வைகைக்கரை காற்றே!......010

அந்த வீடு நீண்டு கிடந்தது. சித்தி அம்மாவிடம் ஏதோ சொல்லிப் புலம்பிக் கொண்டிருந்தாள். அம்மா கைவேலையாக வந்து உட்கார்ந்திருக்க வேண்டும். புடவை முழங்காலுக்கும் மேல் நகர்ந்திருந்தது. நந்து அம்மாவின் மடியில் வந்து படுத்துக் கொண்டான். அம்மா ஒல்லியான தேகமுடையவள். எனவே அவள் துடை மெத்தை போல் இல்லை. இருப்பினும் அம்மாவின் மடி சுகமாக அவனுக்கிருந்தது. அம்மா தக்காளிப்பழ சிவப்பு. அவள் துடை வழியாக கால்களில் பாய்ந்தோடும் கரும்பச்சை ரத்த நாளங்கள் வைகை நதியின் கோடை கால ஓடுகால் போல் வளைந்து நெளிந்து ஓடியது.

நந்து அந்த நாளங்களின் ஓட்டத்துடன் விரல்களை வைத்து ஓட்டினான். 'டேய் கையைக் காலை வைத்துக் கொண்டு சும்மா இரு!' என்று அம்மா கையைத்தட்டி விட்டாள். கூசியிருக்க வேண்டும்.

"அக்கா! ஏன் குழந்தையைத் திட்டறே! அருமையா அஞ்சுக்குப்பின் ஆம்பிளையா வந்து பிறந்திருக்கான்!" என்றாள் சித்தி. 8-ல் அஞ்சுதான் அம்மாவிற்குத் தங்கியது. சித்திக்கும் பல குழந்தைகள் இறந்து இரண்டு தங்கியது. ஆண் பிள்ளை இல்லையென்ற குறையுடன் இராமேஸ்வரம் போய் வேண்டிக்கொண்ட பிறகு ஒரு ஆண் குழந்தை பிறந்தது அவளுக்கு. எனவே சேதுக்கரை பாலம் அமைத்த இராமனின் நினைவாக சேதுராமன் என்று பெயர் வைத்தார்கள். சித்தி ஒரு நாள் கூட அம்மாவைப் பேர் சொல்லி அழைத்ததில்லை. 'அக்கா, அக்கா, அக்காதான்' ஆனால் நந்து பெரியவன் ஆனபோது அக்காமார் அனைவரையும் பெயர் சொல்லி அழைக்கும் உரிமை அவனுக்கு அந்தக் கிராமத்து வாழ்வில் இயல்பாக அளிக்கப்பட்டது. ஒரே பையன் என்ற ஒரே காரணத்திற்காக. ஆனால், பெரியக்கா மட்டும் அன்னையை ஒத்து இருந்ததால் அவள் மட்டும் இவனுக்கு 'அக்கா'!

சித்தியின் அக்காவான நந்துவின் அன்னைக்கு மிக இளகிய மனசு. சித்தியின் அழுகை அம்மாவை இளக்கிக் கொண்டிருந்தது.

"ஆமா, அவன் ஏன்? பாலகிருஷ்ணன் உன்னை தவிக்க விட்டு விட்டு ஓடிப் போனான்?" என்று கேட்டாள் அம்மா.

"அக்கா! அதை ஏன் கேக்கறே? என் தலை விதி. ராத்திரிப் படுத்திண்டு இருந்தவர், கார்த்தாலே காணோம்! ஏதோ பக்கத்து ஊருக்கு அவசர ஜோலியா போயிருக்கார் போலருக்குன்னு இரண்டு நா பாத்தோம், மூணு நா பாத்தோம். ஆளே அதற்குப் பின் வரல...." என்று சொல்லிக் கொண்டே சித்தி அழ ஆரம்பித்தாள்.

"சீ! அசடே! அழாதே! நானிருக்கேனோல்யோ! பாத்துப்பேன். இருந்தாலும் அவனுக்கு சுத்தமா பொறுப்பே இல்லே. எங்கே போய் தொலைந்தான்?"

அம்மாவிற்கு எரிச்சலாக வந்தது. இப்படி கட்டிய பொண்ணாட்டியை விட்டு விட்டு ஓடிப்போவனோ? பாலகிருஷ்ணன் இவர்களுக்கு சொந்தம்தான். கொஞ்சம் கருப்பு. ஜோஸ்யம் நன்றாக வரும். அம்மாதான் மாம்பழக்கலர். சித்தி கருப்புதான். அம்மாவுக்கு மேட்சா அண்ணா நல்ல சிவப்பு. சித்திக்கு மேட்சா சித்தியா (சித்தி + ஐயா) கருப்பு.

"என்ன தைர்யத்திலே விட்டுட்டுப் போனான்?"

"கையிலே வித்தை இருக்கோல்யோ, அந்த தைர்யம்தான்"

"என்ன வித்தை? இவன் சொல்ற ஜோஸ்யம் பலிக்கிறதே இல்லை"

"நீ தான் அப்படிச் சொல்ற! ஊரெல்லாம் வந்து கேக்கறதே. அந்த தைர்யம்தாம். எங்கே போனாலும் பொழைச்சுக்குவோம்ன்னு"

"எங்கே போனான்னு தேடினீளோ? போலிசுக்கு சொன்னேளோ?"

"அப்பா! போலிஸ் ஸ்டேஷனுக்கு நடையா நடந்தாச்சு. ஒரு துப்பும் கிடைக்கல்லே. எங்கே போய் தொலைச்சாறோ?" சித்திக்கு தன் நிற்கதியை நினைத்து துக்கமும், அழுகையுமா வந்தது.

"ஏண்டி, அழுதுண்டே இருக்கே! ஜலதோஷம் புடுச்சுக்க போறது. சரி போய் வேலையைப் பாரு. அவர் வந்ததும் நான் கேட்டுச் சொல்லறேன். அதுவரை அவ ஆத்துலே இரு" இது அம்மா.

அண்ணா இரவு வெகு நேரம் கழித்துதான் வருவார். அதுவரை பொறுத்திருக்க வேண்டும். எவ்வளவோ கஷ்டங்கள் அவருக்கு. இப்போது இவள் வேறு நிற்கதியாக. எப்படியும் சொல்லி சமாளிக்க வேண்டும். அம்மா யோசனையுடன் நந்துவின் தலையைக் கோதிக் கொண்டிருந்ததில் நந்து தூங்கிப்போயிருந்தான்.

0 பின்னூட்டங்கள்: