :-)

மொத்தம் 9 பேர் தேர்வில் இதுவரைக் கலந்து கொண்டுள்ளீர்கள். இது நான் எதிர்பார்த்தைவிட அதிகம். So no complaints :-) உங்கள் தேர்வு அதிக நம்பிக்கையுடன் கவிதையை அனுப்ப உதவும்.

எனக்கு உண்மையிலேயே மகிழ்ச்சி. கவிஞன் அடிப்படையில் பூப்போன்ற மனமுடையவன். எனக்கு எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை. அடுத்த வாரக் கடைசியில் அனுப்ப உள்ளேன். கலந்து கொள்ளாதவர்கள் கலந்து கொள்ள கொஞ்சம் அவகாசமுள்ளது. நன்றி.

உங்களுக்கு இன்னொரு மலர், வியட்நாம் புத்தர் ஆலயக் குளத்திலிருந்து.....

ஒரு உதவி நண்பர்களே!

என் மீதும் என் கவிதை மீதும் அபிமானம் கொண்டுள்ள உங்களில் சிலர் ஒரு தேர்விற்கு உதவ வேண்டும். ஆகச் சிறந்த கவிதைகள் என்று ஐந்து கவிதைகளைத் தாருங்கள் என்று புதுவைப் பல்கலைக் கழகம் கேட்டுள்ளது. ரொம்பக் கஷ்டப்பட்டு 15 கவிதைகளை கீழ்க்காணும் முகவரியில் இட்டுள்ளேன். அதில் உங்கள் சாய்ஸ் என்று எந்த 5 கவிதைகளைத் தேர்வு செய்வீர்கள் என்று எனக்குச் சொன்னால் போதும். உங்கள் சிரமத்தைக் குறைக்க இரண்டு ஓட்டெடுப்புப் பொறிகளை வைத்துள்ளேன். அதில் உங்கள் சாய்ஸ் (சொய்ஸ்) என்று ஐந்து கவிதைக்கு ஓட்டுப் போடுங்கள். ஓட்டெடுப்பு முடியும் போது விழுக்காடு கொண்டு 5 கவிதைகளைப் பொறுக்கிக் கொள்கிறேன்.

உடனே ஓட்டுப்போட்டு உதவ வேண்டும். இதுவொரு அவசரகால உதவி. என் கவிதைகளில் பரிட்சயமிருந்து வேறு கவிதைகளைப் பரிந்துரைக்க விரும்பினால் தனி அஞ்சலில் அக்கவிதையை அனுப்பவும்.

கவிதைத்தேர்வு வலைப்பூ!

http://people.freenet.de/bliss/ponpoems.html

உங்கள் உதவிக்கு என் மலர்ப்பரிசு இதோ:


வைகைக்கரை காற்றே!......015

பிள்ளையாருக்குத் துணையாக ஊமையன் சோகமாக அரசமரத்தடியில் உட்கார்ந்திருந்தான். ஆத்துப்பக்கம் விளையாடப் போன நந்துவிற்கு இது ஆச்சர்யமாக இருந்தது. ஊமையனைக் கோபமாகப் பார்த்திருக்கிறானே தவிர சோகமாகப் பார்த்ததில்லை. போற வரவர்கள் ஆத்துப்பக்கம் கையைக் காட்டிக் காட்டிப் பேசிக்கொண்டிருந்தனர். என்னவென்று புரியவில்லை.

"என்னவா இருக்கும்? நாகா உனக்குப் புரியுதா?" என்று நந்து நாகனிடம் கேட்டான்.

நாகனிடம் கேள்வி கேட்டுவிட்டால் தெரிகிறதோ தெரியவில்லையோ ஏதாவது எட்டுக்கட்டிச் சொல்லிவிடுவான். பாவம்! கேட்டவர்கள் ஏமாந்து போய்விடக்கூடாது பாருங்கள்.

"நந்து! அது ஒண்ணுமில்லைடா! ஊமையன் ஓடுகால்லே ராத்திரி ஒரு தங்கப்பாளம் கிடந்ததாம். மச்சக்காளை எடுத்திட்டு ஓடிட்டான். ஊமையன் தோண்டறப்ப அது அவன் கண்ணிலே படாமா, ராத்திரி குண்டி களுவப்போன பயலுக்கு கிடைச்சுடுச்சேன்னு 'கன்னத்திலே கையை வைச்சுக்கிட்டு உக்காந்துக்கிட்டு இருக்கான்" என்று ஒரு நேர்த்தியான கதை விட்டான் நாகன். கற்பனையில் சிறகடிக்கும் பருவமது. இப்படிச் சொன்னால் போதாது? நந்துவின் கற்பனைக் குதிரை பறக்க ஆரம்பித்தது!

"டேய் நாகா! நாளைக்கு நாமும் புதையல் வேட்டைக்குப் போவோம். பொற்காசு கிடைச்சாலும் கிடைக்கும்" என்றான்.

"இல்லை, சொர்ண அட்டிகை, நெக்லசு எல்லாம் கிடைக்கும்ன்னு ஆச்சி சொன்னா!" என்றான் நாகன்.

"நெக்லசு கிடைச்சா என்ன பண்ணறது?" என்றான் நந்து.

"வீட்டிலே யாருக்கும் காட்டக்கூடாது. அதை பக்கத்துவீட்டுப் பொண்ணுகிட்டே கொடுத்தா 'அம்மா, அப்பா விளையாட்டு' விளையாட வருமென்றான் நாகனின் அண்ணன் பாண்டி(யன்).

"ஆளுக்கு ஒண்ணொன்னு கிடைக்குமா?" என்றான் நந்து.

"மை போட்டுப் பாத்தா எங்கே புதையல் இருக்குன்னு தெரியும்" என்றான் குட்டமணி.

எவருக்கும் எப்படி மை போட்டுப் பார்ப்பது என்று தெரியவில்லை. ஆனாலும் எல்லோருக்கும் தங்க அட்டிகை கிடைக்கும் ஆசையில் அடுத்த நாளை எதிர் நோக்கிக் காத்திருந்தனர்.

ஆனால் அடுத்து நாள் விடிந்த போது விளையாடக்கூட ஆறு இல்லாமல் போனது பெரிய சோகம்!

ஆட்டுக்கல்லும், ஆண்டவன் சிவனும்!

வியட்நாம் பயணப்படும் முன் ஜின்ஜு விமான நிலையத்தில் சோல்(Seoul) தொடர்பிற்கு உட்கார்ந்திருக்கும் போதுதான் அதைப் பார்த்தேன். என்னடா நம்ம சிவ லிங்கம் கக்கூஸுக்கு அருகில் இருக்கிறதே, "சிவ, சிவா" என்று போய் படம் எடுத்தேன். ஏதோ பழம் பொருளை எடுத்து விமான நிலையத்தில் வைத்திருக்கின்றனர். வட இந்தியர்கள் போல் சிவ லிங்கத்தை ஒரு நீர் ஊற்று போல் பாவிக்கின்றனர் என்று நினைத்துக் கொண்டு உங்களுக்குக் காட்டலாமென்று படம் எடுத்து வைத்தேன்.கடந்த வாரங்களில் கொரியாவைச் சுற்றிப் பார்க்கும் போது மீண்டும் ஒரு ஆச்சர்யம். நாங்கள் தங்கியிருந்த கியோன்ஜு கான்கார்ட் ஹோட்டல் வராண்டாவில் மீண்டும் ஒரே சிவ லிங்கங்கள்!! என்னடா இது? கொரியா ஒரு சிவ ஸ்தலமாக இருந்திருக்குமோ என்று மயக்கம் தரும் அளவிற்கு சிவலிங்க தரிசனம். கூட இருந்த ஸ்ரீதர் மாடபூசி இது நிச்சயம் சிவ லிங்கம்தான் என்றார். நான் கிட்டப் போய் பார்த்து மேலே இருக்கும் மூடியைத் தூக்கினால் அரைக்கும் பற்கள் செதுக்கப்பட்டிருந்தன. "ஐயா! இது அரைவை மில். ஆட்டுக்கல்லு" என்றேன்.

"இருக்கவே முடியாது. புத்த பிட்சுக்கள் நமது லிங்கத்தை ஆட்டுக்கல்லாக மாற்றிவிட்டனர்" என்று ஸ்ரீதர் அடம் பிடித்தார்.

அவர் கூற்றில் உண்மையில்லாமல் இல்லை. பண்டைய சமணக் கோயில்களெல்லாம் பின்னால் சிவ, விஷ்ணு ஆலயங்களாக தமிழகத்தில் மாற்றப்பட்டுள்ளன. அது போல் இது என்று ஏன் சொல்லக் கூடாது?

ஆனாலும் இது நிச்சயமாக அரைக்கும் மில் என்பது தெரிகிறது. ஆனால் நம்மவூர் அரைக்கல் போல் மாவு அரைக்க நிச்சயம் பயன்படுத்தப்பட்டிருக்க வாய்பில்லை. ஏனெனில் அரைத்த மாவை எடுக்க இந்த 'ஆவுடையார்' தேவையில்லை. பின் எதுக்குப் பயன் படுத்தியிருப்பர் என்ற கேள்வி மனதைக் குடைந்து கொண்டு இருந்தது!

மீண்டும் சில விருந்தினரை அழைத்து வர ஜின்ஜு விமான நிலையத்திற்குப் போன போது டாக்சி ஓட்டுனரைக் கேட்டேன். "ஓ! அதுவா! நீர் ஊற்று!" என்றார். "அதுதான் பார்த்தாலே தெரிகிறதே. முந்திக்காலத்தில் இதை எதற்குப் பயன்படுத்தினீர்கள்?" என்று கேட்டேன்.

யோசித்துவிட்டு, "சோயாப்பால் எடுக்க!" என்றார். அப்பாடா! என்றிருந்தது. ஒரு புதிர் விடுபட்டது!!

வைகைக்கரை காற்றே!......014

கோகிலத்தம்மாவை விட குஞ்சரத்தம்மா அதிர்ஷ்டசாலி என்பதைக் காலம் அம்மண்ணில் காட்டியது.

அண்ணாவிற்கு வேலை குதிர்த்தது. பெரிய உத்யோகம் என்று சொல்வதற்கில்லை. செட்டியார் தயவால் இராமனாதபுரம் ராஜா அறக்கட்டளை ஆபீசில் கணக்கதியாரியாக வேலை கிடைத்தது. அந்தக் காலத்தில் மதுரை மீனாட்சியம்மன் கோயில் நிர்வாகத்திற்கு பல்வேறு ராஜாக்கள் அறக்கட்டளை அமைத்து நிதி உதவி செய்து வந்தனர். அதில் இராமனாதபுரம் ராஜாவின் 'சேதுபதி அறக்கட்டளையும்' ஒன்று. அண்ணாவின் மூதாதையர்களில் பலர் சேதுபதி சமஸ்தானத்திலும், செட்டிநாட்டிலும் கணக்கர்களாக வேலை பார்த்து வந்தனர். செட்டிநாடு என்பது சோழ மண்ணிலிருந்து புலம் பெயர்ந்த வணிக குலத்தவர்களைக் கொண்டதுதான் எனினும். காலப்போக்கில் ஒரு ராஜாங்கம் நடத்துகிற அளவிற்கு அந்த மண்ணில் சொத்து இருந்தது. செட்டி நாட்டு ராஜா என்ற வழக்கு உண்டு. அந்தணர்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தங்களது குலத்தொழிலான வேதம் ஓதுதலை ஒதுக்கிவிட்டு பிற தொழில்களில் ஈடுபட ஆரம்பித்தனர். ஆயினும் பண்டைய ராஜ விஸ்வாசம் இருந்ததால் கணக்குத் தொழிலுக்கு வந்தாலும் அதை ராஜாக்களிடமே செய்து வந்தனர்.

மதுரை மீனாட்சி கோயிலில் அண்ணாவிற்கு வேலை கிடைத்ததில் மற்ற எல்லோரையும் விட நந்துவிற்குத்தான் மிக்க மகிழ்ச்சி.

ஒவ்வொருமுறையும் அண்ணாவுடன் மதுரைக் கோயிலுக்குப் போகும் போது அவனுக்கு மட்டற்ற மகிழ்ச்சி உண்டாகும். கட்டளை ஆபீஸ் ஆடி வீதியில் இருந்தது. மேற்குக் கோபுர வாசலுக்கு அருகாமையில். அருகில் கோமடம் உண்டு. நந்துவிற்குத்தான் கன்றுகள் என்றால் பிடிக்குமே! அங்கு நிறையக் கன்றுகள் உண்டு. அந்தப் பெரிய பிரகாரம் அவனுக்கு ஒரு மாபெரும் வெளியைத் தந்தது. பார்க்குமிடமெல்லாம் பரந்த வெளி. உயர நோக்கினால் வானுயர கோபுரங்கள். தடுக்கி விழுந்தால் கலையின் அதீத செயல்பாட்டில் விழ வேண்டியிருக்கும். நோக்க, நோக்க உயர்வு. எண்ணத்தில் உயர்வு, சிந்தனையில் உயர்வு. செயலில் நளினம். ஆக்கத்தில் நுணுக்கம் என்பது போன்ற நுணுக்கமான சூட்சுமமான பல விஷயங்கள் அவனையறியாமல் அக்கோயில் வளாகம் அவனுக்குத் தந்தது.

அண்ணா வேலை முடிந்ததும் நந்துவைக் கோயிலுக்கு இட்டுச் செல்வார். சுவாமி சந்நிதி அவனுக்கொரு கலைக்களஞ்சியம். உள்ளே நுழையும் போதே அங்கொரு பெரியவர் பெரிய விசிறி கொண்டு போவோர் வருவோருக்கு விசிறிக் கொண்டு இருப்பார். அதுவொரு பொதுப்பணி. அவர் முகத்தில் ஒரு சாந்தமும், திருப்தியும், மலர்ச்சியும் எப்போதும் இருக்கும். அவருக்கு 60 வயதிற்கு மேலாக இருக்கலாம். ஆனால் அந்த மிகப்பெரிய கலையழகு மிக்க, பட்டுக் குஞ்சலங்கள் கொண்ட விசிறியை சளைக்காமல் வீசிக்கொண்டிருப்பார். யாராவது இரக்கப்பட்டு அவருக்கு காசு கொடுத்தால் பணிவுடன் வாங்கிக் கொண்டு மடியிலிருந்து முன்பே தயாரித்து வைத்திருக்கும் சின்ன விபூதிப் பொட்டலத்தை பிரசாதமாகக் கொடுப்பார். அவரின் அன்பும், பணிவும் நந்துவை வெகுவாகக் கவர்ந்தன. எளிமை கண்டு இரங்கும் குணம் அன்று ஆழப்பதிந்தது அவன் மனதில்.

சுவாமி சந்நிதியைச் சுற்றி திருவிளையாடல் காட்சிகள் சுதைச் சிற்பங்களாக இருக்கும். அண்ணா இவனுக்கு ஒவ்வொறு கதையாகச் சொல்வார். அதில் திருப்புவனக் கதை ஒன்றும் இருப்பது கண்டு அவனுக்கு ரொம்ப மகிழ்ச்சி. மதுரையை ஆண்ட பாண்டியனுக்கு அவன் ஆட்சியின் எல்லை எவ்வளவு என்று தெரியவில்லை. அது அவ்வளவு பரந்து இருந்தது. எனவே திரு ஆலவாய் அண்ணலிடம் வேண்டினான். இரக்கம் கொண்ட ஈஸ்வரன் ஒரு பாம்பு வடிவம் எடுத்து முதலில் மதுரையின் எல்லையைக் காட்டினார். அது சுதைச் சிற்பமாக உள்ளது. பாம்பின் தலை திருப்புவனம் ஆற்றின் அக்கரையிலுள்ள நாவல் மரத்தோப்பில் ஆரம்பிக்கும். ஊரெல்லாம் சுற்றி விட்டு அது மீண்டும் திருப்புவனத்தில் வந்து முடியும். அது போதும் நந்துவிற்கு தானொரு 'மதுரை உள்வட்டம்' என்று சொல்லிக்கொள்வதற்கு! நந்து நிறையக் கதை சொல்வான். அந்தப் பழக்கம் அவனுக்கு அண்ணாவிடமிருந்து வந்திருக்க வேண்டும்.

அண்ணா ஸ்வாமி சந்நிதியில் நிற்பதை விட பிரகாரத்தில் இருக்கும் 'லக்ஷ்மி' சந்நிதியிலே கிடப்பார். இவர் வைணவரென்ற காரணமல்ல. கையில் காசு இருக்காது. 'மலரின் மேவு திரு' அனுக்கிரகம் பண்ண வேண்டும் என்று வேண்டிக் கொள்ளத்தான். ஆனால், லக்ஷ்மி சந்நிதி பெரிது. எப்போதும் கூட்டம் இருக்கும். ஆனாலும் நந்துவிற்கு அதே பிரகாரத்திலிருக்கும் ஒரு அழுக்குப் பிடித்த சந்நிதியின் மீதுதான் ஈர்ப்பு அதிகம். அந்தச் சந்நிதி சரஸ்வதியின் சந்நிதி. அழுது வழிந்து கொண்டு ஒரு அகல் விளக்கு எரியும். எப்போதாவது யாராவது சூடம் ஏற்றுவார்கள். அப்போது சரஸ்வதி அவனுக்கு காட்சியளிப்பாள். ஒரு கணம், ஒரு பொழுது, ஒரு நொடி. அதுதான் அவனுக்குக் கிடைக்கும் காட்சி. அதன் பலா பலன்கள் என்ன வென்பது போகப்போக அவன் வாழ்வில் தெரிந்தது.

சிவன் சந்நிதியின் மாபெரும் பிரம்மிப்பு எட்டு வெள்ளைக் கல் யானைகள்தான். அண்ணா கல் யானைக்கு கரும்பு கொடுத்த சித்தர் கதை சொல்வார். கல்யானையின் அழகைச் சொல்லி மாளாது. தேங்காய் கொடுத்தால் வாங்கிக் கொள்ளும் என்று நம்ப வைக்கும் தத்ரூபம்! சித்தர்களின் செயல்பாடுகள் அவனுள் ஒரு சூட்சும உலகைக் காட்டின. சிவனடியார்களிடம் பணிவுடன் நடந்து கொள்ளும் பண்பைத் தந்தன.

அம்மா அன்றிலிருந்து மீனாட்சி பக்தையானாள். மதுரையிலிருந்து ஒரு பெரிய மீனாட்சி படம் வீட்டு சுவாமி ரூமில் வந்து இறங்கியது. மீனாட்சியின் ஆட்சி 'பத்ம நிலையத்தில்' தொடங்கியது.

வைகைக்கரை காற்றே!......013

"ஏண்டி! அவ வீட்டுக்காரன் விட்டுப்போயிட்டான்னா அவாத்து மனுஷா பாத்துக்கறதுதான ஞாயம்? நம்மாத்துக்கு எதுக்கு வரணும்? ஒண்டரத்துக்கே இப்பதான் ஒரு வீடு கிடைச்சிருக்கு அதுக்குள்ளே ஊரே வந்தா எப்படி?"

"நன்னா சொன்னேளே? ஞாயம் அந்஢யாயம் யாரிட்டே பாக்கறது? அன்னியத்திட்டன்னா? குஞ்சரம் அன்னியமா என்ன? என் கூடப்பிறந்தவ"

அம்மா அடுக்களையிலிருந்து பேசினாள். அண்ணா இட்லி சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

"அது என்ன? ஊரே வருதுங்கறேள்? அவதானே வரா?"

"ஏண்டி எவனாவது பசு மாட்டை மட்டும் பத்திண்டு வருவானா? கன்னு கூட இருக்கும்போது? அவளோட இரண்டையும் எங்கே விடறது?"

"நம்ம குழந்தைகளுக்கு துணையா விளையாடிட்டுப் போகட்டும்"

"சரி, இந்த விளையாட்டுக்கு உங்க அப்பனா சோறு போடுவான்?" அண்ணாவின் எரிச்சல் குரலில் தெரித்தது.

"ஏன் கோபப்படறேள்? உடனேயா வாடின்னு சொன்னேன். உங்களுக்கு நல்ல உத்தியோகம் கடைச்சப்புறம்தானே! அவ என்னமோ, வாசல்லயே நிக்கறமாதிரின்னா பேசறேள்?"

"வாசல்லே வந்து நிக்கத்தான் போறா? பாத்திண்டே இரு! வெறும் நாராயணன் தரித்திர நாராயணனா மாறும் வரை!"

"ஏதாவது அபசகுணமாப் பேசாதீங்கோ காலங்கார்த்தாலே! செடி விதைச்சவன் தண்ணி ஊத்தாமயா போயிடுவான்!" என்று சொல்லும் போது அம்மா உடைந்து விட்டாள்.

"ஏண்டி! காலங்கார்த்தாலே மூக்கத்தூக்கிண்டு?"

மூத்த பெண் பத்மா. பயம் நிறைந்த கண்களுடன்!

"பின்ன என்ன? குஞ்சரம் பத்மா பிறந்தப்ப கூடவே இருந்து ஒத்தாசை பண்ணலயா? பங்கஜம் அவ வளர்த்த பொண்ணுதானே? கமலா பொறக்கறச்சே அவளுக்கு கல்யாணமாயிடுத்து. புக்காத்துக்குப் போயிட்டா. போனா என்ன? தடிக்கி விழுந்தா 'அக்கா, அக்கான்னு!' ஓடி வந்துட மாட்டாளோ! உங்கள்ட்டதான் அவளுக்கு எவ்வளவு பிரியம்! 'அத்திம்பேர், அத்திம்பேர்ன்னு' மாஞ்சு போவாளே! எல்லாம் மறந்துடுத்து போலருக்கு!"

அண்ணாவிற்கு பழைய ஞாபகம் வந்து விட்டது. "அத்திம்பேர் நீங்க தட்டுலேயே கையை அலம்பிடுங்கோ, நான் கழுவி வச்சுடறேன்" என்று ஆரம்பித்து கோகிலத்துக்கு எவ்வளவு ஒத்தாசை. அவள் இல்லையென்றால் இரண்டு பிரசவம் எப்படிப் பார்த்திருக்க முடியும்? அவா குடும்பத்திலே ஆண் வாரிசு இல்லையென்றால், இவா குடும்பத்திலே பெண் வாரிசு கிடையாது. குழந்தைகளுக்கு அத்தை மடியும் கிடையாது, மெத்தை மடியும் கிடையாது. எல்லாம் சித்தி மடிதான்.

தொடர்ந்து தாம்பத்தியம் பண்ணிவிட்டால் சிந்தனை ஓட்டம் கூட சேர்ந்தே ஓடி வரும் போல!

"ஏன்? நந்துவைப் பிள்ளையாண்டிருக்கும் போது கூட திருவேம்பத்தூர் ஓடி வந்துட்டாளே!"

"ஆனா! அவ பிள்ளை சரியான குரங்காச்சே?" அண்ணாவிற்கு தன் பக்கம் பேச ஏதாவது காரணம் வேண்டியிருந்தது!

"எந்தக் குரங்கும் கோகிலத்திட்டே வாலாட்டாது. பாக்கத்தானே போறேள்"

"அது என்னமோ சரிதான்" என்று சிரித்துக்கொண்டே கையில் முறத்துடன் முத்தத்தைக் கடந்தாள் பங்கஜம்.

"போடி உன் வேலையப்பாத்துண்டு. பெரியவா பேசிண்டிருக்கறச்சே உனக்கென்ன குறுக்க பேச்சு?"

"இல்லம்மா, நீ ரொம்ப கண்டிஷனான பேர்வழின்னு சொல்லவறேன். எங்களுக்கென்னா தெரியும் அது!" என்று பயப்படாமல் பேசினாள் பங்கஜம். கமலாவிற்கு உதறல் எடுக்க ஆரம்பித்துடுத்து "டீ! பங்கஜம் அம்மாவோட கோபம் உனக்குத்தெரியுமோல்யோ! ஏண்டி, வாயைக் கொடுக்கறே?" என்று கிசு, கிசுத்தாள் கமலா.

"டீ பங்கஜம் பெரியவளாயிட்டேங்கற தைர்யமா? விளக்கமாரு பிச்சுரும்"

சித்தி வளர்த்த பெண் பங்கஜம். சுடரும் விழிகளுடன்!


"இப்ப நான் என்னம்மா சொல்லிட்டேன்?" பங்கஜம் விடுவதாயில்லை.

அண்ணாவிற்கு பங்கஜத்தின் மீது ஒரு அதீத வாஞ்சை உண்டு. மத்த எல்லாம் மூக்கும் முழியுமாப் பொறந்திட்ட போது இது மட்டும் இவா பாட்டி சாயல்லே கருப்பா, அழகே இல்லாம பொறந்துட்டா. கலர்தான் மட்டம். இருக்கறதிலே சூட்டிகை அவதான். கோகிலத்தை எதுத்துப் பேசும் தைர்யம் இந்த வீட்டில் வேறு யாருக்கு உண்டு?

"பங்கஜம் இங்க வாடி! கால்ல முள் குத்திடுத்து போலருக்கு வந்து பாரு" இது அண்ணாவின் வேடிக்கையான போர்க்கால நடவடிக்கை. பெண்ணைத் தன் வியூகத்திற்குள் போட்டுக் கொண்டுவிட்டார். அடி தப்பும்!

"நீ என்னடி? வாயப்பாத்துண்டு?" என்று ஒரு அடி கமலா முதுகில் விழுந்தது.

"நான் என்ன பண்ணினேன்னு என்ன அடிக்கறே இப்ப?" என்று முணு, முணுத்துக் கொண்டே கமலா பின் வாங்கினாள்.

"அண்ணா! நானும் முள் பாக்கவா?" என்று அண்ணா பக்கம் அவளும் வந்து விட்டாள். அம்மா சைடிலே தொணைக்கு ஆளே இல்ல.

"எக்கேடும் கெட்டுப் போங்கோ!" என்று பொத்தாம் பொதுவாய் ஒரு திட்டு திட்டி விட்டு, அம்மா கொல்லைக்கு போய் விட்டாள்.

"கோகிலத்தம்மா இங்க வாரீகளா!" என்று ராக்கு பேச்சுக்கு அழைப்பது கொல்லையிலிருந்து கேட்டது!

வைகைக்கரை காற்றே!......012

அம்மா அன்று பருப்பு உருண்டைக் குழம்பு வைத்திருந்தாள். அம்மாவின் சமையல் எல்லாவற்றிலும் அவள் கை மணம் இருக்கும் என்றாலும் இதைச் செய்வதில் அவளுக்கு நிகர் யாரும் கிடையாது என்று நந்து நம்பினான். இவ்வளவுக்கும் அம்மாவின் அடுக்குள் மிகச் சிறியது. அம்மா போன்ற மெல்லிதான ஆசாமிகள்தான் அங்கு உட்கார்ந்து சமையல் செய்ய முடியும். சமையல் அறைக்கு இரண்டு கதவுகள் உண்டு. அது அனாவசியம். அதை மூடிக்கொண்டால் புகையில் மூச்சுவிடமுடியாமல் இறந்துவிட நேரும். கொல்லையைப் பார்த்து ஒரு சின்ன ஜன்னலும் அங்குண்டு. இவ்வளவு இருந்தும் அடுக்களையில் புகை இருந்து கொண்டே இருக்கும். அம்மா முதலில் பெருங்காயத்தைக் கொஞ்சம் உடைத்து ஒரு மாக்கிண்ணத்தில் ஊற வைத்து விடுவாள். அது ஊற வெகு நேரமாகும். பெருங்காயத்தை உடைப்பதே பெரிய வேலை. உடையவே உடையாது! அப்புறம் அழகான ஒரு வெங்கலப் பானையின் அடியில் கொஞ்சம் அரிசி மாவைக் கரைத்து அழகாக அப்புவாள். பிறகுதான் அதில் நீர் ஊற்றுவாள். இப்படிச் செய்தால் பத்துத் தேய்க்கும் போது அடிக்கரி எளிதாக வந்துவிடும். அம்மா கடைசி மட்டும் விறகடுப்புதான். இரட்டை வாய் கொண்ட அடுப்பு. ஒன்றில் அரிசி வேகும். மற்றதில் குழம்பு. பருப்பு உருண்டைக் குழம்பு என்றால் அம்மாவிற்கு ஏகப்பட்ட வேலை. துவரம் பருப்பு வகையறாக்களை ஊறப்போட வேண்டும். ஊறிய பின் கொல்லையில் கிடக்கும் ஆட்டுக்கல்லில் அரைக்க வேண்டும். பின் அதை உருண்டையாக உருட்ட வேண்டும். கொதிக்கும் குழம்பில் போட வேண்டும். வேகும் நீரில் போடும்போது பொல, பொலவென்று உடைந்து விடக்கூடாது. கழக்கூத்து ஆடுபவனை விட மிக நூதனமான வேலை. அம்மா எல்லாவற்றையும் சுறு, சுறுவென்று முடித்து விடுவாள். 8 வாய்களுக்கு இடவேண்டும். வேலை எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். நந்து திருப்புவனம் வந்த போதெல்லாம் அக்காவிற்கு திருமணமாகி பள்ளத்தூர் போய்விட்டாள். கை காவலுக்கு அம்மாவிற்கு உதவி பங்கஜம் மட்டும்தான். கமலாவிற்கு சினிமாப் பாட்டு பாடுவதற்கே நேரம் இருக்காது. செல்லம்மாவும், சௌந்திரமும் பள்ளிச் சிறார்கள். அம்மாவிற்கு படிப்பென்றால் மிகக் கவனம். அது சிதறக்கூடாது என்பதில் அக்கறை கொண்டாள். ஆனால் ஒருவர் வெற்றிக்கு மற்றொருவர் உரமாக வேண்டிய சூழல். பங்கஜம் 5ம் வகுப்புடன் நின்று விட்டாள். இருந்து அம்மாவிற்குத் துணையாக வீட்டு வேலைகள் செய்து கொண்டிருந்தாள். பங்கஜத்திற்கு ஏதாவது உடம்பிற்கு என்றால் வீடு அமளி துமளிப்படும். ஒருத்தருக்கும் ஒன்று செய்யத்தெரியாது. தோசைக்கு அரைத்துக் கொடுங்களடி! என்றால் கையை உரலில் நசிக்கிக் கொண்டு வந்து நிற்கும். அதன் பின்னால் விரல் வீங்கி, இருக்கின்ற ஒத்தாசையும் ஒன்றுக்குமில்லாமல் போய்விடும். இத்தனை சிரமங்களுக்குமிடையில் அம்மா அன்று பருப்புருண்டைக் குழம்பு வைத்திருக்கிறாள் என்றாள், ஏதோ விசேஷமென்று பொருள்!

அண்ணாவுடன் சேர்ந்து சாப்பிடுவது என்பது எப்போதாவதுதான். குழந்தைகள் தூங்கிய பின்தான் வீட்டிற்கு அவர் வருவார். அன்றும் அப்படியே! அப்போது திண்ணைக்கு தட்டி கிடையாது எனவே அங்கு யாரும் தூங்கமுடியாது. ரேழியில் ரொம்பவும் குளிர்ச்சியாக இருக்கும். அங்கு சூரிய வெளிச்சம் படுவதே குறைவு. எனவே முற்றத்தை ஒட்டிய இரட்டை வராண்டாவில்தான் எல்லோருக்கும் தூக்கம். ஆளுக்கொரு பாய் அல்லது பெட்ஷீட். தலையாணி. போர்வை குறைவாகவே இருக்கும். முதலில் வரும் ஆசாமி சுருட்டிக் கொண்டுவிடும். அடுத்து வருபவர் மெல்லமாக யாரோடாவது ஒண்டிக்கொள்ள வேண்டும். நாய்க்குட்டிகள் ஒன்றுடன் ஒன்று ஒட்டிப் படுத்திருப்பது போல்தான் சகோதர சகோதரிகள் படுத்திருப்பர். ஒரே ரத்தம் வேறாய் பிரிந்து மீண்டும் ஒரே நாளத்தில் ஓடுவது போல் இருக்கும் இரவுக்காட்சி அந்த வீட்டில்!

கொசு கடிக்கும். முத்தத்திற்கு இன்னும் வலை போடவில்லை. அண்ணா செட்டிநாட்டை விட்டு திருப்புவனம் வந்த பிறகு இன்னும் சரியான உத்தியோகம் அமையவில்லை. எனவே வீட்டு சௌகர்யங்களெல்லாம் மெது, மெதுவாய் நடந்தன. வீட்டிற்கு இன்னும் விளக்கில்லை. அரிக்கேன் விளக்குதான். எனவே குழந்தைகளின் கொட்டமெல்லாம் 8 மணியோடு முடிந்துவிடும்! ஆனாலும் இந்தக் கொசுக்கடித்து அவ்வப்போது எழுப்பிவிட்டு விடும். பிறகு கொஞ்ச நேரம் வேடிக்கை பார்த்துவிட்டு குழந்தைகள் தூங்கிவிடும்.

அண்ணா வந்திருந்தார். "கை, கால் அலம்பிண்டு வாங்கோ! தட்டுப் போடவா?" என்றாள் அம்மா. வீட்டிலேயே அண்ணவிற்குத்தான் பெரிய எவர் சில்வர் தட்டு. எல்லோருக்கும் சின்னதுதான். "ம்" என்றார் அண்ணா.

"என்ன சுரத்தே இல்லாமல் இருக்கேள்? உடம்புக்கு ஏதாவது?" இது அம்மா.

"இல்லடி கோகிலம்! சும்மா அலைச்சல். காசு பொரட்டறதுன்னா என்ன சுலபமா?" இது அண்ணா.

"என்ன பண்ணச்சொல்றேள்? பகவான் ஏழைகளைத்தான் ரொம்ப சோதிக்கிறான்" என்றாள் அம்மா. தொடர்ந்து, "இது புரியாமல் குஞ்சரம் கார்த்தாலே வந்து ஒருவாட்டி அழுதுட்டுப்போறா".

"ஏன் அவளுக்கென்ன?"

"என்ன தெரியாத மாதிரி கேக்கறேள். அதான் பாலகிருஷ்ணன் அவளை விட்டுட்டு ஓடிப்போயிட்டானே! அவளுக்கும்தான் என்னவிட்டா யாரு இருக்கா?"

"இதுக்குத்தான் மதுரைப்பக்கம் போலா, போலான்னு அடிச்சுண்டையாக்கும். எல்லாரும் இப்ப வந்து ஒட்டிப்பாளே"

"அப்படிச் சொல்லாதீங்கோ. நாட்டரசன் கோட்டையிலே எங்க மனுஷான்னு யாரு இருந்தா? எங்காப்பாவுக்கு பிள்ளை இல்லாம இரண்டையும் பொட்டையாப் பெத்துப் போட்டுட்டு மகராசி போய் சேந்துட்டா. அண்ணன்னு ஒருத்தன் இருந்தா அவ ஏன் எங்கிட்டே வரா? கதியில்லாம நிக்கறா. கொஞ்சம் வழி பண்ணுங்கோ"

"என்னடி வழி பண்ணறது? உடையவரே ஊவன்னாப் பண்ணறப்போ லிங்கம் பஞ்சாமிருதம் கேட்டுதாம்"

"சே! அசிங்கமாப் பேசாதீங்கோ! இரண்டு மாசம் கழிச்சு வாடின்னு சொல்லியிருக்கேன். அதுக்குள்ள பெருமாள் வழி விடாமயாப் போயிடுவார்"

"சரிதான் போ! உனக்கு பெருமாள்ட்டே பக்தி ரொம்ப வந்துடுத்து போலருக்கு" என்று அண்ணா சிரித்தார்.

"எனக்குத்தெரிந்த ஒரே பெருமாள் நீங்கதான். அவன் பேரை அதுக்குத்தான் உங்களுக்கு வச்சிருக்கா போலருக்கு!" என்றாள் அம்மா.

"வெத்தலை போட்டுக்கிறேளா? இளவெத்திலையா வாசல்லெ வந்தது!"

"சரி, மடிச்சுக்கொடு. ஏனோ தூக்கமா வரது"

"அப்படின்னா சரி. வெத்தலை போட்டுக்கறது எங்க போறது. வாங்கோ படுத்துக்கலாம். கொசுவலை போட்டு வச்சிருக்கேன்"

"அதுவும் சரிதான். படுத்துக்கிறேன். அப்படியே காலைப்பிடிச்சுவிடு" என்றார் அண்ணா.

அதற்குப்பின் ஏதோ குசு குசுவென்று கொசுவலைக்குள் நடந்தது.

நந்துவின் கனவில் அரச மரத்துப்பிள்ளையார் வந்தார். போற வர பொண்ணுகளை தும்பிக்கையால் விரட்டிக் கொண்டிருந்தார்! அதில் இவன் கூடப்படிக்கும் மீனாவும் இருந்தது.

கொரியாவின் அல்வா!சிறப்புப் பேராசிரியர்களாக வருவதில் ஒரு நன்மை. இந்தியாவில் பார்க்க முடியாததை இங்கு இலகுவாகப் பார்க்கலாம், சிறப்பு விருந்தினர் என்ற கோதாவில்!

பல பெரிய தொழிற்சாலைகளைக் காணும் வாய்ப்புக் கிடைத்தது! ஆனால் எங்கும் படம் பிடிக்கக்கூடாது என்று சொல்லி விட்டதால் இன்று படமில்லாக் கதைதான் :-)

Lucky Goldstar வேதிமத்தொழிற்சாலைக்குப் போனோம், டெல்பி கார் சாமான்கள் செய்யும் தொழிற்சாலை, எஸ்கே பெட்ரோலியத் தொழிற்சாலை, ஹுந்தே கார் தொழிற்சாலை, போஸ்கோ கனரக இரும்புத்தொழிற்சாலை இப்படி..

இதில் ஹுந்தே (Hundai) கார் செய்யும் தொழிற்சாலை உலகிலேயே பெரிய தொழிற்சாலை (under one roof) என்கிறார்கள். பத்து வினாடிக்கு ஒரு கார் என்று அங்கு உருவாகிறது. ஏறக்குறைய 30,000 பேர் வேலை செய்கின்றனர். 10 மணி வேலை கொண்ட இரண்டு ஷிப்ட் என்ற கணக்கில். 6 யூனிட் உள்ளது. ஒன்று பார்க்கவே ஒரு மணிக்கும் மேலானது. பிரம்மாண்டமாக உள்ளது. தொழில் கற்ற ரோபோர்டுகள் நட்டு மாட்டுவது, வெல்டிங் செய்வது என்று தனக்கேயுரிய இயந்திரத்தன்மையுடன் செயல்படுவது இரசிக்கக் கூடியதாக உள்ளது! ஒரு கப்பலில் 3000 கார்கள் ஏற்றுகிறார்கள். தொழிற்சாலையிலேயே கப்பல் நிற்கும் துறையும் உள்ளது! கொரியா 5வது இடத்தில் நிற்கிறது. ஜிஎம், போர்டு, தொயோத்தா, இவைகளுக்கு அடுத்து!போஸ்கோவில் இரும்பு செய்யும் காட்சி பிரம்மிப்பையும் தாண்டி பயமுறுத்துவதாக உள்ளது. செக்கச் சிவக்க இருப்புப் பாளம் வந்து விழுகிறது. 200 மீட்டருக்கு மேலே தள்ளி இருந்து பார்க்கும் போதே அனல் அடிக்கிறது. ஒரு ஆள் கிடையாது. எல்லாம் தானியங்கி சமாச்சாரங்கள் (யார் கிட்டே நிற்க முடியும்?). பாளம் ஒரே ஓட்டமாக ஓடுகிறது. நசுக்கப்படுகிறது. மீண்டும் ஒரே ஓட்டம் (கன்வேயர் பெல்ட்). மீண்டும் நசுக்குதல். கடைசியில் சூடு குறைந்து இரும்புத்தகடுகள் சுருட்டப்பட்ட நிலையில் வந்து நிற்கிறது. இங்குதான் ஆள் நடமாட்டம் தெரிகிறது. இந்த அக்னிக் கும்மாளத்தைப் பார்த்த போது ஏனோ பாரதி ஞாபகம் வந்தான்!

இந்தியாவிலிருந்து இரும்பு (iron ore) வாங்கி இந்தியாவிற்கே விற்கும் கொரியர்கள் முன்பு 'அல்வாக் கடை' வைத்து தொழில் பண்ணியவர்களாக இருக்க வேண்டும் :-))

கல்யாண சமையல் சாதம், காய்கறிகளும் பிரமாதம்!
தமிழர்கள்/இந்தியர்கள் மண்ணைத்தாண்டியவுடன் விழும் முதல் பிரச்சனை சோறுதான்! அது பக்கத்து ஆந்திரப்பிரதேஷ் போல் இருக்கலாம், அல்லது அந்தமான் அமெரிக்காவாக இருக்கலாம், பிரச்சனை ஒன்றுதான்! அதனால்தான் மணியன் தனது பயணக்கட்டுரைகளில் ஆல்ப்ஸ் மலை உச்சியில் தயிர் சாதம் சாப்பிடத்தைப்பற்றிப் பெருமையாக எழுதுவார். [ஆனாலும் அவரது கட்டுரைகள் பசி,கிசி இரண்டையுமே சுற்றிச் சுற்றி வந்து மாயும்!] கொரியா/ஜப்பானில் அரிசிச்சோறுதான் உண்கின்றனர் எனினும் வெறும் சோறை வாயில் வைத்தவுடன் உமட்டிக்கொண்டு வருவதை ஒரு தமிழரிடம் கண்டேன். நம்ம ஊர் முனியாண்டி விலாஸ் கேசெல்லாம் இவர்கள் சாப்பாட்டைப் பார்த்து 'சாம்பார் கேசாகி' விடுகிறது! வேடிக்கையில்லை. இந்தப் பயணத்தில் நிறைய இந்தியர்கள் இருந்தார்கள். எனவே சைவ உணவிற்கு ஏற்பாடாகியிருந்தது [என்ன சைவம்? அதன் வாசனையைக் கண்டு படிதாண்டாப் பத்தனர்கள் நிறைய உண்டு!] எதிர் வரிசையில் பார்த்தால் பாகிஸ்தான், கஜக்கிஸ்தான் என்று ஒரே முஸ்லிம் கூட்டம். இந்தக் கூட்டம் இந்தியாவாகவிருந்தால் சைவர்களைக் கிண்டல் அடித்துக் கொன்றுவிடும். இங்கு சமத்தாக சைவ உணவு அருந்திக்கொண்டிருந்தது. (ஹாலால் உணவு கிடைக்காததால் சைவமே நிம்மதி!).


எனக்குத்தெரிந்த அத்தனைத் தமிழர்களும் பண்டம் பாத்திரங்களுடன் வாலைச் சுருட்டிக் கொண்டு கொரியாவில் சமைக்கின்றனர். வீட்டுக்காரியை/சமையல்காரியை எக்கி, எக்கி எறிந்த பாவம்! எங்கே போகும்? சுற்றுலா போகும் போது தயிர் பாட்டில், புளிக்காய்ச்சல் சகிதம் அலைய வேண்டிய துர்பாக்கியம் :-) நண்பர், முனைவர்.முருகேசக் கவுண்டர் சமையல் கலையில் இவ்வளவு தேர்ச்சி பெறுவார் என்று அவர்கள் வீட்டுக்காரியிடம் சொன்னால் நம்பமாட்டார். "ஏக பானம், ஏக பத்தினி" என்பது போல் ஒரே ஒரு ரைஸ் குக்கரை வைத்துக் கொண்டு அவர் புகுந்து விளையாடுகிறார். ரைஸ் குக்கரிலே தாளிச்சுக் கொட்டுகிறார், ரைஸ் குக்கரிலே காய்கறி வேக வைக்கிறார், அதிலேயே சோறு வடிக்கிறார். சர்வம் ரைஸ் குக்கர் மயம்!

இந்த ஏரியாவில் சைவ உணவு வேண்டுமென்றால் அது புத்த கொயில்களில்தான் கிடைக்கும். ஆனால் அது அவ்வளவு எளிதாகக் கிடைத்துவிடாது. பௌத்தம் சைவத்தை (உணவை) பரிந்துரைக்கவில்லையெனினும். பௌத்த பிட்சுக்கள் சைவ உணவே உண்கின்றனர்.

ஜப்பானில் சாப்பாட்டுக்கடைக்குப் போனால் கோயில் உணவு தாருங்கள் என்று கேட்டால் பிழைத்தோம். இல்லையெனில் சாப்பாட்டில் ஏதாவது நெளியும்! ஆனாலும் அங்கு எனக்கு கோயில் உணவு கிடைத்தத்தில். நான்கு வருடம்! ஆனால் கொரியா வந்த நான்கு மாதத்தில் எனக்கு கோயில் உணவு சாப்பிடும் பாக்கியம் கிடைத்தது. இந்தச் சுவைக்கு கொஞ்சம் பழக வேண்டும். கிம்சி பிடிக்க வேண்டும். தோஃபு சுவை (அல்லது சுவையற்றதன்மை) பிடிக்க வேண்டும். கீரைகளை அரை வேக்காட்டில் சாப்பிட்டிருக்க வேண்டும், சிவன் கோயில் உண்டக்கட்டி சாப்பிட்டிருக்க வேண்டும். ஈதெல்லாம் அனுபவப்பட்டிருந்தால் புத்தர் கோயில் சைவச்சாப்பாடு தேவாமிருதம்!

வைகைக்கரை காற்றே!......011

ஆத்தாங்கரை அக்கிரஹாரத்திற்கு அருகிலேயே இருந்தது. செண்பகபட்டர் வீட்டில் வீதி திரும்பும். இன்னொரு மூலையில்தான் பஞ்சாங்கய்ங்கார் வீடு. பத்ம நிலையத்திலிருந்து ஏரோப்பிளேன் ஓட்டிக் கொண்டே ஓடினால் ஐந்து நிமிடத்திற்கும் குறைவு. அடுத்த தெருவில்தான் ஸ்வாமி சந்நிதியும், அம்பாள் சந்நிதியும். அம்பாள் சந்னிதிக்கு நேராக ஒரு சந்து போகும். அந்தச் சந்து நீளத்திற்கு எவரெஸ்ட் டூரிங் டாக்கிஸ்காரர் வீடு. அந்த வீட்டில் யாரும் இருப்பதில்லை. எப்பவாவது ஆள் நடமாட்டம் இருக்கும். கோனாருக்கு வேறொரு வீடு உண்டு கொஞ்சம் தள்ளி. அந்தப் பெரிய வீட்டிற்கு மட்டும் நீளமான கற்சுவர் உண்டு. மிக உயரம். உள்ளே என்னதான் நடக்குமோ? நந்து வீட்டின் கதவு எப்போதும் திறந்தே கிடக்கும். கோனார் வீட்டின் கொல்லைப்புறம் இன்னொரு சந்தில் முடியும். அங்குதான் நந்துவின் நண்பன் துரை என்னும் புஷ்பவனம் இருந்தான். அவன் குட்டி பட்டராத்துப் பிள்ளை. எப்பவாவதுதான் வருவான் விளையாட. பட்டர் வீடுகள் அக்கிரஹாரத்தில் இருந்தாலும் அவர்கள் தனித்தே வாழ்ந்தனர். அவர்கள் வாழ்வு பற்றி நந்து பின்னால்தான் அறிந்து கொண்டான். குட்டி பட்டர் வீட்டைக் கடந்து போனால் ஸ்வாமி கோயிலுக்கு எதிரே ஒரு மொட்டைக் கோபுரம் உண்டு. அதற்கு நேர் எதிராகத்தான் ஆறு. அங்கிருந்து ஓடினால் அடுத்து இரண்டு நிமிடம் வைகை வந்துவிடும். ஆனால் ஆத்துக்குள் இறங்குவதற்குள் முனிஸ்வரன் வாழும் ஆலமரமொன்று உண்டு. அதைத்தாண்டும் ஒவ்வொருமுறையும் நந்துவின் இதயம் கன்னாபின்னாவென்று துடிக்கும். முனி பற்றிய பல கதைகள் ஏற்படுத்திய பயமே அதற்குக் காரணம்.நந்துவின் கண்களுக்கு வைகை பிரம்மாண்டமாகத் தெரிந்தது. மானாமதுரை அளவு பெரிதில்லையென்றாலும் அக்கரைக்குப் போவதற்குள் கால் கடுத்துவிடும். ஓடி, ஓடிக் களைத்து மண்ணில் விழுந்து புரண்டு, விளையாடி, விளையாடித்தான் அக்கரை போக வேண்டும். அக்கரையில் மடப்புரம் காளி. அக்கரையில் ஸ்வாமி சந்ந்திக்கு எதிரே ஒரு ஆலமரமுண்டு. அங்கே பல நாவல் மரங்களுண்டு. கால் கடுக்க அக்கரைக்குப் போனால் நாவற்பழம் கிடைக்கும். மடப்புரம் நோக்கி மேலே நடந்தால் நிறையக் கொடுக்காப்புளி மரங்கள் இருக்கும். சேதுவுடன் போனால் தொரட்டி கட்டி பழம் பறிக்கலாம். சேது வராதபோது கிளி கொத்திப் போட்ட பழங்கள் கீழே கிடக்கும் அதைப் பொறுக்கலாம்.

ஆற்றுக்குள் நுழையும் முன்னே ஒரு சின்ன பிள்ளையார் கோயில் உண்டு. அவர் ஒரு பெரிய அரசமரத்திற்குக் கீழ் உட்கார்ந்து இருப்பார். யார் வேண்டுமானாலும் கிட்டக்கப்போய் சூடம் ஏத்தலாம். பூசாரி கிடையாது. முனிஸ்வரன் கோயிலிலும் யாரும் போகலாம் என்றாலும் அந்தக் கோயிலுக்கு பூஜை உண்டு. குட்டமணியின் அப்பா ஜடாதர ஐயர்தான் வயதான காலத்திலும் அந்தக் கோயிலைப் பார்த்துக் கொண்டார். வெள்ளிக்கிழமை வந்து சக்கரைப்பொங்கல் வைத்து பூஜை பண்ணுவார். பிரசாதம் என்பதால் மட்டுமே அந்தக் கண்றாவியைச் சாப்பிட வேண்டியிருக்கும். சுவையில்லாத சோகையான அரிசி. சக்கரைப் பொங்கல் என்பது பெயரில் மட்டுமே இருக்கும். சக்கரை எங்கே என்று தேட வேண்டியிருக்கும். கோயிலில் பர்ஜாரகராக இருக்கும் அவரால் அவ்வளவுதான் செய்ய முடியும் என்பதெல்லாம் அவனுக்கு அப்போது புரியாத வயது! பிள்ளையார் ஏன் ஆத்தங்கரையில் உட்கார்ந்து இருக்கிறார் என்பதை பட்டர் பிள்ளை விளக்கினான். அம்மாவைப் போலவே அழகான பொண்ணு வேணும் என்று ஆத்தங்கரையில் அவர் காத்துக் கிடப்பதாகச் சொன்னான். இந்த ஊரில் பிள்ளையாருக்கு தோதான அழகான பொண்ணு இல்லாததால் அவர் இன்னும் கல்யாணமே பண்ணிக்காமல் உட்காந்துண்டு இருக்கார் என்றான். பட்டர் பிள்ளை சொல்வதால் நந்து நம்பினான். ஆனாலும் ஊரில் அழகான பொண்கள் இல்லை என்பதை இவனால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. ஆற்றில் மணற்கேணி போட்டு (ஊத்து) தண்ணி எடுத்துப் போக வரும் நாடார் வீட்டுப் பொண்ணுகளும், பிள்ளமார் வீட்டுப் பொண்ணுகளும் எவ்வளவு சௌந்தர்யமாக இருப்பார்கள். அக்கிரஹாரத்தில் கூட ஒண்ணு ரெண்டு தேறுமே!நந்து ஆற்றில் இறங்கும் போது ஊமை வந்து கொண்டிருந்தான். அவனுக்கும் எவ்வளவு வயது என்று யாருக்கும் தெரியாது. தாடி நரைத்திருக்கும். அவன் தாடி சீனாக்காரன் தாடி போல் சின்னதாக இருக்கும். ஆனால் உடல் திடகாத்திரமாக இருக்கும். ஊமையனுக்கு சுத்தமாகப் பிடிக்காதது மூக்கின் மேல் விரலை வைத்து அவன் முன் காட்டுவது. அப்படிச் செய்தால் ஊமையனுக்கு கெட்ட கோபம் வந்துவிடும். காச்சு பூச்சு என்று கத்துவான். அதுவும் யாருக்கும் புரியாது. அவனை அப்படிக் கத்த வைத்து வேடிக்கை பார்க்கும் அந்த ஊர். நந்துவிற்கு பாவமாக இருக்கும். ஆனாலும் ஊமையுடன் அவனுக்குப் பேசத்தெரியாது. சில பேர் கையையும், காலையும் ஆட்டி அவனிடம் பேசுவர். அவனுக்குப் புரியுதோ இல்லையோ தலையை இப்படி அப்படியும் ஆட்டுவான். ஊமையனின் தோளில் எப்போதும் ஒரு மண்வெட்டி இருக்கும். மண் வெட்டி இல்லாமல் அவனை நந்து பார்த்தது கிடையாது. அதிகாலையில் ஆற்றுக்குள் இறங்கினான் என்றால் மாக்கு, மாக்கென்று ஓடுகால் தோண்டுவான். ஊமையனின் ஓடுகால் போன்ற அழகான ஓடுகாலை வேறு யாரும் இந்த உலகில் தோண்ட முடியாது என்று நந்து நம்பினான். மதுரையில் காசு கொடுத்து குளிக்க வைக்கும் ஓடுகால்களெல்லாம் ஊமையனின் ஓடுகால் முன் கால் காசு பெறாது. அந்தக்காலத்து அப்பரடிகள் போல் ஊமையன் ஒரு உளவாரப்பணி செய்து கொண்டிருந்தான். ஆனால் அவன் அருமை தெரியாமல் அவனைச் சீண்டி விட்டு அவனை எப்போதும் ஒரு கொதி நிலையில் வைத்துவிட்டது அக்கிராமம்.

மீண்டும் கொரியா!

கடந்த சில நாட்களாக பல முக்கிய கொரியத் தொழிற்சாலைகளையும், கலாச்சாரம் நிரம்பிய இடங்களையும் காணும் வாய்ப்புக் கிடைத்தது. அப்போது எடுத்த படங்களை ஒரு தொகுப்பாக கீழ்காணும் புகைத்தலத்தில் வைத்துள்ளேன். பார்த்து அனுபவியுங்கள்.

http://www.albumtown.com/showalbum.php?uuid=587&aid=834

யாவரும் கேளிர்!

கொஞ்ச நாளா காணாப்போனதற்கு மன்னிக்க. நிறையக் கதைகளுடன் வந்திருக்கிறேன் :-)

இந்தியன் என்பவன் ஒரு ஒட்டு மாங்கனி என்று சொன்னேன். அதற்கு உதாரணம் சாட்க்ஷாத் நான்தான்!

அமெரிக்கன் கல்லூரியில் படிக்கும் போது பேரா.பொன்.தினகரன் என்னை ஜப்பானிய இளவரசரே என்பார். ஆனால் ஜப்பானிற்கு வந்த போது குழந்தைகளுக்கு நான் 'அமெரிக்கா-ஜின்' ஆனேன்! ஜப்பானிலிருந்து இத்தாலிக்கு பயணப்பட்டபோது என்னை கடாபியின் தம்பியாவென்று கேட்டார்கள்! அதாவது துனிசியன்? ஒரு பயணி என்னை அரபு சேட்டு என்றான். ஜெர்மனியில் சுகமாக நகர மத்தியில் சூரியச் சூட்டை இரசித்துக் கொண்டிருக்கும் போது நான் 'பெரு' நாட்டிலிருந்து வருகிறேனா என்று கேட்டார் ஒருவர்.

பினாங் நகரிலிருந்து கோலாலம்பூர் வந்த போது என்னை அழைத்துப் போக வந்த நண்பர் அஞ்சல் முத்து நெடுமாறன் என்னை மலேயாக்காரன் என்று நினைத்துக் கடைசி வரை என்னுடன் வந்து பேசவில்லை!

வியட்நாம் போய் விட்டுத்திரும்பும் போது திடீரென்று ஒரு பெண் நான் 'ருஷி?' என்று கேட்டாள் (இரஷியன்).


இன்று கிளம்பி ஊருக்கு வருவதற்கு முன் சும்மா கொஞ்ச நேரம் 'புசான்' நகர குகையிரதத் தெருவில் உலாவிக் கொண்டிருக்கும் போது ஒரு பெரியவர் "You are handsome" என்று சொன்னார்! கூட வந்த நண்பர் 'ஏன் நாங்கள் அப்படித்தெரியவில்லையோ?' என்று கேட்டபிறகும் அவர் 'கண்டுக்காமல்' என்னைப் புகழ்ந்தார். ரஜனி ஸ்டைலில் ஒரு சல்யுட் அடித்து வைத்தேன். 'எந்த ஊர்' என்றார்? "நீங்களே யுகீயுங்கள்!" என்றேன். "பாகிஸ்தான் தானே!" என்றார் :-)

நான் கொரியா வருவதற்கு முன் ஜெர்மனியில் என்னை வாழ்த்திவிட்டுப் போக வந்திருந்தார் புகலிட எழுத்தாளர், நண்பர் கருணாகரமூர்த்தி. அவரது உறவுக்காரப் பெண் என்னைத் தமிழன் என்று நம்பவே முடியாது என்று சொல்லிவிட்டது. அவள் கண்களுக்கு நான் சுத்த ஜெர்மனாகக் காட்சியளித்து இருக்கிறேன்.

நான்கு நாட்களாக கொரியாவிற்கு சிறப்புப் பேராசிரியர்களா வந்திருக்கும் பல நாட்டு அறிஞர்களுடன் ஒரு சுற்றுலாவில் கலந்து கொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது. அப்போது ஒரு உக்கிரைன்காரருடன் பேசிக்கொண்டிருந்தேன். அவர் என்னை ஜெர்மன்காரன் என்று நம்பிக்கொண்டிருந்தார் நான் சில தமிழ்க்காரர்களுடன் தமிழில் பேசுவரை! அப்போது கூட அவர் "இவரை நம்பாதீர்கள்! இவர் தமிழ் பேசும் ஜெர்மன் உளவாளி" என்றார் சிரித்துக்கொண்டே!

பாரிசில் நடந்த இலக்கியச் சந்திப்பிற்குப் போய்விட்டுத்திரும்பும் போது எழுத்தாளர், பதிப்பாளர் சுகன் அவர்கள் என்னை வழியனுப்ப வந்தார். அவருடன் பேச வந்த ஒரு இலங்கை நண்பர் 'என்னடா! சீனாக்காரனோட சுத்தறே' என்றார் அழகு தமிழில், எனக்குத் தமிழ் புரியாது என்ற நம்பிக்கையில்!

சமீபத்திய சுற்றுலாவில் எங்களுடன் இருந்த ஒரு சீன மாதுவுடன் அரட்டை அடித்துக் கொண்டு வந்தேன். அவளுக்கு நான் எந்த ஊர் என்று புரியவில்லை. 'நீங்கள் முகத்தை வைத்துச் சொல்லுங்கள்' என்றேன்!

"ஜப்பான்" என்றாள் :-)

திசைகளும் அது சுட்டும் திசைகளும்

திசைகள் நவம்பர் இதழ் சுடச் சுட வலையில் உலா வருகிறது.

மாலன் வலைஞர்களின் உற்ற தோழன் என்பதைக் காட்டிவிட்டார். வலையில் சருக்குபவர்களுக்கும், வலைச்சுவை உடையவர்களுக்கு மட்டுமே தென்படும் படைப்பாளிகளை அவர் இனம் கண்டு திசைகள் போன்ற ஒரு சர்வ தேச மின்னிதழில் அறிமுகப்படுத்துவதற்கு ஒரு சபாஷ்!

நம்ம சித்தூர்காரன் இருக்கிறாரே. அவர் மகா திறமைசாலி. ஆனால் ஆஞ்சநேயர் போல தன் பலம் அறியாதர். தாவுடா! மாப்பிளை என்றால் கடலைத் தாண்டி விடுவார். அவரது நகை உணர்வே அவரின் தனி முத்திரை. இவர் இன்னும் கூச்சப்படாமல் எழுத வேண்டும் என்பதே எங்கள் ஆசை (திசையின் ஆலோசகர் என்ற விதத்திலும்).

அட யார் இந்த சித்தூர்வாசி என்று கேட்கிறீர்களா? அதாங்க நம்ம காசி! காசி-விக்கிரம் இல்லைங்க. குரல்வளைக்காக இன்றளவும் தொண்டைத்தண்ணி வத்தப் பேசும் ஒரே தமிழர். இவரை வாசியுங்கள். நாள் இலகுவாகும்.

சந்திரவதனா, வளரும் ஒரு ஈழத்து பூவர் (வலைப்பூவர் என்பது நீளமாக இருக்கிறது. பூ என்றால் ரொம்ப சுருங்கிப் போய் விடுகிறது. எனவே பெண்பால் போல் படும் "பூவர்"). இவரது பொட்டு என்ற பதிவு திசைகளில் வந்துள்ளது. இவர் எங்க நாட்டுக்காரர். அதாவது ஜெர்மனி. சும்மா ஏழெட்டு வலைப்பூ வைச்சிருக்காங்க. அதிலே ஜெர்மன் மொழியிலும் ஒன்று. வாழ்க.

சுபாவிற்கு வலையகம் அமைப்பது 'பாண்டி விளையாட்டு' மாதிரி. ஆனா, அவங்க வலைப்பூ அமைக்க ஆரம்பித்தது சமீபத்தில்தான். ஆனா! அதற்குள் நட்சத்திர ஸ்தானத்திற்கு தாவிவிட்டார்கள். இவரும் சும்மா நாலைஞ்சு வலைப்பூ வைச்சிருங்காங்க (எங்கப்பா, இவங்களுக்கெல்லாம் நேரமிருக்கு?). இவங்க இப்ப திசைகளின் ஆஸ்தான பூவர் ஆகிவிட்டார். வாழ்க.

"நினைவு நல்லது வேண்டும்" என்பான் பாரதி. நமது கோயில்களின் நிலை குறித்து பல காலமாக பொறுமி வருபவன் நான். அக்கா குழந்தைக்கு காது குத்த உப்பிலி அப்பன் கோயிலுக்குப் போகும் போதுதான் நான் கும்பகோணம் கோயில்களின் கவனிப்பாரற்ற நிலை கண்டு உள்ளம் வெதும்பினேன். பொன்னியின் செல்வன் குழுவில் இது பற்றி எழுதினேன். டொரொண்டோ சைவ மாநாட்டில் "ஆசைக்கொரு ஆலயம், ஆஸ்திக்கொரு கோயில்" என்றொரு திட்டத்தை முன் வைத்தேன். கோயில்களை தத்து எடுத்துக் கொள்ளச் சொன்னேன். சென்ற திசைகளில் கூட இது பற்றி எழுதியிருந்தேன். நாட்டை இழந்து விட்டுத்தவிக்கும் புலம்பெயர் தமிழருக்கு 'வலசைக் குறி' தமிழகம்தான். இவர்களது சுற்றுலாத்திறத்தை மட்டும் தமிழகம் பயன்படுத்திக் கொண்டால் வருமானம் எகிறிவிடும். நமது கோயில்கள் வெறும் வழிபடும் தலம் மட்டுமன்று. அவை சரித்திரம் சொல்லும், காவியம் சொல்லும், இலக்கியம் சொல்லும், ஏன் கொக்கோக சாஸ்திரம் கூடச் சொல்லும். வேறிழந்த தமிழனுக்கு 'டானிக்' இம்மாதிரிக் கோயில்கள். தெரிந்தவர் சொன்னால் கோயில் ஆயிரம் கதை சொல்லும். USA கோகுலின் கட்டுரை எனக்கு நம்பிக்கை தருகிறது. முனைவர் இளங்கோவன் என்னுடன் சிங்கை மாநாட்டில் பேசினார். பின்னர் கோவை தொல்லியல் கருத்தரங்கிலும் பார்த்துப் பேசினேன். அவர் போன்ற வழிகாட்டிகளுடன் தமிழகம் சுற்ற வேண்டும். அது நமது பாக்கியம். அண்டோ பீட்டர் தமிழ் மரபு அறக்கட்டளையுடன் சேர்ந்து பழம் கோயில்களை மின்னுலகிற்கு கொண்டுவரத் திட்டமிட்டுள்ளார். திசைகளும் அற்புதமான திட்டமொன்றை வெளியிட்டு இருக்கிறது. அந்நியச் செலாவணியை அள்ளிக் கொண்டுவரும் கோயில்கள். எனது கனவுகள் நினைவாகும். நம்பிக்கை இருக்கிறது.

Persistent Organic Pollutants in the Food Chain

In the spring of 1999 high concentrations of dioxins and PCB were found in Belgian poultry. The contamination was traced back to animal feed that had been contaminated during the processing by oil containing dioxins and PCBs. This incident clearly shows that in a global food market consumers in most countries may be exposed to unwanted contaminants in the food. In Sweden the concentrations of PCBs, dioxins, and DDE (one DDT metabolite) have, due to governmental regulations, decreased in the environment since the 1980's. This was seen in mother's milk, a good indicator of concentrations of persistent organic pollutants (POPs) in the environment and food chain. Incidents such as the one in Belgium may reverse the recent downward trend of POPs in food and give unacceptably high exposures to certain POPs to humans through the food chain. The result may be unwanted health effects, such as damage to the motor and neurologic development of the infant, impairment of the immune system, and increased risk for certain cancer types for adults such as non-Hodgkin lymphoma. We have previously reported on increased concentrations of PCBs, chlordanes (previously used as insecticides) and the brominated flame retardant 2,2',4,4'-tetrabrominated diphenyl ether (TBDE) in patients with non-Hodgkin lymphoma compared with persons without cancer. The findings indicate that these types of pollutants may be a part in the etiology of non-Hodgkin lymphoma, a malignant disease with increasing incidence in the Western world. The concentration of POPs will also be too high in mother's milk with concomitantly unacceptable exposure to the breast fed infant.

Lennart Hardell, MD, PhD
Sweden

இன்னும் ஒருவாரத்தில் ஒரு சர்வதேச பயிற்சிப்பட்டறை நடக்கவுள்ளது. அதில் ஆற்ற வேண்டிய உரைகளைத் தயாரித்துக் கொண்டிருக்கிறேன்.

தாய்-சேய் உறவில் முக்கியமானது தாய்ப்பால் அருந்துதல். என் சகோதரி சௌந்திரம் 6 வயதுவரை பால் குடித்தாள். என் பெண் ஸ்வேதவிற்கு பால் குடி மறக்கச் செய்வதற்குள் போதும், போதுமென்றாகிவிட்டது! ஆனால் இந்த ரிபோர்ட்டைப் பார்த்தால் இதெல்லாம் பழங்கதையாகிவிடும் போலல்லவோ உள்ளது. எம் பெரியாழ்வார் பாடும் முலையுண்ண அழைத்தல் இனிமேல் இலக்கியத்தில் மட்டும் சாத்தியம் என்றால் என்ன கொடுமை. நமது பொருளாதார வசதிகள் நம்மை எங்கே இட்டுச் செல்கின்றன?

பரகால நாயகியின் காதலர்களுக்கு.....

பாசுர மடல் வலையேறியிருக்கிறது http://alwar.log.ag/

வைகைக்கரை காற்றே!......010

அந்த வீடு நீண்டு கிடந்தது. சித்தி அம்மாவிடம் ஏதோ சொல்லிப் புலம்பிக் கொண்டிருந்தாள். அம்மா கைவேலையாக வந்து உட்கார்ந்திருக்க வேண்டும். புடவை முழங்காலுக்கும் மேல் நகர்ந்திருந்தது. நந்து அம்மாவின் மடியில் வந்து படுத்துக் கொண்டான். அம்மா ஒல்லியான தேகமுடையவள். எனவே அவள் துடை மெத்தை போல் இல்லை. இருப்பினும் அம்மாவின் மடி சுகமாக அவனுக்கிருந்தது. அம்மா தக்காளிப்பழ சிவப்பு. அவள் துடை வழியாக கால்களில் பாய்ந்தோடும் கரும்பச்சை ரத்த நாளங்கள் வைகை நதியின் கோடை கால ஓடுகால் போல் வளைந்து நெளிந்து ஓடியது.

நந்து அந்த நாளங்களின் ஓட்டத்துடன் விரல்களை வைத்து ஓட்டினான். 'டேய் கையைக் காலை வைத்துக் கொண்டு சும்மா இரு!' என்று அம்மா கையைத்தட்டி விட்டாள். கூசியிருக்க வேண்டும்.

"அக்கா! ஏன் குழந்தையைத் திட்டறே! அருமையா அஞ்சுக்குப்பின் ஆம்பிளையா வந்து பிறந்திருக்கான்!" என்றாள் சித்தி. 8-ல் அஞ்சுதான் அம்மாவிற்குத் தங்கியது. சித்திக்கும் பல குழந்தைகள் இறந்து இரண்டு தங்கியது. ஆண் பிள்ளை இல்லையென்ற குறையுடன் இராமேஸ்வரம் போய் வேண்டிக்கொண்ட பிறகு ஒரு ஆண் குழந்தை பிறந்தது அவளுக்கு. எனவே சேதுக்கரை பாலம் அமைத்த இராமனின் நினைவாக சேதுராமன் என்று பெயர் வைத்தார்கள். சித்தி ஒரு நாள் கூட அம்மாவைப் பேர் சொல்லி அழைத்ததில்லை. 'அக்கா, அக்கா, அக்காதான்' ஆனால் நந்து பெரியவன் ஆனபோது அக்காமார் அனைவரையும் பெயர் சொல்லி அழைக்கும் உரிமை அவனுக்கு அந்தக் கிராமத்து வாழ்வில் இயல்பாக அளிக்கப்பட்டது. ஒரே பையன் என்ற ஒரே காரணத்திற்காக. ஆனால், பெரியக்கா மட்டும் அன்னையை ஒத்து இருந்ததால் அவள் மட்டும் இவனுக்கு 'அக்கா'!

சித்தியின் அக்காவான நந்துவின் அன்னைக்கு மிக இளகிய மனசு. சித்தியின் அழுகை அம்மாவை இளக்கிக் கொண்டிருந்தது.

"ஆமா, அவன் ஏன்? பாலகிருஷ்ணன் உன்னை தவிக்க விட்டு விட்டு ஓடிப் போனான்?" என்று கேட்டாள் அம்மா.

"அக்கா! அதை ஏன் கேக்கறே? என் தலை விதி. ராத்திரிப் படுத்திண்டு இருந்தவர், கார்த்தாலே காணோம்! ஏதோ பக்கத்து ஊருக்கு அவசர ஜோலியா போயிருக்கார் போலருக்குன்னு இரண்டு நா பாத்தோம், மூணு நா பாத்தோம். ஆளே அதற்குப் பின் வரல...." என்று சொல்லிக் கொண்டே சித்தி அழ ஆரம்பித்தாள்.

"சீ! அசடே! அழாதே! நானிருக்கேனோல்யோ! பாத்துப்பேன். இருந்தாலும் அவனுக்கு சுத்தமா பொறுப்பே இல்லே. எங்கே போய் தொலைந்தான்?"

அம்மாவிற்கு எரிச்சலாக வந்தது. இப்படி கட்டிய பொண்ணாட்டியை விட்டு விட்டு ஓடிப்போவனோ? பாலகிருஷ்ணன் இவர்களுக்கு சொந்தம்தான். கொஞ்சம் கருப்பு. ஜோஸ்யம் நன்றாக வரும். அம்மாதான் மாம்பழக்கலர். சித்தி கருப்புதான். அம்மாவுக்கு மேட்சா அண்ணா நல்ல சிவப்பு. சித்திக்கு மேட்சா சித்தியா (சித்தி + ஐயா) கருப்பு.

"என்ன தைர்யத்திலே விட்டுட்டுப் போனான்?"

"கையிலே வித்தை இருக்கோல்யோ, அந்த தைர்யம்தான்"

"என்ன வித்தை? இவன் சொல்ற ஜோஸ்யம் பலிக்கிறதே இல்லை"

"நீ தான் அப்படிச் சொல்ற! ஊரெல்லாம் வந்து கேக்கறதே. அந்த தைர்யம்தாம். எங்கே போனாலும் பொழைச்சுக்குவோம்ன்னு"

"எங்கே போனான்னு தேடினீளோ? போலிசுக்கு சொன்னேளோ?"

"அப்பா! போலிஸ் ஸ்டேஷனுக்கு நடையா நடந்தாச்சு. ஒரு துப்பும் கிடைக்கல்லே. எங்கே போய் தொலைச்சாறோ?" சித்திக்கு தன் நிற்கதியை நினைத்து துக்கமும், அழுகையுமா வந்தது.

"ஏண்டி, அழுதுண்டே இருக்கே! ஜலதோஷம் புடுச்சுக்க போறது. சரி போய் வேலையைப் பாரு. அவர் வந்ததும் நான் கேட்டுச் சொல்லறேன். அதுவரை அவ ஆத்துலே இரு" இது அம்மா.

அண்ணா இரவு வெகு நேரம் கழித்துதான் வருவார். அதுவரை பொறுத்திருக்க வேண்டும். எவ்வளவோ கஷ்டங்கள் அவருக்கு. இப்போது இவள் வேறு நிற்கதியாக. எப்படியும் சொல்லி சமாளிக்க வேண்டும். அம்மா யோசனையுடன் நந்துவின் தலையைக் கோதிக் கொண்டிருந்ததில் நந்து தூங்கிப்போயிருந்தான்.

வியட்நாமிய நினைவுகள் 006

வியட்நாமிய நினைவுகளின் கடைசிப் படியிது! (உஷாவிற்கு அப்பாடா! என்றிருக்கும் :-)

ஐரோப்பாவில் 13 வருஷம் கழித்தாகிவிட்டது. எத்தனையோ நோபல் விஞ்ஞானிகளை அது அளித்திருக்கிறது. ஆனால் அங்கெல்லாம் கிடைக்காத வாய்ப்பை ஒரு மூன்றாம் உலக நாட்டில் நடைபெறும், ஆசிய வேதிமக்குழுவின் கருத்தரங்கு தந்தது, அதிசயம்தான்.

விஞ்ஞானியாக இருப்பவர்க்கு கிடைக்கும் ஆகப்பெரிய விருது நோபல் பரிசு. அது கிடைத்து விட்டால் பிறகு உங்கள் சகவாசமெல்லாம் ஜார்ஜ் புஷ், ஷ்ரூடர், வாஜ்பாய் என்று ஆகிவிடும்! ஆனால் அது சும்மாக் கிடைத்துவிடாது. ரொம்ப உழைக்க வேண்டும். மானுடத்திற்கு பயனளிக்கும் வண்ணம் உங்கள் ஆய்வு அமைய வேண்டும். அதன் பாதிப்பு பாராதூரமாக இருக்க வேண்டும். நோபல் பரிசு பல துறைகளுக்கும் வழங்கப்படுகிறது என்றாலும், அதன் பிரபல்யம் அறிவியல் சார்ந்தே இன்னும் உள்ளது.

இந்தியாவில் இரண்டு விஞ்ஞானிகளுக்குக் கிடைத்திருக்கிறது. சர்.சி.வி.இராமன். இவர் வான் ஏன் நீலமாக உள்ளது என்று கண்ட ஆய்வு இன்று 'raman spectroscopy' என்னும் துறைக்கு வித்திட்டது. அவரது மருமகன் பேரா.சந்திரசேகருக்கும் இவ்விருது கிடைத்திருக்கிறது. இவர் பிரபஞ்சத்தோற்றத்தில் கருங்குழிகளின் பங்கு பற்றி கண்டு சொன்னார். இவரை நினைவுகூறும் வண்ணம் அமெரிக்கா வின்னில் ஒரு செய்கோளை அனுப்பி அதற்கு 'சந்திரா' என்று பெயர் வைத்திருக்கிறது (இவர் ஒரு அமெரிக்கக் குடிமகன் என்பதால்). இவர்கள் இருவரது கண்டுபிடிப்புகளுக்கும் பின்புலமாக இந்திய தத்துவஞானம் இருப்பதை யாரும் கண்டு சொன்னார்களாவென்று தெரியவில்லை. கண்ணனின் நிறம் நீலம். மேக வண்ணன் என்று சொல்வதுண்டு. பூமாதேவியின் கணவன் இவன். புவன சுந்தரன் என்று பெயர். வானம் இவன் சாயலை பிரதிபலித்து நிற்கிறது.

அடுத்து 'கருங்குழி என்னும் black hole'. ஆண்டாள் 'ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கருத்து' இருப்பதாக கண்ணனைச் சொல்கிறாள். ஊழிக்கு முதல் கருமை இருந்ததாகப் பேசும் இவள் தொன்மம் சந்திரசேகரின் ஆய்வில் ஆறிவியற் தோற்றம் பெருகிறது. இந்திய மெய்யியலை, அதன் தொன்மங்களை கேலி செய்தே பழகி விட்டோ ம். இதில் பெரியாரின் பங்கும் உண்டு. மேலை விஞ்ஞானத்தின் பின்புலமாக யூத-கிறிஸ்தவ தத்துவ ஞானம் இருப்பதை விஞ்ஞானிகளே ஒத்துக் கொள்கின்றனர். இந்திய விஞ்ஞானிகளோ மேலைத் தேசத்தையே தங்களது ஆதர்சமாக இதுவரை கண்டு வருகின்றனர். இது மாறி இவர்கள் இந்தியத் தந்துவக் கடலுக்குள் புகுந்து புறப்பட்டால் இந்தியாவின் நோபல் எண்ணிக்கை கூடும்.

ஜப்பான் 'எதிர்காலம் தொழில் நுட்பமே' என்று அறைகூவி விட்டு சாதித்தும் காட்டுகிறது. அடுத்த 10 ஆண்டுகளுக்குள் நோபல் பரிசு பெறும் ஜப்பானியரின் எண்ணிக்கையைக் கூட்டுவோம் என்று கங்கணம் கட்டியிருக்கிறதாம். விமானத்தில் வரும் போது வாசித்தேன். செய்து காட்டும். அது அவர்கள் வழக்கம். இந்தியா சும்மா இந்துத்துவா பேசாமல் இந்து மதத்தின் ஆழத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.

ஜப்பானிய நோபல் விஞ்ஞானி பேரா.நொயோரியின் ஆய்வு கிரியா ஊக்கிகள் பற்றி. அது பற்றிதான் கருத்தரங்கில் பேசினார். இந்த ஆய்வு வேதிம, மருந்துத்தொழிலில் பெரிதும் உதவுகிறது.

குட்டித் தீவு, தைவான். அதுவும் தொழில்துறையில் முன்னால் நிற்கும் நாடு. அங்கிருந்து வந்து பேசிய நோபல் விஞ்ஞானி பேரா.யுவான்.டி.லீ எப்படி மூலக்கூறுகள் ஊடாடுவதைக் காண முடியும், அதற்கு தொழில்நுணுக்கும் எப்படி உதவுமென்று பேசினார். அணுவைக் கண்ணால் காண முடியாதுதான். ஆனால் அதன் செயல்பாட்டை கண்காணிக்க முடியும் என்று சொல்கிறார் டாக்டர் லீ.

பிரான்சு தேசம் பல நோபல் பரிசுகளைக் கண்ட தேசம். அதன் பழைய காலனி வியட்நாம். பேரா. ஜோன் மேரி லேன் எப்படி வேதிம உலகிலும் பரிணாம விதி செயல்பட முடியும் என்று காட்டினார். இரட்டைப் பின்னல் வடிவான டி.என்.ஏ போன்ற மூலக்கூறுகளை செயற்கையாக எப்படி உருவாக்குவது என்று சொன்னார். சந்தர்ப்பமளிக்கும் போது அணு/மூலக்கூறு ஒருவகையான 'சுய ஞானத்தில்' தேர்வு செய்து 'சேதிப் பரிமாற்றம்' செய்து கொள்ளும் மூலக்கூறுகளை உருவாக்கும் என்றார். வேதிமவியல் என்பது information science என்றார். எல்லாமே கடைசியில் சேதிகள்தான்! இப்படி அணுவில் ஆரம்பித்து அண்டம் வரை 'ஞானம்' பரவியிருக்கிறது என்பது அவர் பேச்சின் சாராம்சம். கேட்டது போல் படுகிறது இல்லையா? பாகவதம் படியுங்கள்!


Prof.Lehn was available for a chat and photograph after his talk during the conference.

The bard of Omaha
Jack Nicholson நடித்த "About Schmidt" படத்தை நேற்றுதான் பார்த்தேன். இது பழைய படம். என் பெண் ஸ்வேதா இந்தப்படம் கிடைத்தால் வாங்கி அனுப்புங்கள் என்று எழுதியிருந்தாள். அவளுக்கு இந்தப் படம் பிடித்திருக்கிறது என்பதே என் அதிசயம்.

வேலை ஓய்வு பெற்ற ஒரு பெரியவரின் கதை. 42 வருட தாம்பத்தியத்திற்குப் பின்னும் தன் மனைவியைப் புரிந்து கொள்ளாத மிஸ்டர் ஷ்மிட் (இது ஒரு ஜெர்மன் பெயர். இப்படித்தான் உச்சரிக்க வேண்டும்) 'தனது படுக்கை அறைக்குள் ஒரு அந்நியள்" என்ற நோக்கில்தான் தன் மனைவியைப் பார்த்து வருகிறார். இவரைக் கட்டாயமாக ஒண்ணுக்குப் போகும் போது கம்மோடில் உட்கார்ந்துதான் போக வேண்டும் (என்ன கஷ்டம் :-) என்பதிலிருந்து பல கட்டுப்பாடுகளை விதிக்கும் மனைவியை அவர் வெறுக்கிறார். அவள் நடந்து கொள்ளும் பாவம், அவள் உடல் மணம் என்று பலவற்றை அவர் வெறுக்கிறார்.

வீட்டை பெருக்கிக் கொண்டிருந்த அவள் அப்படியே மாரடைப்பால் இறந்து போகிறாள். அதற்குப் பின்தான் ஷ்மிட்டின் சுய தேடல் ஆரம்பிக்கிறது. ஆறுதல் சொல்ல வந்த பெண்ணை வீட்டில் இருத்தப் பார்க்கிறார் (என்னை இனிமேல் யார் கவனித்துக் கொள்வார்கள் என்று). அவளுக்கு பல வேலைகள். அவள் "அப்பா! இனிமேல் நீங்கள்தான் உங்களை கவனித்துக் கொள்ள வேண்டுமென்று" சொல்லிப் போய் விடுகிறாள். இவரது குடும்ப நினைவுகளைப் பற்றிப் பேசும்போது தனது பெண்ணின் நினைவு என்றும் இனிமையாக இவருக்குப் படுகிறது. தந்தை பெண்ணை நேசிப்பதும், தாய் பிள்ளையை நேசிப்பதும் பிராய்டியன் உளவியல் என்றாலும் ஷ்மிட் போல்தான் நான் என் பெண்ணை நேசிக்கிறேன். எல்லா உறவுகளிலும் அவளே கருவாக, பிரதானமாக இருக்கிறாள். அவள் அன்னை உடலிலிருந்து வெளிவந்த கணத்திலிருந்து அவளை அரவணைத்து வருகிறேன். அது ஒரு ஷ்பெஷல் உறவுதான். இப்படித்தான் ஷ்மிட் பார்க்கிறார்.பெண்ணிற்கு நிச்சியதார்த்தம் ஆகிறது (அமெரிக்க முறைப்படி அவளே இதை செய்து கொள்கிறாள்). தந்தைக்கு எப்போதும் தன் பெண் மற்றவனுக்கு மனைவியாகப் போவது பிடிக்காது (இதுவும் பிராய்டிசம்தான்). ஷ்மிடிற்கு இவள் தேர்ந்தெடுத்திருக்கும் ஆளைப் பிடிக்கவே இல்லை. கல்யாண வைபவத்திற்குப் போகும் போது அந்தக் குடும்பத்தின் சுயரூபமறிந்து இன்னும் வெறுக்கிறார். என்ன சொல்லியும் பெண் அந்தக் கல்யாணம் தனக்கு அவசியம் என்று சொல்லி விடுகிறாள்.

எல்லாம் முடிந்து தனது பெரிய வீட்டில் ஒற்றை மனிதராகத் திரும்பும் போது தானொரு தோல்வி என்று உணர்கிறார். பிரபஞ்ச பிரம்மாண்டத்தில் இக்குணூண்டு அளவு கூட தனது பங்களிப்பில்லை என்று உணர்கிறார். தன் மனைவி இறந்து விட்டாள். தானும் இறந்து விடுவோம். தன்னை நினைவு கூறுவோரும் இறந்து விடுவர். தனது இருப்பின் நினைவு இப்படி மறைந்து போகும் என்று உணரும் போது அவருக்கு வாழ்வு அர்த்தமற்றதாகப் போகிறது.

அப்போது அவருக்கு ஒரு கடிதம் ஆப்பிரிக்காவிலிருந்து வருகிறது. இவர் மாதம் 22 டாலர் அனுப்பி ஒரு ஏழைச் சிறுவனுக்கு தந்தையாக (தாதித்தந்தை!) இருக்கிறார். அந்தச் சிறுவனுக்கு அனுப்பும் கடிதங்களின் மூலமாகவே கதை முதலில் நகர்கிறது. அவன் இவருக்கு ஒரு வாழ்த்துக் கடிதம் அனுப்பி தனது அன்பையும், நன்றியையும் சொல்கிறான். வாழ்வையே வெறுத்து தனிமைப்பட்டிருந்த ஷ்மிட்டிற்கு இக்கடிதம் வாழ்வின் பொருளைச் சொல்கிறது. மனைவி இறந்த போது அழாத ஷ்மிட் இக்கடிதம் கண்டு 'ஓ' வென்று அழுகிறார். படம் முடிகிறது.

இந்தப் படத்தை ரசிக்க ஒரு மிகையான மெல்லுணர்வு வேண்டும். ஒரு முதிர்ச்சி வேண்டும். அது 15 வயதாகும் ஸ்வேதாவிற்கு இருப்பது கண்டு இறும்பூதியடைகிறேன். இந்தப் படம் சொல்லும் சேதி. உறவுகள் கூட வாழும் போதே அன்பு செய்யக் கற்றுக் கொள்ளுங்கள் என்பது. போன பிறகு அழுது, புலம்பிப் பிரயோசனமில்லை என்பது. வேலை, வேலையென்று இருந்துவிட்டு உறவுகள் வளரும் போது அவைகளின் தேவைகளைப் புறக்கணித்து விடுகிறோம். பின் நமக்கு நேரம் கிடைக்கும் போது கிட்ட நெருங்கி உறவு கொண்டாடும் போது, உறவு விலகியே நிற்பது கண்டு அதிசயக்கிறோம். இது மாற வேண்டுமெனில். உறவுகளிடம் எப்போதும் அந்நியோன்யத்தை கடைப்பிடியுங்கள். அன்பாக இருங்கள்.

கடைசிக் காட்சி சொல்வது. குடும்பம் என்பது மட்டும் உறவு அல்ல. உறவின் நெகிழ்ச்சி குடும்ப வலைக்கு அப்பாலும் இருக்கிறது என்பது. 'வாடிய பயிரிலும் வாழ்வு இருக்கிறது'. மரங்களுடன் பேசுங்கள் என்பார் ஜே.கிருஷ்ணமூர்த்தி. உறவின் வலை மிகப்பெரியது. அன்பு எல்லா வழிகளிலும் பாய்ந்து கொண்டே இருக்கிறது. ஒரு கதவு அடைத்துக் கொண்டால் இன்னொன்று திறந்து கொள்கிறது. இந்த சூட்சுமத்தைப் புரிந்து கொண்டால் சூனியமான வாழ்வு பூஞ்சோலையாகும்.

இதுதான் இந்தப் படம் சொல்லும் சேதி. நல்ல படம்.