The bard of Omaha
Jack Nicholson நடித்த "About Schmidt" படத்தை நேற்றுதான் பார்த்தேன். இது பழைய படம். என் பெண் ஸ்வேதா இந்தப்படம் கிடைத்தால் வாங்கி அனுப்புங்கள் என்று எழுதியிருந்தாள். அவளுக்கு இந்தப் படம் பிடித்திருக்கிறது என்பதே என் அதிசயம்.

வேலை ஓய்வு பெற்ற ஒரு பெரியவரின் கதை. 42 வருட தாம்பத்தியத்திற்குப் பின்னும் தன் மனைவியைப் புரிந்து கொள்ளாத மிஸ்டர் ஷ்மிட் (இது ஒரு ஜெர்மன் பெயர். இப்படித்தான் உச்சரிக்க வேண்டும்) 'தனது படுக்கை அறைக்குள் ஒரு அந்நியள்" என்ற நோக்கில்தான் தன் மனைவியைப் பார்த்து வருகிறார். இவரைக் கட்டாயமாக ஒண்ணுக்குப் போகும் போது கம்மோடில் உட்கார்ந்துதான் போக வேண்டும் (என்ன கஷ்டம் :-) என்பதிலிருந்து பல கட்டுப்பாடுகளை விதிக்கும் மனைவியை அவர் வெறுக்கிறார். அவள் நடந்து கொள்ளும் பாவம், அவள் உடல் மணம் என்று பலவற்றை அவர் வெறுக்கிறார்.

வீட்டை பெருக்கிக் கொண்டிருந்த அவள் அப்படியே மாரடைப்பால் இறந்து போகிறாள். அதற்குப் பின்தான் ஷ்மிட்டின் சுய தேடல் ஆரம்பிக்கிறது. ஆறுதல் சொல்ல வந்த பெண்ணை வீட்டில் இருத்தப் பார்க்கிறார் (என்னை இனிமேல் யார் கவனித்துக் கொள்வார்கள் என்று). அவளுக்கு பல வேலைகள். அவள் "அப்பா! இனிமேல் நீங்கள்தான் உங்களை கவனித்துக் கொள்ள வேண்டுமென்று" சொல்லிப் போய் விடுகிறாள். இவரது குடும்ப நினைவுகளைப் பற்றிப் பேசும்போது தனது பெண்ணின் நினைவு என்றும் இனிமையாக இவருக்குப் படுகிறது. தந்தை பெண்ணை நேசிப்பதும், தாய் பிள்ளையை நேசிப்பதும் பிராய்டியன் உளவியல் என்றாலும் ஷ்மிட் போல்தான் நான் என் பெண்ணை நேசிக்கிறேன். எல்லா உறவுகளிலும் அவளே கருவாக, பிரதானமாக இருக்கிறாள். அவள் அன்னை உடலிலிருந்து வெளிவந்த கணத்திலிருந்து அவளை அரவணைத்து வருகிறேன். அது ஒரு ஷ்பெஷல் உறவுதான். இப்படித்தான் ஷ்மிட் பார்க்கிறார்.பெண்ணிற்கு நிச்சியதார்த்தம் ஆகிறது (அமெரிக்க முறைப்படி அவளே இதை செய்து கொள்கிறாள்). தந்தைக்கு எப்போதும் தன் பெண் மற்றவனுக்கு மனைவியாகப் போவது பிடிக்காது (இதுவும் பிராய்டிசம்தான்). ஷ்மிடிற்கு இவள் தேர்ந்தெடுத்திருக்கும் ஆளைப் பிடிக்கவே இல்லை. கல்யாண வைபவத்திற்குப் போகும் போது அந்தக் குடும்பத்தின் சுயரூபமறிந்து இன்னும் வெறுக்கிறார். என்ன சொல்லியும் பெண் அந்தக் கல்யாணம் தனக்கு அவசியம் என்று சொல்லி விடுகிறாள்.

எல்லாம் முடிந்து தனது பெரிய வீட்டில் ஒற்றை மனிதராகத் திரும்பும் போது தானொரு தோல்வி என்று உணர்கிறார். பிரபஞ்ச பிரம்மாண்டத்தில் இக்குணூண்டு அளவு கூட தனது பங்களிப்பில்லை என்று உணர்கிறார். தன் மனைவி இறந்து விட்டாள். தானும் இறந்து விடுவோம். தன்னை நினைவு கூறுவோரும் இறந்து விடுவர். தனது இருப்பின் நினைவு இப்படி மறைந்து போகும் என்று உணரும் போது அவருக்கு வாழ்வு அர்த்தமற்றதாகப் போகிறது.

அப்போது அவருக்கு ஒரு கடிதம் ஆப்பிரிக்காவிலிருந்து வருகிறது. இவர் மாதம் 22 டாலர் அனுப்பி ஒரு ஏழைச் சிறுவனுக்கு தந்தையாக (தாதித்தந்தை!) இருக்கிறார். அந்தச் சிறுவனுக்கு அனுப்பும் கடிதங்களின் மூலமாகவே கதை முதலில் நகர்கிறது. அவன் இவருக்கு ஒரு வாழ்த்துக் கடிதம் அனுப்பி தனது அன்பையும், நன்றியையும் சொல்கிறான். வாழ்வையே வெறுத்து தனிமைப்பட்டிருந்த ஷ்மிட்டிற்கு இக்கடிதம் வாழ்வின் பொருளைச் சொல்கிறது. மனைவி இறந்த போது அழாத ஷ்மிட் இக்கடிதம் கண்டு 'ஓ' வென்று அழுகிறார். படம் முடிகிறது.

இந்தப் படத்தை ரசிக்க ஒரு மிகையான மெல்லுணர்வு வேண்டும். ஒரு முதிர்ச்சி வேண்டும். அது 15 வயதாகும் ஸ்வேதாவிற்கு இருப்பது கண்டு இறும்பூதியடைகிறேன். இந்தப் படம் சொல்லும் சேதி. உறவுகள் கூட வாழும் போதே அன்பு செய்யக் கற்றுக் கொள்ளுங்கள் என்பது. போன பிறகு அழுது, புலம்பிப் பிரயோசனமில்லை என்பது. வேலை, வேலையென்று இருந்துவிட்டு உறவுகள் வளரும் போது அவைகளின் தேவைகளைப் புறக்கணித்து விடுகிறோம். பின் நமக்கு நேரம் கிடைக்கும் போது கிட்ட நெருங்கி உறவு கொண்டாடும் போது, உறவு விலகியே நிற்பது கண்டு அதிசயக்கிறோம். இது மாற வேண்டுமெனில். உறவுகளிடம் எப்போதும் அந்நியோன்யத்தை கடைப்பிடியுங்கள். அன்பாக இருங்கள்.

கடைசிக் காட்சி சொல்வது. குடும்பம் என்பது மட்டும் உறவு அல்ல. உறவின் நெகிழ்ச்சி குடும்ப வலைக்கு அப்பாலும் இருக்கிறது என்பது. 'வாடிய பயிரிலும் வாழ்வு இருக்கிறது'. மரங்களுடன் பேசுங்கள் என்பார் ஜே.கிருஷ்ணமூர்த்தி. உறவின் வலை மிகப்பெரியது. அன்பு எல்லா வழிகளிலும் பாய்ந்து கொண்டே இருக்கிறது. ஒரு கதவு அடைத்துக் கொண்டால் இன்னொன்று திறந்து கொள்கிறது. இந்த சூட்சுமத்தைப் புரிந்து கொண்டால் சூனியமான வாழ்வு பூஞ்சோலையாகும்.

இதுதான் இந்தப் படம் சொல்லும் சேதி. நல்ல படம்.

0 பின்னூட்டங்கள்: