வைகைக்கரை காற்றே!......012

அம்மா அன்று பருப்பு உருண்டைக் குழம்பு வைத்திருந்தாள். அம்மாவின் சமையல் எல்லாவற்றிலும் அவள் கை மணம் இருக்கும் என்றாலும் இதைச் செய்வதில் அவளுக்கு நிகர் யாரும் கிடையாது என்று நந்து நம்பினான். இவ்வளவுக்கும் அம்மாவின் அடுக்குள் மிகச் சிறியது. அம்மா போன்ற மெல்லிதான ஆசாமிகள்தான் அங்கு உட்கார்ந்து சமையல் செய்ய முடியும். சமையல் அறைக்கு இரண்டு கதவுகள் உண்டு. அது அனாவசியம். அதை மூடிக்கொண்டால் புகையில் மூச்சுவிடமுடியாமல் இறந்துவிட நேரும். கொல்லையைப் பார்த்து ஒரு சின்ன ஜன்னலும் அங்குண்டு. இவ்வளவு இருந்தும் அடுக்களையில் புகை இருந்து கொண்டே இருக்கும். அம்மா முதலில் பெருங்காயத்தைக் கொஞ்சம் உடைத்து ஒரு மாக்கிண்ணத்தில் ஊற வைத்து விடுவாள். அது ஊற வெகு நேரமாகும். பெருங்காயத்தை உடைப்பதே பெரிய வேலை. உடையவே உடையாது! அப்புறம் அழகான ஒரு வெங்கலப் பானையின் அடியில் கொஞ்சம் அரிசி மாவைக் கரைத்து அழகாக அப்புவாள். பிறகுதான் அதில் நீர் ஊற்றுவாள். இப்படிச் செய்தால் பத்துத் தேய்க்கும் போது அடிக்கரி எளிதாக வந்துவிடும். அம்மா கடைசி மட்டும் விறகடுப்புதான். இரட்டை வாய் கொண்ட அடுப்பு. ஒன்றில் அரிசி வேகும். மற்றதில் குழம்பு. பருப்பு உருண்டைக் குழம்பு என்றால் அம்மாவிற்கு ஏகப்பட்ட வேலை. துவரம் பருப்பு வகையறாக்களை ஊறப்போட வேண்டும். ஊறிய பின் கொல்லையில் கிடக்கும் ஆட்டுக்கல்லில் அரைக்க வேண்டும். பின் அதை உருண்டையாக உருட்ட வேண்டும். கொதிக்கும் குழம்பில் போட வேண்டும். வேகும் நீரில் போடும்போது பொல, பொலவென்று உடைந்து விடக்கூடாது. கழக்கூத்து ஆடுபவனை விட மிக நூதனமான வேலை. அம்மா எல்லாவற்றையும் சுறு, சுறுவென்று முடித்து விடுவாள். 8 வாய்களுக்கு இடவேண்டும். வேலை எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். நந்து திருப்புவனம் வந்த போதெல்லாம் அக்காவிற்கு திருமணமாகி பள்ளத்தூர் போய்விட்டாள். கை காவலுக்கு அம்மாவிற்கு உதவி பங்கஜம் மட்டும்தான். கமலாவிற்கு சினிமாப் பாட்டு பாடுவதற்கே நேரம் இருக்காது. செல்லம்மாவும், சௌந்திரமும் பள்ளிச் சிறார்கள். அம்மாவிற்கு படிப்பென்றால் மிகக் கவனம். அது சிதறக்கூடாது என்பதில் அக்கறை கொண்டாள். ஆனால் ஒருவர் வெற்றிக்கு மற்றொருவர் உரமாக வேண்டிய சூழல். பங்கஜம் 5ம் வகுப்புடன் நின்று விட்டாள். இருந்து அம்மாவிற்குத் துணையாக வீட்டு வேலைகள் செய்து கொண்டிருந்தாள். பங்கஜத்திற்கு ஏதாவது உடம்பிற்கு என்றால் வீடு அமளி துமளிப்படும். ஒருத்தருக்கும் ஒன்று செய்யத்தெரியாது. தோசைக்கு அரைத்துக் கொடுங்களடி! என்றால் கையை உரலில் நசிக்கிக் கொண்டு வந்து நிற்கும். அதன் பின்னால் விரல் வீங்கி, இருக்கின்ற ஒத்தாசையும் ஒன்றுக்குமில்லாமல் போய்விடும். இத்தனை சிரமங்களுக்குமிடையில் அம்மா அன்று பருப்புருண்டைக் குழம்பு வைத்திருக்கிறாள் என்றாள், ஏதோ விசேஷமென்று பொருள்!

அண்ணாவுடன் சேர்ந்து சாப்பிடுவது என்பது எப்போதாவதுதான். குழந்தைகள் தூங்கிய பின்தான் வீட்டிற்கு அவர் வருவார். அன்றும் அப்படியே! அப்போது திண்ணைக்கு தட்டி கிடையாது எனவே அங்கு யாரும் தூங்கமுடியாது. ரேழியில் ரொம்பவும் குளிர்ச்சியாக இருக்கும். அங்கு சூரிய வெளிச்சம் படுவதே குறைவு. எனவே முற்றத்தை ஒட்டிய இரட்டை வராண்டாவில்தான் எல்லோருக்கும் தூக்கம். ஆளுக்கொரு பாய் அல்லது பெட்ஷீட். தலையாணி. போர்வை குறைவாகவே இருக்கும். முதலில் வரும் ஆசாமி சுருட்டிக் கொண்டுவிடும். அடுத்து வருபவர் மெல்லமாக யாரோடாவது ஒண்டிக்கொள்ள வேண்டும். நாய்க்குட்டிகள் ஒன்றுடன் ஒன்று ஒட்டிப் படுத்திருப்பது போல்தான் சகோதர சகோதரிகள் படுத்திருப்பர். ஒரே ரத்தம் வேறாய் பிரிந்து மீண்டும் ஒரே நாளத்தில் ஓடுவது போல் இருக்கும் இரவுக்காட்சி அந்த வீட்டில்!

கொசு கடிக்கும். முத்தத்திற்கு இன்னும் வலை போடவில்லை. அண்ணா செட்டிநாட்டை விட்டு திருப்புவனம் வந்த பிறகு இன்னும் சரியான உத்தியோகம் அமையவில்லை. எனவே வீட்டு சௌகர்யங்களெல்லாம் மெது, மெதுவாய் நடந்தன. வீட்டிற்கு இன்னும் விளக்கில்லை. அரிக்கேன் விளக்குதான். எனவே குழந்தைகளின் கொட்டமெல்லாம் 8 மணியோடு முடிந்துவிடும்! ஆனாலும் இந்தக் கொசுக்கடித்து அவ்வப்போது எழுப்பிவிட்டு விடும். பிறகு கொஞ்ச நேரம் வேடிக்கை பார்த்துவிட்டு குழந்தைகள் தூங்கிவிடும்.

அண்ணா வந்திருந்தார். "கை, கால் அலம்பிண்டு வாங்கோ! தட்டுப் போடவா?" என்றாள் அம்மா. வீட்டிலேயே அண்ணவிற்குத்தான் பெரிய எவர் சில்வர் தட்டு. எல்லோருக்கும் சின்னதுதான். "ம்" என்றார் அண்ணா.

"என்ன சுரத்தே இல்லாமல் இருக்கேள்? உடம்புக்கு ஏதாவது?" இது அம்மா.

"இல்லடி கோகிலம்! சும்மா அலைச்சல். காசு பொரட்டறதுன்னா என்ன சுலபமா?" இது அண்ணா.

"என்ன பண்ணச்சொல்றேள்? பகவான் ஏழைகளைத்தான் ரொம்ப சோதிக்கிறான்" என்றாள் அம்மா. தொடர்ந்து, "இது புரியாமல் குஞ்சரம் கார்த்தாலே வந்து ஒருவாட்டி அழுதுட்டுப்போறா".

"ஏன் அவளுக்கென்ன?"

"என்ன தெரியாத மாதிரி கேக்கறேள். அதான் பாலகிருஷ்ணன் அவளை விட்டுட்டு ஓடிப்போயிட்டானே! அவளுக்கும்தான் என்னவிட்டா யாரு இருக்கா?"

"இதுக்குத்தான் மதுரைப்பக்கம் போலா, போலான்னு அடிச்சுண்டையாக்கும். எல்லாரும் இப்ப வந்து ஒட்டிப்பாளே"

"அப்படிச் சொல்லாதீங்கோ. நாட்டரசன் கோட்டையிலே எங்க மனுஷான்னு யாரு இருந்தா? எங்காப்பாவுக்கு பிள்ளை இல்லாம இரண்டையும் பொட்டையாப் பெத்துப் போட்டுட்டு மகராசி போய் சேந்துட்டா. அண்ணன்னு ஒருத்தன் இருந்தா அவ ஏன் எங்கிட்டே வரா? கதியில்லாம நிக்கறா. கொஞ்சம் வழி பண்ணுங்கோ"

"என்னடி வழி பண்ணறது? உடையவரே ஊவன்னாப் பண்ணறப்போ லிங்கம் பஞ்சாமிருதம் கேட்டுதாம்"

"சே! அசிங்கமாப் பேசாதீங்கோ! இரண்டு மாசம் கழிச்சு வாடின்னு சொல்லியிருக்கேன். அதுக்குள்ள பெருமாள் வழி விடாமயாப் போயிடுவார்"

"சரிதான் போ! உனக்கு பெருமாள்ட்டே பக்தி ரொம்ப வந்துடுத்து போலருக்கு" என்று அண்ணா சிரித்தார்.

"எனக்குத்தெரிந்த ஒரே பெருமாள் நீங்கதான். அவன் பேரை அதுக்குத்தான் உங்களுக்கு வச்சிருக்கா போலருக்கு!" என்றாள் அம்மா.

"வெத்தலை போட்டுக்கிறேளா? இளவெத்திலையா வாசல்லெ வந்தது!"

"சரி, மடிச்சுக்கொடு. ஏனோ தூக்கமா வரது"

"அப்படின்னா சரி. வெத்தலை போட்டுக்கறது எங்க போறது. வாங்கோ படுத்துக்கலாம். கொசுவலை போட்டு வச்சிருக்கேன்"

"அதுவும் சரிதான். படுத்துக்கிறேன். அப்படியே காலைப்பிடிச்சுவிடு" என்றார் அண்ணா.

அதற்குப்பின் ஏதோ குசு குசுவென்று கொசுவலைக்குள் நடந்தது.

நந்துவின் கனவில் அரச மரத்துப்பிள்ளையார் வந்தார். போற வர பொண்ணுகளை தும்பிக்கையால் விரட்டிக் கொண்டிருந்தார்! அதில் இவன் கூடப்படிக்கும் மீனாவும் இருந்தது.

0 பின்னூட்டங்கள்: