வைகைக்கரை காற்றே!......014

கோகிலத்தம்மாவை விட குஞ்சரத்தம்மா அதிர்ஷ்டசாலி என்பதைக் காலம் அம்மண்ணில் காட்டியது.

அண்ணாவிற்கு வேலை குதிர்த்தது. பெரிய உத்யோகம் என்று சொல்வதற்கில்லை. செட்டியார் தயவால் இராமனாதபுரம் ராஜா அறக்கட்டளை ஆபீசில் கணக்கதியாரியாக வேலை கிடைத்தது. அந்தக் காலத்தில் மதுரை மீனாட்சியம்மன் கோயில் நிர்வாகத்திற்கு பல்வேறு ராஜாக்கள் அறக்கட்டளை அமைத்து நிதி உதவி செய்து வந்தனர். அதில் இராமனாதபுரம் ராஜாவின் 'சேதுபதி அறக்கட்டளையும்' ஒன்று. அண்ணாவின் மூதாதையர்களில் பலர் சேதுபதி சமஸ்தானத்திலும், செட்டிநாட்டிலும் கணக்கர்களாக வேலை பார்த்து வந்தனர். செட்டிநாடு என்பது சோழ மண்ணிலிருந்து புலம் பெயர்ந்த வணிக குலத்தவர்களைக் கொண்டதுதான் எனினும். காலப்போக்கில் ஒரு ராஜாங்கம் நடத்துகிற அளவிற்கு அந்த மண்ணில் சொத்து இருந்தது. செட்டி நாட்டு ராஜா என்ற வழக்கு உண்டு. அந்தணர்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தங்களது குலத்தொழிலான வேதம் ஓதுதலை ஒதுக்கிவிட்டு பிற தொழில்களில் ஈடுபட ஆரம்பித்தனர். ஆயினும் பண்டைய ராஜ விஸ்வாசம் இருந்ததால் கணக்குத் தொழிலுக்கு வந்தாலும் அதை ராஜாக்களிடமே செய்து வந்தனர்.

மதுரை மீனாட்சி கோயிலில் அண்ணாவிற்கு வேலை கிடைத்ததில் மற்ற எல்லோரையும் விட நந்துவிற்குத்தான் மிக்க மகிழ்ச்சி.

ஒவ்வொருமுறையும் அண்ணாவுடன் மதுரைக் கோயிலுக்குப் போகும் போது அவனுக்கு மட்டற்ற மகிழ்ச்சி உண்டாகும். கட்டளை ஆபீஸ் ஆடி வீதியில் இருந்தது. மேற்குக் கோபுர வாசலுக்கு அருகாமையில். அருகில் கோமடம் உண்டு. நந்துவிற்குத்தான் கன்றுகள் என்றால் பிடிக்குமே! அங்கு நிறையக் கன்றுகள் உண்டு. அந்தப் பெரிய பிரகாரம் அவனுக்கு ஒரு மாபெரும் வெளியைத் தந்தது. பார்க்குமிடமெல்லாம் பரந்த வெளி. உயர நோக்கினால் வானுயர கோபுரங்கள். தடுக்கி விழுந்தால் கலையின் அதீத செயல்பாட்டில் விழ வேண்டியிருக்கும். நோக்க, நோக்க உயர்வு. எண்ணத்தில் உயர்வு, சிந்தனையில் உயர்வு. செயலில் நளினம். ஆக்கத்தில் நுணுக்கம் என்பது போன்ற நுணுக்கமான சூட்சுமமான பல விஷயங்கள் அவனையறியாமல் அக்கோயில் வளாகம் அவனுக்குத் தந்தது.

அண்ணா வேலை முடிந்ததும் நந்துவைக் கோயிலுக்கு இட்டுச் செல்வார். சுவாமி சந்நிதி அவனுக்கொரு கலைக்களஞ்சியம். உள்ளே நுழையும் போதே அங்கொரு பெரியவர் பெரிய விசிறி கொண்டு போவோர் வருவோருக்கு விசிறிக் கொண்டு இருப்பார். அதுவொரு பொதுப்பணி. அவர் முகத்தில் ஒரு சாந்தமும், திருப்தியும், மலர்ச்சியும் எப்போதும் இருக்கும். அவருக்கு 60 வயதிற்கு மேலாக இருக்கலாம். ஆனால் அந்த மிகப்பெரிய கலையழகு மிக்க, பட்டுக் குஞ்சலங்கள் கொண்ட விசிறியை சளைக்காமல் வீசிக்கொண்டிருப்பார். யாராவது இரக்கப்பட்டு அவருக்கு காசு கொடுத்தால் பணிவுடன் வாங்கிக் கொண்டு மடியிலிருந்து முன்பே தயாரித்து வைத்திருக்கும் சின்ன விபூதிப் பொட்டலத்தை பிரசாதமாகக் கொடுப்பார். அவரின் அன்பும், பணிவும் நந்துவை வெகுவாகக் கவர்ந்தன. எளிமை கண்டு இரங்கும் குணம் அன்று ஆழப்பதிந்தது அவன் மனதில்.

சுவாமி சந்நிதியைச் சுற்றி திருவிளையாடல் காட்சிகள் சுதைச் சிற்பங்களாக இருக்கும். அண்ணா இவனுக்கு ஒவ்வொறு கதையாகச் சொல்வார். அதில் திருப்புவனக் கதை ஒன்றும் இருப்பது கண்டு அவனுக்கு ரொம்ப மகிழ்ச்சி. மதுரையை ஆண்ட பாண்டியனுக்கு அவன் ஆட்சியின் எல்லை எவ்வளவு என்று தெரியவில்லை. அது அவ்வளவு பரந்து இருந்தது. எனவே திரு ஆலவாய் அண்ணலிடம் வேண்டினான். இரக்கம் கொண்ட ஈஸ்வரன் ஒரு பாம்பு வடிவம் எடுத்து முதலில் மதுரையின் எல்லையைக் காட்டினார். அது சுதைச் சிற்பமாக உள்ளது. பாம்பின் தலை திருப்புவனம் ஆற்றின் அக்கரையிலுள்ள நாவல் மரத்தோப்பில் ஆரம்பிக்கும். ஊரெல்லாம் சுற்றி விட்டு அது மீண்டும் திருப்புவனத்தில் வந்து முடியும். அது போதும் நந்துவிற்கு தானொரு 'மதுரை உள்வட்டம்' என்று சொல்லிக்கொள்வதற்கு! நந்து நிறையக் கதை சொல்வான். அந்தப் பழக்கம் அவனுக்கு அண்ணாவிடமிருந்து வந்திருக்க வேண்டும்.

அண்ணா ஸ்வாமி சந்நிதியில் நிற்பதை விட பிரகாரத்தில் இருக்கும் 'லக்ஷ்மி' சந்நிதியிலே கிடப்பார். இவர் வைணவரென்ற காரணமல்ல. கையில் காசு இருக்காது. 'மலரின் மேவு திரு' அனுக்கிரகம் பண்ண வேண்டும் என்று வேண்டிக் கொள்ளத்தான். ஆனால், லக்ஷ்மி சந்நிதி பெரிது. எப்போதும் கூட்டம் இருக்கும். ஆனாலும் நந்துவிற்கு அதே பிரகாரத்திலிருக்கும் ஒரு அழுக்குப் பிடித்த சந்நிதியின் மீதுதான் ஈர்ப்பு அதிகம். அந்தச் சந்நிதி சரஸ்வதியின் சந்நிதி. அழுது வழிந்து கொண்டு ஒரு அகல் விளக்கு எரியும். எப்போதாவது யாராவது சூடம் ஏற்றுவார்கள். அப்போது சரஸ்வதி அவனுக்கு காட்சியளிப்பாள். ஒரு கணம், ஒரு பொழுது, ஒரு நொடி. அதுதான் அவனுக்குக் கிடைக்கும் காட்சி. அதன் பலா பலன்கள் என்ன வென்பது போகப்போக அவன் வாழ்வில் தெரிந்தது.

சிவன் சந்நிதியின் மாபெரும் பிரம்மிப்பு எட்டு வெள்ளைக் கல் யானைகள்தான். அண்ணா கல் யானைக்கு கரும்பு கொடுத்த சித்தர் கதை சொல்வார். கல்யானையின் அழகைச் சொல்லி மாளாது. தேங்காய் கொடுத்தால் வாங்கிக் கொள்ளும் என்று நம்ப வைக்கும் தத்ரூபம்! சித்தர்களின் செயல்பாடுகள் அவனுள் ஒரு சூட்சும உலகைக் காட்டின. சிவனடியார்களிடம் பணிவுடன் நடந்து கொள்ளும் பண்பைத் தந்தன.

அம்மா அன்றிலிருந்து மீனாட்சி பக்தையானாள். மதுரையிலிருந்து ஒரு பெரிய மீனாட்சி படம் வீட்டு சுவாமி ரூமில் வந்து இறங்கியது. மீனாட்சியின் ஆட்சி 'பத்ம நிலையத்தில்' தொடங்கியது.

0 பின்னூட்டங்கள்: