வைகைக்கரை காற்றே!......011

ஆத்தாங்கரை அக்கிரஹாரத்திற்கு அருகிலேயே இருந்தது. செண்பகபட்டர் வீட்டில் வீதி திரும்பும். இன்னொரு மூலையில்தான் பஞ்சாங்கய்ங்கார் வீடு. பத்ம நிலையத்திலிருந்து ஏரோப்பிளேன் ஓட்டிக் கொண்டே ஓடினால் ஐந்து நிமிடத்திற்கும் குறைவு. அடுத்த தெருவில்தான் ஸ்வாமி சந்நிதியும், அம்பாள் சந்நிதியும். அம்பாள் சந்னிதிக்கு நேராக ஒரு சந்து போகும். அந்தச் சந்து நீளத்திற்கு எவரெஸ்ட் டூரிங் டாக்கிஸ்காரர் வீடு. அந்த வீட்டில் யாரும் இருப்பதில்லை. எப்பவாவது ஆள் நடமாட்டம் இருக்கும். கோனாருக்கு வேறொரு வீடு உண்டு கொஞ்சம் தள்ளி. அந்தப் பெரிய வீட்டிற்கு மட்டும் நீளமான கற்சுவர் உண்டு. மிக உயரம். உள்ளே என்னதான் நடக்குமோ? நந்து வீட்டின் கதவு எப்போதும் திறந்தே கிடக்கும். கோனார் வீட்டின் கொல்லைப்புறம் இன்னொரு சந்தில் முடியும். அங்குதான் நந்துவின் நண்பன் துரை என்னும் புஷ்பவனம் இருந்தான். அவன் குட்டி பட்டராத்துப் பிள்ளை. எப்பவாவதுதான் வருவான் விளையாட. பட்டர் வீடுகள் அக்கிரஹாரத்தில் இருந்தாலும் அவர்கள் தனித்தே வாழ்ந்தனர். அவர்கள் வாழ்வு பற்றி நந்து பின்னால்தான் அறிந்து கொண்டான். குட்டி பட்டர் வீட்டைக் கடந்து போனால் ஸ்வாமி கோயிலுக்கு எதிரே ஒரு மொட்டைக் கோபுரம் உண்டு. அதற்கு நேர் எதிராகத்தான் ஆறு. அங்கிருந்து ஓடினால் அடுத்து இரண்டு நிமிடம் வைகை வந்துவிடும். ஆனால் ஆத்துக்குள் இறங்குவதற்குள் முனிஸ்வரன் வாழும் ஆலமரமொன்று உண்டு. அதைத்தாண்டும் ஒவ்வொருமுறையும் நந்துவின் இதயம் கன்னாபின்னாவென்று துடிக்கும். முனி பற்றிய பல கதைகள் ஏற்படுத்திய பயமே அதற்குக் காரணம்.நந்துவின் கண்களுக்கு வைகை பிரம்மாண்டமாகத் தெரிந்தது. மானாமதுரை அளவு பெரிதில்லையென்றாலும் அக்கரைக்குப் போவதற்குள் கால் கடுத்துவிடும். ஓடி, ஓடிக் களைத்து மண்ணில் விழுந்து புரண்டு, விளையாடி, விளையாடித்தான் அக்கரை போக வேண்டும். அக்கரையில் மடப்புரம் காளி. அக்கரையில் ஸ்வாமி சந்ந்திக்கு எதிரே ஒரு ஆலமரமுண்டு. அங்கே பல நாவல் மரங்களுண்டு. கால் கடுக்க அக்கரைக்குப் போனால் நாவற்பழம் கிடைக்கும். மடப்புரம் நோக்கி மேலே நடந்தால் நிறையக் கொடுக்காப்புளி மரங்கள் இருக்கும். சேதுவுடன் போனால் தொரட்டி கட்டி பழம் பறிக்கலாம். சேது வராதபோது கிளி கொத்திப் போட்ட பழங்கள் கீழே கிடக்கும் அதைப் பொறுக்கலாம்.

ஆற்றுக்குள் நுழையும் முன்னே ஒரு சின்ன பிள்ளையார் கோயில் உண்டு. அவர் ஒரு பெரிய அரசமரத்திற்குக் கீழ் உட்கார்ந்து இருப்பார். யார் வேண்டுமானாலும் கிட்டக்கப்போய் சூடம் ஏத்தலாம். பூசாரி கிடையாது. முனிஸ்வரன் கோயிலிலும் யாரும் போகலாம் என்றாலும் அந்தக் கோயிலுக்கு பூஜை உண்டு. குட்டமணியின் அப்பா ஜடாதர ஐயர்தான் வயதான காலத்திலும் அந்தக் கோயிலைப் பார்த்துக் கொண்டார். வெள்ளிக்கிழமை வந்து சக்கரைப்பொங்கல் வைத்து பூஜை பண்ணுவார். பிரசாதம் என்பதால் மட்டுமே அந்தக் கண்றாவியைச் சாப்பிட வேண்டியிருக்கும். சுவையில்லாத சோகையான அரிசி. சக்கரைப் பொங்கல் என்பது பெயரில் மட்டுமே இருக்கும். சக்கரை எங்கே என்று தேட வேண்டியிருக்கும். கோயிலில் பர்ஜாரகராக இருக்கும் அவரால் அவ்வளவுதான் செய்ய முடியும் என்பதெல்லாம் அவனுக்கு அப்போது புரியாத வயது! பிள்ளையார் ஏன் ஆத்தங்கரையில் உட்கார்ந்து இருக்கிறார் என்பதை பட்டர் பிள்ளை விளக்கினான். அம்மாவைப் போலவே அழகான பொண்ணு வேணும் என்று ஆத்தங்கரையில் அவர் காத்துக் கிடப்பதாகச் சொன்னான். இந்த ஊரில் பிள்ளையாருக்கு தோதான அழகான பொண்ணு இல்லாததால் அவர் இன்னும் கல்யாணமே பண்ணிக்காமல் உட்காந்துண்டு இருக்கார் என்றான். பட்டர் பிள்ளை சொல்வதால் நந்து நம்பினான். ஆனாலும் ஊரில் அழகான பொண்கள் இல்லை என்பதை இவனால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. ஆற்றில் மணற்கேணி போட்டு (ஊத்து) தண்ணி எடுத்துப் போக வரும் நாடார் வீட்டுப் பொண்ணுகளும், பிள்ளமார் வீட்டுப் பொண்ணுகளும் எவ்வளவு சௌந்தர்யமாக இருப்பார்கள். அக்கிரஹாரத்தில் கூட ஒண்ணு ரெண்டு தேறுமே!நந்து ஆற்றில் இறங்கும் போது ஊமை வந்து கொண்டிருந்தான். அவனுக்கும் எவ்வளவு வயது என்று யாருக்கும் தெரியாது. தாடி நரைத்திருக்கும். அவன் தாடி சீனாக்காரன் தாடி போல் சின்னதாக இருக்கும். ஆனால் உடல் திடகாத்திரமாக இருக்கும். ஊமையனுக்கு சுத்தமாகப் பிடிக்காதது மூக்கின் மேல் விரலை வைத்து அவன் முன் காட்டுவது. அப்படிச் செய்தால் ஊமையனுக்கு கெட்ட கோபம் வந்துவிடும். காச்சு பூச்சு என்று கத்துவான். அதுவும் யாருக்கும் புரியாது. அவனை அப்படிக் கத்த வைத்து வேடிக்கை பார்க்கும் அந்த ஊர். நந்துவிற்கு பாவமாக இருக்கும். ஆனாலும் ஊமையுடன் அவனுக்குப் பேசத்தெரியாது. சில பேர் கையையும், காலையும் ஆட்டி அவனிடம் பேசுவர். அவனுக்குப் புரியுதோ இல்லையோ தலையை இப்படி அப்படியும் ஆட்டுவான். ஊமையனின் தோளில் எப்போதும் ஒரு மண்வெட்டி இருக்கும். மண் வெட்டி இல்லாமல் அவனை நந்து பார்த்தது கிடையாது. அதிகாலையில் ஆற்றுக்குள் இறங்கினான் என்றால் மாக்கு, மாக்கென்று ஓடுகால் தோண்டுவான். ஊமையனின் ஓடுகால் போன்ற அழகான ஓடுகாலை வேறு யாரும் இந்த உலகில் தோண்ட முடியாது என்று நந்து நம்பினான். மதுரையில் காசு கொடுத்து குளிக்க வைக்கும் ஓடுகால்களெல்லாம் ஊமையனின் ஓடுகால் முன் கால் காசு பெறாது. அந்தக்காலத்து அப்பரடிகள் போல் ஊமையன் ஒரு உளவாரப்பணி செய்து கொண்டிருந்தான். ஆனால் அவன் அருமை தெரியாமல் அவனைச் சீண்டி விட்டு அவனை எப்போதும் ஒரு கொதி நிலையில் வைத்துவிட்டது அக்கிராமம்.

0 பின்னூட்டங்கள்: