வைகைக்கரை காற்றே!......020

அண்ணா வழக்கம் போல் இரவில்தான் வீடு திரும்பினார். மதுரையிலிருந்து அம்மாவிற்கு மல்லிகைப்பூவும், குழந்தைகளுக்கு திருநெல்வேலி அல்வாவும் வாங்கி வந்திருந்தார். கையில் காசு வந்திருக்கிறது என்று அர்த்தம். வேறு அர்த்தங்களும், எதிர்பார்ப்பும் இருந்திருக்கக்கூடும். பாவம்! அந்தப்பலவீனம்தான் 'பத்ம நிலையத்தின்' விதியை மாற்றிவிட்டது!

குழந்தைகளெல்லாம் ஏறக்குறைய தூங்கிய நிலையில் தரையில் கோணல்மாணலாக படுத்துக் கிடந்தன.

"பாலகிருஷ்ணன் திரும்பி வந்துட்டான், தெரியுமோ?" என்றாள் கோகிலம்.

"அப்படியா?" என்றார் அண்ணா கொட்டாவிவிட்டுக் கொண்டே. கோகிலத்திற்கு பேச்சை எப்படி மேலே கொண்டு போவதென்று தெரியவில்லை.

"நம்மோடையே இருந்துக்கறேன் என்கிறாள் குஞ்சரம்"

"வீடுன்னு ஒண்ணு வந்தவுடனே வந்துடுவாளே. ஏன் அவன் இந்த வீட்டை அடமானத்திலேர்ந்து எடுத்திருக்கக்கூடாது?"

"அவனுக்கு அல்ப வருமானம்தானே"

"எனக்கு மட்டும் கலெக்டர் உத்யோகமா?" என்று அண்ணா சொன்னவுடன் கோகிலத்தின் கண்கள் கலங்கிவிட்டன. இந்த வீட்டை எடுப்பதற்கு அவர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார்கள். ஐந்து குழந்தைகளுக்கு சாப்பாடு போட்டு வளர்த்து வீட்டையும் மீட்க வேண்டுமென்பது பிரம்மபிரயர்த்தனமன்றோ!

"நேக்குத்தெரியாதா. ஏதோ கேக்கிறா. பாவம்ன்னு படறது மனசு"

"நீ இப்படி பாவப்பட்டுண்டே இருந்தா, உன் பிள்ளை குட்டியை எவன் காப்பாத்துவான்?"

"கோவப்படாதீங்கோ! பாலகிருஷ்ணன் ஒழுங்கா சம்பாதிச்சு காப்பாத்தறேன் என்கிறான். அவனுக்கு சீரழிந்து போயிருக்கும் ரெங்கநாதர் கோயிலைக் கட்டி எழுப்பணும்ன்னு ஆசை வந்துடுத்து. அதான் திருப்புவனம் வரேங்கறான். அது அவா பூர்வீகச் சொத்து இல்லையா? இந்தப் பிச்சை அதை கவனிக்காம சீரழிச்சுட்டான். அவாளோட சண்டை போட்டு கோயில் நிலங்களை மீட்க வேண்டும். அதுக்கு இங்க இருந்தாத்தான் தோது என்கிறான். என்ன சொல்றேள்" என்று அண்ணா கொண்டுவந்த மல்லிகைப்பூவைத் தலையில் சூடியபடி கோகிலம் கேட்டாள்.

மல்லிகையின் மணம் கொல்லென்று வீசியது. தலையாணியைத் தட்டிப் போட்டாள் கோகிலம். அண்ணா கவுந்துவிடுவார் என்பது அவளுக்குத் தெரியும்!

சித்திக்கு அதிகம் சொத்து, பத்துக் கிடையாது. ஒரே ஒரு டிரெங்குப் பெட்டியுடன் ஜாகைக்கு வந்து விட்டாள். அடுக்குள்ளை ஒட்டிய பின் போர்ஷன் அவளுக்கென்று ஆகியது. அங்கு சுவர் எழுப்பி குடுத்தனமாக்குவது ஜோசியர் பொறுப்பில் வந்தது. சமையல்தான் தனியே தவிர மற்றபடி குழந்தைகள் பொது இடத்தைப் பயன்படுத்திக் கொண்டனர். வராண்டாவிலேயே படுத்துக் கொண்டனர். ஜோசியருக்கு மட்டும் ரோஷத்தின் காரணத்தால் அந்த வீட்டில் படுக்க மனம் இடம் கொடுக்கவில்லை. சிவன் கோயிலை ஒட்டியிருந்த நடராஜ பட்டராத்துத் திண்ணையில் படுத்துக் கொண்டார். சாப்பிட மட்டும் இங்கு வருவார். சித்தி ஒரு மண்ணெண்ணெய் ஸ்டவ் வைத்துக் கொண்டு சமையல் செய்தாள். சித்தியாவிற்கு அவர்களது பூர்வீகத் தொழிலான பஞ்சாங்கம் பார்ப்பது, கோயில் உற்சவங்களுக்கு நாள் பார்ப்பது போன்ற விஷயங்களைக் கவனித்துக் கொண்டதால் நாள் விசேஷமென்றால் காய் கறிகள், தேங்காய் போன்றவை வீடு நோக்கிவரும். அது சில நேரங்களில் இரண்டு குடும்பங்களுக்கும் போதுமானதாக இருக்கும்.

சித்தியாவும், அண்ணாவும் நேருக்கு நேர் பார்த்து வீட்டு விஷயங்களைப் பற்றிப் பேசிக்கொண்டதில்லை. எல்லாம் அம்மாவூடாகத்தான் நடைபெற்றன. ஜோசியரும் வீட்டிற்கு ஏதாவது செய்யவேண்டுமென்று 'எலெக்டிரிக் கனெக்ஷன்' கொடுக்க ஏற்பாடு செய்தார். அவர் உபயமாக பத்மநிலையம் மின்சாரம் பெற்றது. மின்சாரத்தை மிச்சம்பிடிக்க ஜீரோ வாட் பல்பு பல இடங்களில் தொங்கியதால் பல நேரங்களில் மின்சாரம் இருந்ததற்கும் இல்லாததற்கும் அதிக வேறுபாடு இல்லாமல் இருந்தது. அடுக்குள் புகையில் எந்த பல்பு போட்டாலும் அது ஜீரோ வாட்டாக மாறும் நிலையும் இருந்தது. விடுதி அய்யங்காரத்து நாராயணன்தான் முன்னிருந்து எல்லா வேளைகளையும் கவனித்துக் கொண்டான்.

அந்த ஊருக்கு அப்போதுதான் மின்சாரம் வந்ததால் அதை உபயோகிப்பதில் எவ்வளவு கவனமாக இருக்கவேண்டுமென்பதற்கு தெரு முனையில் சினிமாப்படம் காண்பிக்கப்பட்டது. நந்துவிற்கு இந்தப்படங்கள் மிகவும் பிடித்தன. கல்யாணவீடு ஜெகத்ஜோதியாக இருக்க வேண்டுமென்று விரும்பும் பெண்ணின் தந்தை நல்ல வயர் வாங்கிப்போட மட்டும் கஞ்சப்பட்டார். விளைவு கல்யாணத்தன்று சரியான பாதுகாப்புமுறைகள் கடைப்பிடிக்கமுடியாததால் தீப்பற்றிக் கொண்டு கல்யாணப்பந்தலே ஜெகத்ஜோதியாக எரிகிறது. இது ஒரு படம். ஊர் பூரா கைகொட்டிச் சிரித்தது. ஆனால் அது சிரிக்கக்கூடிய சமாச்சாரமில்லை என்பதை சேதுவும், தாத்தாவும் பின்னால் நிரூபித்தனர்.

குஞ்சரம் வேக, வேகமாக ஓடிவந்தாள் அடுக்குள்ளை நோக்கி. "அக்கா! யார் வந்திருக்கா பார்?"

நந்து அந்த மஞ்சள் நிறத்தாத்தாவைப் பார்த்துக் கொண்டு இருந்தான். வெள்ளைக்காரன் போல் தொப்பியெல்லாம் வைத்திருந்தார். "இவர் யாரும்மா?" என்றான் நந்து.

முகத்தைத்துடைத்துக் கொண்டு அடுப்படியிலிருந்த வந்த அம்மா, "யாரு? அப்பாவா? எப்ப வந்தே?" என்றாள்.

"டேய் இவர் உன் தாத்தாடா" என்றாள்.

"இவர் ஏன் மஞ்சளா இருக்கார். இவரை மஞ்சள் தாத்தான்னு சொல்லலாமா?" என்றான் நந்து.

"இவன்தான் உன் வாண்டுவா. நன்னாப் பேசறான்" என்று சொல்லிக்கொண்டு நந்துவிற்கு பொட்டலத்தை பிரித்து பிஸ்கெட்டுக்களைத்தந்தார். அந்த பிஸ்கெட்டிலும் தொப்பி போல் இனிப்பு ஒட்டிக் கொண்டிருந்தது.

நந்து மஞ்சத்தாத்தாவைப் பார்த்து சிரித்தான்.

கோகிலம் இவர் ஏன் இப்போது வந்தார் என்று யோசித்துக்கொண்டிருந்தாள்.


நந்துவின் தாத்தாவின் சாயலில் ஒருவர்!

0 பின்னூட்டங்கள்: